ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 10, 2017

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் - 13

உள் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் “உயிரை” ஒரு கணமாவது நம் அன்றாட வாழ்க்கையில் எண்ணுகின்றோமா…!
நம் உயிர் “ஓ.., ம் என்று ஜீவ அணுவாக நம் உடலாக மாற்றுகின்றது. நாம் எண்ணும் உணர்வே ஓம் என்று ஜீவ அணுவாக மாறுகின்றது. ஆகவே, நாம் எதை எண்ண வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

இதைத்தான் அன்று ஞானிகள் செய்தார்கள்.

வெறுமனே “ஓ...ம் ஓ...ம் ஓ...ம் என்று சொன்னால் அர்த்தமற்றது. நாம் “ஓம்.., ஓம்.., ஓம்.., என்று சொல்வதில் பொருள் இல்லை.

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் பொய் அல்ல. இன்றைய வாழ்க்கையில் சாங்கிய சாஸ்திரத்தைச் செய்து நாம் உண்மையான சாஸ்திரத்தைப் பொய்யாக்கிவிட்டோம்.

ஆக, பொய்யான உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பொய்யின் நிலையையே அடைகின்றோம்.

மனிதனின் உணர்வையே இன்றைக்குப் பொய்யாக்குகின்றோம். மனிதனின் நிலையையே பொய்யாக்கப்படும் பொழுது நாம் எந்த உண்மையின் நிலையை அறியப் போகின்றோம்?

“அவன் பொய்யன்.., என்று உயிரையே பொய்யாக்குகின்றோம். இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு மறைக்கப்படும் பொழுது உயிரின் இயக்கத்தை மறைக்கச் செய்கின்றது.

1.கடவுள் - அவன் எங்கேயோ தனித்திருக்கின்றான் என்ற நிலையில்
2.உயிரையே நாம் பொய் என்று நாம் நினைக்கும் அளவிற்கு வருகின்றது.
3.எண்ணிய உணர்வை உருவாக்கும் ஈசனாக நம் உயிர் இருந்தாலும்
4.நமக்குள் கடவுளாக உள் நின்று அவன் இயக்குகின்றான்.
5.அந்த ஞானிகள் காட்டிய நிலை இது. அதையே நாம் பொய்யாக்குகின்றோம்.

நமக்குள் எண்ணிய குணங்கள் எதுவோ நம் உள் நின்று இயக்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை நமக்குள் கடவுளாகத்தான் இயக்குகின்றான்.

தனித்து ஒருவன் கடவுளாக இல்லை. இது ஞானிகள் காட்டிய அருள் நெறிகள். அந்த ஞானிகள் காட்டியபடி
1.இன்று “உயிரே கடவுள்” என்று சொன்னால்
2.”அது எப்படி ஆகும்...? என்று சட்டம் பேசுகிறார்கள்.

பகவத் கீதையைப் படித்தவர்களும் மகாபாரதத்தைக் கற்றுக் கொண்டவர்களும் கடவுளின் அவதாரம் பத்து என்று தெரிந்து கொண்டவர்களும் அதைப் படித்தார்களே தவிர “மூலக்கூறை” அறிந்து கொள்ளவில்லை.

காவியமாகப் படிக்கின்றார்கள், கருத்துக்களை அள்ளி வீசுகின்றார்கள் அவரவர்களின் சந்தர்ப்பத்திற்கொப்ப நிலையைத்தான் பேசுகின்றார்களே தவிர அந்த “ஞானிகள் காட்டிய பேருண்மைகளை” அறிய முற்படவில்லை.

1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கு ஒவ்வொரு நிலைகளுக்குக் காரணப் பெயரை வைத்து
2.அவைகளின் இயக்கத்தின் பேருண்மைகளை நாமெல்லாம் அறிந்து
3.இந்த வாழ்க்கையில் நம்மையறியாமல் வரும் தீமைகளிலிருந்து எவ்வாறு மீள வேண்டும்
என்பதற்குத்தான் இந்தக் காவியத் தொகுப்புகளைத் தெளிவாகக் காட்டினார்கள்.

உயர்ந்த பண்பின் தன்மை கொண்டு நமக்குள் எதை எடுக்க வேண்டும்? அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் எப்படிச் சேர்க்க வேண்டும்? என்று காட்டினார்கள் ஞானிகள்.

அவர்கள் காட்டிய அருள் நெறிப்படி விநாயகரின் நிலையை உருவமாகக் காட்டப்பட்டு அந்த அருவ நிலையை எண்ணத்தால் எண்ணி நாம் நுகர்ந்து எடுக்கப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம். அப்பொழுது அருள் ஞானிகளின் உணர்வை நம் உடலாக்கப்படும் பொழுது துவைதம்.

இந்த உடலிலே தீங்கினை நீக்கி அந்த உணர்வை எவெரொருவர் பற்றுடன் பற்றுகின்றனரோ அவர்கள் அங்கே செல்ல முடியும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டுமென்றால் அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியைப் பின்பற்றுங்கள்.

“அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் ஈஸ்வரா...” என்று உங்களை இயக்கிக் கொண்டும் உருவாக்கிக் கொண்டும் இருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி சதா அதைச் சுவாசித்துத் தீமைகளை அகற்றப் பயன்படுத்துங்கள்.

May 9, 2017

தான் படும் சிரமங்களை நண்பர்களிடமோ மற்றவர்களிடமோ சொல்லிவிட்டால் மனதில் உள்ள பாரம் குறைகின்றது என்று சுமையைக் கூட்டத்தான் செய்கின்றோம் – மீளும் வழி என்ன?

இப்பொழுது பக்தி மார்க்கங்களில் வழக்கில் நாம் நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தாலும் ஒருவரிடம் க்ஷேமம் விசாரிக்கப்படும் பொழுது எப்படிக் கேட்கின்றோம்?

நண்பரைப் பார்த்தவுடனே, “குடும்பத்தில் எதுவும் கஷ்டமா..? எதுவும் பிரச்னையா! ஒரு வாரமாக நீங்கள் வரவில்லையே, ஏன்?” என்று கேட்பார்.

அதை ஏன் கேட்கின்றீர்கள்? பையன் இப்படிப் பேசுகின்றான் நான் அதை அப்படி நினைத்தேன், கடைசியில் வேறு மாதிரி ஆகிப் போய்விட்டது. மனதுக்கு ரொம்பவும் வேதனையாகப் போய்விட்டது.

அதனால் எனக்குக் கை கால் குடைச்சலாகிவிட்டது, மனதிலும் வலி.., உடலிலும் வலி.., என்று நண்பரிடத்தில் இப்படிச் சொல்வார். இதையெல்லாம்
1.நான் யாரிடம் சொல்லி இந்த மூட்டையை இறக்கி வைக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
2.நல்ல வேளை நீ வந்தாய்.
3.உன்னிடம் சொல்லிவிட்டேன்.
4.இப்பொழுது எனக்கு மனது கொஞ்சம் ஆறுதலாக இருக்கின்றது

நண்பர் என்ற நிலையில் அவரும் இவர் கொடுத்த மூட்டையை வாங்கிக் கொள்கின்றார்.

பின் அவர் கேட்பார். “உனக்குக் கூட இப்படி வந்துவிட்டதா? நீ எத்தனை பேருக்கு எவ்வளவு நன்மைகள் செய்தாய்! உனக்குமா இப்படி,” என்பார்.

கஷ்டங்களை மூட்டையாக இறக்கி வைத்துவிட்டு ஒருவருக்கொருவர் வேதனைப்படும் நிலையாக “ஒருவர் சுமையை ஒருவர் தாங்கும் நிலையாகத்தான் இன்று வாழ்கின்றோம்.

ஆனால் கஷ்டங்களைக் கேட்ட பின் “உனக்கு இப்படி ஆகிவிட்டதா?” என்று எண்ணினால் நாமும் அதுவாகிவிடுகின்றோம்.

கந்த புராணத்தில் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் “கந்தா.., கடம்பா.., கார்த்திகேயா..,” என்று காட்டப்பட்டிருக்கின்றது.

நண்பர் சொல்வதையெல்லாம் கேட்டறிகின்றோம். கேட்டறிந்த பின் “கந்தா..,” கந்தா என்றால் ஒவ்வொரு நிலையும் அறிந்து கொண்டவன் என்று பொருள்.

கடம்பா..,” கடம்பா என்றால் உருவாக்க வேண்டும் என்று பொருள். ஆக எதை உருவாக்க வேண்டும்?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். உடல் முழுவதும் அது படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி அந்த இருளைப் போக்கிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து நமக்குள் தெளிந்திடும் நிலையாக ஒளியின் சுடராக அதை உருவாக்க வேண்டும்.

கார்த்தி – “கார்த்திகேயா என்றால் வெளிச்சம்.., இருளைப் போக்கும் நிலை.

அதே சமயத்தில் வேதனைப்பட்டோருக்கு நாம் எவ்வாறு எதை உருவாக்க வேண்டும்?

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் விலகும்.
3.உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவார்கள்.
4.உங்களை அறியாது புகுந்த வேதனைகள் அனைத்தும் நீங்கும்.
5.நீங்கள் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள் என்று இதை நாம் உருவாக்க வேண்டும்.

இதையெல்லாம் நமக்குள் எண்ணி வளர்த்து அவரிடம் வாக்காகச் சொல்ல வேண்டும்.

செவி வழி அவர் இதைக் கேட்கும் பொழுது நாம் சொன்ன நிலைகள் அந்த உணர்ச்சிகள் அவரை இயக்கும். அதைப் பெறவேண்டும் என்று அவரும் எண்ணினால் அவருடைய இருளைப் போக்கி அவருக்குள்ளும் தெளிந்த நிலைகள் கார்த்திகேயா என்று உருவாக்கும்.

அப்பொழுது நாம் அதுவாகின்றோம். கீதையிலே இதைத்தான் தெளிவாகச் சொன்னார்கள். ஆகவே

1.அந்தக் காவியங்களில் காட்டப்பட்டுள்ள நெறிகளை நாம் எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும்?
2.தீமைகளிலிருந்து நாம் எவ்வாறு விடுபட வேண்டும்?
3.ஆறாவது அறிவினை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
என்பதைத்தான் நம் காவியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.


நமது காவியங்களில் தவறில்லை. காவியங்களைக் கதைகளாகத் தான் எண்ணுகின்றோம். அதனின் கருத்தையும் அதற்குள் இருக்கும் மூலங்களையும் நாம் எண்ணுகின்றோமா..,? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

May 8, 2017

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் - 12

உலகைக் காத்திடும் மெய் ஞானிகளாக நீங்கள் உயர வேண்டும் – உங்கள் ஒவ்வொருவராலும் இது முடியும்
மகரிஷிகளின் அருள் உணர்வுடன் என்றுமே ஒன்றி வாழவேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன். அதிகாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் எல்லோரும் துருவ தியானத்தை எடுத்தாக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள எல்லா உறுப்புகளிலும் படரவேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது தியானியுங்கள்.

இதைப் போன்று கணவன் தன் மனைவியை எண்ணி மனைவிக்கு இத்தகைய சக்திகள் கிடைக்க வேண்டும். அருள் ஞானம் அங்கே பெருகி மனைவியின் அருள் பார்வையில் எனக்குள் அருள்ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தியாகப் பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

கணவன் மனைவி நாங்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும். எங்கள் இருவரின் பார்வையில் இருளை அகற்றும் சக்தி எங்களுக்குள் உருப்பெற வேண்டும்.

எங்கள் பார்வையில் ஒவ்வொருவரும் அருள் ஞானம் பெறவேண்டும். அறிந்துணர்ந்து செயல்படும் திறன் அனவரும் பெறவேண்டும் என்று தியானித்தல் வேண்டும். ஏனென்றால்
1.ஒவ்வொரு உயிரையும் கடவுள் என்ற நிலையில் மதித்துவிட்டால்
2.நமக்கு வெறுப்பு என்ற நிலைகள் வராது.
3.உயிரை ஈசனாக மதித்து மனிதர் ஒருவரால் தான் இவ்வாறு எண்ண முடியும்.
4.உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலை சிவனாக மதித்தல் வேண்டும்.

அந்தச் சிவனுக்குள் (உடலுக்குள்) நம்முடைய பேச்சும் மூச்சும் நாம் சொல்லும் தன்மை பாதிக்காதபடி அருள் ஞானத்தின் தன்மை அங்கே வளரும்படி நாம் செய்ய வேண்டும்.

நாம் எண்ணும் போது நம் உடலும் சிவமாகின்றது. நாம் எண்ணியதை உயிர் ஈசனாக உருவாக்குகின்றது. அருள் ஞானத்தை நமக்குள் வினையாக்கும்போது நமக்குள் ஒன்றி வாழும் உணர்வுகள் வளர்கின்றது.

நாம் எவரிடமிருந்தும் பிரிந்து வாழவில்லை.

ஒருவர் கோபமாகப் பேசினாலோ நமக்குச் சம்பந்தமில்லாமல் அடுத்தவரைத் திட்டும்போது அதை கேட்டறிந்தாலோ நமக்குள் பதிவாகிவிட்டால் அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அணுவாக விளைந்து விட்டால் அந்த உணர்வின் குணம் தன் இனத்தின் தன்மையைப் பெருக்கும்.

அதனால் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை என்று சொல்வார்கள்.

1.நாம் எதை எதைப் பதிவாக்கிக் கொள்கின்றோமோ
2.அதில் எந்த உணர்வை அதிகமாகச் சேர்க்கின்றோமோ
3.அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலில் நோயாவதும்
4.அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலை விட்டுச் சென்றபின் அடுத்த உடல் பேயாகவோ அல்லது மனிதனல்லாத உடலாகவோ மாற்றிவிடும்.

மனித உடலுக்குள் சென்றால் பேயாகும். மனித உடலை விட்டு வெளியே சென்றால் எந்த விஷத் தன்மையை வளர்த்துக் கொண்டதோ அதற்குத்தக்க அடுத்த உடலை உருவாக்கும் நம் உயிர்.

இதைச் சிவ தத்துவத்தில் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. ஆகவே, இதையெல்லாம் நாம் மனதில் வைத்துக் காலையில் எப்படியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

அகஸ்தியமாமகரிஷிகளையும் துருவ மகரிஷிகளையும் சப்தரிஷி மண்டலங்களையும் எண்ணி இதையெல்லாம் கூட்டி உங்களுக்குள் பெறவேண்டும் என்று வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.உங்கள் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
2.மனைவி தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.இரண்டு பேரும் சேர்ந்து தங்கள் தாய் தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

எங்களை வளர்ப்பதற்காக அவர்கள் பட்ட துன்பங்கள் அனைத்தும் நீங்கி அவர்கள் என்றென்றும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழவேண்டும் என்று அன்னை தந்தைக்குக் காணிக்கையாகச் செலுத்துங்கள்.

அடுத்து எங்கள் அன்னை தந்தையை ஈன்ற எங்கள் குலதெய்வங்களான முன்னோர்களான பாட்டன் பாட்டி இருந்தால் அவர்கள் சப்தரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அவர்கள் மலரைப் போன்ற மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர்களின் அருள் என்றென்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தால் அடுத்த கணமே “என்னை விட்டுவிட்டுப் போகின்றீர்களே..,” என்று எண்ணிவிடாதீர்கள்.

1.துன்பங்களை அகற்றிவிட்டு
2.இனித் துன்பமில்லாத நிலைகள் கொண்டு பிறவியில்லா நிலை என்ற ஏகாந்த வாழ்க்கை அவர்கள் வாழ வேண்டும் என்று
3.அவர்களை நாம் விண் செலுத்திப் பழக வேண்டும்.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் வழி நடத்தினோம் என்றால் மனிதனுக்குப் பின் அடுத்த நிலை அழியா ஒளிச் சரீரம் கல்கி.

ஆனால், மனிதனுக்குப் பின் வேதனை என்றால் மீண்டும் இந்த நரகலோகத்தில் பிறவிக்குத் தான் வர வேண்டும்.

இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்குத் தியானம் செய்யும் முறைகளையும் ஆத்ம சுத்தி செய்யும் பயிற்சிகளையும் கொடுக்கின்றோம்.

இங்கே கொடுக்கப்படும் உபதேசங்களைத் திரும்பத் திரும்பப் படியுங்கள். உங்களுக்குள் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

பொழுதுபோக்காகவே இதை வைத்துக் கொள்ளுங்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றி வாழுங்கள். எல்லோரும் நலம் பெறவேண்டும் என்று ஏங்குங்கள். அவர்கள் நலமாக வாழ்வதைக் கண்டு நீங்கள் மகிழுங்கள்.

இதைப் போன்ற மகிழ்ச்சியின் தன்மையை உங்களுக்குள் வளர்த்து இருள் சூழா நிலை கொண்டு அடுத்து இந்த உடலை விட்டு அகன்றால் எந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக ஆனார்களோ அதனுடன் நாம் அனைவரும் இணைவோம்.

இதை நாம் உறுதிப்படுத்திக்கொள்வோம்.

நம்முடைய வாழ்நாள் அங்கே தான். செல்வம் நம்முடன் வருவதில்லை. நம் உடலே நம்முடன் வருவதில்லை என்றால் உடலில் விளைய வைத்த உணர்வுகள் எதைக் கவர்ந்தோமோ அதன் வழி அங்கே அழைத்துச் செல்லும்.

நமக்குத் தீங்கு செய்தான் தீங்கு செய்தான் என்ற உணர்வை வளர்த்தோம் என்றால் மீண்டும் கீழே செல்கின்றோம். இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட்டு என்றுமே நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

ஆகவே, நீங்கள் எல்லோரும் அந்த அருள் ஒளியைப் பெருக்குதல் வேண்டும். நோய்களைப் போக்கும் ஆற்றல் பெறவேண்டும்.

விஷத் தன்மைகள் நமக்குள் புகாது தடுத்துப் பழகுதல் வேண்டும். நமக்குள் பெருக்கிய இந்த ஆற்றல்களை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்தல் வேண்டும்.

மற்றவர்கள் அதை ஏங்கிப் பெறும் போது தீமைகளைப் போக்கும் நிலைகளுக்கு நீங்கள் தயாராகுதல் வேண்டும்.

அதன் வழி நாம் செய்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் அருள் ஒளிச் சுடரான அந்த மகரிஷிகளுடன் ஒன்றி வாழலாம்.

இந்த உடலின் ஆசைக்குப் பொருளுக்கும் புகழுக்கும் சென்றால் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் வந்து மீண்டும் நரகலோகத்தைச் சந்திக்கும் நிலை வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக உயர வேண்டும் என்பதே எமது தவம்.

நான் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் எல்லோரையும் அருள் வழியில் ஞானத்தின் பாதையில் அழைத்து வரும் அளவிற்கு நீங்கள் தயாராக வேண்டும்.

நான் ஒருவனே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் அந்த நிலைக்கு வாருங்கள்.

இந்த உலகமும் காற்று மண்டலமும் நச்சுத் தன்மையிலிருந்து விடுபட வேண்டும். மக்களை அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழப் பழக்க வேண்டும்.


உங்களால் முடியும், நிச்சயம் நீங்கள் செய்வீர்கள்.

May 7, 2017

விவேகானந்தருக்கு இராமகிருஷ்ணர் கடவுளை எப்படிக் காட்டினார்...?

நமது உயிர் கடவுளாக நின்று இயக்கினாலும் நாம் எந்தெந்த குணங்களை எடுக்கின்றோமோ அதுவே நமக்குள் கடவுளாக நின்று நம்மை இயக்குகின்றது.

இந்தப் பேருண்மையைத்தான் அன்று இராமகிருஷ்ண பரமகம்சரும் எடுத்துச் சொன்னார்.

“கடவுளைப் பார்க்க வேண்டும்..,” என்ற மிகுந்த வேட்கை கொண்டவர் விவேகானந்தர்.

தான் கல்விச் சாலையில் படித்தாலும் அன்று பக்தி மார்க்கங்களில் உள்ள நிலைகள் கொண்டு கடவுளை அறிய வேண்டும் என்று அவருடைய வீரிய உணர்வுகள் கொண்டு பல நிலைகள் எடுத்தாலும் அவருக்குச் சரியான “விடை” கிடைக்கவில்லை.

பித்தரைப் போன்று இருக்கும் இராமகிருஷ்ண பரமகம்சரிடம் செல்பவர்களுக்குத் தக்க விடைகள் கிடைக்கின்றது என்று அறிந்த பின் அவரை அணுகுகின்றார் விவேகானந்தர்.

கடவுள் என்பது எப்படி இயக்குகின்றது என்று அவருக்குள் (பரமகம்சர்) அறிந்த சக்தியின் தன்மை கொண்டு
1.விவேகானந்தர் தன்னைத் தேடி வருகின்றார் என்பதை உணர்ந்து
2.தான் படுத்திருக்கும் இடத்திற்குக் கீழ் முட்களையும் வேதனைப்படுத்தக்கூடிய சில பொருள்களையும் பாய்க்கு அடியில் போடுகின்றார் இராமகிருஷ்ணர்.

இதை உற்றுப் பார்த்தபின் விவேகானந்தர் கேட்கின்றார். இது… என்ன..?” முட்கள் போட்டிருக்கின்றது.., இதன் மேல் உட்கார்ந்திருந்தால் வலிக்கவில்லையா…!

அப்பொழுது பரமகம்சர் சொல்கின்றார். (எனக்கு) “வலிக்கின்றது” என்று நீ நினைக்கின்றாய்.
1.நான் இதைப் பார்க்கவில்லை..., அதனால் எனக்கு வலிக்கவில்லை.
2.எனக்கு வலி தெரியவில்லை என்கிறார்.
3.அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தினால் தான் “எனக்குள் அது இயக்கும்” என்று விவேகானந்தருக்கு உணர்த்துகின்றார்.

பின், அவரைத் தொட்டுக் காட்டுகின்றார். அவர் உடலைத் தொட்டபின் அந்த உணர்வுகள் விவேகானந்தருக்குள் பாய்ந்தபின் சில உண்மையின் நிலைகளை உணர்கின்றார்.

உனக்குள் நின்று இந்த உணர்வின் செயல்கள் எவ்வாறு இருக்கின்றது என்று ஆக “இது தான் கடவுள்”.

1.என்னை முள் குத்தும் என்று நீ எண்ணுகின்றாய்
2.அந்த உணர்வின் சக்தி உன் உயிரின் தன்மை
3.அது உள் நின்று அது உணர்த்துகின்றது.
4.அந்த உணர்த்திய சக்தி உனக்குள் வந்த பின் “வேதனைப்படுவேன்.., என்று உணர்த்துகின்றது”. இது தான் கடவுள்.
5.நீ எண்ணியது எதுவோ அந்த உணர்வுக்குத் தக்கவாறு உள் நின்றே அது உணர்த்துகின்றது.
6.இவ்வாறு தான் கடவுள் அது செயலாக்குகின்றான் என்ற நிலையை அன்று விவேகானந்தருக்கு தெளிவுபடுத்திக் காட்டினார் இராமகிருஷ்ணர்.

கடவுளின் செயலாக்கங்கள் - உன் உயிர் எவ்வாறு உள் நின்று இயக்குகின்றதோ அதைப் போல எனக்கு வேதனை என்று எண்ணும் பொழுது இந்த உணர்வின் தன்மை உனக்குள் நின்று வேதனை என்ற உணர்வை உணர்த்துகின்றது.
1.கடவுளின் இயக்கம் இதுதான்.
2.கடவுளைக் கண்ணால் பார்க்க முடியாது.

உனக்குள் இருந்து உயிர் இயக்கினாலும் அவனை நீ காணமுடியவில்லை. உனக்குள் பல கோடி குணங்கள் இருப்பினும் அதனை நீ காண முடியவில்லை.

நினைவின் ஆற்றல் வரும் பொழுது தான் உனது ஆன்மாவாக மாறுகின்றது. நுகர்ந்தபின்தான் உன் உயிரின் இயக்கங்கள் இவ்வாறு இயக்குகின்றது என்று தெளிவுபடுத்தினார் இராமகிருஷ்ண பரமகம்சர்.

அதன் பின் தான் அப்பொழுது அவர் உணர்த்திய உணர்வின் தன்மை கொண்டு தான் அன்று விவேகானந்தர் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்தார்.

நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு நாம் எதை எண்ணுகின்றோமோ அதையே நமக்குள் படைக்கின்றது என்றும் இதைப் போல நாம் எண்ணிய உணர்வுகள் எப்படி வினை என்ற நிலைகளையும் அந்த வினைக்கு நாயகனாக எந்த நிலைகளை இயக்குகிறது என்ற நிலைகளையும் உணர்ந்து கொண்டார் விவேகானந்தர்.

அவ்வாறு உணர்ந்து கொண்ட நிலையில் தான் சிகாகோவில் சகோதர சகோதரிகளே என்று தன்னுடன் இணைத்து (மிஸ்டர்… அது… இது… என்று சொன்னாலும்) வெளிப்படுத்திக் காட்டினார்.

“சகோதர சகோதரிகளே” என்று தன் குரு தனக்கு உணர்த்திய வழியைத் தனக்குள் இணைத்து அவர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு மேலை நாட்டில் “கடவுளின் அவதாரம்” என்ற நிலைகளையும் வெளிப்படுத்தினார்.

இயேசுவின் தாயார் கணவன் இல்லாமல் பிறந்தது என்ற நிலைகளை அவர்கள் பறை சாற்றிய நிலைகளை இது பொய்மை என்று மறைமுகமாக எடுத்துக் காட்டினார்.

நெகடிவ்.., பாசிடிவ்.., - ve.., + ve.., என்ற இயக்கம் இல்லை என்றால் இந்த உலக இயக்கம் இருக்காது.

ஒரு மனிதன் நல்ல நிலைகளில் இயக்கப்படும் பொழுதுதான் மற்றவர்களுடைய உணர்வுகள் இயக்கப்பட்டு மற்றவன் தீமை செய்கின்றான் என்று உணர்த்துகின்றது.

அப்படி உணர்த்தினாலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று நல்ல உணர்வு கொண்டு இயக்கினால் தான் அந்தத் தீமைகளை அகற்ற முடியும். இதையெல்லாம் அங்கே உணர்த்துகின்றார் விவேகானந்தர்.

சிகாகோவில் அவர் பேசிய உபதேசங்கள் ஆங்கில வடிவில் பேசினார். நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தமிழ் வடிவில் எனக்கு உபதேசித்தருளினார்.

நான் (ஞானகுரு) எந்தப் புத்தகங்களையும் படித்து இதைச் சொல்லவில்லை.

விவேகானந்தர் தன் குரு காட்டிய வழியினை அங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு எடுத்துக் காட்டினார். நம் நாட்டின் பெருமையை அங்கே நிலைநாட்டினார்.

1.“ஆச்சாரம்… அனுஷ்டானங்கள்..,” என்பதை நீக்கிவிட்டு
2.நாம் அனுஷ்டிக்க வேண்டிய முறைகள் எது
என்ற தத்துவத்தைத்தான் விவேகானந்தர் அங்கே தெளிவாக எடுத்துரைத்தார்.

1.ஆச்சாரங்களும் அனுஷ்டானங்களும் நம்மைக் காக்காது.
2.”நாம் அனுசரித்து நடக்கக்கூடிய ஆச்சாரம்… எதுவோ…,” அது தான் வழி நடத்தும்.

ஒரு மனிதன் பிழையானதைச் செய்கின்றான் என்றால் அந்தப் பிழை நமக்குள் ஓங்கி வளரப்படும் பொழுது நமக்குள்ளும் அந்தப் பிழைகள் வளர்கின்றது.


அந்தப் பிழையான நிலைகள் அங்கே உருப்பெறுவது நீங்க வேண்டும் என்று நாம் எண்ணினால் அந்தப் பிழை நமக்குள்ளும் நீங்குகின்றது. அவன் அறியாது செய்யும் பிழைகளையும் நீக்க முடியும் என்ற இந்தத் தத்துவத்தை இந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிப்படுத்தினார்.

அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ - ஆறு திரையிட்டு ஏழாவது திரையை வெள்ளையாகக் காட்டினார் இராமலிங்க சுவாமிகள்

இராமலிங்க அடிகள் சொன்னது “அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ”.

ஒருவன் தீமை செய்கின்றான் என்றால் இந்த உயிரின் துணை கொண்டு அவன் தீமை செய்கிறான் என்று அறிந்து கொள்கின்றோம். அவன் செய்யும் தீமைகளை இந்த உயிரே தான் அதைப் பிரித்துத் “தவறு செய்கின்றான்..,” என்று உணர்த்துகின்றது.

அதைத்தான் அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ என்று சொல்லிவிட்டு “தீமை செய்வோருடன்.., என்னுடைய பழக்கம் இல்லாது இருத்தல் வேண்டும்” என்று அவர் வேண்டுகின்றார்.

எத்தகைய தீமைகள் இருந்தாலும்
1.அவர்களுடன் நான் அணுகாது
2.அவர்கள் பேச்சை நான் பேசாது
3.அவர்களுடைய நினைவுகள் இல்லாது நான் பெறவேண்டும்.
4.அந்தத் தெளிந்த மணங்கள் நான் பெறவேண்டும் என்பதுதான்
அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ.

ஏனென்றால் தன் உணர்வின் தன்மை “பிறர் செய்யும் தீமைகளை…, உற்றுப் பாராது… இருத்தல் வேண்டும்”. ஆகவே எனக்குள் தெளிந்திடும் அறிவாக நீ அருட்பெரும் ஜோதியாக இருக்க வேண்டும்.

கார்த்திகேயா என்ற நிலையில் ஆறுபடை வீடுகளில் முருகனைப் பற்றி அவர் தத்துவம் பாடி வந்தார். அதைத்தான் இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது திரையிட்டு மனிதனின் உணர்வின் தன்மை ஒளியாக்கி உயிருடன் ஒன்றி ஜோதியின் உடலாக இருக்கும் நிலைகள் என்று காட்டினார்.

அந்தப் பேரருள் பெறவேண்டும் என்ற தத்துவத்தைத்தான் சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் இந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் இராமலிங்க அடிகள் கூறினார்.

1.நான் தீயதைக் கண்ணுற்றுப் பார்க்கக்கூடாது.
2.”தீயதே என் நினைவில் வரக்கூடாது…” என்ற நிலையை
அவருடைய பாடல்களில் காட்டியுள்ளார்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டாலும் ஏழு திரைகளிட்டு “மெய்ஞானிகளால் அறிந்துணர்ந்த உணர்வுகள் நாம் பெறவேண்டும்”. இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் இருள்களிலிருந்து விடுபடுதல் வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர் பாடல்கள் அமைந்திருந்தது.

அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ - நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதையெல்லாம் நமக்குள் தெளிவாக்குகின்றது.

ஒருவன் தவறு செய்கின்றான் என்று கேட்டறிந்தால் அவன் செய்யும் தவறுகளை நுகர்ந்தறிந்து தவறு செய்கின்றான் என்று நம் உயிர் தான் உணர்த்துகின்றது. ஆனாலும்
1.அந்தத் தவறு செய்பவனைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணுவோம் என்றால்
2.அவன் தவறு செய்த உணர்வுகள் நமக்குள் அதிகமாகி
3.அந்த அறிந்திடும் அறிவு செயலிழந்து
4.அவன் தவறு செய்யும் உணர்வே நமக்குள் உள்ள நல்ல உணர்வுகளை இருள் சூழச் செய்துவிடுகின்றது.

அவன் தவறு செய்கின்றன் என்று உணர்த்துவதும் நம் உயிர் தான். அவன் தவறு செய்கின்றான் என்று நாம் பல முறை எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் வந்து “உயிரால் உணர்த்தப்படும் இந்த அறிவும் மங்கிவிடுகின்றது”.

அதனால் தான் இராமலிங்க சுவாமிகள் அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ என்று இந்த உயிருடன் ஒன்றி
1.தான் எண்ண வேண்டியது எது?
2.எவ்வாறு எண்ண வேண்டும்?
3.எதனை நாம் செய்ய வேண்டும்? என்ற நிலைகளில்
4.மக்கள் நாம் எப்படித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று
அவருடைய பாடல்கள் மூலம் உணர்த்தினார்கள்.

அதே சமயத்தில் அக்காலத்தில் அவர் தெளிந்த நிலைகள் கொண்டாலும் அவர் அறியாது அவருக்குள் பல “அற்புதம்” நடக்கின்றது.

சில நஞ்சினைப் போக்கும் உணர்வுகள் அவர் உடலில் ஆன்மாவில் இருந்ததனால் ஒரு நஞ்சு தீண்டிவிட்டால் இராமலிங்க சுவாமிகளின் பார்வை பட்டால் நஞ்சு தீண்டியவரும் நஞ்சு நீங்கி உயிர் பிழைத்து எழுந்து நடக்கத் தொடங்குகின்றனர்.

ஆனால், அவரவர் இச்சைகள் கொண்டு நமக்குப் பொருள் கிடைக்கும் புகழ் கிடைக்கும் என்ற நிலைகள் தான் மனிதனுடைய சிந்தனைகள் எண்ணங்கள் அனைத்தும் சென்றதே தவிர
1.பொருளும் புகழும் நமக்கு எத்தனை காலம் நிலைக்கும்?
2.புகழும் நம்மைத் தேடி வராது.
3.பொருளும் நம்மை நாடி வந்தாலும் நிலைக்காது.
4.நாம் பெறவேண்டியது என்ன? என்று
இராமலிங்க அடிகள் தெளிவாகச் சொன்னார்.

இந்த வாழ்க்கையில் அனைத்தும் தெரிந்து கொண்டாலும் உயிர் ஒளியாக நின்றது போல் உணர்வுகளையும் ஒளியாக மாற்றி
1.என்றும் அருட்பெரும் ஜோதியாக
2.நம் உணர்வுகள் என்றும் சுடராக இருக்க வேண்டும் என்றுதான்
3.அவர் ஆறு திரையிட்டு
4.ஏழாவது திரையை வெள்ளையாகக் காட்டினார்.

ஆனால், அக்காலத்தில் உள்ள மக்கள் இவருடைய அற்புதத்தைப் பெற்றால் எனக்கு உடல் சுகம் கிடைக்கும் பொருளை அனுபவிக்கலாம் புகழ் கிடைக்கும் என்றுதான் அவரை நாடிச் சென்றார்களே தவிர “அவர் உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்தாலும்…, யாரும் எடுப்பார் இல்லை”.

இதைத்தான் “கடை விரித்தேன்… கைக் கொள்வார் யாரும் இல்லை…,” என்று அவர் விடுபட்டுச் சென்றார். நொந்து சென்றார்.