ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 20, 2013

நண்பர்களுக்குள், சந்தர்ப்பவசத்தால் எப்படி பகைமை உண்டாகின்றது?

உதாரணமாக நான் கோபக்காரன், நான் ஒருவனுக்கு உதவி செய்கிறேன். உதவி செய்தாலும் கூட, ஒரு சமயம் எனக்கு தாழ்ந்துவிட்டால், உதவி செய்திருக்கிறேன் என்ற நட்புடன், அங்கே செல்கிறேன்.

“நீங்கள் இருங்கள், நான் டவுன் வரைக்கும் போய்விட்டு வந்துவிடுகிறேன், கொஞ்சம் கூடவருகின்றீர்களா” என்பார்கள்.

அதே சமயம் அவர், இதைக் காட்டிலும் முக்கியமான நிலைகளில் இருப்பார். அவர் ஒருவருக்குச் சொல்லி இருப்பார். காக்கும் நிலையாகக் காத்துக்கொண்டு இருப்பார். இப்பொழுது, ஒரு பிரசவத்திற்குப் போகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமயத்தில், நண்பனைத் துணைக்குக் கூப்பிட்டால், அது முக்கியமாகின்றது. “எனக்கு உதவி செய், துணையாக வா” என்று கேட்கின்றார். இதுவும் முக்கியமாகின்றது. முக்கியத்தில் எதை செய்வார்.

அவர் கூப்பிட்டு, இங்கே வரவில்லை என்றால், இவருடன் சென்று விட்டால் “இங்கே பார், நல்ல நேரத்தில் வருகின்றேன் என்று சொன்னான், ஏமாற்றி விட்டான். பாவிப்பயல்” என்று நினைக்கத் தோன்றும். அப்பொழுது பகைமை உண்டாகிறது.

இதே சமயத்தில், இங்கே கூப்பிட்டு வரவில்லை என்றால் “உதவி செய்தேனே! வரவில்லையே” என்று எண்ணும்பொழுது, “கூப்பிட்டால் வரமாட்டேன் என்று ஏமாற்றுகிறான்” என்ற இந்த உணர்வு இங்கே வளர்ந்து, இங்கே பகைமையாகி விடுகின்றது.

அங்கே வரவில்லை என்றால், அவர் நன்றி கெட்டவராக எண்ணுகிறார். இங்கே வரவில்லை என்றால், இவர் நன்றி கெட்டவர் என்கிறார்.

பார்க்கும் பொழுதெல்லாம், நன்றி கெட்டவன் என்று சொல்வார்கள். அதே உணர்வு இங்கு வரப்படும்போது, பகைமையின் நிலைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். இதை யார் நிறுத்துவது?

நாம் தவறு செய்யவில்லை. நாம் எடுத்துக் கொண்ட நிலைகள்,
சந்தர்ப்பம் இந்த உணர்வுகளை இணைத்து, பிரம்மமாக்கி,
உணர்வின் தன்மை, நமக்குள் எண்ணமாக மாறி,
அதே எண்ணத்தின் வித்து,
நினைக்கும் பொழுதெல்லாம்,
அந்த அலைகளைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றது.
பல உணர்வின் சத்து, ஒரு வித்தாக மாறும் பொழுது,
அந்த வித்தின் சத்து, தன் இனத்தைக் கவர்ந்து, வளரத்தான் செய்யும்.

எவ்வாறு, பூமியில் தாவர இனங்கள் வளருகின்றதோ, அவ்வாறே மனிதனுக்குள் மற்ற உணர்வின் எண்ணங்கள் கலந்து, அது உயிருக்குள் பிரம்மமாகி, அந்த உணர்வின் சத்து வித்தாகும் பொழுது,
யாரைப் பற்றி எண்ணியதோ
அந்த உணர்வின் தன்மையை,
இந்தக் கண், அந்த மனிதனைப் பார்த்ததுமே,
அந்த மனிதனின் உடலில் இருந்த உணர்வை,
தான் கவர்ந்து,
உணர்வின் தன்மை உயிருடன் இணைத்துவிடுகின்றது.
இணைந்த நிலைகளில், உணர்வு கலந்து, கலந்த நிலைகளில் எண்ணமாகி, அந்த வெறுப்பின் எண்ணங்கள் பதிவானதும், மீண்டும், அதை எண்ணும் பொழுது, நினைவின் அலைகளை இயக்கும்.

தவறு யாரும் செய்யவில்லை. சந்தர்ப்பம் நமக்குள் பிரம்மமாகி, பகைமையை உண்டாக்குகின்றது. ஆனால், இதே உணர்வின் வித்து வரப்படும் பொழுது, இந்தப் பகைமையுணர்ச்சி, நாளுக்கு நாள் நண்பர்களுக்குள் பகைமையை வளர்த்து, அதிகமாக ஆக்கி விடுகின்றது.

இப்படிப் பல நண்பர்கள் பகைமை ஆகும் பொழுது, இதே மாதிரி பகைமையான உணர்வுகள் நமக்குள் சேர்ந்து, நல்ல உணர்வு இயங்கவிடாதபடி, கவலையும், சஞ்சலமும், வெறுப்பும், சோர்வும், நமக்குள் கலந்தே வந்துகொண்டு இருக்கும்.

இதைத் துடைப்பதற்காக, அந்த ஆறாவது அறிவைக் கொண்டு, இத்தகைய நிலைகளை வென்று விண்ணுலகம் சென்ற,
அந்த மெய்ஞானியின் உணர்வின் தன்மையைப்
பருகுவதற்குண்டான மார்க்கத்தை,
மகரிஷிகள் காட்டினர்.
அதன் வழியில், நாம் அனைவரும் செல்வோம். எமது அருளாசிகள்.