ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 28, 2018

புது மணத் தம்பதிகள் குடும்பத்திற்குள் தெரிந்து கொள்ள வேண்டியது…!


நீங்கள் புது மணத் தம்பதியாக இருந்தாலும் வாழ்க்கையில் நமக்குத் தெரியாமலே எத்தனையோ வகையில் சிக்கல்கள் வரும்.

சாதாரணமாக நம் வீட்டில் இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எதிர் வீட்டில் சண்டை போடுகின்றார்கள். சண்டை போடுவது ஏன்..? என்கிற வகையில் சண்டை போடுவதைப் பார்க்கின்றோம். அதை நாம் உற்றுப் பார்த்துக் கேட்கின்றோம்.

கேட்டவுடனே அந்த உணர்ச்சிகள் என்ன செய்கின்றது…? நம் உடலில் இயங்க ஆரம்பித்துவிடும். அடுத்தாற்போல என்ன செய்கிறது…? மாமியார் அங்கே மருமகளைக் கண்ணு… இங்கே வாம்மா…! என்று கூப்பிடுவார்கள்.

“இந்த வர்ர்ரேங்க…!” என்று அப்பொழுது அந்தச் சொல்லில் வித்தியாசம் வரும். சண்டை போட்ட உணர்வுகளை அப்பொழுது பதிவாக்கியதால் மருமகளுடைய சொல்லில் இந்தக் கார உணர்வுகள் கலந்து வருகிறது.

அந்தக் கார உணர்வு வரப்போகும் போது என்னடா… இது…? நான் கூப்பிட்டு வருவதற்கு முன்னால் மருமகள் எரிந்து விழுகிறதே…! என்று அந்த இடத்தில் பக்குவம் தவறிப் போகும்.

ஏனென்றால் சண்டையைக் கேட்டறிந்த உணர்வு இப்படி இயக்க ஆரம்பித்து விடும். யாரும் தவறு செய்யவில்லை. மாமியார் கூப்பிடுகின்றார் என்று சொல்லிச் சொன்னவுடனே அவர்கள் மேலே அந்த உணர்வு தன் சிந்தனையைக் குறைத்து இந்தக் கார உணர்வுகள் வருகின்றது.
1.சண்டையிட்டவர்களை அந்தக் கார உணர்வு ஆளுகின்றது.
2.அதைக் கேட்டவுடனே இங்கே நம்மையும் ஆளச் செய்கின்றது.

மாமியார் கூப்பிட்டவுடனே “வருகிறேன் அத்தை…!” என்று சொல்வதற்குப் பதில் “இந்தா வர்ர்ர்ரேன்…!” என்று சொல்லும் போது என்ன… இப்படி எரிந்து விழுகிறதே…! என்று உணர்ச்சிகள் மாறுகின்றது.

தவறு செய்வது யார்…? சந்தர்ப்பம். அந்த வெறுப்பை ஏற்படுத்துவது யார்…? இந்தச் சந்தர்ப்பம் தான். அங்கே போய்க் குழம்பு வைத்தால் என்ன செய்யும்…? இந்தக் கார உணர்ச்சிக்குத் தக்க (மருமகள்) இரண்டு மிளகாயை அதிகமாகப் போட்டுவிடும்.

மிளகாயை அதிகமாகப் போட்டவுடனே சாப்பிடுகிறவர்களுக்கு என்ன செய்யும்…! உஷ்… என்பார்கள். ஏனென்றால் நுகர்ந்த உணர்விற்கொப்ப அந்த உணர்ச்சிக்குத்தக்கதான் அந்தக் காரத்தை அதிகமாகப் போட வைக்கும். ஆனால் தவறு செய்தோமா…?

இப்படி இந்தச் சந்தர்ப்பம் வரிசையில் போகும் பொழுது
1.முதலில் சொல்லில் நயம் கெடுகின்றது.
2.குழம்பு வைக்கின்ற செயலிலேயும் சுவை கெடுகின்றது.
3.இதை யார் செய்வது…? நாம் எண்ணிய உணர்வு அது செய்கின்றது.

நெருப்பில் நல்ல மணமுள்ள பொருளைப் போட்டால் அதிலிருந்து நல்ல வாசனை வெளி வருகிறது. நெருப்பிலே காரமான பொருள் போடட்டால் நெடி வருகிறது. ஒரு கசப்பைப் போட்டால் வாந்தி வருகிறது. அந்த நெருப்பைப் போலத் தான் நமது உயிர்.

உதாரணமாகத் தோசை சுடுகிறோம். தோசைச் சுட்டு கொண்டு இருக்கும் போது ஒரு பக்கம் அதிகமாக எரிகிறது என்றால் தோசை ஊற்றியவுடனே ஒரு பக்கம் வேகாமல் இருக்கும்.. இன்னொரு பக்கம் வெந்து அது கருகிப் போகிறது.

கருகிப் போய்விட்டது என்றால் அதைப் பக்குவப்படுத்தி அந்த நெருப்பைத் தணித்து அதைச் சீராக்க வேண்டும். தணிப்பதற்குப் பதில் சூட்டை அதிகமாக்கினால் என்ன ஆகும்…? அந்தக் கருகிய பக்கம் ஒட்டிக் கொள்ளும். அப்பொழுது தோசை பிய்த்துக் கொண்டு வரும்.

எந்த நேரத்தில் இந்த மாதிரி வருகிறது…? கவலையோ சஞ்சலமோ இருக்கும் போது பாருங்கள். சஞ்சலமாக இருக்கும் போது நீங்கள் தோசையை ஊற்றினீர்கள் என்றால் இந்த நிலை ஏற்படும். அப்போது சமப்படுத்தும் நிலை வராது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? ஈஸ்வரா…! என்று சொல்லி புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கொஞ்ச நேரம் ஆத்ம சுத்தி செய்து மனதை அமைதிப்படுத்த வேண்டும்.

அமைதிப்படுத்திய நிலைகள் கொண்டு லேசாகத் தண்ணீர் ஊற்றிய பின் அந்தத் தோசையைச் சுட்டோம் என்றால் நன்றாக வரும். அது தான் பரிபக்குவம். ஆனால்
1.நான் எல்லாம் நல்லது செய்தேன்…
2.எனக்கு இப்படி வருகிறதே…! என்று எண்ணினோம் என்றால் இந்தப் பக்குவம் கெட்டுப் போகும்.
3.ஏனென்றால் இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் எவ்வளவு நிலைகள் ஒரு நொடிக்குள் மாறுகின்றது.

பொருள்கள் நன்றாக இருக்கிறது. ஆனால் அதிலே தூசிகள் விழுந்து விட்டால் ருசியாக இருக்கின்றதா…? சாப்பிட முடியுமா…?

அதே மாதிரித் தான் நாம் சுவாசிக்கும் அந்த ஆன்மாவிலே தீமையான உணர்வுகள் வந்து சேரும்போது நம்மை அறியாமலே அவைகள் இயக்கி விடுகின்றது. இதெல்லாம் வாழ்க்கையிலே நடக்கும் நிலைகள்.

இந்த மாதிரி வரும் போது பக்குவமான நிலைகளில் நாம் நடந்து பழக வேண்டும். எப்பொழுதுமே வீட்டில் அந்தச் சந்தோஷத்தை ஊட்டும் தன்மை தான் வர வேண்டும். எப்படி…?

ஒரு பையன் குறும்புத்தனம் செய்து கொண்டேயிருக்கிறான் என்றால் அவனிடம் நாம் எப்படிச் சொல்ல வேண்டும்…? மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு
1.நீ நல்லவனாக இருக்கின்றாய்…
2.நீ நல்லபடியாகச் செய்யப்பா…! என்று சிரித்துவிட்டுச் சொல்லிப் பாருங்கள்
3.அப்பொழுது அந்தச் சந்தோஷம் வரும்.

ஆனால் அதே சமயத்தில் இப்படியே செய்கிறானே…! நான் சொல்வதை எதுவுமே கேட்கவில்லையே…! என்று வருத்தப்பட்டால் என்ன நடக்கும்…? முகம் வாடுகின்றது.

அடுத்தாற்போல மாமியார் ஏனம்மா…? உன் முகம் இப்படி வாடி இருக்கின்றது…! என்று கேட்டால் ஒன்றும் இல்லைங்க…! என்று அந்த உணர்வு என்ன செய்யும்…? சரியாகச் சொல்ல விடாது.

ஆனால் சொல்வது யார்…? நாம் தான். நாம் நுகர்ந்த உணர்வு தான் அது அவ்வாறு இயக்குகின்றது. அப்பொழுது அதை மாற்ற வேண்டுமல்லவா…! ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் இப்படி அறியாமலே சில நிலைகள் செயல்படுகிறது.

அதை மாற்றும் நிலையாகத்தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டும்படிச் சொல்கிறோம்.

ரோட்டிலே ஒரு பொருள் தங்கம் போன்று மின்னினால் உடனே அதை எடுக்க வேண்டும் என்று ஓடுகின்றோம் – அந்த உடல் (பொருள்) ஆசையால் ஏற்படும் விளைவுகள்


செல்வத்தைத் தேட வேண்டும் என்று ஆசையில் இருக்கின்றோம். ரோட்டில் இரண்டு பேர் சேர்ந்து நாம் போய்க் கொண்டிருக்கின்றோம். போய்க் கொண்டிருக்கும் போது தரையில் தங்கம் மாதிரி மின்னுகின்றது. மின்னியவுடனே என்ன செய்கின்றோம்...?

1.நம்முடைய ஞாபகம் எல்லாம் அதன் மீது போய்விடுகிறது.
2.உடனே அதைப் போய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.
3.நம்முடன் வந்தவரிடம் கூட “தங்கம் மாதிரி ஏதோ மின்னுகிறது...!” என்று சொல்வதில்லை.
4.கொஞ்சம் இருங்கள்...! இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு
5.ரோட்டிலே மின்னிக் கொண்டிருப்பதை ஓடிப் போய் எடுக்கப் போகிறோம்.

எடுக்கப் போகும் போது இந்தப் பக்கம் பஸ் வருகிறதா...? எல்லது வேறும் எதுவும் வருகிறதா...? என்று பார்ப்பதில்லை. ஏனென்றால் அந்த ஆசையின் உணர்வின் இயக்கம் அப்படித்தான்.

அப்போது என்ன நடக்கிறது...? பஸ் வந்தது என்றால் அடித்துத் தூக்கிப் போட்டு விடும். அதை நாம் பெற முடிகிறதா…? அதை எடுக்க முடியவில்லை.

இதே மாதிரித் தான் நம்முடைய உடல் ஆசை வரப்படும்போது இந்தப் பக்குவ நிலை தவறி விடுகின்றோம். எந்தக் காரியம் செய்தாலும் நம் சிந்தனைகள் தவறி அதனுடைய விளைவாக எப்பொழுதுமே அது நம்மைக் குறை உள்ளதாக மாற்றிவிடும்.

அதே சமயத்தில் நாம் உடல் ஆசை கொண்டு
1.என்னை இப்படிப் பேசினான்... அப்படிப் பேசினான்...
2.எல்லோருக்கும் நான் நல்லது தான் செய்தேன்...
3.ஆனால் என்னை இந்த மாதிரிப் பேசிக் கொண்டு இருக்கிறான் என்றால் இது எல்லாம் சாகாக்கலை.

அவர்கள் பேசுவது எல்லாம் நமக்குள் சேர்ந்து நம் உடலிலே அதை வளர்த்துக் கொண்டு
1.எனக்கு இப்படிச் செய்தானே துரோகம்...! எனக்கு இப்படிச் செய்தானே துரோகம்...! என்று
2.இந்த உணர்வின் தன்மை ஆன பிற்பாடு உடலிலே நோயாகி
3.யாரை எண்ணி அப்படிப் பேசினோமோ அவர்கள் உடலுக்குள் போய்
4.அந்த நோயைத்தான் பெருக்குகிறோம். இது சாகாக்கலை.
5.இந்த உடலில் எதை எடுக்கின்றோமோ அது அடுத்த கலையாக மாறுகின்றது.

ஆகவே உடல் என்ற இந்த ஆசை தான் நமக்கு வருகிறதே தவிர இந்த உயிர் என்ற ஆசை வருவதில்லை. அதைத்தான்
1.என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்
2.என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா......! என்று
3.நம் உயிரிடம் வேண்டி இந்தப் பாடலைப் பாடுகின்றோம்.

உயிர் எப்படி ஒளியாக இருந்து நீ எல்லாவற்றையும் அறிவிக்கின்றாயோ இதைப்போல வாழ்க்கையில் இருள் நீக்கி ஒளியான உணர்வின் தன்மையாக என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் வர வேண்டும். தீமை புகாது நான் தடுத்துப் பழக வேண்டும்.

நீ ஒளியாக இருந்து எல்லாவற்றையும் நீ உருவாக்குகின்றாய்.  ஒளியாக இருந்து நீ எப்படி எல்லாவற்றையும் அறிகின்றாயோ அதைப்போல
1.எல்லாவற்றையும் அறிந்திடும் ஞானம்
2.அதாவது ஒளியின் தன்மை பெற்று பொருளறிந்து செயல்படும் நிலை பெற வேண்டும்.
3.அந்த உயிர் ஆசை தான் எனக்குத் தேவை.

உடல் ஆசை என்றுமே எனக்குள் வளர்ந்து விடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்திட வேண்டும் ஈஸ்வரா. அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியின் உணர்வாக ஏகாந்த நிலை நாங்கள் பெறவேண்டும்.

நெருப்பிலே போட்டால் எப்படி எல்லாப் பொருள்களையும் அது கருக்கி விடுகின்றதோ அதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்தால் தீமைகள் அனைத்தும் செயலிழந்து நமக்குள் சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது.

சூரியன் ஒரு காலம் அழியலாம். ஆனால் இந்தத் துருவ நட்சத்திரம் என்றுமே அழிவது இல்லை. அது வேகா நிலை பெற்றது.  அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றால் நாமும் வேகா நிலை பெறுகின்றோம். எதுவுமே நம்மை அழிக்காது.

August 27, 2018

குடும்பத்தைக் காப்பதற்காக மிகுந்த வேதனைப்படுகின்றோம்... அது ஏன் எதனால் வருகிறது...? என்று அறியாத வயதில் நான் குருவியை உயிருடன் எரித்ததை வைத்து உணர்த்தினார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி


இப்பூவுலகில் அகஸ்தியன் சர்வ தீமைகளையும் அகற்றி சர்வ தீமைகளையும் அகற்றிடும் பேரருளைப் பெற்று நமது பூமியின் துருவ நிலையின் நேராக வடகிழக்காகத் துருவ நட்சத்திரமாக அமைந்துள்ளான்.

எத்தகைய தீமைகள் வந்தாலும் விஷத்தின் தன்மைகள் வந்தாலும் ஒளியின் சுடராக அது மாற்றிக் கொண்டே உள்ளது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பிரபஞ்சத்தில் அலைகளாகப் பரவச் செய்து கொண்டே உள்ளது.

அவ்வாறு பரவச் செய்து கொண்டிருக்கின்ற அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நமது பூமி துருவத்தின் வழி கவர்கின்றது.

இப்படித் துருவத்தின் வழியாக வரும் உணர்வுகளை எம்மை (ஞானகுரு) நுகரச் செய்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அதை நுகரச் செய்து என் உடலுக்குள் வந்த தீமைகளை மாற்றியமைக்கும் முறையைச் சொன்னார்.

அப்போது அந்த முறையைச் சொல்லும் போது நான் சொன்னேன். நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது என்னை அறியாது எத்தனையோ தவறுகள் செய்துள்ளேன்.

என்னுடைய சிறு வயதில் குருவியைப் பிடித்து அதை உயிருடன் அப்படியே நெருப்பிலே போட்டு வாட்டியிருக்கிறேன். உயிரோடு அது வேதனைப்படுவதை வேடிக்கை பார்த்திருக்கிறேன்.

அது துடித்துச் சாவதையும் பார்த்திருக்கிறேன். அப்போது அது அப்படி எரிச்சலானதோ அந்த உணர்வுகளை எல்லாம் நான் எனக்குள் பதிவு செய்திருக்கிறேன் சாமி...! என்று சொல்கிறேன்.

அப்பொழுது நீ அனுபவிக்கத்தான் வேண்டும் என்கிறார் குருநாதர். அதிலிருந்து தப்புவதற்கு என்ன சாமி பண்ணுவது...? என்று கேட்கிறேன்.

நீ தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் அது வேதனைப்பட்ட உணர்வை உன் கண்ணால் உற்றுப் பார்த்தாய். அந்த உணர்வை நுகர்ந்தாய். அப்பொழுது ஊழ்வினை என்ற வித்தாக விளைந்தது. நீ இது வரையிலும் அதை மாற்றவில்லை.

ஆனால் நீ தெரிந்து தவறு செய்யவில்லை... குழந்தைப் பருவம்...! இதிலிருந்து மீட்டுவதற்கு இன்று நீ தெரிந்து கொண்டாய். தன்னில் தெரிந்தோ தெரியாமலோ சேர்த்த உணர்வினை அகஸ்தியன் கொன்றுள்ளான். சர்வ தீமைகளையும் வென்றுள்ளான்.

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதனின் உணர்வை அதை நீ கவர்ந்தாய் என்றால் இதை மாற்றியமைக்கலாம்.

நீ வெறுமனே அதை மாற்றியமைத்து விடுவேன் என்று எண்ணித் தவறு செய்து கொண்டே மாற்றி விடலாம்... மாற்றி விடலாம்...! என்று எண்ணிக் கொண்டேயிருந்தால் உன்னைத் தவறின் எல்லைக்கே அழைத்துச் சென்று விடும் என்ற நிலையை எச்சரிக்கை செய்தார்,

பல விதமான வித்துகள் நிலத்தில் ஊன்றப்பட்டுள்ளது. அதனதன் உணர்வின் துணை கொண்டு புவியின் ஈர்ப்பால் அது விளைகின்றது.

நாம் நல்ல நெல் வித்துகளைப் பக்குவப்படுத்தி நிலத்திலே ஊன்றுகின்றோம். ஆனால் அதிலே களை என்ற வித்துக்கள் நிறைய வளர்ந்து விடுகின்றது. களையை மாற்றவில்லை என்றால் நீ இந்த நெல் மணிகளைப் பார்க்க முடியுமா...? அந்தத் தாவர இனத்தின் சத்தைப் பார்க்க முடியுமா...! முடியாதல்லவா...!

இதைப்போல
1.உனக்குள் ஊழ்வினை என்ற வித்துக்கள் எண்ணிலடங்காது இருக்கின்றது.
2.அது உள்ளேயே தான் அது இருந்து கொண்டே தான் இருக்கும்.
3.அது தன் உணர்வைக் கவர்ந்து இந்த ஆன்மாவில் பெருக்கிக் கொண்டேதான் இருக்கும்.

கவலையோ சஞ்சலமோ இதே போன்ற உணர்வை நீ வேடிக்கை பார்த்தால் இதன் துணை கொண்டு உங்கள் ஆன்மாவில் வந்து விடும். நீ இளமையில் செய்த உணர்வின் தவறை இன்றும் செய்ய வைத்துவிடும். அப்போது இது போன்று செய்யாமல் தப்ப வேண்டும் அல்லவா என்று உணர்த்துகின்றார்.

நிலத்தில் ஊன்றைய பயிரைக் காக்க அவ்வப்போது நீ களைகளை எப்படி நீக்குகின்றாயோ அது போல தீமையின் உணர்வை மாற்றுவதற்குண்டான நிலைகள் செய்ய வேண்டுமா இல்லையா...?

அப்போது தான் இந்த உணர்வுகளைத் தூண்டி நான் இளமைப் பருவத்தில் இருந்த அக்கால நிலைகளுக்கு அழைத்துச் செல்லுகின்றார்.

எவ்வளவு ஆனந்தப்பட்டாயோ... மகிழ்ச்சியடைந்தாயோ... சந்தோஷப்பட்டாயோ.. இப்பொழுது அந்த உணர்வுகள் “எவ்வளவு சந்தோஷமாக வருகின்றது என்று பார்...!” என்று என்னை நுகரச் செய்தார். (படம் பிடித்ததைப் போன்று காட்டுகின்றார். நீங்களும் உங்கள் காலத்தை எண்ணிப் பார்த்தால் தெரிய வரும்.)

உனக்கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகின்றது. உன் இரத்தத்தில் எவ்வளவு வேகமாகப் போகின்றது என்று சொன்னார். ஒரு அரை மணி நேரமாகியது.

1.அந்தக் குருவி அது எரியும் போது எப்படி வேதனைப்பட்டதோ
2.அந்த எரிச்சல் உன் உடலில் இரத்தத்தில் இப்பொழுது எப்படி வருகின்றது என்று பார்...!
3.அந்த எரிச்சல் உன் உடலில் இரத்தத்தில் எவ்வளவு எரிகின்றது என்று பார்...!
4.இந்த இரத்தம் உன் உடல் உறுப்புக்குள் செல்லப்படும் போது இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் எப்படி அது எரிச்சல் அடைகின்றது என்பதனைப் பார்...!

இதை யார் செய்தது...? உனது விளையாட்டுத்தனத்தில் நீ செய்தாலும் உன் உயிரிலே பட்டு அந்த உணர்வின் இயக்கமாக உன்னை இயக்குகின்றது. ஏனென்றால்
1.நம்மை உருவாக்கிய இந்த உயிர் தான் கடவுள்.
2.இருந்தாலும் நமது உயிர் நீ தப்பு செய்யாதே என்று சொல்லுமா...! அது சொல்லாது.
3.கிடைத்த உணர்வின் தன்மையை உணர்த்திக் காட்டும் அதிகாரம் உயிருக்கு உண்டு.

ஆறாவது அறிவு கார்த்திகேயா இதைத் தெரிந்து கொண்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு நுகர்ந்த தீமைகளை மாற்றிட அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உனக்குள் பெருக்கிக் கொள்தல் வேண்டும்.

உன்னில் அறியாத செய்த தீமையை அதனை நீ குறைத்துக் காண வேண்டும். அதைக் குறையச் செய்ய வேண்டும். அதன் வலுவை உனக்குள் இயக்கச் செய்யாதபடி நீ பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அந்தக் குருவி எப்படி எரிந்தது என்று அப்போது தெரியாது. குஷியாக இருந்திருப்பாய். இப்போது பார்... உனக்குள் எப்படி எரிச்சல் வருகின்றது என்று அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார் குருநாதர்.

ஒருவர் வேதனைப்படும்படி நாம் திட்டினால் நமக்குக் குஷியாக இருக்கின்றது. அதே வேதனை உணர்வைச் சேர்த்துக் கொண்ட பின் இதைப்போல ஒரு இரண்டு வார்த்தை அதிகமாகப் பேசும் பொழுது என்ன செய்கின்றது...?

அந்த எரிச்சலும் வேதனையும் நம் உடலுக்குள்ளும் வருகின்றது. அப்போது இதைக் காட்டிலும் அது வலுவாக வருகின்றது. ஆரம்பத்தில் இளம் பருவத்தில் இருப்பதனால் அதை உணர முடியவில்லை. இப்பொழுது அதை எனக்குள் உணர்த்திக் காட்டுகின்றார்.

இப்படி எல்லாம் உணர்த்திக் காட்டிய பின் எனக்குச் சிந்தனை வருகின்றது. நான் எவ்வளவு பெரிய பிழையைச் செய்திருக்கின்றேன்...? இதைப்போல என் எதிர்கால வாழ்க்கை அமைந்து விடுமா... என்று...!

இதைப் போன்ற அனுபவங்களை எல்லாம் குருநாதர் பாட நிலை போன்று வாயிலே சொல்லாகச் சொல்லவில்லை. காட்டுக்குள் செல்லப்படும் போது நான் இன்ன இடத்தில் இருக்கின்றேன்... வா...! என்று சொல்லிவிட்டு இவர் விலகிச் சென்று விடுகின்றார். அப்பொழுது பல தொல்லைகள் எனக்கு ஏற்படுகின்றது. பல இன்னல்களைச் சந்திக்க நேர்கின்றது.

அதே சமயத்தில் என்னுடைய (ஞானகுரு) குழந்தைகளைப் பற்றிய நினைவையும் கொடுக்கின்றார். அந்த நினைவைக் கொடுப்பதற்காக ஒரு குரங்குக் கூட்டதைச் சந்திக்கும்படி செய்தார்.

ஒரு குரங்கு அது குட்டி போடுகின்றது. மற்ற குரங்குகளெல்லாம் பாதுகாப்பாக இருக்கின்றது. ஒரு ரவுடிக் குரங்கு வந்து அந்தக் குட்டியைப் பார்த்து ஆசீர்வாதம் கொடுக்க விரும்புகின்றது. .

ரவுடிக் குரங்கைப் பார்த்ததும் மற்ற எல்லாக் குரங்கும் கிஜு... கிஜு... கிஜு... என்று கத்துகின்றது. இது அமைதியாக இருந்து வாயிலே முத்தம் கொடுத்துக் காண்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகின்றது.

எல்லாக் குரங்குகளும் அமைதியாக இருந்து அதையே பார்க்கின்றது. பக்கத்திலே வந்தவுடனே அந்தத் தாய்க் குரங்கு வீச்... வீச்... என்று கத்துகின்றது.

அப்புறம் கொஞ்ச நேரம் அமர்கின்றது. அது பாஷையிலே சொல்கின்றது, நான் ஒன்றும் செய்யவில்லை என்று அதுவும் பல்லைக் கெஞ்சிப் போகின்றது. போய் அந்தக் குட்டியைத் தொட்டு ஆசிர்வாதம் கொடுத்துவிட்டுச் செல்கின்றது.

அந்தக் குட்டியைத் தொடும் போது எல்லாக் குரங்குகளும் உஷாரகப் பார்க்கின்றது. அந்தக் குரங்கு போன பிற்பாடு தாய் எப்படிப் பாதுகாப்பாகக் கொண்டு போகின்றது என்று குருநாதர் காட்டுகின்றார்.

அப்போது தான் எனக்கு... நாம் மனிதனாக இருக்கின்றோம். பிள்ளை குட்டிகளை எல்லாம் விட்டு விட்டு இங்கே வந்து விட்டோமே...! என்ற இந்தச் சிந்தனை வருகின்றது. அந்தச் சிந்தனையைத் தூண்டி இங்கே வேதனைப்படக்கூடிய உணர்வெல்லாம் ஊட்டுகின்றார்.

ஒன்றும் தெரியாத பட்சியை நெருப்பிலே அன்று நீ சுட்டாய் அல்லவா...? அதன் உணர்ச்சிகள் எப்படி இருக்கும்...? அதே உணர்ச்சிகள் சேர்ந்து இங்கே சோர்வடையப்படும் போது என்றோ செய்த நிலைகள் சேர்ந்து ஒட்டு மொத்தமாக உன் உடலிலே எத்தனை விதமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது பார்...! என்று அனுபவ ரீதியில் காட்டுகின்றார்.

தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் உடலிலே ஊழ்வினை என்ற வித்தாகி அதனுடைய பருவ காலம் வரும் பொழுதெல்லாம் அதனுடைய வேலையைச் செய்து கொண்டு இருக்கின்றது. அதை நீ மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றாய்...? என்று என்னிடம் கேட்கின்றார் குருநாதர்.

மாற்றி அமைப்பதற்கு நான் என்ன வைத்திருக்கின்றேன்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இந்தக் காற்றிலே பரவியுள்ளது. அதை நீ பெறுவதற்காக உனக்குள் நான் பதிவு செய்துள்ளேன்.

நான் கொடுத்த பதிவின் துணை கொண்டு அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று ஏங்கி நீ பெற்றால் மன உறுதி உனக்குள் வருகின்றது.

அந்த மன உறுதி வரப்படும் போது நீ இங்கிருந்தே உன் குழந்தைகளுக்கும் உன் மனைவிக்கும் அந்த அருள் சக்திகளை ஆசிர்வாதமாகக் கொடுக்கலாம்.

இல்லையென்றால் நீ வேதனைப்பட்டு குழந்தை இப்படி இருக்கின்றதே மனைவி இப்படி இருக்கின்றதே என்று எண்ணினால்
1.அவர்கள் அங்கே சிந்திக்கும் திறனை இழக்கத்தான் செய்வார்கள்.
2.ரோட்டில் நடந்து செல்லப்படும் போது திடீரென்று விபத்துகள் ஏற்பட நீயே...
3.அதாவது நீ வேதனைப்படும் உணர்வே காரணம் ஆகி விடுகின்றது.
4.உனது பாசம் அவர்களைச் சிரமப்படுவது மட்டும் இல்லாதபடி
5.உன் பாசம் விபத்தில் சிக்கச் செய்து விபரீத நிலைகளுக்கு நீ அவர்களை ஆளாக்க நேரும் என்ற இந்த உணர்வைக் காட்டுகின்றார்.

இதை அப்படியே காட்டுகின்றார். (நான் இருப்பது திருப்பதியில்) அங்கே பழனியில் என் கடைசிப் பையன் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றான். குருநாதர் வழக்கமாக இருக்கின்ற டீக்கடை பக்கம் இவன் ஓடிக் கொண்டிருக்கும் போது ஒரு கார் ஒன்று வருகின்றது.

அவன் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் கார் வருவதைப் பார்க்காமல் எதிர்பார்க்காமல் உடனடியாகத் திரும்பிவிடுகின்றான். அந்தக் காரிலே அடிபடும் நிலையாக நீ எண்ணிய உணர்வுகள் உன் பையன் அங்கே எப்படிச் சிக்குகின்றான் பார்...! என்பதைக் காட்டுகின்றார்.

அந்த டீக்கடைக்காரர் எனக்குத் தெரிந்தவர் தான். நான் திருப்பதியிலிருந்து மீண்டும் பழனிக்கு வந்த பின் “உன் பையன் இந்த மாதிரி அன்றைக்குத் தப்பித்ததே பெரிது...!” என்றார். ஆனால் மலையில் இருந்தவாறே எனக்கு பழனியில் நடப்பதைக் குருநாதர் காட்டுகின்றார்.

உன்னுடைய நினைவலைகள் அங்கே என்ன செய்கின்றது...? அவனைக் காக்க முடிந்ததா…? குரங்கு குட்டி போட்டது என்று எண்ணி அதைக் காத்தது.

ஆனால் உனது பிள்ளையைப் பார்க்க முடியாமல் விட்டு விட்டு இங்கே வந்து விட்டோமே என்று வேதனைப்படுகின்றாய். வேதனைப்படும் உணர்வால் அவனை உன்னால் காக்க முடிகின்றதா...? என்று எனக்குத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

இதைப்போல இயற்கை ஒரு மனிதனின் உடலில் உருவாவது தன்னைச் சார்புடையவரை எவ்வாறு இயக்குகின்றது...? பழகிய நண்பனே துரோகம் செய்தான் என்று எண்ணும் பொழுது அவனுடைய சிந்தனையை எப்படி மாற்றியமைக்கின்றது...?

பாசத்திற்கும் வெறுப்பு உணர்விற்கும் இரண்டிற்கும் வித்தியாசப் படுத்தினாலும் அது மற்றவன், இது உன்னுடைய பாசம். அந்த வேதனை என்ற உணர்வு அவனைக் காட்டிலும் துரித நிலைகள் கொண்டு உன் குழந்தையைக் காக்க முடியாமல் போகின்றதே…! நீ என்ன செய்ய போகின்றாய்...! என்று காட்டுக்குள்ளே போகும் போது இதைக் காட்டுகின்றார்.

குருநாதர் சொன்னபடி மீண்டும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஊட்டி என் குழந்தைக்கு நல்ல சிந்தனை வர வேண்டும், அவனுக்கு தெளிவான மனம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டே போனேன்.

இருப்பினும் உள்ளே உள் உணர்வு இருக்கத்தான் செய்கின்றது. இந்த உணர்வின் அழுத்தங்கள் வரப்படும் போது மற்ற மிருகங்கள் உயிரினங்களைக் காட்டிலும் மனிதனாகி இப்படி ஆகி விட்டதே என்ற வேதனை எப்படி வருகின்றது...? என்பதைக் காட்டுகின்றார்.

அடுத்து என் மனைவி படுகின்ற அவஸ்தையையும் காட்டுகின்றார். பெரிய பையன் செய்கிற தவறையும் காட்டுகின்றார். மற்ற பெண் குழந்தைகள் படக்கூடிய அவஸ்தையையும் காட்டுகின்றார், எல்லாம் காட்டுக்குள் வைத்தே காட்டுகின்றார்.

இத்தனையும் பார்த்தால் எனக்கு எப்படி இருக்கும்...? அந்த குரங்கைக் காட்டி உனது பாசம் இங்கே எப்படி வேலை செய்கிறது என்று உணர்த்தும் பொழுது எனக்குள் என்ன எண்ணம் தோன்றுகின்றது...?

என்ன வாழ்க்கை...! சாமியாவது... கத்திரிக்காயாவது...! என்று இதைத்தான் எண்ணுகின்றேன். குருநாதர் காட்டிய வழியில் எல்லாவற்றையும் தெரிந்து வருவதற்கு முன்னால் அவர்கள் நரக வேதனையைச் சந்திக்கின்றார்களே... என்ற வேதனை வருகின்றது.

அப்போது என் உடலை மாய்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வருகின்றது.
1.இந்த மலையிலிருந்து உருண்டு விடலாம்...
2.இரண்டாவது தீயை வைத்துக் கொளுத்திக் கொள்ளலாம் என்று வருகின்றது.

உடலை வருத்தி அழித்துக் கொண்டால் வேதனைப்பட வேண்டி வரும். தீயைப் போட்டு எரித்துக் கொண்டால் உடனே இறந்து போய் விடலாமல்லவா...! என்ற எண்ணம் வருகிறது.

அப்போது அந்த உணர்வின் எண்ணம் எனக்குள் வரும் போது தான் குருநாதர் மறுபடியும் காட்டுகின்றார். நீ எந்தக் குருவியைச் சுட்டாயோ அந்த உணர்வின் நினைவலைகள் உனக்குள் எப்படிக் கிளர்ந்து வருகின்றது என்று பார்த்தாயல்லவா...? என்று நிதர்சனமாகவே காட்டுகின்றார்.

இது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் எப்படி சகஜமாக இது நடக்கின்றது என்பதை எனக்குக் காட்டினார். ஏனென்றால்
1.இந்த உயிர் நாம் எதை நுகர்கின்றோமோ அதைத்தான் இயக்குகின்றது.
2.எதன் உணர்வுகள் நமக்குள் வருகின்றதோ அதன் உணர்ச்சிகள் தான் எண்ணம் சொல் செயல் என்று வருகின்றது.

தீமையான உணர்வுகள் உடலுக்குள் வரும் பொழுது தீய அணுக்கள் உருவாகி உடலிலே இரண வேதனைப்படும் நோய்களும் வருகின்றது. இன்றைய செயல் நாளைய வாழ்க்கையாக எப்படி அமைகின்றது...? என்பதனை அங்கே உணர்த்துகின்றார்.

நல்லது பெறவேண்டும் என்று எண்ணிய நிலைக்கொப்ப இந்த உடலை உருவாக்கியது இந்த உயிர். உடலை உருவாக்கிய நிலையில் தீயிலே நீ குதித்தால் உடல் கருகி விடுகின்றது. கருகிய உணர்வுடன் இந்த உயிர் இணைந்தே செல்கின்றது. அடுத்து எங்கே செல்வாய்…?

எந்தப் பையன் மேலே நீ பாசமாக இருந்தாயோ அவன் உடலுக்குள் இந்த உயிர் புகுந்து விடும். நீ இப்படி மரணமடைந்த செய்தியைக் கேட்டால் அனும் தீயிலே விழுந்து கருகத்தான் செய்வான்.

அவன் கருகிய பின் அவன் உடலுக்குள் புகுந்த நீ என்ன ஆவாய் தெரியுமோ...? எரி பூச்சியாகத்தான் பிறப்பாய் என்று இப்படியே சொல்கிறார் குருநாதர். சில பூச்சிகள் உடலில் பட்டால் சூடு போட்டது போல் ஆகும். அதைக் காட்டுகின்றார்.

அந்தப் பூச்சியை என் மீது விடவும் செய்கின்றார். கண்ணங்கரேல் என்று அந்த பூச்சி என் உடலின் மீது அது போகும் எல்லாம் சூடு போட்டது போல் ஆகின்றது.

நீ எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து விடுபட்டு நீ மனிதனாக  வந்தாய். ஆனால் தீயை வைத்து நீ உன்னை மாய்த்துக் கொண்டால்  மீண்டும் எரி பூச்சியாக நீ போவாய்.

இதைப் போன்று தான் ஒவ்வொரு மனிதனும் எந்தெந்த ஆசை கொள்கின்றானோ அது நிறைவேறவில்லை எனும் பொழுது தற்கொலை பண்ணுகின்றான். பேயாசை கொண்டு வேதனைப்படுகின்றான்.

இத்தகைய நினைவுகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு உடலை விட்டுச் சென்றபின் யார் யார் மேல் பாசமும் வெறுப்பும் வைத்தானோ அந்த உடலுக்குள் சென்று பேயாகச் செயல்படும். உடலில் பேய் வந்து ஆடுகின்றது என்றெல்லாம் சிலர் சொல்வார்கள். நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இதற்கு முந்தைய நிலைகளில் செய்த தவறுகளை நீ உணர்கின்றாய். திருந்த எண்ணுகின்றாய். திருந்தி வாழ விரும்புகின்றாய். நீ தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுகள் உனக்குள் என்ன செய்கின்றது என்பதனை நீ அறிந்து வாழ் என்றார் குருநாதர்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்தெல்லாம் விடுபடும் உபாயமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெற்றாய் என்றால் உனக்குள் அறியாது செய்த உன்னைத் தவறான வழியில் அழைத்துச் செல்லும் தீமைகளை அது மாற்றிவிடுகின்றது.

இப்படி மாற்றுவதற்குத்தான் உனக்கு அனுபவ ரீதியில் இதைக் கொடுத்தேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

மற்றவர்கள் கெட வேண்டும் என்று மண்ணை வாரித் தூற்றிச் சாபமிடுவோரிடமிருந்து விடுபடுங்கள்


மற்றவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்பதற்காக சிலர் சாபமிட்டு மண்ணைத் தூவி விட்டு வந்து விடுவார்கள். “இன்னார் குடும்பம் நாசமாகப் போகட்டும்…!” என்று சொல்லி மாரியம்மன் கோவிலில் எல்லாம் மண்ணைத் தூவுவார்கள். மண்ணை எடுத்து ரோட்டில் வீசுவார்கள்.

1.மண்ணைத் தூவினால் நாசமாகப் போய்விடும் என்ற பயத்தின் உணர்வை இங்கே பதிவாக்கப்படும் போது
2.அவன் சொன்ன அலைகளை மீண்டும் அவர்கள் நினைக்க அதனின் இயக்கமாக
3.அவன் சாபம் இட்டது போலவே “எனக்கு இந்த மாதிரி ஆகிவிட்டதே…!” என்பார்கள்.

தெய்வத்திடம் போய் என்ன செய்கின்றோம்…? காணிக்கைச் செலுத்தி இதை மாற்றுவதற்குப் பல உபாயங்களைக் கடைப்பிடிக்கிறோம்.

ஒரு மனிதனின் உடலில் கெடுமதியான உணர்வுகளை உருவாக்கிப் பகைமை உணர்வு கொண்டு நாசமாக வேண்டும் என்று சொல்லப்படும்போது அதைப் பார்த்துவிட்டு நம்மிடம் மற்றவர் வந்து சொல்லும் பொழுது
1.என்ன…? உங்கள் பெயரைச் சொல்லி இந்த மாதிரி மண்ணைத் தூவுகிறார்கள் என்று சொன்னால்
2.அந்த உணர்வைச் “சிக்கெனப் பிடித்துக் கொள்ளுகின்றோம்…!” அதை மீண்டும் மீண்டும் நினைவு கொள்கின்றோம்.
3.அவர் இட்ட உணர்வை எடுத்து நமக்குள் அணுவாக வளர்க்கத் தொடங்குகின்றோம்.
4.அவர் இட்ட சாபத்தை நமக்குள் வளர்த்து நமக்கு நாமே தண்டனை கொடுக்கின்றோம்.
5.மனிதனின் வாழ்க்கையில் இது இயக்கிக் கொண்டுதான் உள்ளது.

தீமை செய்வோனைப் பார்த்தால் நமக்குச் சம்பந்தம் இல்லை தான். ஆனாலும் அவர் உடலிலே விளைந்த தீமையை விளைவிக்கும் உணர்வுகள் அங்கே வெளிப்படும் போது அதை என்ன...? என்று உற்றுப் பார்த்து அந்த உணர்வினை அறிந்தால் நம் உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றிவிடுகிறது.

அவன் செயலை மீண்டும் மீண்டும் எண்ணினால் அவன் எந்தச் செயலைச் செய்தானோ அந்த உணர்வின் உணர்ச்சியைக் கூட்டி அதுவே குருவாக வருகின்றது.

சில காலம் போய்விட்டால் அவன் தவறு செய்கிறான் என்று எண்ணுகின்றோம். ஆனால் நாம் தவறு செய்பவனாகவே மாறி விடுகின்றோம். இதில் அவன் செய்த தீமையான செயலைப் பற்றி நாம் நியாயத்தையும் தர்மத்தையும் பேசலாம். பேசினாலும்…
1.பிறருடைய குறைகளைத்தான் நாம் வளர்த்துக் கொள்கிறோமே தவிர
2.குறைகளை நீக்கும் அருள் சக்தியை நமக்குள் பெருக்கும் தன்மையை இழந்தே வாழுகின்றோம்.
3.இது போன்ற நிலைகளிலிருந்து நாம் மீளுதல் வேண்டும்.

 அத்தகையை தீமைகளிலிருந்து மீண்டிடும் நிலையாக நம் குருநாதர் காட்டிய அருள் வழியை நாம் பின்பற்றுதல் வேண்டும். அவன் துணை கொண்டு அகஸ்தியன் பெற்ற அருள் ஞானத்தை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

நமக்கு முன்னாடி அந்த அகஸ்தியனின் உணர்வுகள் உண்டு. அதைப் பெறவேண்டும் என்று எண்ணினால் அது நமக்குள் வருகின்றது. 

அப்பொழுது அகஸ்தியர் பெற்ற நஞ்சிடும் உணர்வுகள் நமக்குள் குருவாக வந்து நம் வாழ்க்கையில் வரும் நஞ்சான உணர்வுகளை மாற்றிடும் அருள் சக்திகளைப் பெறுகின்றோம்.

1.அது தான் குரு காட்டிய வழியில் நாம் நடக்க வேண்டிய முறைகள்
2.குரு காட்டிய அந்த நெறியைக் கடைப்பிடித்து
3.குருவின் துணையால் அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நாம் ஒவ்வொரு நிமிடமும் பெ\ற்று
4.நம்மை அறியாது இயக்கும் சாப வினை பாவ வினைகளிலிருந்து விடுபட வேண்டும்.