ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 29, 2012

தியானம் செய்வதன் நோக்கம்

இன்றைய உலக நிலை
இன்றைய விஞ்ஞான உலகில், உலக மக்கள் நலம் பெற, மகிழச் செய்ய, விஞ்ஞான அறிவால் பற்பல நன்மைகள் செய்து வந்தாலும், விஞ்ஞான அறிவால், வான மண்டலத்தில், “ராக்கெட்டுகளை” ஏவி வெடிக்கச் செய்து, வான மண்டலத்தில் நச்சுத் தன்மை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பூமியில் அணுகுண்டுகளை வெடிக்கச் செய்தும், அணுக்கதிரியக்கங்களைப் பரவச் செய்தும், இயந்திரங்களை இயக்கச் செய்ய அணுக்கதிரியக்கங்களைப் பயன்படுத்தி, காற்று மண்டலத்தில், நச்சுத் தன்மைகளைப் பரவச் செய்தும், பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தூவி, பூச்சிகளைக் கொல்ல எண்ணி, காற்றையே நச்சாக்குகின்றனர், விஞ்ஞானிகள்.

ஞானியர்கள் உபதேசித்த வழியில், நல்லதையே செய்து, நல்வழியில் நடந்து, நல்ல நிலைகளைப் பெற எண்ணி, வாழ்ந்து வந்தாலும், விஞ்ஞானிகளால் பரவச் செய்த, நச்சுத் தன்மைகளை உலக மக்கள் அனைவரும் சுவாசிக்க நேருவதால், மனிதர்களின் உடல்களில் பதிந்துள்ள, நல்ல குணங்களைத் தூண்டச் செய்யும் நல் உணர்வுகளின் அணுக்களில், சுவாசித்த நச்சுத் தன்மைகள் கலந்துவிடுகின்றன.

அதாவது, விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால், எவ்வாறு கடுகடுப்பாகின்றதோ, அதைப் போன்று நற்குணங்களின் உணர்வுடன் பேசினாலும், சொல்லில் கடுகடுப்பாக வார்த்தைகள் வெளிப்படுகின்றன. இதைப் போன்று, தன்னையறியாது கோபம், குரோதம், வெறுப்பு, வேதனை போன்ற எண்ணங்கள் தோன்றுகின்றன. அது மட்டுமல்லாமல், சாதாரண மனிதர் முதல் விஞ்ஞானி வரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டிவிடுகின்றன.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாவையும், காற்றிலுள்ள நச்சுத் தன்மைகள் உருக்குலையச் செய்து, மறு ஜென்மம் மனிதனாகப் பிறக்க தகுதியிழந்து, விஷப் பூச்சிகளாகப் பிறக்கச் செய்து விடுகின்றன.

இன்று, நாம் மனிதன் என்ற நிலை பெற்று இருந்தாலும், மீண்டும் மீண்டும், இப்பூமியில் சுழன்று கொண்டிருக்கும் இருளான உணர்வுகளையே நுகர்ந்து, அதற்குரிய உடல்களைப் பெற்றும், இப்பூமிக்குள்ளேயே, செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 
நமது அன்றாட வாழ்க்கை
காலை செய்திதாள்களைப் படிக்கின்றோம். செய்தித் தாள்களில் உள்ள விபத்து மற்றும் தீமையான செய்திகளைப் படிக்கின்றோம். அதை நுகர்கின்றோம். எதிர்மறையான உணர்வுகளுடன் நம்மிடம் பேசுபவர்களாலும், வேதனையான உணர்வுகளையும், மற்றும் வெறுப்பு, சலிப்பு, சங்கடமான உணர்வுகளையும், நாம் விரும்பாவிட்டாலும், சந்தர்ப்பங்களால் நாம் நுகர வேண்டியிருக்கின்றது.

நம்மை ஒருவன் திட்டுகிறான். நடைமுறை வாழ்க்கையில் நாம் வலிமை கொண்டவராக இருந்தால், “இரு உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்கிறோம். வலிமை குறைந்தவர்களானால், வெறுப்பையும், வேதனையையும், நுகர்கின்றோம்.

விபத்துக்களைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, வேதனை அடைகின்றோம். பய உணர்வுகளை நுகர்கின்றோம். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. எதிர்மறையான உணர்வுகளால், குழந்தைகள் நன்றாகப் படிக்காவிட்டால் வேதனைப் படுகிறோம். குடும்பத்தில் ஒற்றுமை இல்லாவிட்டால், வேதனைப்படுகின்றோம்.

பிறிதொருவர் சாபமிடுவதை, அந்த வேதனையான உணர்வுகளை நுகர்கின்றோம். பார்க்கவும் கேட்கவும் ஏற்படும் நிலையில், உணர்ச்சிவசப்படுகிறோம். உடல் நடுக்கமாகிறது.

இப்படி, காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ விதமான உணர்வுகளையும் எண்ணங்களையும் சந்திக்கின்றோம், பார்க்கின்றோம், நுகர்கின்றோம், சுவாசிக்கின்றோம். ஆனால், இதையெல்லாம் நாம் சந்தர்ப்பத்தில் சந்தித்தாலும், விரும்பி எடுத்தாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி அது அனைத்தும் நமக்குள் இணைந்து விடுகின்றது.

இதை நாம் அறிந்திருக்கின்றோமா?, உணர்ந்திருக்கின்றோமா? இவ்வாறு நாம் சுவாசிக்கும் இந்த உணர்வுகள், நம்மை என்ன செய்யும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்கின்றோமா?
நம் உயிரின் இயக்கம்
நாம் எண்ணியவற்றை, நாம் நுகர்ந்ததை நமது உயிர் நம் உடலுக்குள் இணைக்கின்றது,  நமது உயிர் எலெக்ட்ரிக், நாம் நுகரும் உணர்வுகள் நமது உயிரில் மோதி, எலெக்ட்ரானிக்காக இயங்குகின்றது. அதாவது, நாம் நுகர்ந்த உணர்வுகள், நம்முள் எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் என்ற நிலையில், நம் உடலை இயக்குகின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட நம் உயிர், உடலில் புருவ மத்தியில் இருந்து, இயங்கிக் கொண்டுள்ளது. நமது உயிர் ஒன்றுதான், நமக்குச் சொந்தமானது. இந்த உடல் உயிரால் உருவாக்கப்பட்டதுதான். நமது உயிர், நாம் நுகரும் உணர்வுகளை (நாம் சுவாசிக்கும் உணர்வுகள்) அணுவாக உருவாக்கிக் கொண்டே உள்ளது, அந்த அணுவின் மலம்தான் உடலாகின்றது.

உயிர் சந்தர்ப்பவசத்தால்,  உடலை விட்டுப் பிரியும் நேரம்உடல் தான் இறக்கின்றது. உயிர் பரமாத்மாவில் (பூமியின் காற்று மண்டலத்தில்) கலந்து, சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப, மறு உடல் பெறுகின்றது. உணர்வுகள் அழிவதில்லை, உணர்வுகள் மாறிக்கொண்டேதான் உள்ளது. ஆனால், உயிர் என்றுமே அழிவில்லாத இயக்கம். அதை அறிந்து, புரிந்து, உணர்ந்து, முதல் பாடமாக நமக்குள் பதிய வைத்துக் கொண்டால்தான், மற்ற பாட நிலைகள் தெளிவாகும்.

மகரிஷிகள், ஞானிகள் பெற்ற நிலை
உயிரின் இயக்கத்தை அறிந்தவர்கள், அணுவின் இயக்கத்தை அறிந்தவர்கள், அணுவின் ஆற்றலைப் பெற்றவர்கள், உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரம் பெற்றவர்கள்தான், நமது மெய்ஞானிகள். அவர்கள் அனைவரும், நம்மைப் போன்று, இந்த பூமியில் மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தான்.

அவர்கள், தம் உணர்வுகள் அனைத்தையும் உயிரோடு ஒன்றச் செய்து, ஒளியாக மாற்றி, அழியாத நிலையாக, வேகா நிலை என்னும் நிலை அடைந்து, என்றும் பதினாறு என்று, கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றி, ரிஷி, ரிஷிபத்தினி என்று குடும்பங்களாக, ஒளி உடல் பெற்று, இன்றும், நம் பூமியின் வடக்குப் பகுதியில், விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும், அதைப் பின்பற்றியவர்கள் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில், சப்தரிஷி மண்டலங்களாகவும், ஏகாந்த நிலைகள் கொண்டு, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
நாம் அடைய வேண்டிய நிலை
மனிதனாகப் பிறந்தவர்கள் நாம் அனைவரும், அடைய வேண்டிய எல்லை சப்தரிஷி மண்டலம்தான். இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. நம் உயிர்தான், நமக்குச் சொந்தமானது. இந்த உடலுக்காக வாழாமல், நம் உயிருக்காக, நாம் வாழ்ந்தோமென்றால், நம் பூமியில் வாழ்ந்த நம் முன்னோர்களான, மெய்ஞானிகளும், மகரிஷிகளும், தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளையும், இன்னல்களையும் எப்படி நீக்கினார்களோ, அந்த இயற்கையின் வழியில், நாமும் வாழலாம்.

இன்றைய விஞ்ஞானத்தின் பேரழிவிலிருந்து, நம்மைக் காக்கலாம், நம் குடும்பத்தைக் காக்கலாம், நம் ஊரைக் காக்கலாம், நம் நாட்டைக் காக்கலாம், உலக மக்கள் அனைவரையும் காக்கலாம், நம் தாய் பூமியைக் காக்கலாம், இந்த பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்கலாம். இதுதான் மனிதனின் வீரியத்தின் உண்மை,

அகண்ட அண்டத்திலே உருவான படைப்புகளிலேயே, உயரிய படைப்பான, மனிதன் ஒருவனுக்குத் தான், இத்தகைய நிலை பெறக் கூடிய தகுதி உண்டு. இதுவெல்லாம், நம் மகரிஷிகள் கண்ட பேருண்மைகள்.

அகஸ்திய மாமகரிஷி, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

நம் பூமியில், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன், துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான அவன் தான், நம் பூமியிலிருந்து முதன் முதலில் ஒளிச்சரீரம் பெற்று, விண்ணுக்குச் சென்றது.

நாம் இன்றும் “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று யாரைப் போற்றி வணங்கிக் கொண்டிருக்கின்றோமோ, அந்த அகஸ்தியன் தான், நமது பூமியை ஒரு காலம் சமப்படுத்தினான். இன்றும், இந்த உலகில் அருள்ஞானம் அனைத்தையும், நமக்கு வழி காட்டிக் கொண்டிருப்பது, அந்த துருவ நட்சத்திரம் தான்.

அந்த துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்றவர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அவர் தமக்குள் பெற்ற இந்த பேருண்மைகளை ஞானகுரு வேணுகோபால் சாமிகள் அவர்களுக்கு உபதேசித்து, அவரையும் அந்த ஆற்றல்களைப் பெறச் செய்தார். ஞானகுரு அவர்கள், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் ஒன்றை அமைத்து, அதன் மூலமாக இந்த உலக மக்களுக்கு, மகிழ்ந்து வாழும் வழி முறைகளையும், இந்த உடலுக்குப் பின், ஒளிச்சரீரம் பெற்று, விண் செல்லும் முறைகளையும் உபதேசித்துள்ளார்கள்.
நமது ஞானகுரு காட்டிய அருள் வழி
நாம் அனைவரும் அவர் காட்டிய வழியில், ஒவ்வொரு நொடிப்பொழுதும், தியானத்தையும், ஆத்ம சுத்தியையும் கடைப்பிடித்து, தபோவனத்தில் வெளியிடப்பட்டுள்ள உபதேச ஒளி, ஒலி நாடாக்கள் (VCD, CD)  மற்றும் அருள் ஞானப் புத்தகங்களை அடிக்கடி படித்து, கேட்டு நமக்குள் பதிவு செய்தோமென்றால், இந்த வாழ்க்கையில் எத்தகைய கடுமையான இன்னல்கள் வந்தாலும், அதை மாற்றியமைக்கக் கூடிய ஆற்றல்களை நாம் பெற முடியும், நம்மைச் சார்ந்தவர்களையும், நாம் அதைப் பெறச் செய்ய முடியும்.

இது, நம்மை உருவாக்கிய நமது உயிரான ஈஸ்வரனுக்கும், ஒவ்வொரு மனிதனின் உயிரான ஈஸ்வரனுக்கும், செய்யக் கூடிய சேவையாகும். அதன் பணியாக, நாம் அனைவரும் ஒளிச்சரீரம் பெற முடியும். இந்த மனித வாழ்க்கையில், நாம் எப்பொழுதும் மகிழ்ந்து வாழமுடியும். நம் பார்வையால், சொல்லால், செயலால், அனைவரையும் அருள் வழியில் மகிழ்ந்து வாழச் செய்ய முடியும். இதுதான், ஞானிகள் காட்டிய மனித நேயம்.
தியானம்
இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், ஞானிகள், மகரிஷிகள் தங்கள் உடலில் விளைய வைத்த, ஆற்றல் மிக்க அருள் சக்திகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு, இன்றும், நமக்கு முன்னால், இந்த பூமியில் சுழன்று கொண்டுள்ளது. அந்த அருள் சக்திகளை, நாம் பெறும், நமக்குள் சேர்க்கும் சந்தர்ப்பமே தியானம்.

மேலும் அந்த மகரிஷிகள் தங்கள் புலன்களாலே பல நறுமணமான மணங்களை தங்களுக்குள் சேர்த்து, அதை சமைத்து, விளைய வைத்து, வெளிப்படுத்தியுள்ளார்கள். அந்த அருள் மகரிஷிகளின் மணங்களை, நமக்குள் நுகரும் சந்தர்ப்பமும், இந்த தியானம்தான்.

நம்மிலே பலர், தியானம் என்றாலே, மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை (concentration), என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காகவும், அதன் மூலமாக தீமைகளை நீக்கிடும் ஆற்றல் மிக்க சக்திகளை நமக்குள் வளர்ப்பதற்காகவும் தான், நாம் தியானமே செய்கின்றோம் என்பதுதான் உண்மை.

மேலும், இந்த தியானத்தையும் ஆத்ம சுத்தியையும், நமது வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம் தீமையான உணர்வுகளை சந்திக்கின்றோமோ, பார்க்கின்றோமோ, கேட்கின்றோமோ, அப்பொழுது கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து, அவ்வப் பொழுது நமக்குள் சேரும் தீமைகளைத் துடைக்கும் நிலைதான், இந்த தியானம்.

இவ்வாறு, தொடர்ந்து நாம் தியானித்து வரும் பொழுது, அந்த மகரிஷிகள் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகள், நமக்குள் சிறுகச் சிறுகச் சேரும். நம் வாழ்க்கையையே தியானமாக்கும் பொழுது, அகண்ட அண்டத்தில் வரும், எத்தகைய தீமைகளிலிருந்தும் நாம் விடுபட முடியும். பிறவியில்லா நிலை அடைய முடியும்.
தியானம் செய்யும் முறை
புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்கி, தாய் தந்தையரை வணங்கி, ஞானகுரு, சற்குரு, சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி, ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள, அருள் ஞானிகளின் அருள் உணர்வை, எண்ணி ஏங்கி, கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்கி, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவிச் செலுத்தி,  நமது கண்களின் காந்தப் புலனறிவால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து, ஈர்த்து, உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து, உயிர் வழி நுகர வேண்டும். 

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா, ஜீவ அணுக்கள், என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என எண்ணி, நம் உடலுக்குள் அலை அலையாகப் படரச் செய்யவேண்டும்.

மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நன்கு ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனை, துருவ தியானத்தின் மூலமே பெற முடியும். அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நாம் நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் உள்ள அனைத்து அணுக்களுக்கும், உணவாகக் கொடுக்கும் பொழுது, எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளியின் சுடராக மாற்றிவிடும்.
துருவ தியானம்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும் என்று, நாம் ஏங்கி ஆசைப்பட்டு, காலை பிரம்ம முகூர்த்த வேளையில், நாம் அறிவின் ஞானம் கொண்டு, தியானிக்க வேண்டும். பிரம்மம் என்றால் உருவாக்குதல். முகூர்த்தம் என்றால் இணைத்தல்.

பிரம்ம முகூர்த்த வேளை என்பது, அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை. அந்த நேரத்தில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் பூமியில் நேரடியாகப் பரவும். அந்த நேரத்தில் தியானித்து,  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வினை, நமக்குள் பிரவணமாக்க (இயக்கமாக்க) வேண்டும்.
கூட்டுத் தியானத்தின் பலன்
மழைக் காலங்களில், சிறு துளிகளாக மழை பெய்து, பெரும் வெள்ளமாகத் திரண்டு ஓடுகின்றது. அப்பொழுது, குப்பை கூளங்களையும், அசுத்தங்களையும் அடித்துச் செல்லுகின்றது. அதைப் போன்று, அதிகம் பேர் ஒன்று சேர்ந்து, ஓர் இடத்தில் அமர்ந்து, “துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியைப் பெறவேண்டும்” என்ற ஒரே உணர்வின் எண்ணம் கொண்டு, அனைவரும் தியானத்தில் ஈர்ப்பதினால், கூட்டுத் தியானத்தில் அமர்ந்துள்ள அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் அதிக அளவில் பெறுகின்றனர்.

அதனால், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும், தன்னையறியாமல் சேர்ந்துள்ள தீய சக்திகளும், தீய உணர்வுகளும் மாய்ந்துவிடுகின்றன. ஆகையால், சஞ்சலம் நீங்குகின்றது. மனம் அமைதியாகின்றது. நல்ல எண்ணங்களின் உணர்வுகள், வலுப் பெறுகின்றன. உயிராத்மாவும், ஒளி நிலை பெறும் ஆற்றலைப் பெறுகின்றது.

ஆகவே, வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானமிருப்பது அவசியம். தனித்து தியானத்தில் இருந்து, சஞ்சலத்தைப் போக்க முடியாதவர்கள், கூட்டுத் தியானத்தில் கலந்துகொள்வதால், சஞ்சலத்தைப் போக்கிவிட முடியும். மன அமைதியும் கிடைக்கும்.

நாம் பிறரைப் பார்க்கும் பொழுது, அவர்களும் மன அமைதி பெறுகின்றனர். நாம் தொட்டுக் கொடுக்கும் பொருள்களில், நல்ல மணம் இருப்பதனால், வியாபாரம் நல்லவிதமாக அமைய, நம் மனமே உதவுகின்றது. மன அமைதி பெறுவதால், தொழில் செய்யும் பொழுது, சிந்தித்துச் செயல்பட முடிகின்றது. உயிராத்மாவும், ஒளி நிலை பெறும் ஆற்றல் பெறுகின்றது.
பௌர்ணமி தியானத்தின் பலன்
நமது குருநாதர் காட்டிய முறைப்படி, பௌர்ணமி தியானமிருக்கும், அனைத்து ஆத்ம ஐக்கிய அன்பர்களின் எண்ணங்களையெல்லாம், ஒன்று சேர்த்துக் குவித்து, ஒரு இலட்சம் பேர் தியானிக்கின்றோம் என்றால், தியானித்த ஒவ்வொருவருக்கும், அந்த ஒரு இலட்சம் பேருடைய சக்தி கிடைக்கின்றது. அச்சமயம், நமக்கு சக்தி, அதீத நிலைகளில் கூடுகிறது.

நமது குருநாதர் காட்டிய முறைப்படி, நீங்கள் அனைவரும் தியானமிருக்கும் பொழுது, யாம் (ஞானகுரு) அச்சமயம் தியானமிருக்கிறோம். அந்த நேரத்தில் உங்களுக்கு சக்தி கூட, நமது குருநாதர் காட்டிய நெறிப்படி, உங்கள் உயிராத்மாவைப் பிரார்த்தித்து, அந்த சக்தியை நீங்கள் பெற, எம்மால் உதவ முடிகின்றது.

ஆகவே, பௌர்ணமி தியானத்திலே உங்களுக்கு இந்த சக்தி கூட, யாம் உதவுவதால், அந்த நேரத்தை விரயம் செய்யாது, நீங்கள் தியானமிருந்து பயனடையுங்கள். இந்த பௌர்ணமி தியானத்திலே, உங்களுக்கு வாழ்க்கையில், வழியறிந்து செயல்பட ஞானம் கிடைக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவதால், நமது உயிராத்மாவில், ஒளி பெறும் அணுக்களும் வளர்கின்றன.

நம் முன்னோர்கள், மூதாதையர்களின், உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள், ஒளி சரீரம் பெற உதவுகின்றோம். அதே சமயம், சப்தரிஷி மண்டலங்களின் பேரருளையும் பேரொளியையும், நாம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

நலம் பெறுக ! வளம் பெறுக !
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உலக மக்கள் அனைவரும் பெற தவமிருப்போம். !

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்
புஞ்சை புளியம்பட்டி – 638 459
ஈரோடு மாவட்டம்
தமிழ் நாடு
இந்தியா
தொலை பேசி – 04295 267318