1. ஞானகுரு - குருநாதரை முதலில் சந்தித்த சந்தரப்பம்
நமது குருநாதரை யாம்
சந்தித்தது, எதிர்பாராத சந்தர்ப்பம், எவ்வளவோ நாட்கள், நமது குருநாதரை, அவர் யார் என்றே தெரியாது.
இருந்தாலும்,
அடிக்கடி பல சந்தர்ப்பங்களில் என்னைச் சந்தித்துள்ளார்.
அவரை நான் பித்தன் என்றேதான் எண்ணியிருந்தேன். எதைச் சொன்னாலும்,
அவரிடம் வெறுப்பு கொண்டு, ஒதுங்கிச் செல்வதுதான். எனது வழக்கமாக இருந்தது.
சந்தர்ப்பவசத்தால் என் மனைவி நோய்வாய்ப்பட்டு, அதனால் அவர் வைத்தியத்திலேயும்,
மீளமுடியாத நிலை ஏற்பட்ட, இந்த சந்தர்ப்ப நிகழ்ச்சியிலேதான், எமது குருநாதர் என்னை
அணுகினார். அப்படி ரொம்பவும் நெருக்கமாக வரும்போது, அவரைப் பித்தன் என்ற நிலைகளில்
நான் ஒதுங்கிச் சென்றேன்
அப்படி ஒதுங்கிச் சென்றாலும்கூட, அதுசமயம் எனது மனைவி, இன்றோ,
நாளையோ என்ற நிலைகொண்டு இருக்கின்றது, என் மனைவியின் தகப்பானாருக்கு, ஒரே பெண் குழந்தையாக
இருந்ததால், உடல் நிலை மோசமாக இருக்கின்றது என்ற ஏக்கத்தில், அவருடைய உடலைவிட்டு ஜீவன்
பிரிந்தது. மாமனாரின் உடலை அடக்கம் செய்துவிட்டு வந்தபின், குருநாதர் என்னை அணுகி,
ரொம்பவும் அசிங்கமான பேச்சுக்களைப் பேசி, நீ “டீ” குடி என்று மிகவும் நிர்பந்தப்படுத்திக்
கொண்டிருந்தார்.
நான் அதைக் குடிக்க மறுத்தவுடன், அவருடைய பேச்சும், ஏச்சும்
மிகவும் கடினமாகவும், செவி கொண்டு கேட்க முடியாத வார்த்தைகள் கொண்டே என்னை ஏசிப் பேசினார்,
இருந்தாலும், அவரிடமிருந்து விலகிச் செல்வதற்கு முயற்சி எடுத்தேன் முடியவில்லை,
நீ “டீ” குடித்தால்தான், நீ இதைவிட்டு நகர முடியும் என்று சொன்னார்.
அதன் அடிப்படையில்தான், நான் “டீ” கடைக்குச் சென்று “டீ” குடித்துவிட்டால்
அவர் விலகிச் சென்று விடுவார், இந்த எண்ணத்தில் அவர் கொடுத்த “டீ”யை வாங்கிக் குடித்தேன்.
இன்று நீ “டீ” குடித்தாலும், உன்னை நான் விடமாட்டேன் என்று,
மிகவும் கடினமான நிலைகளில் மீண்டும் பேசத் தொடங்கினார்.
பின் “டீ” குடித்தபின், அவரை எப்படியும் ஊரை விட்டு, எல்லை கடந்து
அனுப்பிவிட்டு வந்துவிடலாம் என்று எண்ணி இருந்தேன். ஏனென்றால், மாமனார் அவர் இறந்த
காலத்தில் எல்லோரும் வந்து குழுமி இருந்தார்கள்.
இதை அவர்களும் பார்த்து, என்னை ஏசிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே, இவரை எப்படியும் கடத்தி ஊருக்கு அப்பால் கொண்டுபோய், விட்டுவிட்டு வரலாம் என்று,
நான் அழைத்துச் சென்றேன்.
2. என் மனைவியைக் காப்பாற்றினார்
அங்கே (பழனியில்) பழனிக்கு பக்கம், பெரிய நாயகி அம்மன் கோவில்
ஒன்று உண்டு. அதன் கீழ் தெப்பக்குளம் ஒன்று உண்டு. அந்த தெப்பக்குளத்திற்குள் என்னை
அழைத்துச் சென்றார்.
நான் விலகிச் செல்லலாம் என்று எண்ணும்போது, அந்த தெப்பக்குளத்திற்குள்
என்னை அழைத்துச் சென்று, அப்பொழுது
என் வாழ்க்கைச் சரித்திரங்கள் அனைத்தையும் சொல்லி, நான் பிறந்ததில் இருந்து, அவரைச்
சந்திக்கும் வரையிலும் இருந்த நிலைகளைச் சொல்லிவிட்டு, மனைவியினுடைய நிலைகளை அனைத்தையும்
சொல்லிக் கொண்டே வந்தார். அப்படி அவர் சொல்லும்போதுதான், அவர் “பைத்தியம் இல்லை”
என்ற நிலையை நான் உணர முடிந்ததது.
அதன் பின், பெரும் உண்மைகள் பலவற்றைச் சொன்னபின், விபூதியையும்
எலுமிச்சம் பழத்தையும் கொடுத்து, இதைக் கொண்டு சென்று, “உன் மனைவிக்குக் கொடு, எழுந்து
நடப்பார்” என்று சொன்னார்.
ஏனென்றால், ஆஸ்பத்திரியிலேயே முடியாது என்று வந்த இந்த நிலையை,
இடுப்பிற்கு கீழ் ஒரு விரலும் அசையவில்லை. இன்றோ, நாளையோ என்று மிகவும் கடினமாக நிலைகளில்
இருக்கப்படும்போது,
அவர் சொன்ன மாதிரியே
செய்தேன். என் மனைவி எழுந்து, ஒரு மாதத்திற்குள் நடக்க ஆரம்பித்துவிட்டார். குருநாதரிடம் இந்த நற்செய்தியைச்
சொல்லலாம் என்று, தேடிச் சென்றபோது, அவரைக் காண முடியவில்லை.
பின் திடீர் என்று, எப்படியும் சொல்லியாக வேண்டும் என்ற மகிழ்ச்சியோடு
இருக்கப்படும்போது,
திடீரென்று “என்னை நீ தேடினாயா”, என்று
முதுகு பக்கமாக இருந்து,
குருநாதர் எம்மைத் தட்டினார்.
எப்படி வந்தார், என்ன
செய்தார்? என்றே எனக்கு தெரியாது.
அவர் தட்டி எழுப்பியபின், நான் திடீர் என்று உணர்ச்சிவசப்பட்டு,
“உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன், தேடினேன் காணவில்லை” என்று சொன்னேன்.
இப்பொழுது உன் மனைவி ”நன்றாக இருக்கிறாளா?” என்று கேட்டார்.
“நலமாக இருக்கிறார்” என்று சொன்னேன். “ஆனால் வீட்டிற்கு வரவில்லை”
வெளியில் இருந்துதான் இது நடக்கின்றது.
3. என்னை நம்புகின்றாயா? என்று கேட்டார் குருநாதர்
“அப்பொழுது நான் சொல்கின்றதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.
“என்னை நீ நம்புகிறாயா” என்று கேட்டார்.
“நம்புகிறேன்” என்று நான் சொன்னேன்.
“நான் சொல்வதைக் கேட்கின்றாயா?“ என்று கேட்டார்.
“கேட்கின்றேன்” என்று சொன்னேன்.
இதில் நீ மாறமாட்டாய், இல்லையா? என்று கேட்டார்.
“மாறமாட்டேன்” என்று சொன்னேன்.
4. கடவுள் என்றால் யார்? என்று கேட்டார்.
அதன்பின் அவர் என்னை பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு அழைத்துச்
சென்றார். அழைத்துச் சென்றபின், அந்த பெரிய நாயகி அம்மனை வணங்கச் செய்தார். அதன்பின்,
கிரிவலம் வந்தோம்.
அங்கே “தட்சிணாமூர்த்தி” சிலை இருக்கின்றது. இந்தச் சிலை எதற்காக
வைத்திருக்கிறார்கள்? என்று கேட்டார்.
எனக்குத் தெரியவில்லை என்று சொன்னேன்.
இப்படி ஒவ்வொரு சிலையையும் காட்டி, “இந்தச் சிலையின் உட்பொருள்
என்ன? என்று எல்லாவற்றையும் காட்டிவிட்டு, “துர்க்கை” என்ற சிலை உண்டு. அந்தச் சிலைக்கு
பக்கம் அழைத்து வந்தார். “இதனுடைய பொருள் என்ன?” என்று கேட்டார்.
“தெரியவில்லை” என்று சொன்னேன்.
எதைக் கேட்டாலும் தெரியவில்லை என்று சொல்கின்றாய் என்று கேட்டுவிட்டு,
அதன்பின் வெளிய வந்தபின், இங்கே உன் பெயரை வைத்து “வேணுகோபால விநாயகர்” என்று ஒன்று உண்டு.
உனக்குத் தெரியுமா? என்றார்.
எனக்குத் தெரியாது என்றேன்.
அங்கே அழைத்துச் சென்றார். அழைத்துச் சென்றபின், அந்தச் சிலைமீது ஏறி
உட்கார்ந்து கொண்டு, இதனுடைய “உட்பொருள்” என்ன? என்று கேட்டார்.
“தெரியாது என்று சொன்னேன்”. இதை மீறிப் பேசினால் பேசுவார், என்றே
விலகி இருந்தேன்.
அப்புறம் அப்படியே தொடர்ந்து வரப்படும்போது, இதனுடைய நிலைகளை
ஒவ்வொரு சிலையையும் காட்டியபின்,
எறும்புக்கு யார் சோறு போடுவது?,
புழுவிற்கு யார் சோறு போடுவது?,
குருவிக்கு யார் சோறு போடுவது?
இங்கே இவர்களுக்கெல்லாம், யார் சோறு போடுகின்றார்கள்? எப்படி?
என்ற நிலைகளிலே குருநாதர் என்னைக் கேட்டுக் கொண்டே வந்தார்.
எல்லாம் கடவுள் போடுகின்றார் என்றே சொல்லிக் கொண்டு இருந்தேன்.
“கடவுள் என்றால் யார்? என்று கேள்வி கேட்டார்.
எனக்குத் தெரியாது என்றேன். நான் பார்க்கவில்லை என்றேன்.
பார்க்காதபடி, கடவுள் என்று எப்படி நீ சொல்லலாம்? என்று கேள்வி
கேட்டார்.
5. நான் படிக்கவில்லையே, என்று சொன்னேன்.
இப்படி விதண்டவாதங்கள் நடந்து, ஓரளவிற்கு எல்லாம் சுற்றி வந்தபின்,
அந்த மனிதருடய எண்ணங்கள் எவ்வாறு செல்லுகின்றது என்ற நிலையைக் காட்டினார்.
அது ஒவ்வொன்றையும் சொல்லி ஒரு நிலைப்படுத்தி,
பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?
பிரபஞ்சத்திற்குள் பூமி எப்படித் தோன்றியது?
பூமிக்குள் உயிரணு எப்படித் தோன்றியது?
பூமிக்குள் தாவர இனங்கள் எப்படித் தோன்றியது? என்று வினாக்களை
எழுப்பிக் கொண்டே வந்தார்.
தெரியாது, தெரியாது என்று சொல்லிக்கொண்டே இருந்தேன்.
தெரியாது என்று சொல்கிறபோதெல்லாம்,
ஒவ்வொரு அடி கிடைக்கும்.
அடி கொடுத்துக் கொண்டே
இருந்தார்.
தெரியாது என்றால், நீ எதற்குக் கேட்கிறாய்? என்றார்.
நான் தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன், என்று சொன்னேன்.
தெரிந்து கொண்டபின்,
அடுத்து நீ என்ன சொல்லப் போகின்றாய்? என்ன செய்யப் போகின்றாய்? இப்படியே கேட்டுக்
கொண்டே, என்னைப் பைத்தியக்காரத்தனமாக அடித்துக் கொண்டே இருந்தார்.
இதற்குப்பின், சூரியன் எப்படி அது உண்டானது?
அந்த பிரபஞ்சத்திற்குள் எப்படி ஒரு உயிரணு உருவாகியது?
அந்த உயிரணு உருவாகிய பின் என்ன செய்தது?
அரசர்கள் நான்தான் என்ற நிலைகளில், எப்படி இருந்தார்கள்?
அரசர்கள் பல மந்திரங்களை ஏன் செய்தார்கள்?,
அரசர்கள் ஏன் கோவில்களைக் கட்டினார்கள்?
ஞானிகள் எப்படி உண்மையினுடைய நிலைகளை உணர்ந்தார்கள்?
ஞானிகள் சொன்னதை அரசர்கள் எப்படி தன்வசப்படுத்திக் கொண்டார்கள்?
என்றெல்லாம் குருநாதர் வினாக்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்.
எனக்கு ஒன்றும் தெரியாது
சாமி, நான் படிக்கவில்லையே,
என்று சொன்னேன்.
நீ புத்தகத்தைப் படிக்காததால்தான்
உன்னிடம் கேட்கிறேன்.. படித்திருந்தால், நீ என்னிடம் விதண்டவாதம் பேசுவாய், என்று சொன்னார் குருநாதர்..
குருநாதர் இப்படி, அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தார், எனக்கு
ஒன்றும் புலப்படவில்லை. இல்லையென்றால், கொச்சையான வார்த்தைகளால் பேசிக்கொண்டே இருந்தார்.
6. இந்த உடலுக்குப்பின் எங்கே செல்லவேண்டும் என்று
உணர்த்தினார் குருநாதர்
பிறகு, பேரண்டம் இருண்ட நிலைகளில் இருந்தது.
அந்த இருண்ட நிலைகள் என்பது, விஷமான சக்தி கொண்டது.
அந்த விஷமான சக்தி கொண்டு, அணுக்கள் எப்படி உண்டானது?
அந்த அணுக்களின் தன்மை, அணுக்கள் ஒன்றாகச் சேர்த்து, எப்படி
ஒரு கோளாக, ஒரு பரம்பொருளாக உண்டானது?
அதாவது பல அணுக்கள் சேர்ந்து, எல்லையே இல்லாத இந்த உலகின் பேரண்டத்தில்
அது எல்லையாக ஒரு சிறு பொருள் எப்படி உண்டானது? அதற்கு பெயர் “பரம்பொருள்” என்றும்,
அந்த பரம்பொருள் தன் சுழற்சியின் நிலைகளில், “தான் வளர்ந்தது எப்படி?” என்று அதைக்
காட்டினார்.
அது வளர்ந்தபின் அது கோளாக மாறி, அந்தக் கோளின் தன்மை, அது எப்படி
நட்சத்திரமாக மாறியது? நட்சத்திரமாக மாறியபின், சூரியனாக எப்படி மாறியது?
சூரியனாக மாறியபின், அதனின்று வெளிப்படும் அணுக்கள் அது எப்படி
சூரியனின் அணுக்களின் தன்மை சேர்க்கை ஆனதோ, அந்த சேர்க்கையின் நிலைகள் கொண்டு, கோள்கள்
மீண்டும் உருவாகி, அந்தக் கோள்கள் நட்சத்திரமாகி, ஆக, ஒரு பிரபஞ்சம் என்ற நிலைகள் அடைந்தது
என்று சொன்னார்.
அப்படி பிரபஞ்சம் என்ற நிலைகள் அடைந்து, அதற்குள் ஒரு உயிரணு
தோன்றி, தாவர இனங்கள் பூமியின் நிலைகள் பெற்று, பூமிக்குள், அது தாவர இனங்கள் உற்பத்தியாகி,
அந்த தாவர இன மணத்தை ஒரு உயிரணுதான் சுவாசித்து, அது உடல் பெற்று அதன் நிலைகள் கொண்டு
இந்த உயிரணு, பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து மனிதனானது என்று விளக்கினார்.
சூரியன் தன் உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து, மற்ற கோள்களை
உருவாக்கி, அந்த உருவாக்கிய நிலைகள் கொண்டு, ஒரு பிரபஞ்சத்தை உருவாக்குகின்றது.
இதைப்போன்றே, ஒரு உயிரணு தோன்றி,
புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றி, மனிதனானபின்
அந்த மனிதனுடைய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி,
இன்று துருவத்தை அடைந்து,
துருவ மாகரிஷியாகி, துருவ நட்சத்திரமாகி,
அதனின்று வெளிப்படும் உணர்வுகளை, தான் சுவாசித்து,
அதனின் நிலைகள் கொண்டு
சப்தரிஷி மண்டலங்களாக
அமைந்து,
இன்று எப்படி சுழன்று
கொண்டிருக்கிறார்கள்
என்ற நிலையை உணர்த்தினார்.
7. எப்படி சக்தியைப் பெறவேண்டும் என்று உணர்த்தினார்
அப்படி உணர்த்தியபின், இதையெல்லாம் நீ காணுவது எப்போது? இதை
நீ எப்போது காணப்போகின்றாய்? எதை நீ அடையப் போகின்றாய், என்ற இப்படி வினாக்களை எழுப்பிக்
கொண்டே, சொல்லிக்கொண்டே வந்தார், குருநாதர்.
இதை, ஒவ்வொன்றும் குருநாதர் சொல்லிக்கொண்டு வரப்படும் பொழுது,
இதையெல்லாம் நான்
என்றைக்குப் பார்க்கப் போகின்றேன்? நான் கடும் தவம் இருக்க முடியாதே.
நான் குழந்தை குட்டியோடு இருக்கின்றேன். இன்றைக்கு மனைவி எழுந்து
வந்திருக்கின்றது. அதற்கு ஏதாவது தொழில் செய்தால் தான், நன்றாக இருக்கும். தொழில் செய்தால்தான்,
சாப்பாட்டுக்குக் கொடுக்க முடியும் என்று சொல்லிக் கொண்டே வந்தேன். அவர் இடைமறிக்கவில்லை.
இதையெல்லாம் நான் பார்ப்பதற்குத்
திறன் இல்லை.
எனக்கு இந்த ஆயுள் பத்தாது
என்று சொன்னேன்.
ஆயுள் பத்தாது என்ற நிலைக்கு நீ சொல்ல வேண்டியதில்லை, நான் அல்லவா
சொல்ல வேண்டும், என்று திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டு வந்தார்.
ஒருவர் திட்டினால் மட்டும்,
நீ கூர்ந்து கவனித்து, “இருடா, நான் பார்க்கின்றேன் என்று சண்டைக்குப் போகத்
தெரிகின்றது. அவனை நீ நினைக்கும்போதெல்லாம், எப்படி உன் உடல் பதறுகின்றது?
அதே மாதிரி நான் சொல்வதை
நீ கேட்டுக்கொண்டே வா.
நீ அதைப் பெற வேண்டும்
என்று எண்ணிக்கொண்டே வா.
அந்த சக்தி உனக்குள்
ஆழமாகப் பதியும்.
அதை நீ திரும்ப எண்ணும்போது, உனக்குள் எப்படி சக்தி கிடைக்கிறது
என்பதை மட்டும், நீ தட்டாது கேட்டுக் கொண்டே வா என்று இதைச் சொன்னார்.
இதைத்தான், அன்று “கடவுளின் அவதாரம் பத்து” என்ற நிலைகளைச் சொல்லி,
அந்த கடவுளின் அவதாரம் என்றால், இவர்கள் சொல்கிற மாதிரி, கடவுள் எத்தனையோ அவதாரங்கள்
எடுத்தார் என்ற நிலையைச் சொல்வதற்கு பதில்,
நமது உயிரைக் கடவுளாக வைத்து
நாம் புழுவிலிருந்து அவதார நிலைகள் பெற்று
இந்த உணர்வனைத்தையும் ஒளியாக மாற்றி
இந்த உயிர் “கல்கியாக
எப்படி சென்றடைந்து
என்று தெளிவாகச் சொன்னார்.