ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 5, 2016

கடுமையாக நம்மை ஒருவர் தாக்க வந்தாலும் அதைத் தடுக்கும் வழி - நடந்த நிகழ்சி...!

கால் நடையாக எம்மை (ஞானகுரு) நாடு முழுவதும் சுற்றச் செய்து அனுபவம் பெறுவதற்காக அனுப்பினார். ஒரு சமயம் குருநாதர் கயாவிற்குப் போகச் சொல்கிறார்.

அங்கே சென்றால் என்ன நடக்கிறது?

உள்ளுக்கே நுழைந்தவுடன் தாடி வைத்திருக்கின்றவனையெல்லாம் அடிக்கின்றார்கள், உதைக்கின்றார்கள். அதுமட்டுமல்ல ஒரு ஏழெட்டுப் பேரைக் கொன்றுவிட்டார்கள்.

குருநாதர் போகச் சொல்லும் நேரத்தில் இது நடக்கின்றது.

ஏனென்றால், சாமியார் குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய்விட்டார் என்ற நிலையில் தாடி வைத்திருக்கின்றவர்கள் யாரைக் கண்டாலும் அடிக்கின்றார்கள்.

சாமியாராக வந்தவர்களையெல்லாம் பெரும் பகுதி அங்கே போலிஸ் ஸ்டேசனில் வைத்துள்ளார்கள்.

நான் சாதாரணமாக ஒரு துண்டை மட்டும் போட்டு என்னடா.., இந்த மாதிரி இருக்கின்றது என்று போய்க் கொண்டிருக்கிறேன்.

மகராஜ்.., இதர் ஆவ், ஆவோஜி, அந்தர் ஆவ்..,” அப்படி என்கிறார்கள். போலிஸ் ஸ்டேசனுக்குள் கூப்பிடுகின்றார்கள்.

நான் ஒன்றும் செய்யவில்லை. ஒரு தப்பும் பண்ணவில்லையே.., என்னை எதற்காகக் கூப்பிடுகின்றீர்கள்? என்று அந்தப் போலிஸிடம் கேட்டேன்.

சாமியார்..,” என்று கண்டாலே அடித்துக் கொன்று கொண்டிருக்கின்றார்கள், நீ செத்துப் போவாய் என்று சொல்கிறார்கள்.

நான் சாமியார் இல்லை. தாடி தான் வைத்திருக்கின்றேன், நான் ஊரைச் சுற்றிப் பார்க்கத் தான் வந்தேன் என்றேன்.

நீ சாமியார் இல்லை என்று நினைக்கிறாய். ஆனால், உன் தாடியைப் பார்த்தவுடன் சாமியார் தான் என்று அடிப்பார்கள் என்று மறுபடியும் அந்தப் போலிஸ்காரர்கள் சொல்கிறார்கள்.

இது கயாவில் நடந்த நிகழ்ச்சி.

ஏனென்றால் அப்பொழுது அங்கே போலிஸ் ஸ்ட்ரைக். அந்த பீகார் மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அங்கே அடிக்கடி இன பேதங்கள் உருவாகி குடும்பம் குடும்பமாக ஒருவருக்கொருவர் அநியாயமாகக் கொன்று கொண்டிருப்பார்கள்.

அந்த மாதிரி உணர்வலைகள் சென்றபின் இனம் புரியாத அந்த நிலைகளே வரும். ஒரு குழந்தையினுடைய நிலைகளை மாற்றுவதற்காக வேண்டி இன்னொரு இனத்தினுடைய குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு போய்விடுகின்றார்கள்.

அப்பொழுது சாமியார் வேடம் போட்டு அதைச் செய்கின்றார்கள்.

அதனால் சாமியார் மாதிரி இருக்கிறவர்களையெல்லாம் அடிக்கின்றார்கள். இப்படியெல்லாம் சில நிலைகள் நடக்கின்றது.  அந்த இடத்தில் எனக்குள் பயம் வருகின்றது.

இவர்கள் சொன்னவுடன் முதலில் தைரியமாகப் போனேன். பின் பயம் வருகின்றது.

அப்பொழுது குருநாதர்நீ இந்த உடலுக்கு ஆசைப்படுகிறாயா..,?” என்று கேட்கின்றார்.

அந்த உடல் இருந்தால் தானே..,? இந்த உணர்வுகளை உள்ளுக்குள் கிளர்ந்தெழச் செய்து இந்த உடலுக்கு ஆசைப்படுகின்றாயா? என்று கேட்கிறார்.

இந்த உள் உணர்வுகளில் அவர் போதித்த உணர்வும் அங்கே நடக்கிற சமச்சாரமும் இரண்டும் இந்த ஆன்மாவில் பட்டு அந்த உணர்வுகள் இப்படி இயக்கமாகின்றது.

அப்படி அதைச் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வால் கலக்கம் வருகின்றது. அப்படிப் பயம் வரும் அந்த நேரத்தில் குருவை நினைக்கச் செய்கின்றார்.

“இந்தத் தீமைகள் மறைய வேண்டும்...,
உண்மைகள் வளரவேண்டும்”
என்ற இந்த உணர்வை நீ எடுத்துக் கொண்டு போ.., என்கிறார்.

ஏனென்றால், பயமான உணர்வுகளை எடுத்து திலே நாட்டம் செலுத்தினால் அந்த உணர்வுகள் அலைகளாக வரும். உன்னைப் பார்ப்பவருக்கெல்லாம் அதே அலை வரும். ஆக, நீ எதை நினைக்கின்றாயோ அவன் அந்தச் செயலுக்கே (உன்னைத் தாக்கும்) வருவான் என்றார் குருநாதர்.

அவர் சொன்ன முறைப்படி “இந்தத் தீமைகள் மறைய வேண்டும்..., உண்மைகள் வளரவேண்டும்” என்று எண்ணிக் கொண்டு அப்புறம் நடந்தே சென்றேன்.

அங்கே அந்த ஊர்கள் முழுவதும் சுற்றிப் பார்க்கும் பொழுது அந்த உண்மையினுடைய அலைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

இன்றைக்கு எடுத்துக் கொண்டாலும் பீகார் மாநிலத்தில் பயங்கர நிலைகள் நடக்கின்றது. வறட்சியும் ஜாஸ்தி, கலவரமும் ஜாஸ்தி, பழி தீர்க்கும் உணர்வும் ஜாஸ்தி.

இது எப்படி? எதனால்? என்ற நிலைகளில் அன்றைய அரசர் காலத்தில் பதிவானது என்ற நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.

இதைத் தெரிந்து கொள்ளும் நிலையில் தான் அங்கே சந்தர்ப்பம் பயமும் வருகின்றது, அந்த உணர்வும் வருகின்றது. இதைப் போன்ற தீமைகளை எப்படி நீக்குவது என்று அனுபவமாகக் காட்டியவுடன் பின் அங்கிருந்து பத்ரிநாத் போகச் சொன்னார் குருநாதர்.

September 4, 2016

சாமி (ஞானகுரு) உபதேசித்ததை எடுத்தால் நல்ல நிலையை நீங்கள் அடையலாம்

வயலைப் பண்படுத்தி அதிலே மற்றதை நீக்கி நல்ல வித்துக்களை ஊன்றி நீரைப் பாய்ச்சி அதை விளைய வைக்கின்றோம்.

அதை போல உங்கள் மனதினைப் பண்படுத்தி அருள் ஞான வித்துக்களை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டுள்ளோம். அதை வளர்க்கத் “தியானம்” என்ற காந்த சக்தியை நீங்கள் நீராக எடுத்து அந்த உணர்வின் தன்மையை வளர்த்திட வேண்டும்.

ஆக, நீரை ஊற்றி செடியை வளர்ப்பது போல இந்த அருள் ஞான சக்தியை வளர்த்திடல் வேண்டும். செடிகளுக்கு உரம் இடுவது போல மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் எடுத்துச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

களைகள் முளைக்காது, தனக்குள் தீயவினைகளைத் துடைத்து மெய் ஒளி காணும் நிலையை இந்த உபதேசத்தின் மூலமாகக் கொடுக்கின்றோம். உங்கள் மனதினைப் பண்படுத்தி அருள் ஞான வித்தை உங்களுக்குள் பதிவு செய்திருக்கிறோம்.

இதை முறைபடுத்தி ஒவ்வொருவரும் உங்களை நம்பி தியானத்தின் மூலம் இதை எடுத்தீர்கள் என்றால், உங்கள் உயிர் நீங்கள் எண்ணியதை இயக்கிக் காட்டும்.

அதே உயிர் உங்கள் உடலுக்குள் இயக்கிக் காட்டி அந்த மகரிஷிகளின் உணர்வினை விளைய வைத்து, அதனின் நிலையாக அது செயலாக்கும்போது அந்த ஞானிகள் சென்ற பாதையில் நீங்கள் அங்கே செல்லலாம்.

விஞ்ஞான அறிவு கொண்டு அற்புதங்களைச் செய்து அணுவைப் பிளந்து ஆற்றல் மிக்க நிலைகளை உருவாக்கும்போது பிறிதொன்றை (ஒருவனை) அழித்துவிட்டு தான் வாழ்ந்திடும் எண்ணம் கொண்டு, உலகையே அழிந்திடும் நிலைகளுக்குக்  கொண்டு வந்து விட்டார்கள்.

இன்று நாம் இதிலேதான் சிக்குண்டுள்ளோம்.

ஆக வேதனையும், வெறுப்பும் கொண்டு மீண்டும் மனித உடலுக்குள் சிக்குண்டு நாம் பரிணாம வளர்ச்சியில் தேயும் நிலைகளில் பௌர்ணமி தேய்வது போல தேய்ந்து மீண்டும் புழுவின் நிலையை அடையலாம்.

இதில் உங்களுக்கு “எது பிரியமோ..,” அதைச் செய்யலாம்.

நீங்கள் அருள் ஞானம் பெறவேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொன்னேன். ஆனால் நீங்கள் எடுத்துக்கொண்ட நிலைகள் கொண்டுதான் உங்களால் வளர முடியும்.

நான் அதைச் செய்வேன், பூனையைச் செய்வேன், யானையைச் செய்வேன், குதிரையைச் செய்வேன் என்றால், அது முடியாது.

குரு காட்டிய வழியில் நான் உண்மையைக் கண்டேன். எனக்குள் அதை வளர்த்துக் கொண்டேன். உணர்வின் சொல்லாக வடிக்கின்றேன்.

கேட்டுணர்ந்தோர் உங்களுக்குள் பதிவு செய்து அதனை நீங்கள் வளர்த்துக் கொண்டால்தான் “உங்கள் உயிர் அதை வளர்க்கும்”.

உங்களுக்காக நான் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் நலம் பெறவேண்டும் என்று நான் வேண்டலாம்.

ஆனால் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் வேண்டும்போது “எனக்குத்தான் அந்தச் சக்தி கூடுகின்றது”. கீதையிலே இதைத்தான் சொல்கின்றார்கள், "நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்".

நீங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும். உங்களை அறியாது இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப்பொருள் காணவேண்டும் என்று நான் தியானிக்கும் போது அந்த உணர்வின் சக்தி எனக்குள் பெறுகின்றது. என் உடலுக்குள் விளைகின்றது.

ஆனால், என்னைப் பார்க்கும் போது, “தீமைகள் நீங்கிப் போகும்..,” என்று நான் சொல்லும் போது, உங்கள் துன்பத்தைத் துடைக்க அழுக்கை நீக்க சோப்பு போட்டுத் துடைத்த மாதிரி அந்த நிமிடத்திற்கு வேண்டும் என்றால் துன்பத்தைத் துடைக்கலாம். உங்கள் காரியத்திற்கு வேண்டும் என்றால் சாதிக்கலாம்.

அந்த நேரத்திற்குத் தான் அது நடக்கும்.

ஆனால், அடுத்த கணம் எடுக்க வேண்டும் என்றால், எப்பொழுதுமே நிலையாகத் தீமைகளை நீக்க வேண்டும் என்றால் நீங்களும் இதைப் போல அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கினால்தான் அது உங்களுக்குள் விளைந்து அந்த நிலையில் உங்களைக் காத்திட முடியும்.

ஆக, சாமி (ஞானகுரு) எனக்காக வேண்டிச் செய்தால் சரியாகப் போய்விடும் என்று எண்ணினால் “அது தப்பு”.

“சாமி சொன்ன நிலைகளை” நாம் எடுத்து கொண்டால் நாம் நல்ல நிலையை அடையலாம் என்ற தன்னம்பிக்கை வேண்டும்.

உதாரணமாக, ஒருவர் நம்மைத் திட்டினார் என்றால், அவரை மீண்டும் எண்ணும் போது அந்த ஆத்திரம் வருகின்றது.

அதே போல ஒருவர் வேதனைப்படும்படியான செயலைச் செய்தால் அவரை எண்ணும் போது நாம் வேதனையான உணர்வைச் சுவாசித்து அந்த வேதனையால் சுணங்கிவிடுகின்றோம்.

குழந்தை மேல் பாசமாக இருந்து “இவன் இப்படிச் செய்கின்றான் என்ற ஏக்கத்துடன் சோர்வுடன் வந்தால் அந்தச் சோர்வான நிலைகள் நம்மைச் செயலற்றதாக ஆக்கிவிடுகின்றது.

மனித வாழ்க்கையில் இத்தகைய தீமைகளிலிருந்தெல்லாம் மீட்டிய அந்த ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் மெய்ஞானிகள் உணர்வு நமக்குள் சென்று சோர்வடையும் தன்மையை நீக்கிவிடும்.

ஆக, மெய் ஒளி பெறும் உணர்வாக நமக்குள் விளைந்து நாம் இந்த உடலைவிட்டுச் சென்றால் மெய்ப் பொருள் காணும் நிலைகள் மெய்பொருளாக நம் உயிரின் தன்மை ஒளியின் சரீரமாக ஆவது திண்ணம்.

அந்த நிலையைப் பெறவேண்டும் என்றுதான் எனக்குள் குருநாதர் உபதேசித்தார்.

அதன் வழி நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். உங்கள் அறியாது இருள்கள் நீங்க வேண்டும். மெய் பொருள் காணவேண்டும் என்ற நிலைக்கே உபதேசிக்கின்றேன்.

இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் ஒளியின் சரீரமாக நீங்கள் ஆக வேண்டும் என்று உங்களை நான் நினைத்து மகரிஷிகள் காட்டிய வழியில் அந்தச் சப்தரிஷி மண்டலத்தை எண்ணி ஏங்குகிறேன். அந்த உணர்வின் தன்மையை எனக்குள் வளர்கின்றது.

உங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் அந்த உயிரான்மாக்கள் பிறவி இல்லாத ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று சதா நான் தியானிக்கின்றேன். 

எனது குரு பலம் கொண்டு அதனை அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணியதனால் அந்த உணர்வின் தன்மை எனக்குள் அதிகமாக விளைகின்றது.

அதன் வழியில் என்னுடைய கூர்மை அங்கே செல்கின்றது. நான் இந்த உடலை விட்டுச் செல்லும் நிலையில் நிச்சயம் நான் அங்கு செல்வேன்.

அதைபோல நீங்களும் பிறர் படும் துன்பமான நிலைகளை நீக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அவர்கள் அறியாது இருள் நீங்க வேண்டும். மெய்பொருள் அவர் காணவேண்டும் என்று நீங்கள் எண்ணிப் பழக வேண்டும்.

இவ்வாறு எண்ணினால் அதனின் உணர்வுகளை உங்கள் உயிர் உங்களுக்குள் படைக்கின்றது. அதனின் நிலையாக உங்களுக்குள் விளைய செய்கின்றது.

நீங்கள் எந்த நேரம் எந்த நிமிடம் உடலை விட்டுச் சென்றால் அங்கே விண் செல்லலாம். இது தான் மெய்ஞானிகள் காட்டிய நிலைகள்.

இந்த வாழ்க்கை என்றுமே நமக்குச் சதம் அல்ல. இந்த உடல் என்றும் நமக்கு நிரந்தரமல்ல.

இந்த உலகம் நமக்குச் சொந்தம் தான். அதே சமயத்தில் இந்த உலகத்துக்குள் இருக்கும் அருள் உணர்வுகளை நமக்குள் சொந்தமாக்குதல் வேண்டும். அந்த அருள் உணர்வின் தன்மை நமக்குள் விளைய வைக்க வேண்டும்.

அந்த மெய்ஞானிகள் காட்டிய உணர்வு நமக்குள் வளரும் போது அது சொந்தமாகி “அதனின் நிலைகளில் அதுவாகி.., அதனின் நிலைகளில் நாமாகின்றோம்”.

இந்த நிலைகளை எல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் யாம் வேண்டுகிறோம்.

September 2, 2016

மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள், உங்களால் முடியும்

நம் குருநாதர் காட்டிய அருள்வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் எல்லோருமே பெருக்கிக் கொண்டு வருகின்றீர்கள்.

குருநாதர் கொடுத்த சக்திகளை குருநாதர் காட்டிய அருள் வழியில் அதைத் தெரியப்படுத்த வேண்டுமென்று யாம் விரும்புகின்றோம்.

ஆனால், சில சக்திகளைக் கொடுத்த பின் என்ன ஆகின்றது. ஆசைப்படுவதை எல்லாம் பெறவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

அதற்குப் பதில் உங்கள் ஆசை எதன் வழிகளில் இருக்க வேண்டும்?

அந்தச் சப்தரிஷி மண்டல அலைகளைப் பெறவேண்டும். எங்களுக்குள் அது வளரவேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.

அதை வளர்க்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்யவேண்டும்?

யாரும் கஷ்டப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டால் அவர்களுக்கு அந்த சப்தரிஷி மண்டலத்தின் அருள் சக்தி கிடைக்க வேண்டும், அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று இந்த உணர்வை இங்கே எடுத்துச் சமைத்து இதிலே நீங்கள் மகிழ்ச்சியைத் தெரிந்து கொள்ள ஆசைப்படவேண்டும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா.

இதை நாம் நமக்குள் பெருக்க வேண்டும்.

உடலுக்குள் ஆன்மா இயங்குகிறது என்று சொல்லிக் கொண்டு திடீரென்று வருகின்றார்கள்.

நான்கு பேர் சேர்ந்து கூட்டுத் தியானமிருக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நமக்குள் சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக்கூட்டிக் கொண்டு அந்த "உடலிலுள்ள ஆன்மாவிற்கு" மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அதற்கு (அவருக்கு) நல்லதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

அவர்களிடமும் (ஆன்மா உள்ளவரிடமும்) சொல்லி நீ இதைச் செய்தாய் என்றால் சீக்கிரம் உனக்கு நன்றாகிவிடும் என்று சொல்ல வேண்டும். அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்றால் அவருக்கு இலாபம்.

இப்படி இதைப் பெருக்கப் பழகவேண்டும். இந்தப் பேருண்மைகளைப் பார்க்கப் பார்க்க உங்களை அறியாமலேயே மகரிஷிகளின் உணர்வுகளை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.

அந்த உணர்வலைக்குள் சென்றவுடன் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வுகள் சுழல்வதைக் காண முடியும், சப்தரிஷி மண்டலத்துடன் அது தொடர்பு கொள்ளும்.

சிலருக்கு அது தெரியும். தன்னிச்சையாகவே அந்த உணர்வுகள் சப்தரிஷி மண்டல உணர்வலைகளை உணவாக எடுக்கும்.

ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒரு அரச மரத்தின் வித்து பட்டாலும் அங்கே தண்ணீரே இல்லை என்றாலும் கூட காற்றிலுள்ள ஈர்ப்பதத்தை அதனின் விழுதுகள் எடுத்து மரம் வளர்ந்துவிடும்.

அதைப் போன்று உங்கள் நினைவின் ஆற்றலெல்லாம் அங்கே விண்ணுக்குச் சென்று பழக வேண்டும்.

பாதை தெரியாதபடி (லோக்கலில்) சென்றால் பல அற்புதங்கள் தெரியலாம். பல அதிசயங்களைப் பார்க்கலாம் ஆனால், “கீழே” நம்மை இழுத்துவிடும்.

அதனால் தான் ஆரம்பத்தில் ஒவ்வொருவரிடம் "உங்களுக்கு என்ன காட்சி கிடைத்தது..,?" என்று கேட்பேன். ஏனென்றால் அப்பொழுது காட்சிகள் எல்லோருக்கும் கிடைக்கும், எல்லோருமே காட்சி சொல்வார்கள்.

அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இப்பொழுது என்னாகி விட்டார்கள்? அந்த ஆசையில் மூழ்கிவிட்டார்களே தவிர அதிலிருந்து மீள்வதற்கு வழி இல்லாமல் போய்விட்டது.

ஆகவே எப்படிப் பார்க்க வேண்டும்?

அந்தப் பேரண்டக் காட்சிகளை, விண்ணுலக ஆற்றலை, அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பார்க்க வேண்டும். அந்த உணர்வைப் பெறவேண்டும் என்ற இந்த ஆசையை நாம் அங்கே வைக்க வேண்டும்.

அதை நாம் வளர்க்கப் பழக வேண்டும்.

திடீரென்று, “அதைப் பார்க்க வேண்டும்...,” என்று வரக்கூடாது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெறவேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும். பார்க்க வேண்டும் என்றால் முதலில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று அந்தச் சக்திகளை நம் உடலுக்குள் ஏற்றவேண்டும்.

ஏற்றியபின் என்ன செய்யவேண்டும்?

யார் கஷ்டப்பட்டாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் அவர்கள் உடலில் உள்ள தீமைகள் எல்லாம அகல வேண்டும் என்று நம் பார்வையால் இந்தச் சக்தியைப் பாய்ச்சுதல் வேண்டும்.

அப்பொழுது அந்த உண்மையான சக்தியை இதிலே பார்க்கலாம்.

தீமைகள் அவர்களிடமிருந்து அகலும் பொழுது மகிழ்ச்சியின் நிலைகள் வரும். அந்த மகிழ்ச்சியின் உணர்வுகள் வரும் பொழுதுதான் உங்களுக்குள் பெருக்கமாகின்றது.

அப்பொழுது உங்களுக்குள் அந்த எண்ணம் மகரிஷிகளின் பால் வேகமாகக் கொண்டு போகின்றது.

இதன் ரூபத்தில்தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர "எனக்குச் சப்தரிஷி மண்டலம் தெரியவில்லையே.., அது எப்படிப் போவது..,?" என்ற இந்த வினாக்களை எழுப்பவே கூடாது.

ஏனென்றால், நாம் படிப்படியாகத் தான் போக வேண்டும்.

ஒரு திரையிலே சினிமா காட்டுகின்றார்கள் என்றால் அங்கே இருக்கும் பொழுது வெறும் ஒளியாகத் தான் படுகின்றது.

அதைத் தடுத்து நிறுத்தும் பொழுதுதான் திரையில் உருவம் தெரிகின்றது. நாம் குறுக்கே பார்த்தால் தெரிவதில்லை (ஒளி அலைகள் தான் தெரியும்). அதிலே தடுத்து நிற்கும் பொழுதுதான் அந்த உணர்வுகள் தெரிகின்றது.

அதே மாதிரித் தான் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் முதலில் நமக்குத் தெரியாது. வெறும் அணுக்களாகத் தான் தெரியும்.

அந்த உணர்வின் தன்மை தனக்குள் அதை நிறுத்தி வைக்கப்படும் பொழுதுதான் அந்த உருவத்தின் தன்மை யார்? யார்? என்ற உணர்வுகளே நமக்குத் தெரியும்.

இதுவெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு நேரடியாகக் காட்டிய நிலைகள். அதை நீங்களும் பெற முயற்சி செய்யுங்கள். அந்த மகரிஷிகள் யார் யார் என்று நிச்சயம் உங்களால் அறிய முடியும்.

மகரிஷிகளுடன் உங்களால் நேரடித் தொடர்பு கொள்ள முடியும். பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமைகளையும் பல கொடுமையான நிலைகளிலிருந்தும் மீண்டிடும் ஆற்றல் பெற முடியும். உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

மகரிஷிகள் அருள் வட்டத்தில் நீங்கள் வாழுங்கள். பேரின்பப் பெருவாழ்வாகப் பெற்றிடுவீர்கள். அழியா ஒளியின் சரீரம் பெறுவீர்கள்.

எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் எல்லா மகரிஷிகளின் அருளும் உங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.

ஓம் ஈஸ்வரா குருதேவா.

September 1, 2016

தீமைகளை நாம் அனாதையாக்கிப் பழக வேண்டும்...! - "சதுர்த்தி"

தீமையோ, பகைமையோ, வேதனையோ இவை அனைத்தையும் நாம் நுகரப்படும் பொழுது நாம் நுகர்ந்த உணர்வுகள் கருவாகி இரத்த நாளங்களில் சேர்க்கப்படுகின்றது, சேமிக்கப்படுகின்றது.

அது சேமிப்புக் கிடங்காக இருக்கின்றது.

அதனின் உணர்வின் தன்மை நினைவாற்றல் பெருகப்படும் பொழுது அது அணுவாக மாறி உணவுக்காக ஆசையைத் தூண்டும் பொழுது அந்த உணர்வுகளே நமக்குள் இயக்கப்பட்டு அந்த உணர்வின் இயக்கமாக நாம் இயங்குவதும் அதை நுகர்ந்த உணர்வு அந்த அணு தனக்குள் உறைவிடமாக உருப்பெற்றுவிடுகின்றது.

அணு உருவானால் அது தன் பசிக்காக ஏங்கும் பொழுது உயிர் காற்றிலிருந்து அதே இனமான சத்தை எடுத்து அந்த அணுவிற்கு உணவாகக் கொடுக்கும்.

நம் உடலுக்குள் இத்தகையை அணுக்கள் வளர்ந்தால் வேதனை என்ற நிலையை உருவாக்கி மனிதனல்லாத உருவிற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

இதைப் போன்ற நிலைகளில் நமக்குள் உருப்பெறாமல் தடுத்திட வேண்டுமல்லவா? அதைத்தான் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

சிவன் இராத்திரி, தீப ஒளி, விஜய தசமி, விநாயகர் சதுர்த்தி இதைப் போன்று ஒவ்வொரு நிலைகளிலேயும் மனிதன் அந்த உன்னத உணர்வின் தன்மையைத் தனக்குள் பெருக்கும் வழியைக் காட்டினார்கள் ஞானிகள்.

அதே சமயத்தில் நாம் ஒன்று சேர்த்து வாழும் நிலையையும் நமக்குள் அறியாது சேர்ந்த பகைமையை அழிக்கும் நிலையாக அதை நீக்கிடும் நிலைகளை “வைகுண்ட ஏகாதசி” என்றும் உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

அனைவரும் நலம் பெறவேண்டும் என்றும் அனைவரும் அருள் ஒளி பெறவேண்டும் என்றும் இந்த உணர்வை எடுத்தால் மற்ற பகைமை உணர்வுகள் நமக்குள் வளராது தடுக்கப்படுகின்றது.

எல்லோரும் ஏகாந்தமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் எண்ணும் பொழுதுதான் நமக்குள் அந்த ஏகாந்த சக்தி உருவாகின்றது.

வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் நான்கு மணிக்கு ஏகாந்தமடைந்த அந்த அருள் உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை வளர்ச்சியடையப்படும் பொழுது பகைமை என்ற உணர்வுகள் நமக்குள் நுழையாது தடைப்படுத்துகின்றது.

அதன் வழி தான் குரு காட்டிய அருள்வழியில் அதிகாலையில் துருவ தியானத்தை எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றோம்.

ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் உள்முகமாக அந்தச் சக்திகளைப் பாய்ச்சச் செய்கின்றோம்.

அந்தச் சக்தி கணவன் மனைவிக்குப் பெறவேண்டும், மனைவி தன் கணவனுக்குப் பெறவேண்டும் என்றும் குழந்தைகள் தங்கள் தாய் தந்தையருக்குப் பெறவேண்டும் என்று இத்தகைய வலுவை சேர்த்துக் கொள்தல் வேண்டும்.

அதே போன்று நாங்கள் பார்க்கும் அனைவரும் எங்களைப் பார்க்கும் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று மற்றவர்களுக்கும் இந்த அருள் உணர்வுகளைப் பெறச் செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இந்தக் காலை துருவ தியானத்தில் இதைப் போன்று ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும்.

அப்பொழுது நாம் ஒவ்வொருவரும் ஈர்க்க மறுக்கும் அந்தத் தீமையான பகைமையூட்டும் உணர்வுகள் அனைத்தும் அனாதையாகின்றது. நாம் ஈர்க்கும் சக்தியை இழந்துவிட்டால் தீமையின் உணர்வுகள் தனித்து நிற்கும்.

காலையில் சூரிய உதயமாகும் பொழுது தனித்துப் பிடிப்பில்லாத நிலைகளைச் சூரியன் அதைக் கவர்ந்து விண்வெளியிலே அழைத்துச் செல்லும். பூமியில் சூனியமான இடங்கள் காற்றலைகள் இல்லாது அசைவில்லாது இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும்.

ஆனால், அசைவில்லாத இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும் கடல் அலைகள் ஈர்க்கும் தன்மை வரும் பொழுது அதனின் உணர்வின் தன்மை கொண்டு கீழே இறங்கினால் இதைக் கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்திவிடும்.

ஆகவே, இந்தப் பரமான பூமியும் பரிசுத்தமாகின்றது.

நமக்குள் தீமையை நுகராத தன்மையும் வருகின்றது. அந்த அருள் உணர்வின் தன்மை நமக்குள் வளர்க்கப்படுகின்றது.

இப்படி இந்தப் பன்னிரெண்டு மாதங்களில் எதை எதை நாம் நுகர வேண்டும்? தீமைகள் நமக்குள் சேராது எப்படித் தடுக்க வேண்டும்? என்ற பேருண்மையைத் தெளிவாகக் காட்டப்பட்டது.