Thursday, November 1, 2012

தியானவழி அன்பர்களின் அனுபவம்


1. “சாமிகள் உபதேசத்தைஎழுத்து வடிவில் எழுதும் பொழுது, மதுரை அன்பர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம்
(23.10.2012)
நான் பல வருடங்களுக்கு முன்பே, என்னுடைய சிறிய வயதில் சாமிகளைச் சந்தித்திருக்கின்றேன். இப்பொழுது, சுமார் பத்து மாதங்களாகத் தான், தியானத்தை ஓரே சீராகக் கடைப்பிடித்து வருகின்றேன்.

நம் சாமிகளின் உபதேசத்தை, தினசரி, அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பேன். அதில் சாமிகள் முக்கியமாகச் சொல்லும்பொழுது, அதை அப்படியே, உடனடியாக ஒரு நோட்டில் எழுதிவிடுவேன்.

சாமிகள் உபதேசங்களில், ஒரு இரண்டு மணி நேர உபதேசத்தை அப்படியே எழுத்து வடிவில் எழுதசிறிது நாட்களுக்கு முன்ஒரு வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ச்சியாக, அதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே, உற்சாகம் ஊட்டக்கூடிய, பல பேரானந்தமான உணர்வுகள் என்னையறியாமலேயே, எனக்குள் வந்து கொண்டே இருந்தது.

ஆரம்பத்தில் சாமிகள் பழனியில் இருக்கும் பொழுது, பல பேருண்மையின் உணர்வுகளை, குருதேவர் அனுபவபூர்வமாக சாமிகளுக்கு (ஐவர் மலையில்) உணர்த்தியுள்ளார். அந்த அனுபவங்களை, ஒரு ஒன்றரை மணி நேரம் சிதம்பரத்தில் பேசியுள்ளார். அதை நான் பல முறை கேட்டுவிட்டேன். மேலும், நான் எழுதிக் கொண்டிருந்தது, சாமிகள் சிதம்பரத்தில் வைத்துக் கொடுத்த, அந்த உபதேசங்களைத்தான்.

ஆயுத பூஜை அன்று, (23.10.2012) தியான வழி அன்பர்களுடன் நம் ஞானகுரு அவர்கள்சற்குருவிடம் பெற்ற மற்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. சுமார்எட்டு மணி நேரம் பேசி இருப்போம். அன்று இரவு வீட்டிலும் குடும்பத்தினருடன் ஞானகுருவின் உணர்வுகளைப் பற்றியே பேசினோம். இரவு தூங்கச் செல்லும் பொழுதும்குருவின் உபதேசம் கேட்பது எனக்கு வழக்கம்.

இந்த உணர்வுடனே இரவு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதுஎங்கள் வீட்டில் உள்ள தபோவன சாமிகள் உண்டியலில் இருந்து, வெண்மை நிறத்தில் ஒளி அலைகள் அருவி போன்றுவந்து கொண்டே இருந்தது,

அதில்ஒரு புள்ளி அளவு இருக்கும் ஒளிஎன்னை நோக்கி வந்தது. ஆனால்நான் அதை கவனிக்காமல் மற்ற வேலையில் இருந்தேன். வீட்டில் இருக்கும் விருந்தாளிகளை கவனிக்கும் நிலையாக உபசரிக்கும் பொழுது, ஒரு பாத்திரத்தில் இருந்தும், அருவி போன்று அதே வெண்மையான ஒளி வந்தது. அது மேலும் கீழே பட்டு பந்து போல் எம்பி, என்னை நோக்கி வந்தது

அப்பொழுதுதான், நான் அதை உற்றுப் பார்த்தேன். உற்று  கவனிக்கும் போது, ஈஸ்வராய குருதேவர் காட்சியாகத் தெரிந்தார்.  ஒரு நோட்டில், அவர் ஏதோ  ஹிந்தி, மற்றும் என்னவென்றே தெரியாத பல மொழிகளிலும் எழுதி இருந்தார்.

என்னை அழைத்து,  “நீ கேட்பது கிடைக்கும்இதை அப்படியே எழுது” என்று சொல்லி என் கையைப்பிடித்து எழுதுகின்றார்.

அப்படி அவர் என்னிடம் சொன்னவுடன்எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.  என்  அம்மாவிடம் சொல்லப்  போனேன்அதற்கு குருநாதர், என் கையை இன்னும் இறுக்கமாகப்  பிடித்து, “சொல்லக் கூடாது என்று சொல்லி இருக்கின்றேன்” என்றார்.

அன்று இரவு முழுவதுமே, வார்த்தையால் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சியான உணர்வுகளாகவே இருந்தது. தூங்காமல் தூங்குவது போன்று இருந்தது. அதிகாலையில் எழுந்திருக்கும் பொழுதும், அந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாகவே இருந்தது.


2. அமெரிக்காவில் (நியூ ஜெர்ஸி – HUDSON நதி அருகில்) உள்ள நம் தியானவழி அன்பரின் அனுபவம்
இயற்கையுடன் இயற்கையான ஒரு அனுபவம்
“உங்களை நீங்கள் நம்புங்கள், உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவட்டும்” என்ற நம் ஞானகுருவின் வாக்கின்படி, நாம் எண்ணும் எண்ணம் நம்மையும், நம்மைச் சார்ந்தோரையும், காக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கியது “Sandy” புயல்.

அதாவது, துருவ நட்சத்திரத்தின் பேரருள் துணை கொண்டு, பிரபஞ்சத்திலிருந்து வரும் எத்தகைய நஞ்சினையும் வெல்லக் கூடிய ஆற்றல், இந்த மனிதனுக்குள் உண்டு, என்று ஞானகுரு நமக்களித்த பதிவினை நினைவு கூர்ந்தேன்.
          
29.10.2012 அன்று, காலையிலிருந்து ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெற வேண்டும், என் உடல் முழுவதும் படர வேண்டும், என் ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற்று, நஞ்சினை வென்றிடும் மகரிஷிகளின் உணர்வுகள், பாதுகாப்புக் கவசமாக அமைந்திட ஆத்ம சுத்தி செய்தேன்.

சாயங்காலம், புயலின் வேகம் குறைய வேண்டும் என்று தியானிக்க, உணர்வு தோன்றியது. நல்லுணர்வை வெளிப்படுத்தும், அனவரது உணர்வையும், கூட்டு தியான உணர்வாக எண்ணி, குருவின் அருளால், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்தி, இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் மக்கள் அனைவரும், எல்லா நலமும், வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, உணர்வின் ஒளியை எழுப்பினேன்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெறுவோம்; என்றும் பிறவா நிலை என்னும் அழியா ஒளி நிலை பெற தியானிப்போம்; துருவ நட்சத்தின் பேரருள் பேரொளி, உலக மக்கள் அனைவரும் பெற தவமிருப்போம். இந்த எண்ணத்துடனே உறங்கிவிட்டேன் (இரவு 06.45 முதல் 08.40 வரை).

அன்று இரவு 10 மணி அளவில், புயல் கடந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இனி மறு நாள் காலை, கடல் மட்டம் மட்டும் உயரும், என்று வானிலை அறிக்கை தெரிவிக்க, எங்கள் கட்டடத்தில் உள்ள அனைவரும் சிறிதளவு கூட பாதிப்பில்லாமல், பாதுகாப்புடன் இருக்கும் செய்தியை அறிந்தோம்.

இந்த சந்தர்ப்பம், ஒரு தவ வலிமையை உணரச் செய்தது.

3. தியானவழி அன்பர் ஒருவரின் அனுபவம் -- திருமங்கலம்
பத்தாவது நிலையை அடைய, எனக்கு உரு தந்த எனது தாய் தந்தையையும், எனது உயிர் உயர்வடைய, மெய் உணர்வை ஊட்டி வளர்த்த நமது ஞானகுருவையும், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரையும், எனக்குள் ஒளியாக நின்று உணர்வின் தன்மையை அறியச் செய்யும், உணரச் செய்யும், இயக்கச் சக்தியாக உள் நின்று இயங்கிக் கொண்டிருக்கும் எனது உயிரான ஈசனையும் வணங்கி, சமீபத்தில் குருவின் அருளால் எனக்குள் பெற்ற அனுபவத்தினை, நாளைய மகரிஷிகளான நம் அன்பர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஆதிசக்தியான பேரண்டத்தில் ஒவ்வொன்றும், ஒன்றின் தொடர் கொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கின்றது, வாழ்ந்து கொண்டிருக்கின்றது, வளர்ந்து கொண்டிருக்கின்றது. அதன் அடிப்படையில், அகஸ்தியன் விண்ணிலிருந்து வரும் ஆற்றலைத் தனக்குள் நுகர்ந்தறிந்து, உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி, துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், இந்தப் பூமியில், பரிணாம வளர்ச்சியில் மனிதனாகத் தோன்றி, ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, ஏழாவது அறிவாக, தனக்குள் ஒளியின் தன்மையை சிருஷ்டித்து, உடலை விட்டு அகன்று, ஒளியின் சரீரமாக, முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற நிலையில், சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தோ, அல்லது துருவ நட்சத்திரத்திலிருந்தோ வெளிவரும் உணர்வின் ஒளி அலைகளை, எந்த ஒரு மனிதன் சுவாசிக்கின்றானோ, அவன், உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிடும் அருள் சக்தியைப் பெற்று, விண் செல்லும் தகுதியைப் பெறுகின்றான்.

அந்தத் தகுதியைப் பெறுவதற்குதான், நமது ஞானகுரு பல அரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, உபதேசங்கள் மற்றும் தியானங்கள் மூலமாக, அருள்ஞான வித்துக்களை நமக்குள் பதியச் செய்துள்ளார்.

கடந்த 1988ஆம் வருடம், நமது ஞானகுருவிடம், “சாமி எனக்குள் சக்கரம் போன்று ஒளிப் பிரவாகம் ஒன்று, சுழன்று கொண்டுள்ளது என்றும், அது அகத்திலும், புறத்திலும் தெரிந்து கொண்டேயுள்ளது. அதற்கு விளக்கம் வேண்டும்” என்று வேண்டினேன்.

அதற்கு அவர், “இந்த ஒளியின் நிலைகள் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வந்த ஒளிகள் என்றும், அதனை நமக்குள் சிரத்தையுடன் வளர்த்திடல் வேண்டும்” என்று என்னிடம் கூறினார்.

அதற்குப் பின், குரு காட்டிய அருள்வழியில் பல வருடங்களாக, பல சந்தர்ப்பங்களில், சப்தரிஷி மண்டலங்களை விண்ணில் பார்க்க நேரிடும் போதெல்லாம், அது ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்து, அதிலிருந்து வரும் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்றும், மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எனக்குள் பரிபூரணமாகப் பெற்று, மகரிஷிகள் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்றும் தியானித்து வருகின்றேன்.

மேலும், இவ்வாறு பெறும் இந்த உயர்ந்த சக்திகள் அனைத்தும், அனைவரும் பெறவேண்டும் என்றும் குரு காட்டிய அருள் வழியில் தியானித்து வருகின்றேன்.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு, ஒரு நாள் தியானத்தில், நான் இராமலிங்கம் என்ற நிலையில், என் எண்ணங்கள் அனைத்தையும் உயிருடன் ஒன்றாகக் குவித்து, உணர்வால் சப்தரிஷி மண்டலங்களுக்குள் ஊடுருவி, மகரிஷிகளின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற அவாவினாலும், மகரிஷிகள் என்னை ஆட்கொள்ள வேண்டும் என்ற பேரவாவினாலும், சாமி, சற்குருவை வணங்கித் தியானிக்கும் பொழுது, வான்மீகி மகரிஷியின் உணர்வின் ஒளி அலைகள் எனக்குள் ஊடுருவியது. அப்பொழுது அந்த சமயத்தில், எண்ணங்களாக உணர்ச்சிகளாக உணர்ந்ததை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நான் சாமி, சற்குருவிடம் ஆசீர்வாதம் பெற்று, வான்மீகி மகரிஷியின் அருளைப் பின்பற்றி அணுகியபோது, அவர் “என்ன வேண்டும்?” என்று வினவினார்.

அப்பொழுது, “2014க்குள் மகரிஷிகள் உலகமாக மாறப் போகிறது” என்று நமது குருநாதர் உபதேசத்தில் வெளிப்படுத்தியதை நினைவில் கொண்டு, அவரிடம் நான் “மகரிஷிகள் உலகம் என்றால் என்ன? எவ்வாறு மாறப் போகிறது? என்று அறிய விரும்புகிறேன் சாமி” என்று வேண்டினேன்.

அதற்கு வான்மீகி மகரிஷி, “மகரிஷிகள் உலகம்” என்றால், குரு காட்டிய அருள் வழியைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரின் உயிரையும், உடலையும், ஒவ்வொரு மகரிஷியும் பரிபூரணமாக ஆட்கொண்டு, அந்தந்த மகரிஷிகள், தன் அருள் உணர்வுகளை அவர்களின்பால் பாய்ச்சி, மகரிஷிகளின் செயலாக்கங்கள் அனைத்தும் மிக விரைவில் செயல்படப் போகின்றன என்றும், அதாவது உனது குருநாதர் உணர்த்தியது போல, 2014க்குள் இது நடைபெறப் போகின்றது என்று உணர்த்தி அருளினார்.

மேலும், ஒவ்வோரு மகரிஷியின் பெயரையும், நமது அன்பர்களின் பெயரையும் தொடர்புபடுத்தி, மகரிஷிகளின் உணர்வின் ஒளி அலைகளின் அலைவரிசைத் தொடர் இயங்க உள்ளது, என்பதையும் உணர்த்தியருளினார்.

மேற்கூறிவைகள் அனைத்தும், குருவின் அருளாசியால் எனக்குள் பெற்று, உணர்ச்சியாக “சீதாராமா” என்ற நிலையில், எண்ணங்களாக, உணர்வுகளாகத் தோன்றியதைத்தான், இதில் வெளிப்படுத்தியுள்ளேன்.

ஆகவே, நமது குருநாதர், சற்குரு மற்றும் எல்லா மகரிஷிகளின் ஆசைப்படி, அந்த அருள்வழியில் நமது எண்ணங்கள், சொல், செயல்களை, மெய்ஞானிகளின் உணர்வு கொண்டு பரிபக்குவமாக்குவோம்.

ஒவ்வொரு நொடிப் பொழுதும், குரு உபதேசித்ததை நினைவாக்கி, கூட்டுத் தியானத்தின் மூலம், துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை, நமது உயிருக்குள் பெருக்க, பெருக்க, அகஸ்தியன் அவன் உடலில் விளைந்த மெய் உணர்வும், அவன் கண்ட பேரண்டத்தின் உணர்வும், சர்வ நஞ்சினையும் ஒளியாக மாற்றிடும், அருள் உணர்வுகளைப் பெறும் தகுதியைப் பெறவும், மாமகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் ஆட்கொள்ள வேண்டும் என்றும், இந்த உலகம் மகரிஷிகளின் உலகமாக, 2014ல் உருவாக வேண்டும் என்றும் நாம் அனைவரும் தவமிருப்போம்.

நம் குரு சென்றடைந்த எல்லையை, நாம் அனைவரும் சென்று அடைய வேண்டும் என்று, எல்லா மகரிஷிகளையும் எண்ணிப் பிரார்த்திக்கின்றேன்.

ஓம் ஈஸ்வரா குருதேவா.