ஞானகுரு:
நான் சக்தி கொடுக்கிறேன், நீங்கள் பயிற்சி கொண்டு அதை எடுக்க வேண்டும். உங்கள் எண்ணம் எப்படியோ.…, என்னுடைய குறை அல்ல. நான் எப்படிச் செய்ய முடியும்,
உங்களுக்காக நான் சாப்பிட்டால், என் பசிதான் தீரும்….,
நீங்கள் மீண்டு கரை ஏற வேண்டியது
“உங்கள் தன் பலம் கொண்டு”.
பயிற்சி எது:
“நமக்கு எது பயிற்சி?” நமக்குள் என்ன நடக்கிறது என்பதையும், எது நம்மை மாற்றுகிறது என்பதையும், இவ்விதம் நம்மை நாமே அறிந்து, எப்படி வாழ வேண்டும் என்பதையும் அறிந்து உணர்ந்து, அருள்வழியில், குரு காட்டிய வழியில் "நடப்பதுதான் பயிற்சி".
உயிரணு பூமிக்கு வந்து சேர்ந்ததும், தாவர இனச் சத்தைக் கவர்ந்து கருவாகி, பல கோடி சரீரங்கள் எடுத்தபின், மனிதனாகப் பிறப்பதற்குரிய அனைத்து உணர்வுகளின் தன்மைகளும் உயிரான்மாவில் இணைந்ததும், அவ்வுயிரணு அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும் பொழுது, மனித உடலைப் பெறக்கூடிய தன்மை பெறுகின்றது. அப்பொழுது, பூமியில் நாம் மனிதனாகப் பிறக்கின்றோம்.
ஆக உயிருடன் ஒன்றி, இந்த மனித உடலை அல்லது உயிருடன் கூடிய இம்மனித உடலை இந்த உயிர், தான் முன்னதாகவே நுகர்ந்தெடுத்து, இணைத்துக் கொண்ட உணர்வுகளின் தன்மைக்கொப்ப உடலை அமைத்துக் கொள்கின்றது.
இம்மனிதப் பிறவியில் இந்த உடலை எடுத்து வந்த உயிரணு, சூரியனிலிருந்து வந்து, அதன் ஒரு பகுதியாக, அதன் ஓர் அங்கமாக, இந்த பூமியில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆனால், உடல், இந்த பூமியில் பரமாத்மாவில் படர்ந்துள்ள உணர்வுகளின் உறைவிடமாக அங்கமாக, அதன் உணர்வுகளுக்கொப்ப இந்த உடல் உயிர் உருவாக்கும் தன்மையில் உருவாகி, பூமியில் உலா வருகின்றது.
ஆக, உயிர் சந்தர்ப்பவசத்தால் உடலை விட்டுப் பிரியும் நேரம், உடல் தான் இறக்கின்றது. உயிர் பரமாத்மாவில் கலந்து உணர்வுக்கு ஒப்ப மறு உடல் பெறுகின்றது. உணர்வுகள் அழிவதில்லை, உணர்வுகள் மாறிக்கொண்டேதான் உள்ளது.
ஆனால். உயிர் என்றுமே அழிவில்லாத இயக்கம். அதை அறிந்து, புரிந்து, உணர்ந்து, முதல் பாடமாக நமக்குள் பதிய வைத்துக் கொண்டால்தான், மற்ற பாட நிலைகள் தெளிவாகும்.
பரிணாம வளர்ச்சியில் உணர்வுகளின் நுகர்வால், உடல்கள் மாறி மாறி, மனித உடல் பெறும் இந்த உணர்வுகள் இம்மனித உடல் அழியும்பொழுது, ஜீவன் பெற்று, ஜீவ அணுக்களாக இருக்கின்றது.
அப்படி இருந்தாலும், ஜீவன் பெறமுடியாத, ஆனால் ஜீவன் பெற்று உடலாகும் தகுதியான அத்தனை உணர்வுகளும், உயிரணுக்களாகவோ அல்லது மாறுபட்ட நிலைகளிலோ, இப்பூமியின் தன்மையில் பரமாத்மாவாகவும், சூரியனின் காந்தப் புலனில் கவரப்பட்டால், அது எடுத்துச் செல்லும் நிலைக்கும்,சுழன்று கொண்டுதான் உள்ளது.
அருள் ஞானிகளின் உணர்வுகள், மற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் தவிர, ஏனைய உணர்வுகள் அனைத்தும் இருளானவைகள். அதன் செயலாக்கங்களும் இருளானவைகள்.
இவையனைத்தும் சிவன் இராத்திரி நிகழ்வுக்கும்,
மகா சிவன் இராத்திரி என்ற நிலைகளுக்கு மட்டுமே பயன்பட்டும்,
மற்றும் இம்மண்ணுலகில் உயிரணுக்கள் உடல் பெறவும்,
ஜீவராசிகளாகி, மனிதனாகி வரும் நிலைக்குத்தான்,
இதுவரை பயன்பட்டு வந்துள்ளன.
இன்று நாம் மனிதன் என்ற நிலை பெற்று இருந்தாலும், (பரிணாம வளர்ச்சி என்ற நிலையில்) மீண்டும், மீண்டும், இப்பூமியில் சுழன்று கொண்டே இருக்க வேண்டுமா?
அப்படி சுழன்று கொண்டு, இங்கே இருக்கும் இருளான உணர்வுகளையே நுகர்ந்து, அதற்குரிய உடல்களைப் பெற்றும், இந்த பூமிக்குள்ளேயே நாம் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
நாம் எண்ணியவற்றை, நாம் நுகர்ந்ததை நமது உயிர் நம் உடலுக்குள் இணைக்கின்றது, நமது உயிர் எலெக்ட்ரிக், நாம் நுகரும் உணர்வுகள் நமது உயிரில் மோதி,எலெக்ட்ரானிக்காக இயங்குகின்றது.
அதாவது, நாம் நுகர்ந்த உணர்வுகள், நம்முள் எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் என்ற நிலையில் நம்உடலை இயக்குகின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இதைக் கேட்டுணரும் அன்பர்கள், தங்களது வாழ்க்கையில் தமக்குள் அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட, துருவ தியானம், ஆத்ம சுத்தி, இரவு தியானம் ஆகியவற்றை, கண்டிப்பாகக்கடைப்பிடிக்க வேண்டும். எமது அருளாசிகள்.
ஆத்ம சுத்தி
“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று,
புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும்.
பின், தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.
அடுத்து, இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், ஞானகுரு, சற்குரு, சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும்.
பின், ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள
அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி ஏங்கி,
கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி,
நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி,
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
இவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவி செலுத்தி, நமது கண்களின் காந்தப் புலனறிவால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து,
உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து,
“உயிர் வழி நுகர வேண்டும்”.
இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி,ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா, ஜீவ அணுக்கள், என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி,
நம் உடலுக்குள்,
அலை அலையாகப் படரச் செய்யவேண்டும்.
இதுவே ஆத்ம சுத்தி.
மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நன்கு “ஆழமாக” பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனை, துருவ தியானத்தின் மூலமே பெறமுடியும்.
அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நாம் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் படரவிடும் பொழுது, நம் உடலுக்குள் எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளிச் சுடராக மாற்றிடும் திறன் பெற்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாம் பெறவேண்டும் என்று, நாம் ஏங்கி ஆசைப்பட்டு, காலை பிரம்ம முகூர்த்த வேளையில் நாம் அறிவின் ஞானம் கொண்டு, தியானிக்க வேண்டும்.
பிரம்மம் என்றால் உருவாக்குதல்.
முகூர்த்தம் என்றால், இணைத்தல்.
பிரம்ம முகூர்த்த வேளை என்பது, அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை. அந்த நேரத்தில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், பூமியில் நேரடியாகப் பரவும் நேரம். அந்த நேரத்தில், தியானித்து, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் பிரம்மமாக்க வேண்டும்.
ஆறாவது அறிவு என்ற நம் உடலில் விளைந்த உணர்வினை எண்ணி, அதன் துணை கொண்டு,உடலுக்குள் அந்த அருள் உணர்வுகளை இயக்கச் செய்யவேண்டும்.
இதைத்தான், “ஓம்” என்ற பிரணவத்தை, “சிவனுக்கே ஓதினான் முருகன்” என்றார்கள் ஞானிகள்.
நட்சத்திரத் துகள்கள் மின்னலாகி, பூமியில் படர்ந்துவிட்டால், காற்றில் இருப்பதை புவியின் ஈர்ப்பால் கவர்ந்து, வைரங்கள் விளைகின்றது.
அதுபோல் இந்த உடலை உருவாக்கிய அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைக் கவர்ந்து உயிருடன் இணைத்து தியானிக்கும்பொழுது, அவை அனைத்தும் இந்த உயிரைப் போலவே சிறுகச் சிறுக மாறி ஒளியாக மாறிவிடும்.
இனியாகிலும் உடல் பற்று கொள்ளாமல், உயிர் மீது பற்று கொண்டு, உயிருடன் ஒன்றுதல்தான், உண்மையில் செயல்படவேண்டிய இயக்கம் என்று அறிதல் வேண்டும். எமது அருளாசிகள்.
தியானத்தின் பலன்கள்
உயிரைக் கடவுளாக மதித்து, உடலை கோவிலாக மதித்து, உணர்வுகளை தெய்வமாக மதித்து துருவ தியானம், ஆத்ம சுத்தி செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
- சிந்திக்கும் தன்மைகளும், தெளிவான நிலைகளும் நமக்குள் வருகின்றன.
- நமது ஆன்மா (உணர்வுகள்) தூய்மை அடைகிறது.
- கண் கவர்ந்து பதிய வைத்த தீமைகளை, அதே கண் கொண்டு அகற்றும் திறன் நாம் பெறுகின்றோம்.
- தீமைகள் உட்புகாது தடுக்க முடிகின்றது.
- மன வலிமை, உடல் நலம், தொழில் வளம் பெருகுகின்றது.
- துருவ நட்சத்திரத்தின் பேரருள், பேரொளி உணர்வுகள் நமக்குள் புயலென பெருகி, ஜீவ அணுக்களாகி, மற்ற தீய உணர்வுகளை வெளியேற்றி, இரத்த நாளங்களில் ஜீவ அணுக்களாகி, துருவ நட்சத்திரத்தின் பேரருள், பேரொளி உணர்வுகள், நமது எலும்புகளுக்குள் (ஊழ்வினையில்) அருள் வித்துகளாகி, நமது உயிராத்மாவின் செயலாக்கமாகி, நம்மை மாற்றிக் கொண்டே இருக்கும்.
- துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின், காந்தப் பாதுகாப்பு வட்டத்திற்குள் செயல்படும் நிலை பெறுவோம்.
- கணவன் மனைவி இணைந்து எடுக்கும் துருவ தியானம், நம் ஆத்மாவை வைரமாக ஜொலிக்க வைத்திடும். பரிணாம வளர்சியான ரிஷி நிலை பெறும் தகுதியை அடைகின்றோம்.
- நமக்கு தீமை புரிபவர்களது உயிரையும் கடவுளாக மதித்து, அந்த உயிரில் தீமை புகாது தடுத்திடும் நிலையை உருவாக்குகின்றோம். அதனால் அவர்களையும் காக்கமுடியும்; அவர்கள் படும் துயரம் நம்முள் புகாமலும் தடுக்கமுடியும்.
- அறியாது சேர்ந்த சாப, பாப, தீய வினைகள் வலு இழந்து விடுகின்றன.
- மெய் பொருள் காணும் திறனும், மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெறுகின்றோம்.
ஒளியின் சரீரம்
- அருள் ஞானிகளைப் பற்றிய உணர்வுகள், நம் சிந்தனைக்குள் இருக்க வேண்டும்.
- ஞான குருவின் உபதேசங்களை நூல்கள் கேசட் மூலம் அறிந்து உணர்ந்து அதை நம் நினைவிற்குள் கொண்டு வர வேண்டும்.
- மகிழ்வான உணர்வுகளை, குருவிற்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
- நம் எண்ணம், சொல், செயல் வெளிப்படும் பொழுது, இவற்றில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் கண்டிப்பாக நுகர்ந்து, ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் முன்னிலைப்படுத்த வேண்டும்.
- மற்றவர்களின் எண்ணங்கள், சொல், செயல்களால் நாம் நுகரும், எத்தகைய உணர்வுகளுக்கும் முன்பாக, துருவ நட்சத்திரத்தின் பேரருள், பேரொளியின் உணர்வுகளை உடனுக்குடன் நுகர்ந்து, அவற்றை உணர்ந்து முன்னிலைப்படுத்த வேண்டும். சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொழுதெல்லாம், இதை செய்துகொள்ள வேண்டும். இதை ஒரு பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.
- நாம் ஒவ்வொருவரும் இரவு தூங்கச் செல்லும் முன், அரை மணி நேரமாவது, துருவ நட்சத்திரத்தை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருள், பேரொளி என் உடல் முழுவதும் படர்ந்து, என் உடலில் உள்ள ஜீவ அணுக்கள், ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை நமக்குள் தியானித்து, இணைக்க வேண்டும்.
- உயிருடன் இணைந்த உணர்வுகளை, குரு காட்டிய வழியில், குருவின் துணை கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றும் சந்தர்ப்பங்களை உணர்ந்து, அதை கூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை சதா முன்நிலைப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும்.
- மருத்துவர் கொடுக்கும் மருந்தினை நாம் கட்டாயமாக்கி உட்கொள்வது போன்று, விஞ்ஞானிகள் உயிரினத்தின் செல்களை இணைக்கும் நிலையில் (இரு உயிரணுக்களை) கட்டாயப்படுத்தி, ஓர் புது ரூபத்தை மாற்றி உற்பத்தி செய்வதுபோல், கட்டாயப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை இணைக்க வேண்டும்.
- துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை, நாம் கவர்ந்து, நமக்குள் ஒளி சுடராக மாற்றும் நிலையைத்தான், நமது இன்றைய செயல்களாக அமைத்து, நாளைய சரீரமாக நமது உயிராத்மாவை ஒளி சரீரம் பெறச் செய்ய வேண்டும்.