ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 26, 2023

“எவனோ… என்னமோ பேசுகிறான்…!” என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்...

ஒரு பயிற்சி:-

1.நீங்கள் கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள்.
2.கண் பார்த்துக் கொண்டு இருப்பதை (எண்ணாமல்) உயிரான நிலைகள் இழுக்காமல் நினைவை வேறு பக்கம் செலுத்திக் கொண்டு இருங்கள்.

அப்போது
1.நம் கண் பார்வையில் படும் உணர்வுகள் நம்மை இயக்க முடியாது
2.நம் நினைவு எங்கே செல்கிறதோ அது தான் இயக்கும்

செய்து பாருங்கள்.

இதைப் போன்று தான் ஒருவர் சாபமிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில்… அந்த இடத்தில்… உங்களை வேறு யாராவது (நண்பர்கள்) “அங்கே வரச்சொன்னார்களே… நேரம் ஆகிப் போயிற்றே… இன்னும் காணோமே…!” என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

சாபமிட்ட அலைகள்… அந்த நினைவுகள்.. உங்களுக்குள் வராது. ஏனென்றால் நீங்கள் எண்ணிய எண்ணம் அங்கே அது முதலில் வந்து விடுகின்றது.

நண்பர் நம்மை பார்ப்பதற்காக அங்கே வரச் சொல்லி முதலில் சொன்னார் இல்லையா. அவர் சொன்ன அந்தப் பதிவை நமக்குள் வைத்தவுடனே..,
1.ஐயோ.. நேரமாகிப் போய்விட்டதே…! என்று எண்ணிப் பாருங்கள்.
2.அந்த நேரத்தில் “நின்று…”
3.அந்தச் சாபமிடுபவன் சொல்வதைக் கேட்க முடியாது.
4.அப்பொழுது அந்தச் சாபம் இட்டது உங்களுக்குச் சுத்தமாகவே தெரியாது.

“எவனோ… என்னமோ பேசுகிறான்…!” என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்.

இந்த மாதிரி உங்கள் வேலைக்கு அவசரமாகப் போவதை இங்கே பதிவாகிக் கொண்டு போகும் போது அந்தச் சாப உணர்வுகள் உள்ளுக்குள் வருவதில்லை.

அதே மாதிரித்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதற்குத்தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

அவன் உணர்வு நம்மிடம் பட்டது. சாபமிடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம். அடுத்தது என்ன எண்ண வேண்டும்…?

1.யாம் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தை நினைவுக்குக் கொண்டு வந்து
2.ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் வேலைக்குப் போகும் போது அதைப் பார்க்காமல் போவது வேறு. ஆனால் நாம் சாபமிடும் உணர்வைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு… அதிலிருந்து போன பிற்பாடு நமக்குள் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலைச் சுத்தப்படுத்திவிட்டு அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் ஒன்றுபட்டு வாழக்கூடிய அந்த சக்தி வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.நல்ல குணங்களை இப்படி நாம் காக்க வேண்டும்
2.இப்படிச் சுவாசித்துக் கொண்டோம் என்றால் நம் உடல் என்ன செய்கிறது…?
3.சாப அலைகள் உடலுக்குள் விளையவிடாமல் தடுக்கச் செய்கிறது.

அப்பொழுது நமக்குள் ஒரு சந்தோஷ உணர்வு வருகின்றது. நாம் அந்த நல்லதை… “சொல்லால் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்...!”

சாபமிட்டவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொன்னோம் அல்லவா. அவர்கள் இரண்டு பேர் உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் நாம் இங்கே சமைத்து அனுப்பிய உணர்வுகள் என்ன செய்யும்…?

1.நம் உடலைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
2.இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
3.அவர்கள் ஒன்று பட்டு வாழ வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நம்மை நினைக்க வைக்கின்றது.

இப்படிச் செய்யாமல் போனால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யும்..?

நடு ரோட்டில் சாபமிட்டார்கள்…! என்று நினைக்கும் போதெல்லாம்
1.இவர்கள் விட்ட சாபத்தையெல்லாம் அடுத்தவர்களிடம் சொல்லி
2.அவர்களிடம் இந்த வித்தை எடுத்துக் கொடுத்து
3.நமக்குள்ளும் இதை வளர்த்துக் கொள்கிறோம்.

“இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் இப்படியெல்லாம் நடக்கின்றது…” இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து ஒவ்வொருவரும் மாற்றிக் கொண்டால் சாபமிட்ட உணர்வுகளும் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளும் தீமையான உணர்வுகளும் அனாதையாகிவிடுகின்றது.

நாம் யாரும் ஈர்க்கவில்லை என்கிற பொழுது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து கொள்கின்றது.

1.எது எது பிடிப்பில் இல்லையோ
2.அதையெல்லாம் சூரியன் எடுத்துக் கொண்டு போய் மறுபடியும் அதை மாற்றி
3.நல்ல கதிர்களாக உருவாக்கி வெப்பமும் காந்தமுமாக அனுப்புகின்றது.
4.இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் “ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் பயிற்சி…” இது தான். செய்து பாருங்கள்…!