1. பிறருடைய தோஷங்களை நீக்கும் வழி
விஞ்ஞான அறிவு கண்டதைக் காட்டிலும், மெய்ஞானிகள் கண்டுணர்ந்தவைகள் ஏராளம். இவைகளையெல்லாம் விஞ்ஞானிகள் கண்டறிய வெகு காலமாகும். இப்படிப் பல உண்மைகளின் நிலையை மக்களுக்கு உணர்த்தும் நிலையாகத்தான், ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்.
ஆலயங்களில் தெய்வச் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்படும் பொழுது, நல்ல உணர்வுகளை நமக்குள் நுகர்ந்து,
பாலைப் போல மணம் பெறவேண்டும்,
மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்,
கனியைப் போன்ற சுவையான சொல்லைப் பெறவேண்டும்,
பன்னீரைப் போன்ற தெளிந்த மணம் பெறவேண்டும்,
என் குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்,
இந்த ஆலயம் வருவோரெல்லாம் நல் உணர்வுகள் பெறவேண்டும்
என்று நம்மை எண்ணும்படி செய்தனர் ஞானிகள்.
ஞானிகள் சொன்ன முறைப்படி நாம் இவ்வாறு எண்ணும் பொழுது, நமக்குள் என்ன செய்கின்றது நியூட்ரான்? நம்மிடத்திலிருந்து கவலை, சஞ்சலங்களை எல்லாம் மாற்றுகின்றது. எனென்றால், அதிர்ச்சி கொண்டு உள் செலுத்துவது ஒருவிதம். ஆனால், ஆலயங்களில் அமைதி கொண்டு நல் உணர்வுகளை நமக்குள் செலுத்தும்படி செய்தனர், ஞானிகள்.
அனைவரின் உணர்வுகளும் நமக்குள் இருக்கின்றது. பயந்திருப்போம், வெறுப்படைந்திருப்போம், கோபப்பட்டிருப்போம், ஆத்திரப்பட்டிருப்போம், வேதனையைக் கேட்டறிந்திருப்போம். இப்படி, இத்தனை உணர்வுகளும் நமக்குள் இருக்கும்.
ஆகையால், இந்த ஆலயம் வருவோரெல்லாம் மலரைப் போன்ற மணம் பெறவேண்டும், மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்றும் இந்த ஆலயத்திற்கு வரும் குடும்பமெல்லாம் பெறவேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் உள்ளோர் அனைவரும், இந்த நிலை பெறவேண்டும் என்று என்ணி, நமக்குள் கேட்டறிந்த, பிறருடைய தோஷங்களை நீக்க வேண்டும்.
அப்படி நீக்க வேண்டுமென்றால்,
துருவ நட்சத்திரத்தின் உணர்வின் உணர்ச்சிகளை
நமது உடலில் சேர்த்து, மகிழ்ச்சியாக்க வேண்டும்.
நாம் பண்பும் பரிவும் கொண்டு செயல்படுவோம். ஒருவர் தவறு செய்வதைப் பார்த்து, “அவர் தவறு செய்கிறார், தவறு செய்கிறார்” என்று சொல்லப்படும் பொழுது, கடைசியில் அவரைக் காட்டிலும் பன்மடங்கு தவறு செய்யத் தொடங்குவோம். யார் செய்தது?
தவறு செய்பவரின் உணர்வை நுகர்ந்தோம்.
தவறின் நிலையைத் துடைக்க மறந்தோம்.
அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் வருகின்றது.
ஆகவே, இப்படி நம்மை அறியாமல் வரும் தீமைகளைத் துடைக்கும் நிலையாகத்தான் ஞானிகள் ஆலயங்களை அமைத்து, நம்மைப் பரிசுத்தமாக்க வைத்தார்கள். ஆகவே, நாம் அனைவரும் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்வோம், எமது அருளாசிகள்.
2. கருப்பணசாமி
கருப்பணசாமிக்கு, மோப்ப நாயை வைத்திருக்கின்றார்கள். காரணம்
ஒருவர் நம்மைப் பார்த்து, பழி தீர்ப்பேன் என்று
சொன்ன உணர்வை நுகர்ந்தபின்,
நமக்குள் என்னவாகின்றது?
நமக்குள் இருள் சூழுகின்றது. வேதனை பெருகுகின்றது.
ஓம் நம சிவாய, சிவாய நம ஓம் எனும் நிலையாக, அவர் நம்மைப் பழி தீர்ப்பதற்கு முன்னால், நாம் அவரைப் பழி தீர்க்க வேண்டும், வெட்ட வேண்டும், குத்த வேண்டும் என்ற நிலை வருகின்றது. சிந்தித்துச் செயல்படும் நிலை இல்லை. இதனின் உணர்வின் தன்மை உடலில் விளைகின்றது.
கருப்பணசாமியின் கையில் அரிவாளையும் கொடுத்து, மோப்ப நாயையும் கொடுத்திருக்கிறார்கள். கருப்பணசாமிக்கு என்ன செய்கிறோம்? ஆட்டை வாங்கி உனக்குக் கொடுக்கிறேன். படையல் செய்கிறேன், என்னைக் காப்பாற்று என்று சொல்லி வணங்குகின்றார்கள்.
ஆட்டை அறுத்துக் கொலை பண்ணி சாப்பிட்டு, மிச்சத்தைக் கருப்பணசாமிக்குக் கொடுத்தால், கருப்பணசாமி என்னைக் காப்பாற்றுவான், என் மகனைக் காப்பாற்றுவான், என்று இருக்கின்றார்கள்.
இப்படி ஆட்டைப் பலி கொடுத்து வணங்கினால் என்னவாகும்? இது சமயம், நாம் நுகர்ந்த உணர்வுகள் நமது உடலில் "நல்ல குணங்களைக் கொல்லுகின்றது".
இது என்ன செய்யும் என்றால்,
நாம் தீமையின் நிலைகள் கொண்டு,
பிறரிடம் இதே செயலைச் செயல்படுத்தச் செய்யும்.
புற வாழ்க்கையில் இப்படி என்றால், நமது அக வாழ்க்கையில் நமது நல்ல குணங்களைக் கொல்லுகின்றது. இதற்காகத் தான் கருப்பணசாமியை முச்சந்ததியில் வைத்தார்கள்.
சாலையில் சென்று நடந்து கொண்டிருக்கும் பொழுது, யாராவது சைக்கிளில் வந்து மோதி விட்டால், நமது உணர்வுகள் இருள் சூழ்ந்துவிடுகின்றது. “அடித்துவிடுவேன், உதைத்து விடுவேன்” என்று சந்தர்ப்பம் இப்படி ஆகின்றது.
ஆனால், “சாலையில் கவனமாக வண்டி ஓட்டு” என்று கூறினால், சாந்தமும் அமைதியும் அங்கே நிலவும். அதை விடுத்து, சைக்கிளில் வந்து மோதியவன் சிறுவனாக இருந்தால், “பளார் பளார்” என்று நான்கு அறை விடுவோம்.
இதை உணர்த்தத்தான் கருப்பணசாமி சிலை வைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏதாவது ஒன்று என்றால் தாக்குவதுதான்.
ஆனால், இது போன்ற சந்தர்ப்பங்களில், நாம் என்ன செய்யவேண்டும்? துருவ நட்சத்திரத்தை நாம் எண்ணி, அந்த அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொண்டு, பின், அவர் அறியாமையிலிருந்து விடுபட்டு, பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா, என்று எங்கி தியானிக்க வேண்டும்.
ஏனென்றால், துருவ நட்சத்திரம் நஞ்சை வென்றது. உணர்வின் தன்மையை ஒளியாக்கும் திறன் பெற்றது. துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நுகர்வதால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம் உயிரில் பட்டு, இதனின் உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலக்கும் பொழுது, அரங்கநாதன்.
இதனின் உணர்வின் உணர்ச்சிகளை, ஒளி அலைகளாக மாற்றுகின்றது. துருவ நட்சத்திரம், இருண்ட உலகிலிருந்து நம்மை மீட்கின்றது.
நமக்குள் சிந்திக்கும் தன்மை வருகின்றது.
அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
3. இன்றைய பக்தி நிலை -- ஞானிகள் காட்டிய "மெய்வழி"(நாம் செல்ல வேண்டிய வழி)
பழனி கோவிலுக்குச் சென்றால் அங்கே, “இது அபிஷேக விபூதி” என்று ஏமாற்றுகின்றார்கள். "விபூதி" அபிஷேகத்திற்கு போகவில்லை என்று தெரிகின்றது.ஆனாலும், பரவாயில்லை பழனியாண்டவர் சன்னதிக்கு வந்து விட்டோம் என்று, விளம்பரத்தைப் பார்த்து வாங்குகின்றோம்.
பழனில் முருகனின் அருளைப் பெறலாம் என்று வருபவர்களை ஏமாற்றிக் கொண்டுதான் உள்ளார்கள். நாம் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றோம்.
நாம் முருகன் ஆலயத்தில், நேரடியாகச் சென்று வணங்க தடை ஏதும் இல்லை. ஆனால், பழனி ஆலயத்திற்குச் சென்று, தன் கண் திருஷ்டி தீரவேண்டும் என்று, சிதறு தேங்காய் போடுவார்கள். இதில், சிதறு தேங்காய் எடுக்கும் உரிமை பெற்ற காண்ட்ராக்டர்கள் என்ன செய்வார்கள்?
தேங்காய் உடைக்க வருபவர்களிடம், இங்கேதான் உடைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில், வேறு ஒரு இடத்தில் உடைத்தால், வேறு காண்ட்ராக்டருக்குத்தான் போகும் என்று, அப்படிச் சொல்கின்றார்கள்.
சிதறு தேங்காய் உடைக்க வருபவர்கள், “நான் சாமிக்கு முன்னாடிதான் உடைப்பேன்” என்று சொன்னால் கூட, இந்தக் காண்ட்ராக்டர்கள் விடுவதில்லை. அவரை மறித்து, “இங்கே தேங்காயை உடை” என்று கட்டாயப்படுத்துவார்கள்.
“நம்மை தெய்வம் காக்கும்” என்று நினைக்கின்றோம் அல்லவா!
நாம் தெய்வத்தை வணங்கி வந்தோம் அல்லவா!
அந்த தெய்வம், இங்கே அவர்களுக்கு
நல்ல வழியைக் காட்ட வேண்டும் அல்லவா?
ஆசையின் நிலைகொண்டுதான் இதையெல்லாம் செய்கின்றனர்.
இதைத்தான், இராமாயணத்தில் என்ன சொல்கின்றார்கள்? வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்கு பிரம்மகுரு, என்று அதில் உணர்த்தியுள்ளார்கள்.
நாம் என்ன செய்கிறோம்? சிதறு தேங்காய் போட்டால், கடவுள் நமக்கு நல்லது செய்வார் என்று நம்புகின்றோம். அப்பொழுது, இது வசியம். அதைக் கவர்ந்து கொள்ளுகின்றோம்.
நுகர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் பிரம்மமாகின்றது.
நாம் எண்ணிய எண்ணம் அருந்ததி,
நமக்குள் பதிவாகி விடுகின்றது.
எப்படியும், கஷ்டப்பட்டாவது செய்தால்தான் நன்றாக இருக்கும். செய்யவில்லை என்றால், சாமி கோபித்துக் கொள்ளும் என்ற நிலைகளில் தான் போகின்றார்கள்.
சிதறு தேங்காயைப் போட்டால், காண்ட்ராக்டர் எடுத்து விற்றுக் கொள்கிறார். இதே போன்று, பக்தர்கள் கோவிலுக்கு சேவலையும் நேர்த்திக்கடனாகக் கொண்டு போய் விடுகின்றார்கள். கோவிலில் கொண்டு போய் கோழியையோ, சேவலையோ விட்டால், அவைகள் பத்து நாளைக்கு பட்டினி இருக்கும்.
“சேவற்கொடியோனே” என்று சொன்னால், நாளை வரக்கூடிய நிலைகளை, தெரிந்து கொள்ளும் சக்தி பெற்றது. ஆறாவது அறிவு.
இதற்குத்தான், முருகனை “சேவற்கொடியோனே” என்று ஞானிகள் அழைத்தார்கள். காலையில் சேவல் கூவுகின்றது. விடியப் போவதைக் காட்டுகின்றது. இதைப்போன்று, ஆறாவது அறிவு பெற்றவர்கள், உண்மையின் உணர்வை அறியக்கூடியவர் என்று, “சேவற்கொடியோனே” என்ற தத்துவத்தைக் கொடுத்தார்கள்.
ஆனால், சேவலை நேர்த்திக்கடன் கொடுக்கிறேன் என்று சொல்லி, தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, காண்ட்ராக்டர் எடுத்துச் சென்று, சேவல் கொல்லப்படும் வரையிலும், அது இரண வேதனை அடைகின்றது.
சேவலை சாமிக்கு அர்ப்பணித்து, காண்ட்ராக்டர் கையில் கொண்டு போய்க் கொடுத்து, சேவலைப் பத்து நாளைக்கு பட்டினியாகப் போடும்பொழுது, சேவல் இவருடைய உணர்வை நினைத்தால், சேவலின் ஜீவன் என்ன பண்ணும்? “பாவி, என்னைப் பட்டினி போட்டுக் கொல்கிறானே? என்று எண்ணும்.
சேவல்களை ஏலம் போடுவதற்கு முன்னால், அவைகள் படும் அவஸ்தையைப் பார்த்தால், நமக்கு மிகவும் வேதனையாக இருக்கும். சேவலை முருகனுக்கு வேண்டி, சும்மா பறக்க விட்டு விட்டுச் சென்றால் கூட, யாராவது பிடித்துக் கொண்டு சென்று விடுவார்கள். தொந்தரவு இல்லை.
சேவல் கொடி கட்டியிருக்கும் இடத்திலேயே, சேவலைப் போட வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
நம்முடைய ஆசையின் நிமித்தம்
நம்முடைய அறிவை இழந்து, என்ன செய்கின்றோம்?
அருள் ஒளியை நமக்குள் கூட்டி,
இருளை நீக்கி உண்மையின் உணர்வை ஊட்டும்,
நமது ஆறாவது அறிவைத் தெளிவாக்கும் ஞானஸ்தானத்தையே, சூனியமாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
மனிதரை அறியாமையிலிருந்து விடுபடச் செய்து, உண்மையை அறிந்துணர்ந்து, தெளிந்து வாழச் செய்யும் நிலைக்கே ஆலயங்கள் ஞானிகளால் உருவாக்கப்பட்டன.
ஆகவே, இதனின் உண்மைளை அறிந்த நாம் ஆலயங்களுக்குச் சென்று வணங்கும் பொழுது, கனியின் சுவையின் இனிமை, என் சொல்லிலும், செயலிலும் நான் பெற வேண்டும், மலரைப் போன்ற மணம் நாம் பெற வேண்டும், என்று எண்ண வேண்டும்.
தெய்வச் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க நகைகளைக் காணும் பொழுது, “தங்கம் போன்று மனம் மங்காத நிலை” நாங்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
இந்த ஆலயம் வருவோர் அனைவரும், இதன் நிலைகள் பெறவேண்டும். இந்த ஆலயம் வருவோர் அனைவரது குடும்பங்களிலும், அருள் சக்தி படரவேண்டும். அவர்களது குடும்பங்களில் உள்ள அனைவரும் தெளிந்த ஞானமும், மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும், என்று எண்ணுதல் வேண்டும்.
இதன் நிலைகள் கொண்டு, நம்முள்ளும் அருள் ஞான சக்தி பெருகுகின்றது. நமது வாழ்க்கையும், அருள் ஞான வாழ்க்கையாக அமைகின்றது.
ஆலயங்களுக்குச் சென்றால், இப்படித்தான் ஞானிகள் காட்டிய வழியில் எண்ண வேண்டும். எமது அருளாசிகள்.