1. குரு பூஜை என்றால் என்ன? -- விளக்கம்
நமது குருநாதர், விண் சென்ற நாள்தான் “வைகுண்ட ஏகாதசி”.
அவர் உடலை விட்டுச் சென்று,
எப்படி ஒளி சரீரமாக
மாற்றிச் சென்றாரோ, அந்த நிலையை
நாம் அனைவரும் இந்த
வாழ்க்கையிலேயே நிச்சயம் பெற முடியும்.
இதற்கென்று, நாம் யாரும்
கடும் தவம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவர் எனக்குச் சொன்ன சுருக்கமான நிலை “ஆத்மசுத்தி”.
நாம் எந்த வேலை செய்தாலும், கையில் படக்கூடிய அழுக்கை, நாம்
துடைக்கின்றோம். இதைப்போல, மனித வாழ்க்கையில் துயரமான எண்ணங்களும், வேதனைப்படும் எண்ணங்களும்
அடிக்கடி நமக்குள் தோன்றும்.
இந்த நிலைகளை, “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தைக் கொண்டு, அன்றன்று
துடைத்து, ஒவ்வொரு நொடிக்கும் அதைத் துடைத்துக் கொண்டு, நீ இந்த மெய் ஒளியைப் பெற முடியும்
என்று, நமது குருநாதர் எமக்கு உணர்த்தினார்.
ஆக, அந்த அனுபவபூர்வமான நிலையை, உனக்குள் ஏற்படும் சந்தர்ப்ப
நிகழ்ச்சியை நீ கண்டுணர்ந்து, நான் சொன்ன இந்த ஆத்ம சுத்தியைக் கொண்டு, தீமைகளைத் துடைத்துக்
கொண்டு, அந்த உணர்வை எப்படி ஒளியாக மாற்ற வேண்டும் என்று, அந்தப் பேருண்மையை உணர்த்தினார்,
நமது குருநாதர்.
அதன்பின், அவர் உடலைவிட்டுச்
சென்றபின், அவர் உபதேசித்த உணர்வுகளை அனுபவ ரீதியாக யாம் பெற்றோம். அதைப் போன்றே, நீங்களும் சாதாரண ரீதியில்
பெற முடியும் என்ற நிலைகளில்தான்,
உங்களுக்கும் அதை இப்பொழுது உபதேசிக்கின்றோம்.
அவர் எப்படி ஒளி சரீரம் பெற்றாரோ, அதைப் போல நாமும் ஒளி சரீரம்
பெற வேண்டும், முடியும் என்ற அந்த நிலையைக் கொண்டுதான், நம் குருநாதர் சென்ற வழியில்,
நாம் அனைவரும் இதே சரீரத்தை, நிலையான சரீரத்தை, சரீரம் ஒளியாக மாறும் நிலையை, நாம்
நிச்சயம் அடைய முடியும்.
ஆகவே தான், “குருபூஜை” என்று வைத்து,
அவர் எப்படி ஒளியின்
சரீரமாக மாற்றினாரோ,
அதே குருத்தன்மையை நாம்
எடுக்கும்போது,
நாமும் அந்த ஒளி சரீரம்
நிச்சயம் பெற முடியும்.
இந்த வாழ்க்கையில் வரக்கூடிய
துன்பத்தை நீக்கி, நாமும் நிச்சயம் அதைப் பெற முடியும்.
2. உயிரை எப்படி நேசிக்க
வேண்டும்?
“ஓம்” என்பது பிரணவம் என்று, நமது சாஸ்திர
விதிகள் கூறுகின்றன. நமது உயிர் “ஓ” என்ற நிலைகளில் நமக்குள் பிரணவமாகி,
ஜீவனாக இயங்குகின்றது.
“ம்” என்கிற போது, நாம் எண்ணிய உணர்வுகள், நமக்குள் உடலாக அமைகின்றது. அதனால் “ஓம் ஈஸ்வரா”, நமக்குள் இயக்க சக்தியாக நம் உயிர் இருக்கின்றது,
என்ற நிலையை குருநாதர் தெளிவாக உணர்த்தினார்.
ஆகவே, நாம் “ஓம் ஈஸ்வரா” என்று
வெறும் வாயில் சொல்வதற்குப் பதில்,
நாம் எண்ண வேண்டியது நம் உயிரை,
நமக்குள் ஜீவனாக இருந்து
இயக்கிக் கொண்டிருக்கும், இச்சக்தியை (“உயிரை”) நீ எப்படி நேசிக்க வேண்டும்? என்று, நமது குருநாதர்
முதல் நிலையிலே எனக்கு உணர்த்தினார்.
நமக்குள் இருந்து இயக்கும் உயிர், நம்மை எப்படி இயக்குகின்றது
என்ற நிலையைத் தெரிவதற்கு, நாம் மனிதனானபின் இந்த உயிரின் நிலைகளை, நாம் அறிந்து கொள்ளக்கூடிய
நிலைகள் ஏற்படுகின்றது.
ஆகவே, “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று எண்ணும்போது,
நம் உயிரை, நினைவில்
கொண்டு தான், இந்த சொல்லை நாம் சொல்ல
வேண்டும். நம் உயிரை நேசிக்கும் நிலையாக, அவர் சொன்ன முறைப்படித்தான், உங்களுக்கும்
இதை உபதேசிக்கின்றேன்.
3. குருநாதரின் ஆத்மா விண்ணுலகம் செல்வதை உற்றுப் பார்க்கச் சொன்னார்
உங்களைக் காக்க இந்த
எண்ணம் உதவ வேண்டும் என்பதற்குத்தான், இந்த உபதேசங்களை யாம் கொடுப்பது. ஏனென்றால் மனிதனுடைய வாழ்க்கை, இந்த மனித உடலினுடைய நிலைகள்
இந்த பூமியினுடைய ஆயுளாகி, அது குறுகிய காலங்களாக இப்பொழுது வருகின்றது.
மனிதன் வாழ்க்கைக் காலம் எவ்வளவோ, அதைப் போன்று, இந்த பூமியினுடைய
காலங்கள், அது மாறுபடும் நிலைகளும் மாறியே தான் ஆகவேண்டும்.
ஆனால், இந்த பூமியில் இருக்கப்படும் பொழுது, இந்த உடல் மாறாத
நிலைகள் கொண்டு,
உயிர் ஒளியாக எப்படி மாறியதோ,
இதைப் போல உணர்வுகள் ஒளியாக மாறி,
இந்த உடலை நாம் ஒளிச் சரீரமாக மாற்றி,
அந்த ஞானிகள் சென்ற நிலையில்,
என்றும் நிலையான சரீரமாக அதை நிலைக்கச் செய்ய வேண்டும்.
அந்த நிலைதான், நம் குருநாதர் வைகுண்ட ஏகாதசி அன்று, இந்த உடலை
விட்டுச் செல்லும் பொழுது, உயிருடன் ஒன்றி, அவருடைய உணர்வுகள் எப்படி இந்த ஆத்மாவாகச்
சுழல்கிறது என்ற நிலையை, எமக்கு உணர்த்தினார்.
குருநாதரின் ஆத்மா விண்ணுலகம்
செல்லப் போகும் பொழுது,
அதை உற்றுப் பார்த்து,
அதைக் கவர்ந்து,
அவர் எங்கே சென்றடைகின்றார்?
என்ற அதனுடைய நிலைகளை,
நாமெல்லாம் அடையச் செய்யும்
நாள்தான்
வைகுண்ட ஏகாதசி நன்னாள்.
அது குருவாக உங்களுக்குள்ளும் கிடைக்க வேண்டும், அவர் காட்டிய
அருள் நெறிகள் அனைத்தும், உங்களுக்குள் வித்தாக ஊன்ற வேண்டும். நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம்,
அந்த மகாஞானியுடைய அருள் சக்தி உங்களுக்குள் கிடைக்க வேண்டும். உங்களையறியாமல் இந்த
வாழ்க்கையில் வந்த, இருள்கள் நீங்கவேண்டும். இந்த இச்சையின் ஆசை எனக்குள் ஆகின்றது.
இச்சா சக்தி, அதனுடைய நிலைகள் எனக்குள் கிரியையாக மாறி, நீங்கள்
பெறவேண்டும் என்று, யாம் எண்ணும் பொழுது,
உங்களை எண்ணி, யாம் ஏங்குவதனால்,
அந்த ஞானியின் அருள் சக்தி எனக்குள் இச்சை,
கிரியையாக இயங்கி, அதனின் வழிகளில்,
இந்த சொல்லின் தன்மை
ஞானமாக வெளிப்படுகின்றது.
அதை, இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, நீங்கள் இயக்கும்
இந்த செவிப்புலனில் எந்த அளவிற்கு, கூர்மையான எண்னங்களைச் செலுத்துகின்றீர்களோ, இந்த
உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் அது பதிவாகி, இந்த உணர்வின் எண்ணங்கள் தோற்றுவிக்கும்
பொழுது, இது கூர்ம அவதாரம்.
4. குரு காட்டிய நிலைகளை குருவாக ஆக்க வேண்டும்
ஆக, நாம் உயிருடன் ஒன்றிய அந்த ஞானிகள் சென்ற, கல்கியின் அவதாரத்தை
நாம் நிச்சயம் அடைய முடியும், என்ற இந்த நிலையைத் தான், இந்த ஆசையில்தான் யாம் இந்த
குரு பூஜை அன்று, நம் குருநாதர் காட்டிய நிலைகளை, இந்த சொல்லே உங்களுக்குள் நீங்கள் எண்ணமாக எடுக்கும் பொழுது,
அது குருவாக அமைகின்றது.
இப்பொழுது, திட்டியவர்களை எண்ணும் பொழுது, அந்த உணர்வின் தன்மை
நம்முள் பதிவானபின், அவர்களை எண்ணினால், அந்தக் குணம் நமக்குள் குருவாகி, அவருடன் சண்டையிடச்
செய்யும் நிலையாக, குருவாக அது இயங்கும்.
ஒருவர் வேதனைப்பட்டுச் சொல்லும் நிலைகளை நாம் எண்ணத்தில் எடுத்துக்
கொண்டால், அந்த வேதனையான உணர்வுகளை மீண்டும் நினைக்கப்படும் பொழுது, அந்த உணர்வின்
சக்தி நமக்குள் குருவாக நின்று, அடிக்கடி வேதனைப்பட்டு, அந்த குருவின் வழி நோயை உருவாக்கும்.
நம்மை அந்த வழியிலே அழைத்துச் செல்லும்.
குரு பூஜை நடைபெறும் நாள், அவர் ஒளியாகப் பெற்ற நாள். உங்கள்
உணர்வின் தன்மைகள் ஒளியாகப் பெறவேண்டுமென்ற இந்த ஆசையில்தான், இந்த இச்சையில்தான்,
இது சேர்க்கப்படும் பொழுது,
நீங்கள் எண்ணும் எண்ணங்கள் குருவாக நின்று,
உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்கி
ஒளியின் தன்மை பெறச் செய்ய முடியும்.
இந்த ஆசையில், யாம் குரு பூஜை விழாவாக இதை ஆரம்பித்து, அவருடைய நிலைகளை, மீண்டும் மீண்டும் இந்தக்
குரு பூஜையினுடைய தன்மையை, அந்த மெய்ஞானியின் அருள் ஒளிகள் உங்களுக்குள் குருவாக நின்று,
நீங்கள் எண்ணும் இந்தக் கூர்மையான உணர்வுகளை எடுத்து, சுவாசித்து, இந்த உடலின் தன்மையை,
மெய்ஞானிகள் சென்ற நிலைகளில் அந்த உணர்வின் எண்ணங்களை ஒளியின் சரீரமாக அழைத்துச் செல்ல
வேண்டும் என்பதே என் ஆசை. எனது ஆசியும் அதுவே தான்.
அந்த ஆசையில், நீங்கள்
பெறவேண்டும் என்று யாம் எண்ணும் பொழுது, அந்த ஆசை எம்மை அங்கே அழைத்துச் செல்கின்றது.
அதை நீங்களும் எடுக்கப்படும்
பொழுது, இந்த உணர்வின் தன்மை குருவாக நின்று, உங்களையும் அங்கே அழைத்துச் செல்லும்.
5. வைகுண்ட ஏகாதசி - குருநாதர் உடலைவிட்டு ஒளிச் சரீரம் பெற்ற
நாள்.
ஒரு மாமரத்தை எடுத்துக் கொண்டால், பிஞ்சாக இருக்கும் பொழுது,
துவர்க்கின்றது. காயாகும் பொழுது புளிக்கின்றது. ஆனால், கனியாகும் பொழுது இனிக்கின்றது.
கனியானபின், அதனின் சத்து அனைத்தும் வடித்து, அதன் வித்தாக மாறுகின்றது.
இதைப் போன்றுதான் நம் உயிரின் தன்மை,
நாம் பிஞ்சான தாவர இனங்கள் போல அந்தச் சத்தின் தன்மை,
இன்றைக்குப் பல உயிரினங்களாகத் தோன்றி,
பிஞ்சாகும் பொழுது, பரிணாம வளர்ச்சிகள் கொண்டு மிருக நிலைகளும்
மற்ற நிலைகளும் அடைகின்றோம். நாம் அதாவது காயாகும் பொழுது, மனிதனாகி விடுகின்றோம்.
இப்பொழுது நாம் இந்த மனிதனானபின், இந்த உணர்வுகள் அனைத்தும்,
உயிர் எப்படி
ஒளியாக இருக்கின்றதோ, இதைப் போல உணர்வின் தன்மை இரண்டறக் கலக்கும் பொழுது, சுவை மிக்க இனிப்பாக
மாறுகின்றது. ஆக இப்படி மாறும் நிலைகளில்தான், நம் உயிர் முழுமை பெறும் தன்மை
பெறுகின்றது.
சூரியன் எப்படி அங்கு பிரகாசிக்கின்றதோ, இதைப் போல உணர்வின்
சத்து கொண்டு, உணர்வுகள் உயிருடன் ஒன்றி, ஒளியாக வரும் பொழுது, இது அழியாச் சரீரமாக,
என்றென்றும் நிலைத்த சரீரமாக அது நிலைத்திருக்கின்றது.
சாஸ்திரங்களில் எவ்வளவு
பெரிய உண்மைகள் உண்டு. ஆனால், இந்த சாஸ்திரங்களை மாற்றியமைத்து,
அந்த உண்மையினுடைய நிலைகளை அறிய முடியாத தன்மையாக, ஆக்கிவிட்டார்கள்.
வைகுண்ட ஏகாதசி. என்கிற பொழுது, இந்த உணர்வின் தன்மைகளை, நமக்குள்
நினைவுக்குக் கொண்டுவந்து, இந்த உடலைவிட்டு இந்த ஆத்மா ஒளிச் சரீரமாக பெறப்படப் போகும்
பொழுது, அந்த உணர்வின் உண்மையினுடைய நிலைகளை, அங்கேயிருந்து சூட்சம சரீரம் பெற்றபின்,
இந்த ஓம் என்ற பிரணவத்தின் தத்துவமும், இந்த உணர்வும் அனைத்தும் ஒளியாக மாறிய நாள்.
வைகுண்ட ஏகாதசி அன்றுதான்,
நம் குருநாதர் உடலைவிட்டு ஒளிச் சரீரம் பெற்ற நாள். அந்த ஒளிச் சரீரம் பெற்ற இந்த நிலையைத்தான்,
இன்று உங்களுக்குள்ளும் அவர் காட்டிய அந்த உணர்வுகள், உங்களுடைய எண்ணங்கள் கூர்மையாக்கப்படும்
பொழுது, இந்த உணர்வின் சக்தி கூர்ம அவதாரமாக நீங்கள் எடுத்து, அந்த உயிர்தான், அந்த
ஒளியின் சரீரமாக நம்மை மாற்றுகின்றது.
6. கல்கி - பத்தாவது நிலை
ஆகவேதான், நாம் ஓம் ஈஸ்வரா என்கிற பொழுது, நமக்குள் ஜீவனாக இருந்து,
எனக்குள் இயக்கும் உயிரைத்தான் “ஈஸ்வரா” என்று இங்கு சொல்கிறோம். ஆகவே,
இந்த ஏழாவது தன்மையான இந்த நிலைக்கு, அப்புறம் எட்டாவது நிலை.
எட்டாவது நிலை என்கிற பொழுது, நமக்குள் எடுத்துக் கொண்ட
எந்த ரிஷியின் உணர்வின் சக்தியை நமக்குள் எடுத்தோமோ,
அவை “அஷ்டதிக்கு பாலகர்கள்”.
நாம் ஒருவனுடைய நிலைகள், ஏழாவது அறிவின் தன்மை கொண்டு, கெட்டதை
நீக்கி, மெய் ஒளியின் தன்மையை நமக்குள் எடுக்கப்படும் பொழுது, எட்டாவது நிலை அடைகின்றோம்.
ஆக, எத்திசையிலிருந்தும், எத்தகைய நிலைகள் இருந்தாலும், அஷ்டதிக்கு
பாலகர்கள், எட்டுத்திக்கிலிருந்தும், ஒரு கோவிலில் ஒரு தெய்வத்தை, அந்த பாலகர்கள்தான்
அங்கே காக்கின்றார்கள் என்று சொல்கின்றார்கள்.
ஆகவே, நமக்குள் இந்த
எட்டாவது அறிவான நிலைகள் எட்டுத் திக்கிலிருந்தும் வரக்கூடிய அந்த நிலையை நீக்கித்தான்,
கெட்டதை நீக்கி, தன் உணர்வின் சத்தை அது காத்துக் கொள்கின்றது.
ஏனென்றால், அந்த மெய்ஞானியின் உணர்வை நமக்குள் அந்த நிலையை மாற்றும்
பொழுது, எப்படி தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியபின், அதில் உள்ள செம்பும், பித்தளையும்.
நீக்குகின்றதோ, இதைப் போல, நாம் அடிக்கடி அந்த மெய்ஞானியின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கப்படும்
பொழுது,
நம் உணர்வின் மணம் தீயதை நாடாது,
தனக்குள் அந்த ஒளியின் சரீரமாக, காத்தருளும் சக்தி பெறுகின்றது.
ஆகவே, இதிலிருந்து எட்டாவது நிலையை அடையப்படும் பொழுது, நாம்
ஒன்பதாவது நிலை. நாம் உயிருடைய நிலையில் ஒன்றி, இந்த நவமி என்ற நிலையை, நாம் எண்ணத்தின்
நிலைகள் இந்த உணர்வுகள் அனைத்தும், சொல்லின் தன்மைகள் கொண்டு, ஒன்பதாவது நிலை அடைகின்றது.
இந்த ஒன்பதாவது நிலை, நமக்குள் எட்டின் நிலையில் தீயதை நீக்கி,
இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி, ஒன்பதாம் நிலையை அடையப்படும் பொழுது, இந்த உடலைவிட்டு
மீண்டபின், பத்தாவது நிலை. அதுதான் கல்கி அவதாரம் என்பது.
இப்பொழுது, நம் உடலிலிருந்து எட்டுத்திக்கிலும் காப்பது போல,
நாம் இந்த உடலைவிட்டு, உயிராத்மா வெளியே போனபின், கல்கி.
ஆக இன்னொரு உடல், (நம்மை) அந்த உயிரை, நாம் இழுத்திடாத வண்ணம் தடுத்திடும் நிலைதான் பத்து,
அதாவது, பத்தாவது நிலை என்ற இந்த நிலைகளைக் காட்டி, இதிலிருந்து
நீ விடுபடும் நிலையே தசாவதாரம், ஆக, இந்த உயிர் பத்தாவது அவதாரமாக, ஒளியின் தன்மை அடைவதுதான் பத்தாவது அவதாரம்.