ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 6, 2012

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேரவேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும், அந்த அருள் மகரிஷி அகஸ்தியனின் நிலைகளையும், நமது குரு காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் பெற்ற பேருண்மைகள், அவன் அறிந்துணர்ந்த அருள் அனைத்தும் நீங்கள் பெற்று, அந்த துருவ நட்சத்திரத்துடன், அதில் ஆயுள் கால மெம்பராக அமைந்து செல்ல வேண்டும்.
ஏனென்றால், எனக்கு குருநாதர் இப்படித்தான் கொடுத்தார்.
அவர் கொடுத்த வழியிலேதான் யாம் இதைக் கொடுக்க முடியும்

கோடிக் கணக்கில் உங்களுக்குப் பணம் வாங்கித் தருகின்றேன், உடனே உங்கள் நோய்களை எல்லாம் நீக்கிவிடுகின்றேன், என்றெல்லாம் சொல்வதற்கு யாம் இல்லை.

நோய் வருவதும், நோயை நீக்குவதும் இயற்கை, ஆக, அதிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வு வரப்போகும் பொழுது,, எதை வைத்து நாம் தப்ப வேண்டும்?

அந்த உணர்வின் தன்மை,
மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்து,
இங்கே தப்பவேண்டும் என்று எடுத்தால்,
நாம் இந்த உடல் பெற்ற உணர்வுக்குச் சரியாகும்,
சொல்வது அர்த்தமாகின்றதா?

இன்றைக்கு மருந்தைக் கொடுத்து நோயை நீக்கி, அப்புறம் கை, கால் போய்விட்டது என்று உறுப்புகளை மாற்றி வைத்தவுடன், எத்தனை காலம் வாழுகின்றார்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

இப்படி உறுப்புக்களை மாற்றி வைத்தாலும், என்ன செய்கிறோம்? இந்த இயற்கையில் செய்த நிலைகளில் கொஞ்சம் மாற்றம் ஆகும் பொழுது, “என்னால் முடியவில்லைலையே, என்னால் முடியவில்லையேஎன்று எண்ணுவார்கள்.

ஆக, இப்படி இருக்கின்றது. நான் என் உடலில் உறுப்புக்களை எல்லாம் மாற்றி வைத்திருக்கின்றேன் என்று, இந்த உணர்வுகள் தோன்றும் பொழுது, இயற்கையில் நல்ல நிலையில் இருக்கும் அடுத்தவர்களைப் பார்த்தவுடனே, வேதனைதான் வருகின்றது,

அந்தச் சலிப்பின் தன்மைதான் வருகின்றது. சங்கடத்தின் தன்மைதான் வருகின்றது. இதெல்லாம் எங்கே போகின்றது? உறுப்புக்களை மாற்றியமைத்து விட்டோம்.

ஆனால், இப்படி நுகரும் உணர்வுகள் என்ன செய்யும்? இந்த உணர்வுகளை மாற்றியமைக்கின்றது. அப்படி உணர்வுகளை மாற்றி அமைக்கிறதுக்குத் தக்கவாறு, நமக்குள் உணர்ச்சிகளும் மாறுகின்றது.

அந்த உணர்வுக்குத் தக்க, உணர்ச்சியின் தன்மை கொண்டு, இன்றைய செயல் நாளைய சரீரமாக மாறுகின்றது. இந்த உடலில், இதெல்லாம் மாற்றுகின்றது. அப்பொழுது நாம் எங்கே போக வேண்டும்? சொல்வது அர்த்தமாகின்றதா?

அதனால், நாம் ஆயுள் கால மெம்பராக இணைக்கப்படும் போது. இந்த உடல் பற்றுக்கு வரவேண்டாம். பிறிதொரு ஆன்மாக்கள் நமக்குள் வந்தாலும், அதை அடக்கிடும் வல்லமை நமக்கு உண்டு,

அதே போன்று, பிறிதொரு ஏவல் தன்மையை யார் செய்தாலும், அந்த அருளைப் பெற்று இருளை நீக்க முடியும். நாம் அதைப் பற்றுடன் கொஞ்ச நாள் பற்றினால், அந்த வலுவின் தன்மை நிச்சயம் கூடும்.

அழுக்குத் தண்ணீரில், கொஞ்சம் தீமை இருக்கும் என்று சொன்னால், அதில் உலரும் பசையும் ஜாஸ்தியாக இருக்கும். நல்ல தண்ணீரை ஊற்றிக் கொண்டே வந்தால், அழுக்குத் தண்ணீர் போனாலும், பாக்கி கொஞ்சமாவது அதிலே தொக்கி இருக்கும், அந்த உணர்வின் தன்மை, நல்லதை ஊற்றிக் கொண்டு வந்தால் சரியாகும்.

நான் எவ்வளவு நல்ல தண்ணீரை ஊற்றிக் கழுவினேன்,
மறுபடியும் வந்துவிட்டதேஎன்று சொன்னால் எப்படி இருக்கும்?
ஆக, இந்த உணர்வை. நாம் மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

நமக்கு இந்த உடல் சொந்தமில்லை. நாம் சொந்தமாக்க வேண்டியது உயிர் ஒன்றுதான்.

அந்த உணர்வின் தன்மை ஒளி. அந்த உணர்வின் தன்மைதான், “என்றும் ஏகாந்த நிலை என்ற நிலை”. ஆக, எதுவுமே நம்மைத் தாக்காத நிலை, அது, எப்பொழுதும் ஒளியின் தன்மை கொண்டு இருளை விரட்டும் நிலை.

விளக்கைப் போட்டால் எப்படி இருள் மறைகின்றதோ, அதைப் போல நம் உணர்வின் தன்மை, எதையுமே தெரிந்து கொள்ளும் நிலை. அதனின் வலு அழுத்தமானால், தீமை என்ற நிலை நம்முள் வராது.
அந்த உணர்வின் தன்மையை, நாம் வளர்த்து விட்டால், துருவ நட்சதிரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், அதன் உணர்வின் தன்மை என்றும் ஒளியின் தன்மையாகும். இது ஏகாந்த நிலை அதுதான் ஏகாதசி”. அப்படி என்றால் பத்து, பத்தாவது நிலை அடையும் போது, ஏகாதசி.

ஏகாதசி என்றால், நாம் என்ன செய்கின்றோம்? எங்கேயோ போகின்றோம். ஆனால், ஞானிகள் காட்டியது, நாம் ஏகாந்தமான நிலைகளில் இருக்க வேண்டும். எதுவுமே எதிர்ப்பு இல்லாத நிலை, ஏகாதசி..

அடுத்து வைகுண்ட ஏகாதசி அப்படி என்றால், பிறருடைய தீமைகளை எண்ணாதபடி, நமக்குள் சந்தோசமான நிலையிலேயே இருப்பது.

ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும்? நம்முடன் பகைமை கொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும், அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், என்று எண்ண வேண்டும்.

சண்டை போடுபவர்கள், சிந்தித்துச் செயல்படும் சக்தி பெறவேண்டும் ஒருவர் துரோகம் செய்தார் என்று நினைத்தால், அவர் பொருள் அறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால், நமக்குள் அந்தத் தீமையின் உணர்வுகள் வராது. அதுதான் ஏகாதசி விரதம்

இந்தப் புவியின் தன்மையில் வைகுண்ட ஏகாதசி என்றால், இந்த உணர்வின் தன்மை, பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய விஷத்தின் தன்மையை அது இயக்காது, “என்றுமே ஒளி”, இது வைகுண்ட ஏகாதசி. சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா

மனிதன் எப்படி வாழ வேண்டும்?
இந்த உயிரணு எதைப் பெற வேண்டும் என்று, எத்தனையோ கோடி சரீரங்களில், இன்னலைக் கடந்து, இந்த இன்னலை நீக்கக் கூடிய வலிமையான இந்த உடலும், அந்த உணர்வும்,
அறியும் அறிவும் கிடைத்த ஆறாவது அறிவை,
நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று,
ஞானிகள் உணர்த்திய உண்மைகளைத்தான்
இப்பொழுது யாம் உங்களுக்குக் கொடுப்பது.