ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2026

வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம்

வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம்

 

மனிதனாக இருக்கும் பொழுது ஒன்று சேர்த்த உணர்வுகள் நமக்குள் இல்லை. பலவிதமான உணர்வுகள் மோதும் பொழுது தான் மேல் வலி தலைவலி காய்ச்சல் இடுப்பு வலி தசைவலி வருகின்றது. ஒன்றிணைந்த உணர்வுகள் இல்லாததால் தான் கடும் நோய்கள் வருகின்றது.

1.அந்த ஒன்று சேர்த்த உணர்வின் தன்மையை வளர்க்க உணர்வுகளை ஒன்றென இணைக்க
2.ஒவ்வொருவர் உயிரையும் ஈசனாக நாம் மதித்தல் வேண்டும்... உடலை ஆலயமாக மதித்தல் வேண்டும்.
3.மனிதனாக உருவாக்கிய அரும்பெரும் குணங்களை மிக மிக சக்தி வாய்ந்த நிலையாக மதித்தல் வேண்டும்.

உங்களை நான் துதிக்கிறேன் என்றால் என்னை நான் மதிக்கின்றேன் என்று பொருள். அதற்குத் தான் ஆலயத்திலே தெய்வ குணங்களைப் பெற வேண்டும் தெய்வ நிலையாக இருக்க வேண்டும் ஆலயம் வருவோர் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணும்படி ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

தீப ஆராதனை காட்டுகின்றார்கள் என்றால் அப்போது அந்த வெளிச்சத்தால் அங்கிருக்கும் பொருள்கள் தெரிகின்றது. "பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெற வேண்டும்..." என்று அப்போது நாம் எண்ண வேண்டும்.

1.பொருளறிய வேண்டிய நிலைகள் இந்த வாழ்க்கையில் ஏராளம் இருக்கின்றது.
2.ஆனால் "அறிந்து விட்டோம்..." என்ற நிலையில் தான் நாம் இருப்போம்.

நம் குழந்தை மீது அன்பும் பண்பும் பாசத்தையும் செலுத்தி இருப்போம். அவனை எங்கேயாவது ஒரு வேலைக்கு அனுப்பி... அவன் வரத் தாமதம் ஆனால் ஏன்டா இப்படி நேரமாகிவிட்டது...? என்று கேட்கின்றோம். அந்த இடத்திலே "அழுத்தம்" அதிகமாகக் கொடுக்கின்றோம்.

ஆனால் வாங்கி வருவதற்கு முன் இப்படிச் சத்தம் போடுகின்றார்கள் என்று அவனுடைய உணர்வு மாறுகின்றது. அப்படி மாறினால் இருவருக்குமே நிச்சயம் பொருளறியக்கூடிய நிலை இல்லாது போகின்றது.

ஆகவே நாம் சொல்லக்கூடிய சொல்லில் பொருளறியும் நிலைக்கு வர வேண்டும். நமது சொல் அவனைத் தெளிவாக்கும் நிலைக்கு வர வேண்டும்.

1.சிறிது நேரத்திற்கு முன்பாக நீ வந்திருந்தாய்...! என்றால் நன்றாக இருந்திருக்கும்.
2.ஏனென்றால் வந்த விருந்தளிகள் ஊருக்குப் புறப்பட்டார்கள்... என்று சொன்னால் இந்த உணர்வுகள் தெளிவாகும்.

அதற்குப் பதிலாக... கடைக்குப் போய் எவ்வளவு நேரம் ஆனது... ஏன்டா இப்படிச் செய்கிறாய்...? என்று விருந்தாளிகளுக்கு முன் சொல்லும் பொழுது அவனுக்கு அவமரியாதை ஆகி விடுகிறது.

இப்பொழுது அப்படிச் சொல்லிவிட்டாலும் அடுத்து... நாம் எதையாவது சொல்லி விடுவோமோ...! இது எதற்கு வம்பு...? வரவில்லை என்றால் திட்டுவார்கள்...! என்று அவனுக்குள் இந்த மனநிலை வந்து விடும்.

அதனால் தான் கோவில்களில் தீபத்தை வைத்து ஆராதனையாகக் காட்டுகின்றார்கள். எந்த நிலையாக இருந்தாலும் "பையன் வெளியிலே சென்றான்... சரி நேரம் ஆகிவிட்டது..." என்று அந்தப் பொருளை அறிய முடியும்.

விருந்தாளிகள் வந்துள்ளார்கள் என்ற அன்பு மிகுதியால் அவர்களைக் கவனிக்க வேண்டும் என்று பொருளை வாங்கச் சொல்லிப் பையனை அனுப்புகின்றோம். சீக்கிரம் வாங்கிக் கொண்டு வா...! என்று தான் சொல்லி அனுப்புகின்றோம்.

ஆனால் நேரமாகி விடுகிறது.

நேரம் ஆகிவிட்டது நாங்கள் ஊருக்குப் போகிறோம்...! என்று விருந்தாளிகள் சொல்கின்றார்கள். அப்படிச் சொல்லும் போது நமக்கு உணர்வு மாறுகின்றது. அந்த நேரம் வெறுப்பு வருகின்றது... நம் பையன் மீது கடுகடுப்பாகிறது.

எப்பொழுது பார்த்தாலும் இப்படிச் செய்கின்றான் என்று இந்த உணர்வு வருகின்றது.
1.வந்தவர்களைப் பார்க்கும் பொழுது பாசம் வருகின்றது.
2.ஆனால் பையன் மீது வெறுப்பு வருகின்றது.

அவன் தாமதமாக வந்த பின் ஏண்டா இந்த மாதிரி நேரமாக்குகின்றாய்...? என்று இவர்களை நாம் மெச்சப் பார்க்கிறோம்.

நான் வேகமாகத் தான் வாங்கி வரச் சென்றேன். கடைக்காரன் தாமதப்படுத்தி விட்டான்... ஆனால் என்னை வீட்டிலே இப்படிப் பேசுகின்றார்களே...! என்று அவனுக்கு நம் மீது வெறுப்பு வருகிறது.

அந்த இடத்தில் நாம் பொருளை அறிய முடியாது போய் விடுகின்றது... வெறுப்பு வளர்கின்றது. அதற்குத்தான் கோயிலில் விளக்கைக் காட்டுகின்றார்கள்.

இந்த வாழ்க்கையில் எத்தகைய நிலை வந்தாலும் பொருளறிந்து செயல்படும் அந்த உயர்ந்த ஞான சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும். அப்படி எண்ணினால் அந்த விளக்கின் வெளிசத்தால் பொருள் தெரிவது போன்று நல்ல உணர்வு கொண்டு நாமும் செயல்பட முடியும்.

1.பையன் போன இடத்திலே என்னமோ தெரியவில்லை... ஏதோ நேரமாகிவிட்டது... சரி பரவாயில்லை...! என்று சொல்லிவிட்டு
2.விருந்தாளிகளிடம் "நேரம் ஆகிவிட்டால் நீங்கள் போய் வரலாம்..." என்று சொன்னால் அது உசிதமாக இருக்கும்.

ஆனால்... பையன் வரட்டும்... வரட்டும்...! என்றே நாம் சொல்லிக் கொண்டிருந்தால் விருந்தாளிகளைத் தடைப்படுத்துவது போன்று ஆகிவிடும். ஏனென்றால் இப்படி ஆக்கிவிட்டால்... அடுத்தாற்போல் "இந்த வீட்டிற்குச் சென்றாலே நம்மைத் தாமதப்படுத்துவார்கள்..." என்ற எண்ணம் தான் அவர்களுக்கு வரும்.

ஆகவே இது போன்ற சந்தர்ப்பங்களில் வெறுப்பாகாதபடி
1.அந்த உயர்ந்த பண்பினை வளர்க்க வேண்டும்.
2.அன்பினைப் பேணிக் காக்க வேண்டும்.
3.பரிவான உபகாரத்தைப் பன்புடன் செயல்படுத்த வேண்டும்

ஆகவே வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில்... நாம் எப்படித் தெரிந்து தெரிந்து தெளிவான நிலைகள் கொண்டு செயல்பட வேண்டும்...? என்பதை "ஞானிகள் காட்டிய அந்த அருள் வழிப்படி நாம் செயல்படுவதே மிகவும் நல்லது..."