ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 17, 2017

பரிணாம வளர்ச்சியில் வளர்பிறையாக வந்த நாம் மீண்டும் தேய்பிறையாகி இன்னொரு உடலுக்குள் செல்லக்கூடாது

மனிதன் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தான் சந்தித்த பல இன்னல்களிலிருந்து “தப்ப வேண்டும் தப்ப வேண்டும் என்று எடுத்துக் கொண்ட வலுவான எண்ணத்திற்கொப்ப பரிணாம வளர்ச்சியடைந்து வந்தான்.

ஆனால், மனிதனாக வளர்ச்சி பெற்றபின் இந்த வாழ்க்கையில் வேதனை சலிப்பு சஞ்சலம் சலிப்பு வேதனை போன்ற நிலைகள் கொண்டு இன்று கஷ்டமோ சங்கடமோ வந்தால் உடனே தற்கொலை செய்யும் நிலையாக “என்ன வாழ்க்கை!” என்ற விரக்தி நிலைக்கு வந்துவிடுகின்றான்.

1.பல கோடிப் பணம் இருந்தாலும்
2.வீட்டிற்குள் ஒருவர் மரியாதைக் குறைவாகப் பேசிவிட்டால்
3.என்ன வாழ்க்கை! என்று தற்கொலை பண்ணி தன்னையே அழித்துவிடுகின்றது.

பலவீனமான உணர்வுகள் தூண்டப்படும் பொழுது அந்த உணர்வுகள் மரணமடையச் செய்கின்றது. மனிதனானவன் வளர்ச்சி பெற்றபின், மனிதனை இந்த உணர்வுகள் இவ்வாறெல்லாம் இயக்குகின்றது.

ஒருவர் இறந்துவிட்டால் என்றால் என்ன ஆகின்றது? அந்த மனிதன் பாசம் கொண்டு யார் மேல் ஆசைப்பட்டாரோ அந்த உடலுக்குள் போய்ப் பல தீமைகளைச் செய்கின்றது.

ஏனென்றால் உடலுடன் இருப்பவர் “அய்யோ.., இப்படியெல்லாம் இருந்தாரே! அவர் மிகவும் நல்லவர். எல்லோருக்கும் தர்மம் செய்தாரே அதற்குள் இப்படிப் போய்விட்டாரே என்று பாசத்துடன் எண்ணுவார். அந்த ஆன்மா இவர் உடலின் ஈர்ப்புக்குள் வந்துவிடுகின்றது.

இறந்தவர் உடலில் என்னென்ன நோய் இருந்ததோ அந்த உணர்வு இவர் உடலுக்குள்ளும் வந்து “நீயும் நோயாகப் போ என்றுதான் சொல்லும். இந்த மனித உடலில் விளைய வைத்த ஆற்றல் இவ்வாறு செயல்படுகின்றது.

இதை மாற்றியமைக்க நாம் என்ன வைத்திருக்கின்றோம்?

சாமியார் செய்வார் ஜோதிடம் செய்யும் ஜாதகம் செய்யும் யாகம் செய்யும் என்று சொல்பவர்கள் வழியிலே போய்க் கொண்டிருந்தால் நம் உணர்வின் தன்மை மனித நிலையே இழக்கப்பட்டுவிடும்.

ஏனென்றால் வேதனை என்பது விஷம். வேதனையின் அளவுகோல் கூடும்பொழுது அடுத்து மிருகத்தினுடைய உடலாக அமைத்துவிடுவான் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசன்.

இதைப் போன்ற நிலைகளையெல்லாம் முறியடிக்க வேண்டுமென்றால்
1.மெய்ஞானிகளின் அருள் ஒளியை உங்களுக்குள் செலுத்தி
2.அறியாமல் ஆட்டிப்படைக்கும் தீயவினைகளிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ளும் ஆற்றலை
3.அவரவர்கள் தான் பெறவேண்டும்.

குருநாதர் பல நிலைகளை உருவாக்கி என்னை நம்புகின்றாயா? என்று பல உண்மையினுடைய நிலைகளையும் பேரண்டத்தின் ஆரம்ப நிலையும், உயிரணுவின் தோற்றமும், உலகம் உருவான நிலையும், அனைத்துமே உணர்த்தினார்.

அன்று அவர் உணர்த்திய நிலைகள் கொண்டுதான் காடு மேடெல்லாம் சுற்றி இதை அறிந்து கொணடோம்.

12 வருட காலம் பல அனுபவங்களைப் பெறச் செய்து எமக்குப் பல சிரமங்களை ஏற்படுத்தி இந்த உணர்வை அறியச் செய்தார்.

நீங்கள் சிரமமற்ற நிலைகளில் வாழும் நிலையில் உங்களுக்குச் சிரமம் என்று வரும் பொழுது மீட்டுக் கொள்வதற்குத்தான் தியானத்தையும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையும் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி உடலுக்குள் அந்தச் சக்திகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணர்வுகள் உள்ளுக்குள் சென்று தீமை செய்யும் உணர்வுகளுக்கு ஆகாரம் போகாது தடைப்படுத்தும்.

இதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்குள் வரக்கூடிய துன்பங்கள் நீங்கும். உங்களுக்குள் நல்ல உணர்வுகள் தோன்றும். நீங்கள் யாரைப் பார்த்தாலும் இந்த நல்ல நிலைகள் ஏற்படும்.

பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்துள்ள நாம் அடுத்து ஒளி உடலாக இனி ஒரு பிறவி இல்லை எனும் நிலையாக அழியா ஒளியின் சரீரம் பெறுவோம்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே இணைந்து வாழ்வோம்.

இருளைப் போக்கி ஒளியின் அறிவை வளர்ப்பதே “மெய்ஞானிகளின் கலாச்சாரம்”

சாதாரண மனிதன் தன்னைக் காத்துக் கொள்வதற்காக ஒருவனைத் தாக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் அவன் மேல் பாய்ச்சப்பட்டு அதே நிலைகளில் எதிர் பதிலாக.., ”அவனை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது.

கோபமாக எப்படியாவது அடக்கியாகவேண்டும் என்று ஒருவர் தாக்கப்படும் பொழுது அங்கே விளைந்த மூலக்கூறு அவரிலே தாக்கபட்டவுடன் அதே போல் அடிக்க வேண்டும் என்ற உணர்வு திரும்பி வருகிறது.

உயிரினங்களின் வளர்ச்சிக்கும் மனிதனானபின் உயர்ந்த நிலைக்கும் மனிதன் உயர்ந்திட தன்னைக் காக்க வேண்டுமென்று செயல்படும் பொழுது இந்த உணர்வுகள் எதனுடன் இணைந்து
1.இவர் அவரை அழிக்க விரும்பினாரோ
2.அதே உணர்வு இவரை அழிக்கிறது
என்று குருநாதர் காட்டுகிறார்.

குருநாதரை யாம் “பைத்தியக்காரராகத்தான்,” பார்த்தோம். அவர் சொல்வதைப் புரிந்து கொள்வதே கஷ்டமாக இருக்கும். இப்பொழுது யாம் உங்களுக்குத் தெளிவாகச் சொல்கிறோம்.

அவர் கற்றுக் கொடுத்த உணர்வை உங்களுக்குத் தெளிவாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக காட்டிற்குள் அழைத்துச் சென்று உணர்வை ஊட்டினார்.

எதனுடன் எது இணைகின்றதோ அந்த உணர்வின் இயக்கத்தை மூலக்கூறைக் காட்டுகிறார். ஆக தெரியவில்லை என்றால் உணர்வுகளின் இயக்கத்திற்கு நாம் ஆளாக வேண்டும்.

உதாரணமாக ஆண்டவனை வணங்குவதற்காக கோவிலுக்குச் செல்கிறோம். கலாச்சாரப்படி அதிலே எண்ணி நாம் போகும்போது இன்னொருவர் வேகமாக பக்தியில் வரும்போது பக்தியில் என்ன செய்கிறோம்?

1.அவரை முறைத்துப் பார்க்கச் சொல்கிறது.
2.போவதற்குள் “என்ன அவசரம்..,” என்று அவரைத்தான் நம்மை எண்ணச் சொல்கிறது.

நைவேத்யம் செய்யப்படும்பொழுது எதைக் கலாச்சாரத்தில் காட்டப்பட்டிருக்கின்றதோ அதில் தான் பேரும் புகழும் வாங்க வேண்டும் என்று செயல்படும்போது அதே தான் இங்கும் தோன்றி கோவிலுக்குப் போகும்போது அவர்களைக் காத்திடும் நிலை வருகிறது.

1.பொது நிலையை உணர்த்துவதோ பொது நிலையை ஊட்டுவதோ
2.அந்த நிலையை வளர்த்துக் கொள்வதோ அங்கே இல்லாமல் போய்விட்டது.

ஏனென்றால், அன்று அரசர் தான் காட்டிய அறநெறிப்படி தனது நாடு என்ற வீரியத்தைக் காட்டுகிறார்கள். அந்த உணர்வு கொண்டு வரப்படும் போது இவர்கள் கலாச்சாரப்படி “தனது கடவுள் என்று இவர்கள் ஊட்டிய நிலைகள் இங்கே “கடவுளாகின்றது.

இந்த வளர்ச்சியின் தன்மை வந்தால் தான் அடுத்து எதிரிகள் வரப்படும் பொழுது அங்கு எதிரிகளாக உருவாக்கும் பொழுதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பாகிறது.

1.இந்த அளவிற்குக் “கலாச்சாரம்…” உருவாக்கப்பட்டிருக்கிறது என்று குருநாதர் காட்டுகிறார்.
2.எதிரிகள் என்ற நிலை வரப்படும்பொழுது “வீரியம்…” வந்துவிடுகிறது.
3.”தன்மானம்…” என்ற நிலைகள் வந்துவிடுகிறது.
4.அன்று வளர்த்த நிலைகள் தான் இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.

நாம் வாழும் இடத்தில் 20 பேர் உள்ள இனத்தில் வேறு 4 பேர் வந்து ஏதாவது பண்ணிக் கொண்டிருந்தால் நாம் என்ன நினைக்கின்றோம்?

நாங்கள் 20 பேர் இருக்கிறோம், இந்த 4 பேர் செய்வதை எப்படி ஏற்பது? என்று 20 பேருக்கும் 4 பேருக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறோம்.

அரசரால் உருவாக்கப்பட்ட உணர்வின் நிலைகள் நமக்குள் வரப்படும்போது கலாச்சாரப்படி அவர்கள் உணர்த்திய உணர்வுகள் நமக்குள் கடவுளாக இயங்கத் தொடங்கிவிடுகிறது.

இப்படி “கடவுள்.., எப்படி இயங்குகிறார் என்ற நிலையை நாம் தெரிந்துகொண்டால் போதும். நாம் எண்ணிய உணர்வின் தன்மை எதுவோ அது உருவாக்கப்படுகிறது. அதுவே நமக்குள் கடவுளாக இருக்கிறது.

அந்த உணர்வின் செயலாக்கங்கள் வரும்பொழுது அதன்வழிதான் நமக்குள் இயக்கமே இருக்கிறது. “கலாச்சார நிலைகளில்…” வந்த நாம் இதையெல்லாம் நாம் ஓரளவிற்குத் தெரிந்து கொள்ளவேண்டும்.

மனிதனாக இருக்கப்படும்பொழுது வெறுப்பின் தன்மை வந்தால் நாம் பழி தீர்க்கும் உணர்வை அதிகமாக வளர்த்துக் கொள்கிறோம்.

மனிதன் இறந்தபின் யார் நமக்குத் தீங்கு செய்தனரோ அந்த உணர்வை அதிகமாக வளர்த்தபின் இந்த ஆன்மா அவருடைய உடலில் சென்று, தான் பேயாக வளர்த்துக் கொண்ட வெறுப்பைத்தான் வளர்க்கின்றது.

வெறுப்பை உண்டாக்கி, அந்த உணர்வின் சத்தை நுகர்ந்து.., அந்த உடலையும் அழிக்கின்றது.

1.கலாச்சார அடிப்படையில் இயக்கிய உணர்வுகள்
2.நம் உடலில் உள்ள செல்களில் அதிகம் விளைந்திருக்கும்.
3.நம் தாய் தந்தையிலிருந்து மூதாதையரிலிருந்து வளர்த்துக் கொண்ட அணு செல்கள் கலாச்சாரத்தில் மாறியிருக்கும்.
4.கலாச்சாரங்களின் அடிப்படையில் மதங்கள் உருவானாலும் மதங்கள் மாற்றிய கலாச்சாரம் தொன்று தொட்டு “ஊடே வந்து கொண்டேயிருக்கும்.

மதம் இனம் என்ற நிலைகளில் தன்னுடைய கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ளும் நிலைகளில் போர் முறைகளாகி அரசன் வழிகளில் தேய் பிறையாகத்தான் வந்து கொண்டிருக்கிறோம்.

அதிலிருந்து மீள்வதற்குத்தான் “விண்டவர் கண்டதில்லை, கண்டவர் விண்டதில்லை..,” என்ற பழமொழிக்கேற்ப அந்த மெய்ஞானிகள் தன்னுடைய உணர்வுகளை வளர்த்துக் கொண்டார்கள்.

வளர்த்துக் கொண்ட உணர்வுகள் அறிவின் ஒளியாக மாறிக் கொண்டே போகிறது. ஒளியாக மாற்றும் அந்த அறிவைத்தான் நமது குருநாதர் மாமகரிஷி எமக்குள் பெறும்படி செய்தார்.

1.இருளைப் போக்கும் ஒளியின் அறிவு பெற்று
2.உங்கள் பார்வையால் மற்றவர்கள் இருளை அகற்றும்
3.சக்தி பெற்ற ஞானிகளாக அனைவரும் ஆகவேண்டும்

என்பதுதான் “மெய்ஞானிகள் உருவாக்கிய கலாச்சாரம்

May 16, 2017

கிருமிகள் தாக்கிடாது வித்துக்களை “அமிலங்களில்” ஊறவைத்துக் காப்பது போல் துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் சேர்த்து அருள் ஞான வித்துக்களாக உங்களுக்குள் உருவாக்குங்கள்

உதாரணமாக இன்று விவசாய (AGRICULTURE) நிலைகளில் எடுத்துக் கொண்டால்
1.வித்துக்களை விஷக் கிருமிகள் தாக்கிடாது
2.அந்த வித்துகளில் அவர்கள் கண்டுபிடித்த அமில சக்தியில் ஊற வைத்துவிடுகிறார்கள்.
3.அதன் பின் நிலத்தில் ஊன்றப்படும் பொழுது உணர்வின் சத்து வலுப் பெற்றால் அதனை மற்ற கிருமிகள் வந்து இதைத் தாக்குவதில்லை.
4.அமிலத்தில் ஊற வைத்ததால் எதிர்த்துத் தாக்கும் அந்த உணர்வின் சக்தி வித்துக்களுக்குக் கிடைக்கின்றது.

நம் வாழ்க்கையில் எத்தனையோ பேரைப் பார்க்கின்றோம். பழகுகின்றோம். அவர்கள் படும் துயரமோ கஷ்டமோ இதையெல்லாம் நாம் கேட்க நேருகின்றது.

அதையெல்லாம் நாம் உற்றுப் பார்க்கின்றோம். நம் கண்களில் உள்ள கருமணிகள் பதிவாக்குகின்றது.

நாம் பார்க்கும் பிறருடைய வேதனை உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகிவிடுகின்றது. கோப உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகிவிடுகின்றது.

இதெல்லாம் நம் எலும்புகளுக்குள் உள்ள ஊன்களில் ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகின்றது.

இதே மாதிரி எத்தனையோ உணர்வுகள் நமக்குள் தீமையின் செயலாக செயல்படும் உணர்வுகளில் அந்த மனிதர்களை உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை

1.அவர்கள் உடலிலிருந்து வரக்கூடிய உணர்ச்சி
2.அந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகிவிடுகின்றது.

இப்படி உருவான வித்துக்கள் தன் இனத்தைப் பெருக்கும் பொழுது தீய வினைகளாக சாப வினைகளாக மாறுகின்றது. அதனால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களின் செயலாக்கங்கள் வலு குறைந்து உடல் நோய் மன நோய் போன்று ஏற்படுகின்றது.

தீய வினைகளை சாப வினைகளை உருவாக்கும் வித்துக்களை நாம் செயலிழக்கச் செய்ய என்ன செய்யவேண்டும்?

1.நமது உடலில் ஊழ்வினை என்ற வித்துகள் எத்தனையோ இருப்பினும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வீரிய உணர்வினை அதற்குள் செலுத்த வேண்டும்.

ஒரு வித்தினை நாம் நிலத்தில் ஊன்றினால் பூமியின் துணை கொண்டு தன் உணர்வைக் கவர்ந்து அதே செடியாக வளர்கின்றது.

ஆனாலும், அந்தச் செடிக்குள் இதைப் போல வித்தியாசமான நிலைகள் மற்ற உணர்வுடன் இணைக்கச் செய்து அந்த வித்துக்களுடன் கலந்து ஊன்றும்போது புழுக்களோ பூச்சிகளோ வருவதில்லை.

இதைப் போன்று நாம் தீமை என்ற உணர்வை நாம் நுகர்ந்தறிந்தாலும் அடுத்த கணம் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அந்த உணர்வு எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று நாம் பதிவு செய்த உணர்வுடன் இதைக் கலக்கச் செய்ய வேண்டும்.

1.இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து விட்டால்
2.நாம் நுகர்ந்த பிறருடைய நோயின் உணர்வுகளை
3.பிறருடைய தீமையின் உணர்வுகளைச் சுருக்கிவிடுகின்றது

அதே சமயத்தில் அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும், உடல் நலம் பெறவேண்டும். தீமை செய்வோர் தீமையிலிருந்து விடுபடவேண்டும் என்று எண்ணிவிட்டால் அந்த உணர்வு இதனுடன் கலந்து இது “அருள்ஞான வித்தாக நமக்குள் மாறுகின்றது.

இது மனிதனால் உருவாக்கப்படுகின்றது,

இயற்கையின் நிலையில் நம் உயிர் உருவாக்கினாலும் மனிதன் ஆறாவது அறிவு கொண்டு உயிருடன் இணைத்து எதை மாற்றவேண்டுமோ மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன்.

அதைத்தான் முருகு என்ற நிலைகளில் மாற்றியமைக்கும் சக்தியான ஆறாவது அறிவிற்குப் பெயர் “முருகு என்று பெயர் வைத்துள்ளார்கள்.

முருகா என்றால் அழகா என்றும் எதையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் அந்த உணர்வின் சத்தை ஆறாவது அறிவு உருவாக்குவதனால் இதற்கு இவ்வாறெல்லாம் காரணப் பெயர் வைத்துள்ளார்கள்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உடலை உருவாக்கிய எல்லா அணுக்களையும் பெறச் செய்வோம்.

தீமை நம்மை அணுகாதவண்ணம் பாதுகாப்புக் கவசமாக உருவாக்கும். தீமைகளிலிருந்து விடுபடுவோம். நம்மைக் காப்போம்.

நம் பேச்சால் மூச்சால் இந்த உலகைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக உருவாவோம்.

இந்த உலகம் மறையும் முன் “மக்களைக் காக்க வேண்டும்” என்றார்....!

1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரும்
2.அவர் ஞானம் பெற்ற நிலையும்
3.துருவத்தின் ஆற்றலை அறிந்து “துருவ நட்சத்திரமாக ஆன நிலையும்
4.காலத்தால் மறைந்தே போய்விட்டது என்று சொல்லலாம்.

அகஸ்தியரை “எல்லாவற்றிலும் வல்லவர் என்று சொல்லி மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் ஓரிரு இடங்களில் அவர் வருவதாகக் காட்டி அத்துடன் நிறுத்திவிட்டார்கள்.

நம் பூமியிலிருந்து “விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன் என்ற நிலை விநாயகர் தத்துவத்தின் மூலம் காட்டியிருந்தாலும் அதை வெறும் சாங்கிய சாஸ்திரமாக மாற்றிவிட்டார்கள்.

அவர் தான் பெற்ற விண்ணின் ஆற்றல்களைத் தன் இன மக்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று தென்னாட்டிலே தோன்றிய அந்த மகா ஞானி வெளிப்படுத்திய நிலைகளை அரசர் காலத்தில் சுத்தமாகவே மறைத்துவிட்டார்கள்.

சாங்கியங்களைச் செய்தால் ஆண்டவன் மெச்சி உனக்கு எல்லாம் செய்வான் என்று நம்மைச் சரணாகதி தத்துவத்தில் திசை திருப்பிவிட்டார்கள்.

ஆனாலும், இன்று காலம் கடந்த இந்த நேரத்திலாவது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அகஸ்தியரைப் பற்றி அறிந்து கொண்டோம்.

அறிந்து கொண்ட பின்னும் இப்பொழுது இந்தச் சந்தர்ப்பத்தில் இதை இழந்துவிட்டால் அடுத்து நமக்கு விண் செல்லும் மார்க்கம் ஏது?

அந்த மெய்ஞானி காட்டிய உணர்வுகளை நாம் பெறவேண்டும் என்று காடு மலை எல்லாம் என்னை (ஞானகுரு) அலைய வைத்தார்.

1.உண்மையை அறிந்து கொள்வதற்கு உணர்வின் தன்மையைப் பதிவாக்கினார்.
2.பதிவின் நிலைகள் அனைத்தும் அறிந்து கொண்டபின் நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று தான் இதை வெளிப்படுத்துகின்றோம்.
3.அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவருக்கும் நீ பெறச் செய். மறைந்த நிலைகளை மீண்டும் மக்களுக்கு எடுத்து ஊட்டு.
4.இந்த உலகம் மறையும் முன் மக்களைக் காக்க வேண்டும் என்றார் குருநாதர்

உனக்குள் மக்களின் உணர்வுகள் உண்டு. அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வை நீ எடுத்துக் கொண்டால் அந்த மகிழ்ச்சி என்ற உணர்வு வருகின்றது.

அதனால் நீயும் ஒளியாகின்றாய். கேட்போரும் ஒளியாகின்றார்கள். பிறவி என்ற நிலையை அகற்றுகின்றாய். அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை அமைகின்றது.

பேரருளை உனக்குள் வளர்த்துவிடு. எல்லோரையும் பேரின்பம் பெறச் செய். அதுவே உனக்குள் பேரானந்தப் பெரு நிலையாக ஏகாந்த நிலை அடைய உனக்கு உதவும் என்று கூறினார்.

அதன் வழி கொண்டு தான் உங்களுக்குள் இருளை அகற்றும் அருள் ஒளியைப் பாய்ச்சி உங்கள் நினைவு கொண்டு மாற்றிக் கொள்ளும் சக்தியாகக் கொடுப்பது.


உங்கள் மனது பெறுவதற்கே தியானித்து அருளைப் பெறச் செய்கின்றோம். இருளை அகற்றும் சக்தியாக அந்த அகஸ்தியரைப் போன்ற “மகா ஞானியாக “நீங்கள் மாறவேண்டும்.

May 15, 2017

உணர்ச்சிவசப்படாமல் பதட்டப்படாமல் நம் காரியங்களை எப்படிச் சாதிப்பது...?

1.ஒரு இயந்திரத்தை இயக்கப்படும்பொழுது
2.சந்தர்ப்பம் வரும்பொழுது எது எதை எந்தந்தக் காலத்தில் இணைத்தால் அது வலுப்பெறும் என்ற நிலையை
3.மனிதன் இன்று அனுபவ ரீதியில்தான் அதைக் காணுகின்றான்.

இதைப்போன்றுதான் ஒரு உணர்வின் தன்மை தாக்குகின்றது என்றால் அந்த உணர்வின் தன்மை நினைவிற்கு கொண்டு வருகின்றோம்.

ஒருவர் திரும்பத் திரும்பச் செய்கின்றார். ஆனால் “அது முடியாது போகின்றது.

ஒரு இயந்திரம் ஒரு நூல் (ALIGNMENT) சாய்ந்திருக்கும். நமக்குப் புரியாது. அதில் பேரிங் (BEARING) போட்டிருப்போம். எந்தப் பக்கம் அழுத்தமாகின்றதோ அங்கு வெப்பம் ஆகின்றது நாம் அதைத் தொட்டுப் பார்த்தாலும் அது தெரியவில்லை.

மனிதனில் இது செயல்படும் பொழுது
1.“என்ன செய்தாலும் ஆகவில்லை என்ற உணர்வுகளை  எடுத்துக் கொண்டு “அளவுகோல் பார்த்தால்
2.நம் உணர்வுக்குத் தக்க
3.சரியாகத்தான் இருக்கின்றது என்று நினைப்போம்.

இதைப் போன்று உணர்வின் அழுத்தத்திற்கொப்ப, “சரி என்று ஏற்றுக்கொள்ளும் பருவம், வருகின்றது.

1.சிறிது சிந்தித்து
2.இதனுடைய நிலைகளை “எப்படியும் கண்டுணர வேண்டும் என்ற உணர்வினைக் கூட்டினால்,
3.அந்தச் “சிறு தவறை கண்டுகொள்ள முடிகின்றது.

அந்த இயந்திரத்தில் பேரிங் (BEARING) ஓடும் இடத்தில் எந்த பக்கம் வெப்பம் அதிகமாக இருக்கின்றது? எந்த பக்கம் வெப்பம் குறைவாக இருக்கின்றது? என்று சிந்தனை வரும்.

அப்பொழுது இந்தப் பக்கம் அழுத்தம் அதிகமாக இருக்கின்றது, இதை மாற்றி அமைத்தால், “சரியாக வரும் என்ற சிந்தனை வரும்.

மனிதனின் வாழ்க்கையில் நுண்ணிய நிலைகள் உண்டு.

இதைத் தெரிந்து கொண்டபின் வாழ்க்கையில் தன் வலிமையின் எண்ணம் கொண்டவர்கள் ஞானியாகி விடுகின்றனர்.  சந்தர்ப்பத்தில், உணர்வின் வலிமை கொண்டு அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றனர்.

தியான வழிகளில் உள்ள அன்பர்கள் சில சந்தர்ப்பங்களில்
1.எண்ண வலுவைக் கூட்டும் பொழுது
2.உண்மையின் நிலையையும்
3.வாழ்க்கையில் எது வந்தது? என்றும் சிந்தித்துக் கண்டுணர முடியும்.
4.மாறாக, “உணர்ச்சி வயப்படுவதில்லை.

இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால்.., பள்ளியில் பாடங்களைப் பயின்றாலும் அளவுகோலைக் காட்டி அனுபவத்தைக் கொண்டு வருகின்றனர்.

பாட நிலையை மட்டும் படித்துவிட்டுச் செயல்படுத்துவதில்லை.

சோப்பு செய்ய இன்னென்னவைகளைக் கலந்தால் சோப்புக் கட்டி உருவாக்கலாம் என்று சொல்லுவார்களும். புத்தகங்களிலும் போட்டிருக்கும்.

அதையெல்லாம் படித்தபின்..,  நான் எல்லாம் தெரிந்து கொண்டேன் என்று சரக்குகளை வாங்கி வந்து நாம் செய்தால் எப்படி இருக்கும்.

அதில்,
1.எதை முதலில் சேர்ப்பது?
2.எதை இடையில் சேர்ப்பது? என்று இருக்கும்.
3.அப்படிக் கரைத்தாலும் அதனைக் காய்ச்சும் முறை ஒன்று உண்டு.
4.காய்ச்சும் போது வெப்பத்தைக் கொடுக்கும் நிலைகள் உண்டு. அந்த விறகை வைத்து எரித்து வெப்பத்தைக் கொடுப்பதிலும் சில பக்குவம் உண்டு.

அதிலும் கேவன் விறகிலும் நெருப்பு தெரியும். ஆனால், அழுத்தம் குறைவு சீக்கிரம் வேகாது. முருங்கை மரத்தின் விறகில் வெப்பத்தின் தன்மை குறைவு.

சோப்பு உருவாக்குவதென்று இதிலே போனால் அழுத்தம் குறையும், சோப்பின் தன்மை பதம் கெட்டுவிடும். நீண்ட நேரம் ஆகும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து இணைத்துச் செயல்படும் நிலைகள் இல்லாது கட்டி உறையாது.

இதெல்லாம் நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவேண்டிய நிலைகள்.

ஏனென்றால் இதைப்போல சந்தர்ப்பத்தை உருவாக்கி வாழ்க்கையில் வரும் தன்மையை
1.நீங்கள் திறமைசாலியாக வரக்கூடிய அனுபவத்தை உங்களுக்குள் நினைவாக்கும் பொழுது,
2.”உற்றுப் பார்த்தால் நினைவு வருகின்றது.
3.பிழைகளிலிருந்து மீளச் செய்கின்றது.

தீமைகளிலிருந்து.., கஷ்டங்களிலிருந்து.., வேதனைகளிலிருந்து.., சிக்கல்களிலிருந்து.., வரும் அபாயங்களிலிருந்து.., மீளக்கூடிய சந்தர்ப்பமாக
1.மறைந்த நிலைகளை அறியும் நுண்ணறிவாக
2.ஞானத்தை ஊட்டும் நிலைகள் வருகின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு ஞானியும் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட “சந்தர்ப்பம்,” தான் சந்தித்த அந்தக் கடுமையான நிலைகளிலிருந்து எப்படியும் மீள வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரும் பொழுது தான் எல்லாவற்றையும் அறிந்துணரும் அறிவாக அவர்களுக்குள் வருகின்றது.


அவர்களைப் போன்றே நாமும் பேருண்மைகளை அறிய முடியும் “அறிய வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

“மற்றவர்களுடைய ஆசை வார்த்தையில்” நாம் சிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்...?

ஒருவர் மிகவும் மோசமானவர். வாயினால் அழகாகப் பேசுவார். அப்படி அழகாக மகிழ்ச்சியான நிலைகளில் அவர் பேசுவதை “நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

அவர் ஏமாற்றுவதை இன்னொருவர் தெரிந்து வைத்திருக்கிறார்.

ஏன் அவர் வலையில் போய் சிக்குகின்றீர்கள்? உங்களை அவர் “ஏமாற்றிவிடுவார்!” என்று நம்மிடம் சொல்கின்றார்.

முதலில் சொன்னவர் உணர்வு வந்த பின் இவர் என்ன சொன்னாலும் “ஏமாற்றுவதற்குத்தான் சொல்கின்றார் என்று எண்ணுகின்றோம். இரண்டாவது சொல்பவர் “அனுபவப்பட்டவர் நம்மிடம் வந்து சொல்கின்றார் என்று எண்ணுவதில்லை.

அதற்குப் பதில் அவரைக் குற்றவாளியாக்குகின்றோம்.

பார், அவரிடம் நட்பாக இருக்கின்றோம். பொறாமையால் பிடிக்காத நிலைகளில் “இப்படிச் சொல்கிறார்…” என்று எண்ணுகின்றோம்.

நம்மைக் காப்பதற்காகச் சொன்னாலும் அவரிடம் உங்களை எப்படியெல்லாம் சொல்லுகின்றார்! என்று (முதலமாவரிடம்) சொல்லி விடுகின்றோம்.

ஆனால் சொல்லி ஏற்றுக் கொண்டு சிந்தித்துப் பார்க்கின்றோமா? என்றால் இல்லை. அந்த உணர்வை உடனே வெளிப்படுத்துகின்றோம்.

அவர்களுக்குள் தீமை செய்யும் உணர்வுகளே விளைந்து இருக்கின்றது. (நாம் தவறு செய்யவில்லை).

ஆனால் அவரின் இனிமை நமக்குள் விளைந்து விட்டால், பின்னாடிதான் “அதிலே சிக்கிவிட்டோம் போல் இருக்கிறது,” என்று தெரிகின்றது.

இதை நாம் எப்படி மாற்றுவது? ஏமாற்றுபவர்களிடம் சிக்காமல் இருக்க வழி வேண்டுமல்லவா!

உதாரணமாக ஒரு புலி ஒரு மானைப் பார்க்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்த மானைப் பார்த்தவுடன் அமைதி கொண்டதாகவே இருக்கின்றது. தன்னருகிலே இருப்பதை உற்றுப் பார்ப்பதில்லை.

வெகு தூரத்தில் இருக்கும் மானைப் புலி குறி வைக்கிறது. அதைப் பதிவு செய்துவிட்டதென்றால் அதன் மேல் எண்ணம் வருகின்றது.

பக்கத்திலிருப்பதை நின்று வேடிக்கை பார்க்கின்றது. ஆனால், தூரத்தில் இருப்பதை உற்றுப் பார்க்கும் பொழுது அந்த மான் ஓட ஆரம்பிக்கின்றது.

மானிற்கு இந்த உணர்வின் ஒலி பட்டபின் உணர்வின் அறிவு உன்னைக் குறி வைக்கின்றது என்று உணர்த்துகின்றது. உடனே அது ஓட ஆரம்பிக்கின்றது.

1.புலியோ பக்கத்தில் இருக்கின்றதைப் பிடிக்காதபடி
2.தூரத்தில் இருப்பதைத் துரத்திச் செல்கின்றது.
3.அந்த உணர்வின் வலு எதுவோ அதனைத்தான் துரத்துகின்றது.
4.இதைப் போலத்தான் நாம் எதனைப் பதிவு செய்கின்றோமோ
5.அந்த உணர்வின் “நினைவாற்றல்தான் நம்மை இயக்குகின்றது.

ஆகையினால் நாம் பக்கத்தில் இருப்பதையெல்லாம் விட்டுவிட்டு, அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் இது நம்மை ஒன்றும் பாதிக்காது.

அகஸ்திய மாமகரிஷி நஞ்சினை வென்றிடும் ஆற்றலை தன் தாய் கருவிலேயே பெற்றார். அவர் மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக்கி உயிருடன் ஒன்றச் செய்த அலைகள் இன்றும் உண்டு.

அவைகளை நாம் நுகர்ந்தால் அந்த எண்ணம் வரப்படும்போது நம் உடலிலே நுகர்ந்த தீயவைகளுக்கு எமனாக ஆகின்றது. தீயவைகளைக் கொல்லக்கூடிய நரசிம்ம அவதாரம் ஆகின்றது.

நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வந்து அதை நாம் அறிந்து கொண்டாலும் தீமை என்று அறிந்தபின் மகரிஷிகளின் அருள் சக்தியை இந்த முறைப்படி உள்ளே நுகர்ந்து அதைப் பிளத்தல் வேண்டும்.

ஆனால் இதைப் பிளப்பதற்கு, “நுகரும் ஆற்றல் அந்தச் சக்தி வேண்டும். அந்த சக்தி இல்லையென்றால் நாம்  நுகர முடியாது.

அந்த உணர்வின் சத்தை நுகர்வதற்கு என்ன வழியோ அதைத்தான் உங்களிடம் யாம் “பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

1.குருநாதர் எமக்கு அப்படித்தான் சொன்னார்.
2.சொல்லி அதைப் பதிவு செய்தார்.
3.அது மாதிரிதான் உங்களிடம் பதிவு செய்கின்றேன்.
4.யாம் பதிவு செய்வதை நீங்கள் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்.

வெகு தொலைவில் இருக்கக்கூடிய அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டால் இங்கே இந்தப் பூமியில் உள்ள உணர்வுகளின் ஈர்ப்புக்குள் நாம் சிக்க மாட்டோம். அந்த உணர்வுகள் நம்மிடம் மோதினால் நமக்குள் வராது விலகிச் செல்லும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.