ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 23, 2013

கண்ணன் சங்கநாதம் ஊதியபின் தான் குருக்ஷேத்திரப் போர்

உதாரணமாக, பூனையின் கண் எலியைப் பார்த்தவுடன், அந்த எலிக்குரிய காந்த உணர்வைத் தனது ஆத்மாவாக மாற்றி, உயிருக்குள் இயக்கச் செய்கின்றது. இவ்வாறே, எலியின் சத்தைத் தனக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்து கொள்கின்றது.

பின், தன் உணர்வுக்கு ஒத்துக் கொள்ளும் இயக்கம் குறைவாக இருப்பதால், அது தனது உணவாக எடுத்துக் கொள்ள முடியும் என்ற அந்த உயிரின் நிலைகள் வரப்படும் பொழுது, பூனை வலுக்கொண்டு, எலியைத் தாக்க ஆரம்பிக்கின்றது.

ஆனால், பெருச்சாளியாக இருந்தால், அது சீறிப் பாய்ந்தால், பூனை அதன் அருகில் செல்லாது. அதனின் உணர்வலைகள் அதற்குள் பட்டவுடன், இதே பூனை அதை எதிர்க்கும் நிலை வந்தால்,
பெருச்சாளியின் உணர்வுகளை பூனையின் கண் கவரும் பொழுது,
அதனின் உயிரில் படும் பொழுது, உணர்வுகள் வேகமாகத் துடிப்பாகி,
அதனின் வலு அதிகமாகும் பொழுது,
இது நிதானித்துச் செயல்படும்.

   மகாபாரதத்தில், பாரதப் போரில், கண்ணன் சங்கநாதம் ஊதியபின், குருக்ஷேத்திரப் போர் நடக்கிறது. இங்கே, குருக்ஷேத்திரம் என்பது பூனையின் உயிர், அந்த உடலுக்கு அது குருவாகின்றது.

அந்தப் பூனையின் கண் எலியைப் பார்க்கின்றது. எலியின் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வலைகளை, கண்ணில் உள்ள கருவிழி என்ற “ருக்மணி” எடுத்து தனக்குள் பதிவு ஆக்குகின்றது. அந்த கண்ணுக்குள் இருக்கக் கூடிய காந்தப்புலன் “சத்தியபாமா”. எலியின் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை, இந்தக் கண், காந்தமான அந்த நிலையை இழுத்து, தன்னுடைய ஆத்மாவாக மாற்றி, தான் சுவாசிக்கும் பொழுது, குருஷேத்திரத்திற்குச் செல்லுகின்றது.

இந்தக் குருஷேத்திரத்தில்,
பூனையின் உணர்வும், அந்த எலியின் உணர்வும்,
இரண்டும் மோதப்படும் பொழுது,
(கண்ணன் – கண்கள்) சங்கநாதம் ஊதுகின்றான்.
எலியின் உணர்வைப் பூனை நுகர்ந்து, அதற்குள் மோதும்போது,
அங்கு, நாதம் சங்கநாதமாகின்றது.
பூனையின் உணர்வுகள் வலுக் கொண்டதாக இருக்கின்றது.
சேனாதிபதி உத்தரவுப்படிப் படைகள் இயங்குவதைப் போல,
தனக்குள் எடுத்துக் கொண்ட வலுவான நிலைகள் கொண்டு,
தன் உடலில் இருக்கக் கூடிய  உணர்வுகள் அனைத்தும் உந்தி,
பூனை எலியைத் தாவிப் பிடிக்கின்றது.

ஆனால், அதுவே  பெருச்சாளியாக இருந்தால், இங்கே இவ்வாறு செய், என்று யோசனை கூறுகின்றது.

உணர்வின் அழுத்தங்களும், 
உணர்வின் இயக்கங்களையும்
நாம் அறிந்து கொள்ள,  வியாசக பகவான்  மகாபாரதத்தை நமக்கு அருளினார்.

குருஷேத்திரப்போரில், முக்கியப் பங்கு கொண்டவன்  கண்ணன் (நம் கண்கள்).  அவன் ஒவ்வொரு நிமிடமும், மற்றதை எடுத்துச் “சங்கநாதம்”  ஊதியபின்தான், குருக்ஷேத்திரப் போரே நடக்கின்றது,  என்று தெளிவுற எடுத்துக் கூறியுள்ளார், வியாசக பகவான்.

கண்ணின் இயல்பான பங்கின் நிலையையும், கண் மற்ற உணர்வின் தன்மை கொண்டு, தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலையும், செயலையும், தெளிவுற எடுத்துக் காட்டியுள்ளார் வியாசக பகவான்.

இதைத் தெரிந்து கொண்டால் போதும். மனிதன் யார்? நாம் எப்படிச் செயல்பட வேண்டும்? என்ற உண்மையினை அறிந்து கொள்ளலாம்.

      எலி குருக்ஷேத்திரப்போரில் தோல்வியை அடைகின்றது. ஆனால்,
மறைமுகமாகக் கண்ணன் காட்டிய வழி கொண்டு,
பூனையின் உடலுக்குள் வியூகத்தைத் தகர்த்து,
பூனையின் வியூகத்துக்குள் சென்று,
அதனின் உணர்வை, அதனின் வலுவை எடுத்து
அதே ஆகின்றது. (எலி பூனையாக ஆகின்றது)

இந்தப் பரிணாம வளர்ச்சியில், எலியைப் பூனை கொன்றாலும், உடல் இறக்கின்றது. அதனின் உயிரான்மா, அதைக் கண்டுணர்ந்த அந்த உடலின் வலுக் கொண்டு, அதனின் நிலைகள் கொண்டு, அதனின் உடல் பெறுகின்றது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார், வியாசக பகவான்.

மகாபாரதத்தில், குருக்ஷேத்திரப் போரின் நிலைகளைப் பத்தாம் நாள் போர் என்று சொல்வார்கள். கடவுளின் அவதாரமும் பத்து.
உணர்வின் இயக்கங்கள் மாற்றமாவதால்,
ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமாகச் சிருஷ்டிக்கும் நிலை.

இயற்கையின் நிலைகள், ஒவ்வொரு உணர்வின் ஆற்றலின் நிலைகளில், மாற்றங்கள் எவ்வாறு வருகின்றது? என்ற நிலையை அறிந்து கொள்வதற்குத்தான் மகாபாரதத்தை, வியாசக பகவான் அருளினார். இன்றைய நிலையில், பூரணமாக எல்லாவற்றையும் எடுத்துரைத்தால் கூட, கிரகிக்கும் தன்மை இல்லை.

இயற்கையின் தன்மை ஒன்றுடன் ஒன்று இணைந்து, “எண்ணத்தின் தோற்றம் எண்ணத்தின் இயக்கம்” என்ற நிலைகளில், எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப, உருவாக்கப்படும் போது, தோற்றம், ஒரு உணர்வின் தன்மை ஒரு உடலுக்குள் சென்றவுடனே, அந்த உணர்வின் மணங்கள் அதை உணர்வாக இயக்கும் நிலைகள் வேறு.

மெய்ஞானிகள் அவர்கள் கண்டுணர்ந்ததை, நாம் தெரிந்து கொள்வதற்காகக் கூறிச் சென்றனர்.