ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 11, 2014

யாம் கொடுக்கும் அருள் ஞானப் பயிரை உங்களுக்குள் விளையச் செய்யுங்கள்

1. யாம் கொடுக்கும் அருள்ஞானப் பயிரை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்
சாமி செய்து கொடுப்பார் என்பதற்குப் பதில், “சாமி சொன்ன ஆற்றலின் தன்மையைஉங்களுக்குள் நீங்கள் செய்து பார்த்தால், உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தையும், உங்கள் மனதைக் குலையச் செய்யும் அசுர ஆற்றலினுடைய அசுரத்தன்மையான இந்த உணர்வை நீங்கள் தடைப்படுத்திவிட முடியும்.

இவர் வந்து செய்து கொடுப்பார் என்று எண்ணுவதற்குப் பதில், யாம் கொடுக்கின்றோம், நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

ஒரு நெல் பயிரை உங்கள் கையிலே கொடுத்தோம் என்றால்,
அதை விளைய வைத்து,
அதிகமாகப் பயிரிட்டுக் கொள்ளலாம்.
பயிரின் நிலைகள் போலத் தான், யாம் கொடுக்கும் நிலை. பலகாரம் அல்ல.

சுட்டுக் கொடுத்தால், அன்றைய நிமிடம் இருக்கும். பின், அதனுடைய கழிவாகிவிடும். மறுபடியும் எம்மைத்தான் எதிர்பார்க்க வேண்டும்.
சமைத்த வித்தின் தன்மை அது பயிர் - ஜீவனுள்ளது.
இது பலகாரம் - ஜீவனற்றது.

வாக்கிலே யாம் சொல்லப்படும் பொழுது, இந்த நிமிடம் அது மறைந்துவிடும். அது அந்த நேரத்திற்கு, உங்களுக்குச் சௌகரியாமாகும்.

ஆக, அடுத்த கணம் இந்த ஜீவனுள்ள சக்தியை நீங்கள் பெறுவதற்கு இந்த ஆத்ம சுத்தி என்ற நிலைகளை எடுத்து, மகரிஷிகளினுடைய சக்தி கொண்டு அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
2. கவசத்தைப் போன்று உங்களுக்குக் கொடுக்கின்றோம் – ஆத்ம சுத்தி
இன்றைய நிலைகளில் ஆத்ம சுத்தி செய்து கொண்டால், சமத்துவப்படுத்துவதைக் காணலாம்.

எவ்வளவு எதிரியாக இருந்தாலும்,
மற்ற நிலைகள் இருந்தாலும், அதை நாம் சமப்படுத்தி,
அவர்களைப் பார்த்தவுடன்,
நமக்குள் உணர்ச்சிகளைத் தூண்டாதிருக்கும்.

அதுதான் முதல் கடமை. மற்றவர்கள் பேசலாம். ஆனால், பேசிய உணர்வுகள் நம்மைத் தூண்டி, “இப்படிச் செய்தார்” என்று ஆத்திரம், சோர்வு, சஞ்சலம், வெறுப்பு, இதைப் போன்ற நிலைகள் வரவே கூடாது.

இந்தச் செயல்களுடைய நிலைகள் வந்தாலும், இதை வராது தடுப்பதற்கு, உடனே ஆத்ம சுத்தி என்ற நிலையைச் செய்து கொள்ள வேண்டும்.

அதைச் செய்து, இந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் அமிலமாகச் சேர்ந்து, நம் உடலில் சேராவண்ணம் தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குத்தான் அந்த ஆயுதத்தைக் கொடுத்தது.

ஏனென்றால், இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை
“வெறும் சொல்லாக” நீங்கள் எண்ண வேண்டாம்.
இதை நீங்கள் செய்யுங்கள் என்று சொல்லும் பொழுது,
கவசத்தைப் போன்று
உங்களைக் காத்துக் கொள்ள,
அதை யாம் கொடுக்கின்றோம்.

நமது குருநாதர் எதன் வழிகளில்
எமக்கு அதைக் கவசமாகக் கொடுத்தாரோ,
ஒவ்வொரு நிமிடத்திலும் என்னை அடக்க முடியாத நேரத்தில்,
அந்த ஆற்றல் மிக்க சக்தியைக் கொண்டு அடக்கி,
அந்த உணர்வின் ஆற்றலை, நான் எப்படி
சிறுகச் சிறுக நல்லதாக மாற்றிக் கொண்டேனோ,
அதைப் போன்று, உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை நீங்களே தான் மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த நிலை வந்தால்தான், நீங்கள் இந்த உலகத்தின் நிலைகளிலிருந்து மீள முடியும். ஆகையினாலே, இதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நிலைக்கு வரவேண்டும்.

February 10, 2014

நீங்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான உணர்வுகளே எமக்கு அமுதாகின்றது - ஞானகுரு

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள்வழி கொண்டு, யாம் மிகவும் சிரமப்பட்டு 12 வருட காலம்
அந்த மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளைச் சேர்க்கும் நிலையும்,
அதை உங்களுக்குள் விளைய வைக்கும் நிலையும்,
ஒலியால் பாய்ச்சும் நிலையும்
குருநாதர் எமக்குக் கற்பித்ததனால், உங்களுக்குள் சேர்க்கின்றோம்.

இதை ஏன் சேர்க்கின்றேன்?

உங்கள் உயிர் இவ்வளவு பெரிய ஆற்றல் மிக்க உடலை எண்ணுகின்றது, இயக்குகின்றது.
இந்த உணர்வுக்குள் நல்லதை விளைய வைத்து,
மகிழ்ச்சியான உணர்வலைகளை வெளிப்படுத்துகின்றீர்கள்.

அப்பொழுது நீங்கள் மகிழ்ந்து,
"சாமியினால் எனக்கு நல்லதாகியது”,
என்று சொல்லப்படும் பொழுது, அந்த எண்ணம்
ஆயிரம் பேர் “இவர் நல்லவர், இவர் நல்லவர்”
என்ற உணர்வை நீங்கள் எடுத்து,
அந்த உணர்ச்சியின் தன்மையைப் பேசும்பொழுது,
எமக்கு நல்ல அமுதாகக் கிடைக்கின்றது.

இதைப் போன்று நீங்களும் எடுத்து,
உங்களுடைய உணர்வுகள் மற்றவர்களிடம் சொல்லும் பொழுது,
அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தூண்டும் பொழுது,
அவர்கள் உங்களை எண்ணுகின்றார்கள்.

அதாவது, பல சத்தின் நிலைகள் “தனித்த நிலையில் இருக்கும் பொழுது மாறியிருந்தாலும்”, நாம் குழம்பு வைக்கும் பொழுது, எல்லா உணர்வின் சத்தின் நிலைகளையும் ஒன்று சேர்த்து நாம் சுவை கொண்டதாக்கிக் கொள்கின்றோம்.

அதைப் போன்றே, ஒருவருக்கொருவர் அந்த மகிழ்ச்சியை, ஒருவர் உடலிலிருந்து நாம் சமத்துவப்படுத்திக் கொள்வோம்.

நாம் அனைவரும் அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம் எமது அருளாசிகள்.

February 9, 2014

எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ அப்பொழுது தியானம் செய்யுங்கள்

1. நல்ல குணங்களை ஏன் காக்க முடியாமல் போகின்றது?
பக்தி மார்க்கத்திலே, நல் ஒழுக்கங்களை நாம் கடைப்பிடித்தாலும், நல்லதைக் காக்கும் திறன் நமக்கு இல்லை.

நல்லதை எண்ணும் பொழுது,
பிறிதொரு குறையைக் கண்டவுடன்,
அந்தக் குறைகள் அதிகமாகி,
நல்ல குணங்கள் கீழ்ப்படிந்து விடுகின்றது.

ஆகவே, விஷம் கவர்ந்து கொள்கின்றது. அந்த விஷத்திலிருந்து நாம் மீளமுடியாத நிலைகளில் வெறுப்பு, ஆத்திரம் வந்து,
“அன்று நல்லதைச் செய்தேன்,
இப்படிச் செய்கின்றார்களே” என்ற
பழிதீர்க்கும் உணர்ச்சிகள் அதிகமாகி, நாம் இழிவான சரீரங்களுக்குத்தான் செல்லக்கூடிய நிலைகள் ஏற்பட்டுவிடுகின்றதே தவிர, மெய் ஒளி காணும் நிலைகள் இல்லை.

மெய் ஒளி பெறவேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால், அந்த உணர்வின் நிலைகள் நமக்குள் தூண்டும் ஆற்றலை இழந்து, அதை எண்ணும் பொழுது, நமக்குச் சோர்வும் சஞ்சலமும் வந்து, அது முடியாத நிலையில் விரக்தியாகி, எண்ணத்தால் கூட சிறிது நேரம் எண்ண முடியாது.

ஆக, இந்தத் தியானத்தை எடுக்கும் பொழுது, சில பேர் “என்னால் எடுக்க முடியவில்லை, உட்கார முடியவில்லை” என்று சொல்லுகின்றோம். நாம் எவ்வளவு நல்லதை எண்ணி எடுக்க வேண்டுமென்றாலும், இது ஒரு பெரிய சுமையாக இருக்கும்.

நாம் சிறிது நேரம் பேசும் பொழுது எண்ணிவிடலாம். அமைதி கொண்டு, அதை நினைவு கொண்டு எடுக்க வேண்டுமென்றால், அடுத்த நிமிடமே, இது மறைந்துவிடும்.
நம் நினைவலைகள் எங்கெங்கோ ஓடிவிடும்.
அதற்கு இந்த ஆற்றல் இல்லை.

அதைப் போன்ற ஆற்றல் இல்லாத நிலைகளில், யாரும் எடுக்க முடியாத நிலைகளில் எத்தனையோ பேர் முயற்சிக்கின்றார்கள். முடியவில்லை.
2. இந்த தியானத்தின் மூலம் உங்கள் நல்ல குணங்களுக்கு வலு கூடுகின்றது
ஆனால், நம் தியானவழி மெம்பர்களுடைய நிலைகளில், கூடுமான வரையிலும் நாம் நினைத்தவுடன் நாம் எண்ணி, பல மணி நேரங்கள் கூட அமைதி கொண்டு இருக்க முடிகின்றது.

பக்கத்தில் அமைதியைக் குலைக்கும் நிலைகள் கொண்டு, இரைச்சலோ, சத்தமோ இருந்தாலும் கூட, நமது மெம்பர்களுடைய நிலைகள், இதன் வழி கொண்டு இருக்கும் பொழுது, அமைதி கொண்டு, தான் எண்ணிய நிலைகளை எடுக்கக்கூடிய ஆற்றல் பெறுகின்றார்கள்.

மற்ற நிலைகள் இல்லாததைக் கூட, உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். காரணம் இதைப் போன்ற நிலைகள் உங்களுக்குள் தாக்காத நிலைகளை, நாம் மெய் ஒளியின் தன்மையைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றோம்.

பத்து பேரில், ஒரு சிலருக்கு இல்லாமல் இருக்கலாம், நாம் ஒரு நிமிடமானாலும் இதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மீண்டும் நாம் எடுத்துக் கொண்ட பின், மீண்டும் யாம் சொன்னதை விட்டுவிட்டு, “என்னத்தை எடுத்தோம், முடியவில்லை” என்று சொன்னால், அதைக் கூட்டிக் கொள்பவருக்கு மீண்டும் கிடைக்காது.

யாம் சொன்ன உணர்வின் தன்மையைக் கூட்டி,
எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ,
அதை அடக்குவதற்கு ஓம் ஈஸ்வரா என்று,
ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை அடிக்கடி எடுத்துப் பயன்படுத்துங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நாம் பெறவேண்டும், என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்துங்கள். உங்கள் எண்ணத்திற்கு வலு கூட்டும்.

ஆகையினாலே, இதையெல்லாம், நீங்கள் என்னமோ ஏதோ என்று நினைக்க வேண்டாம். 

February 8, 2014

துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நம் புருவ மத்தியில் மோதச் செய்யவேண்டும்

1. துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நமக்குள் மோதச் செய்யவேண்டும்
எப்படி நாம் காற்றடிக்கும் பம்பை வைத்து, காற்றடிக்கின்றோமோ,
பெட்ரோல் இன்ஜின் ஓடும் பொழுது,
அதிலுள்ள பிஸ்டன் இழுத்து,
தனக்குள் எடுத்துக் கொள்கின்றதோ,
இதைப் போல நம் உயிரின் ஈர்ப்பு, அது துடிக்கும் பொழுது, அதனின் “ஈர்ப்பின் சக்தி அதிகமாகின்றது”.

நாம் நம் உடலில், “ஓம் ஈஸ்வரா’ என்று உயிரின் துடிப்பின் நிலைகளைக் கூட்டும் பொழுது, நம் உயிரின் துடிப்பின் வேகம் கூடுகின்றது.

அப்பொழுது நாம் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணி, அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நமக்குள் மோதச் செய்ய வேண்டும்.

அப்படி மோதச் செய்யும் பொழுது, ஏற்கனவே இருந்த துடிப்பைக் காட்டிலும், அதிகமான நிலைகளை நமக்குள் சேர்க்கப்படுகின்றது. ஆக நம் உடலிலே காந்த சக்தி கூடுகின்றது.

இந்த வேகத்துடிப்புடன், நம் சுவாசத்தை மேல் நோக்கி நாம் எண்ண வேண்டும்.
2. சுவாசித்த துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உடல் முழுவதும் பாய்ச்ச வேண்டும்
புருவ மத்தியிலே நம் உயிர் இருப்பதனாலே நம் கண்ணின் புலனறிவை, ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி, உடலுக்குள் அந்த நினைவைச் செலுத்தும் பொழுது,
எந்த பாகத்தில் அந்த நினைவைச் செலுத்துகின்றோமோ,
அந்த உணர்வின் நிலைகள் கூட,
ஊடுருவிச் செல்லும் நிலைகள் இருக்கின்றது.

அதைப் போல, நம் கண்ணான புலனறிவின் நிலைகளை உயிருடன் ஒன்றி இணைக்கச் செய்து, இந்த ஆற்றலை நாம் செயல்படும் பொழுது, அந்த உயிருக்குள் அந்த வேகத் துடிப்பின் நிலைகள் அதிகமாகின்றது..

இந்த அலைகள் நம் சுவாச நாளங்களில் ஊடுருவி,
உடல் முழுவதற்கும் செல்கின்றது.

அவ்வாறு சுவாசித்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள்
நம் உயிருடன் சுழற்சியாகி, அந்தச் சுழற்சிக்குள் பட்டவுடன்,
உயிரின் காந்தத் துடிப்புகள் மோதியவுடன்
அதனுடைய நுண்ணிய அணுக்கள்
அந்த உணர்வினுடைய நிலைகளை கவரச் செய்கின்றது.

அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் உடல் முழுவதற்கும் பரப்பச் செய்கின்றது. 

February 7, 2014

துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நம் ஆன்மாவிற்குள் கொண்டுவரும் முறை - MEDITATING METHOD

1. துருவ நட்சத்திரத்தின் இயல்பு
சிறிதளவு விஷத்தைக் கண்டாலும்
அதனுடைய செயலாக்கத்தை அடக்கி, எரித்துப் பொசுக்கி
ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரத்தின் அருகில் இன்றைய அணுகுண்டுகளோ, அணுக் கதிரியக்கங்களோ செல்ல முடியாது. அதை அடக்கிவிடும். அதன் செயலாக்கத்தைத் தணித்துவிடும். தனக்குள் ஒளிச் சுடராக மாற்றிவிடும்.

சூரியனே அழிந்தாலும், துருவ நட்சத்திரம் தன் செயலாக்கங்களை இழக்காது. அந்த துருவ நட்சத்திரம், அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய நஞ்சினையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.

ஆசைகளையும், குரோதங்களையும் வளர்க்கின்றவரிடத்தில்
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அணுகாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளின் உணர்வுகளை வளர்த்தவரிடத்தில்
ஆசைகளும் குரோதங்களும் அணுகாது.
2. “முதல் தெய்வங்களின்” (குரு) அருள் பெறவேண்டும்
உங்கள் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்கி, அவர்கள் அருளாசி பெறவேண்டும் என்று முதலில் ஏங்குங்கள். அவர்களுடைய அருளால் குருவின் அருள் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.
3. துருவ நட்சத்திரத்திற்குள் ஊடுருவிச் செல்லவேண்டிய முறை (METHOD)
ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று உங்கள் உயிரை எண்ணி, கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.

உங்கள் உடலில் உள்ள எல்லா எண்ணங்களையும் உணர்வுகளையும் குணங்களையும் ஒன்றாகத் திரட்டி (அழுத்தமாக) துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

அவ்வாறு திரட்டிய உணர்வுகளை ஒன்றாகக் குவித்து
ஒரு வில்லில் (தனுசு) அம்பை ஏற்றுவது போன்று
நாணை நிதானமாக இழுத்து,
பூமியின் வடகிழக்கு திசையில் விண்ணிலே இருக்கும்
துருவ நட்சத்திரத்தை இலக்காகக் குறிவைத்து
புருவ மத்தியிலிருந்து இழுத்து விடுங்கள்.
புருவ மத்தியிலிருந்து ஏக்கத்துடன் வீசும் நம்முடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்திற்குள் நேரடியாக அம்பாகத் தைக்கின்றது.
4. துருவ நட்சத்திரத்தின் எதிர் அலை (“ECHO”) நீல நிற ஒளி நம் மீது மோதும்
Inline image 4
ஒரு இசைக் கருவியை உதாரணமாக வீணையை நாம் தட்டினோம் என்றால் நாதம் எழும்பும். அதே சமயத்தில், அதனுடைய அதிர்வுகள் அலை அலையாக வரும்.

இதைப் போன்று, துருவ நட்சத்திரத்தில் மோதும் நம் உணர்வுகள் பாய்ந்து அதிர்வாகி, (ECHO) அங்கிருந்து துருவ நட்சத்திரத்தின் அலைகள்
உயிரில் உள்ள காந்தம் ஈர்ப்பதால்,
திரும்ப வந்து புருவ மத்தியில் மோதுகின்றது.

ஆக, திரும்பத் திரும்ப நாம் நம் உணர்வுகளைக் குவித்து புருவ மத்தியிலிருந்து அம்பாக துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த செலுத்த, அப்படி மோதும் உணர்வின் அதிர்வுகள் அலை அலையாக மாறி, அலைத் தொடர்பாக மாறி அலை வரிசையாகின்றது. (FREQUENCY).

இது தொடர் வரிசையாகி, துருவ நட்சத்திரத்துடன் நேரடித் தொடர்பு (LINK) நம் உயிருக்கு - நமக்குக் கிடைக்கின்றது.

ஒரு வெல்டிங்கை (WELDING) தட்டினால் எப்படி “பளீர் என்று வெளிச்சமாகின்றதோ, அதைப் போன்று துருவ நட்சத்திரத்துடன் நாம் மோதும் இத்தகைய உணர்வுகள் நம் உயிரிலே இளம் நீல நிறத்தில் ஒளி வீசும்.
அந்த சமயத்தில் புருவ மத்தி சிறிது கனமாகவும் இருக்கும்.
நாம் புருவ மத்தியிலிருந்து இழுத்து சுவாசிக்கும் பொழுது
அலைகள் நமக்குள் “ஜிவ்., ஜிவ்.,” என்று
இழுப்பதைப் பார்க்கலாம், உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரொளி இப்பொழுது உயிர் வழி சுவாசமாகி, அந்த உணர்வுகள் வாயிலே உமிழ்நீராகக் கரைகின்றது.
5. துருவ நட்சத்திரத்தின் பேரருளை உடலில் உள்ள அணுக்களின் முகப்பில் இணைக்க வேண்டும்
இவ்வாறு வரும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை கண்ணின் நினைவு கொண்டு எங்கள் ரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்குங்கள்.

இப்பொழுது நம் உடலில் இருக்கும் சுமார் 5 அல்லது 6 லிட்டர் ரத்தம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் அலைகள் படர்கின்றது.

அடுத்து, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களிலும், அறியாது உட்புகுந்த ஜீவ ஆன்மாக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

இப்பொழுது, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களின் முகப்புகளிலும் அந்த சக்தி இணைகின்றது.
அதே சமயத்தில் ஜீவ ஆன்மாக்களின் முகப்பிலும் அந்த சக்தி இணைகின்றது.

திரும்பவும், புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்கு அம்பு போன்று நினைவைச் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தில் மோதி, அங்கிருந்து வரும் எதிரலை (ECHO) அதை உயிரின் வழியாக இழுத்து சுவாசியுங்கள்.

கண்ணின் நினைவு கொண்டு உடல் முழுவதும் பரவச் செய்து, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாகச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
6. துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நம் ஆன்மாவிற்குள் கொண்டுவரும் முறை
திரும்பத் திரும்ப “நினைவு”
  1. புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்குச் செல்லவும்,
  2. துருவ நட்சத்திரத்திலிருந்து உயிர் வழி இழுத்து சுவாசிக்கவும்,
  3. கண்ணின் நினைவு கொண்டு அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலில் உள்ள அணுக்களில் இணைக்கச் செய்யவும்,
  4. அந்த சக்தி பெறவேண்டும் என்று மறுபடி புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிரான ஈசனிடம் வேண்டுவதும்தான்
தியானம் செய்யவேண்டிய முறை.
   
அதாவது வட்டம் போன்று (CIRCULATION)
புருவ மத்தியில் ஆரம்பித்து புருவ மத்தியிலே முடிக்கும்போது, 
அலை அலையாக இழுக்கும் பொழுது, 
துருவ நட்சத்திர சுவாசமானது 
உடல் முழுவதும் சுழன்று வருகிறது.

இப்படி சுழல சுழல, உடலின் வெப்பத்தால் கொதித்து அந்த துருவ நட்சத்திர அலைகள் உடலிருந்து மணங்களாக வெளிப்படத் தொடங்குகின்றது.

உடலிலிருந்து வெளிப்படும் துருவ நட்சத்திரத்தின் மணம்
ஏற்கனவே நம் உடலைச் சுற்றியிருக்கும்
ஆன்மாவில் உள்ள தீமை செய்யும் அலைகளைப் பிளந்து,
நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து கழற்றி
வெளியே தள்ளிவிடுகின்றது.

நம் உடலைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலம், அதாவது நம் ஈர்ப்பு வட்டம் தான் “ஆன்மா”.

நாம் கண் வழி உற்றுப் பார்த்த உணர்வுகள் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி, கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் அந்த உணர்வலைகளைக் கவரும் பொழுது
நம் ஈர்ப்புக்கு வரும் உணர்வலைகள்
நமது ஆன்மாவாக மாறுகின்றது.

நம் ஆன்மாவில், அதாவது நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் எதைக் கவர்கின்றோமோ அதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம். அது புருவமத்தியில் உயிரில் பட்டவுடன் நாதமாகி, எண்ணங்களாகி, சொல்லாகவும், செயலாகவும் இயக்கச் செய்கின்றது.

இப்படி உருவான அணுக்களின் மலம்தான் நம் உடலாக உருவாகியுள்ளது. உருவான அந்த அணுக்களுக்கு நம் உயிர் இந்த பூமியின் காற்று மண்டலத்திலிருந்து உணவை எடுத்து நம் ஆன்மாவாக மாற்றி தொடர்ந்து அதைச் சுவாசிக்கச் செய்கின்றது.

ஆக, எத்தனையோ விதமான இந்த உணர்வுகள் அனைத்தும் நம் ஆன்மாவாக மாறிவிடுகின்றது. அந்த ஆன்மாவில் உள்ளவற்றைத் தூய்மைப்படுத்தும் நிலைதான் உயிர் வழி சுவாசமான மேலே குறிப்பிட்டுள்ள தியானம் செய்யும் முறை.

இப்படி தியானிக்கும் பொழுது
நம் ஆன்மாவில் துருவ நட்சத்திர அலைகள்தான் இருக்கும்.
பிற உணர்வுகள் நம் ஆன்மாவிக்குள் வர முடியாது.
நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது.
7. துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் வாழத் தொடங்குகின்றோம்
ஆகவே, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் சேர்க்கும் பொழுது, நம்மிடமிருந்து வெளிப்படும் மணம் அனைத்து விஷங்களையும் வெல்லக் கூடியதாக இருக்கும்.

உயிர் வழி அதாவது புருவ மத்தியின் வழி விண்ணின் ஆற்றலைச் சுவாசித்துப் பழகிக் கொண்டால் நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை அடைகின்றது.

நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழத் தொடங்குகின்றோம். நமக்கு இன்னொரு பிறவி (உடல்) இல்லை.

எந்தத் துருவ நட்சத்திரத்தைக் குறி வைத்து
இழுத்து சுவாசிக்கின்றோமோ,
அந்த மணம் நம் ஆன்மாவில் பெருகி,
அதன் முலாமாக உயிரிலே சேர்ந்து
யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே
நம்மை அழைத்துச் செல்லும் நமது உயிர்.

அங்கே சென்று பேரின்ப பெருவாழ்வு பெற்று, ஏகாந்தநிலை அடைந்து எத்தகைய இன்னலும் இல்லாது எதிர்ப்பும் இல்லாது, என்றும் பதினாறு என்ற அழியா ஒளி சரீரம் பெறமுடியும்.

இது இறுதியானதும், உறுதியானதும், மனிதன் நாம் எல்லோராலும் சாத்தியமாகக் கூடிய ஒன்றாகும். 

எமது அருளும், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும், எல்லா மகரிஷிகளின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன். 
ஓ..ம் ஈஸ்வரா குருதேவா