ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 18, 2023

பல கோடிச் சரீரங்களில் நாம் பெற்ற “தீமையை நீக்கும் சக்தி - சேனாதிபதி”

1.நம்முடைய ஆறாவது அறிவைச் “சேனாதிபதி…” என்று காட்டி
2.அதை இந்த உடலுக்குக் காவல்காரன்…! என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

உதாரணமாக போர்முறை என்று வரும் பொழுது தன் நாட்டைக் காக்க இந்தச் சேனாதிபதி கட்டளையிட்டு… சிப்பாய்களை எல்லாம் தயார் செய்து வரும் எதிரிகளை வீழ்த்தும் தன்மை பெற்றது.

இது போன்றுதான் ஓர் உயிரணு பூமிக்குள் விஜயம் செய்து… அது பல கோடி உடல்களைக் கடந்து... அதிலே பல கோடித் தீமைகளை நீக்கிடும் அறிவாக... மனிதனாக ஆனபின் இந்த ஆறாவது அறிவாக உருவானது.

1.ஆதியிலே அப்படி வளர்ச்சி பெற்று விண்ணுலகம் சென்றவன் தான் அகஸ்தியன்.
2.அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி… இன்றும் ஒளியின் உடலாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றான்.

அவன் தீமைகளை வென்று வெளிப்படுத்திய உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நம் பிரபஞ்சத்தில் பரவச் செய்தாலும் துருவத்தின் வழியாக நம் பூமி அதைக் கவர்ந்து நமக்கு முன் பரவச் செய்கின்றது.

ஆறாவது அறிவு கொண்டு அதை நாம் கவர்ந்து உயிரிலே மோதச் செய்து… கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி எல்லா அணுக்களையும் அந்தச் சக்தியைப் பெறச் செய்ய முடியும்.

இந்த மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில்…
1.எந்தத் தீமையை நாம் பார்த்தாலும் அது நமக்குள் ஊடுருவி
2.வாயிலே உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து விஷமாகப் போவதற்கு முன்
3.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தியில் வைத்துத் தடுத்து விட்டால் “அது சேனாதிபதி...!”
4.தீமை என்று தெரிந்து கொண்டபின் அதைத் தடுத்து நிறுத்த இப்படிப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினைச் செலுத்தப்படும் பொழுது அந்த அணுக்களுக்கு “வீரிய சக்தி கிடைக்கின்றது...”

உதாரணமாக… ஒரு மனிதன் நமக்குத் தீங்கு செய்கின்றான் என்றால்… அந்த உணர்வின் தன்மையை நம் கண்களில் உள்ள கருவிழி ருக்மணி தான் விலா எலும்புகளில் வித்தாகப் பதிவாக்குகின்றது.

எனக்குத் தீங்கு செய்தான்... தீங்கு செய்தான்... என்று மீண்டும் எண்ணும் பொழுது அந்த உணர்வுகள்... தீங்கு செய்தவன் அமெரிக்காவில் இருந்தாலும்... அவன் உணவை உட்கொள்ளும் போது நினைத்தால் அவனுக்குள் புரையோடி... சாப்பிட முடியாது தடுக்கின்றது.

அல்லது அவன் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தால் “எனக்குத் துரோகம் செய்தான்... அவன் உருப்படுவானா...?” என்ற உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அவன் சிந்தனை குறைந்து அங்கே விபத்துக்கள் உண்டாகிறது.

அதே சமயத்தில் “அவன் இப்படிச் செய்தானே...” என்று வீரிய உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது நம்முடைய சிந்தனைகளும் குறைந்து மேடு பள்ளம் தெரியாதபடி... அல்லது எதிரிலே இருக்கும் பொருள் தெரியாது நாமும் மோதிக் கீழே விழுகும் நிலை வருகின்றது.

எது இதைச் செய்கிறது...? நாம் நுகர்ந்த உணர்வைத் தான் நம் உயிர் இவ்வாறெல்லாம் இயக்குகின்றது. ஆகவே... இதைப் போன்று
1.“இதன் வழி இப்படி வரும் - கார்த்திகேயா…!” என்று நாம் தெரிந்து கொள்ளும் நிலையாக
2.ஆறாவது அறிவை எப்படிப் பயன்படுத்துவது…? என்பதைத் தெளிவாக
3.அந்த ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.

திட்டியவனை எண்ணும் பொழுது இங்கே நமக்கு விபத்து ஆகின்றது… அங்கே அவனுக்கும் விபத்துக்களை உருவாக்கும் சக்தி ஆகிறது. உணர்வுகள் தடுமாறி உடலுக்குள் சென்ற பின் தீய விளைவின் உணர்வுகள் நல்ல அணுக்களைச் செயலற்றதாக ஆக்கி இந்த உடலுக்குள் நோயாக மாற்றுகிறது.

இதைப் போன்ற தீமையிலிருந்து விடுபடுவதற்குத் தான் உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகிறோம்.

தீமை எப்பொழுது வருகின்றதோ பதிவாக்கியதை நினைவாக்கி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணினால் உள் புகாது தடுக்கின்றது.

அதற்குப் பின் என்ன செய்ய வேண்டும்…?

எந்த மனிதன்… “அவன் தீங்கு செய்தான்…” என்ற உணர்வினை நம் கண் கருவிழி ருக்மணி பதிவாக்கியதோ அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று
1.நாம் ஏங்கிப் பெற்றால் இதே கருவிழி ருக்மணி
2.அவன் செய்த தீங்கின் தொடர் கொண்டு பதிவானதன்… நம் உடலுக்குள் அதன் அருகிலேயே பதிவாக்கி விடுகின்றது.

இரண்டும் உயிரிலே மோதப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் வலுவான நிலைகள் வரப்படும் பொழுது வேதனையைத் தடுக்கும் சக்தி வருகின்றது... துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் வலுவாகின்றது.

அதே சமயத்தில்…
1.அந்தத் தொக்கிய விஷத்தின் தன்மை உள்ளே போகாதபடி கவர்ந்து இழுக்காதபடி
2.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று
3.கண்ணின் நினைவை உள்ளே பாய்ச்சப்படும் பொழுது அந்த அணுக்கள் எல்லாம் வீரிய உணர்வுகள் பெறுகின்றது… இங்கே தடுக்கின்றோம்.

அதாவது நாம் கவர்ந்த தீமையின் உணர்வுகள் உமிழ் நீராக மாறி ஆகரத்தின் வழி சென்று… ஜீரணித்து… இரத்தத்துடன் கலந்து உடலுக்குள் பரவுவதற்கு முன்… “ஆறாவது அறிவால்…” முன் கூட்டியே அதைத் தடுத்து விடுகின்றோம்.

இப்படிப் பழகிக் கொண்ட பின் மிளகாயைக் குழம்பிலே போட்டு அதைச் சுவையாக மாற்றுவது போன்று
1.தீமை என்றோ வேதனை என்றோ உணர்வுகள் செயல்பட்டாலும் அல்லது அவைகளை அறிந்து கொண்டாலும்
2.அறிந்து கொண்ட அந்த விஷத்தின் தன்மையை நமக்குள் வளராது தடுக்க இது உதவும்.

அதற்குத்தான் தியானப் பயிற்சியாக இதைக் கொடுக்கின்றோம்.