ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 24, 2012

ஆத்ம ஜோதி


DSC00163.JPG         DSC00160.JPG

சாமி புத்தகம்  ஆத்ம ஜோதி
(பக்கம் 3-9)

முக்காலத்தையும் அறிந்த ஞானிகள்,
முந்தைய செயலால் இன்றைய மனித சரீரம்
என்று பெற்ற  மனிதனின்,
இன்றைய செயல், எப்படி இருக்க வேண்டும்?
என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக, உயிரணுவின் வளர்ச்சியைக் காண்டங்களாக பிரித்தார்கள்.

அறுபது வருடம், ஒரு காண்டம். இந்த அறுபது வருடங்களில், ஊர்வன, பறப்பனவாகப் பல கோடி சரீரங்களைப் பெற்று, இன்று உயிர் மிருக நிலைகளிலிருந்து, மனிதனாக உருவாக்கிய நிலைகள் கொண்டது, ஒரு காண்டம். இது முதல் காண்டம்.

அறுபது நொடிகள் கொண்டது, ஒரு நிமிடம். அறுபது நிமிடங்கள் கொண்டது, ஒரு மணி என்று கணக்கிடுகிறார்கள். இராகு, கேது போன்றவைகள், விஷத்தன்மையால் இயங்குவது என்பதைக் காரணம் காட்டி, அவைகளை ஒதுக்கி விட்டு, மற்ற கிரகங்களின் பெயர்களை, நாட்களுக்குச் சூட்டி, ஏழு நாள் கொண்டது, ஒரு வாரம் என்றார்கள். மற்றும் 27 நட்சத்திரங்களின், அடிப்படையில் மாதங்களை வைத்தனர்.

இதனின் அடிப்படையில், பிற்காலத்தவர்கள் தங்கள் மதங்களுக்கு ஏற்றவாறு, சட்டங்களையும், சாஸ்திரங்களையும் மாற்றிக் கொண்டார்கள். 27 நாட்களைக் கூட்டி, வருடங்களாகவும், வருடங்கள் முடியும் பொழுது, எதில் தொடங்கியதோமறுபடியும் அதிலிருந்தே தொடங்குகின்றது.

இவ்வாறு, இந்த அறுபது வருடங்களில், உயிரில் உணர்வின் மாற்றங்கள் விளைந்து, மனிதனாகும் நிலை பெறுவதை, முதல் காண்டமாக உணர்த்தி, இந்த மனித சரீரத்தில் வாழ்கின்ற வாழ்க்கையை, இரண்டாவது காண்டமாகக் காண்பித்தனர், ஞானிகள்.

யானையின் சிரசை மனித உடலில் பொருத்தி, மிருக நிலையிலிருந்து மனித சரீரத்தைப் பெற்றோம் என்று, இதை முதல் காண்டமாகக் காண்பித்து, வினைகளுக்கெல்லாம் நாயகனாக, விநாயகனாக, மனித சரீரத்தை உருவாக்கியது உயிர்.

மனித உடலில் கணங்கள் அனைத்தையும் இயக்குவது, உயிர்தான். கணங்களுக்கு அதிபதியாக இருப்பதும், உயிர். இந்த உயிரால், அனைத்தையும் செயலாக்கும் ஆற்றலாக, மனித உடலைப் பெற்றோம் என்பதை, விநாயகர் தத்துவம் மூலம் நமக்கு நினைவுபடுத்தி, நிகழ்காலமான இந்த இரண்டாவது காண்டத்தில்தான், மனிதன் தீமைகளை வென்று, உணர்வினை ஒளியாக்கும் திறனைப் பெற்றிருக்கிறான், என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

னித உயிரான்மா, அழியா ஒளிச்சரீரம் பெறுவது மூன்றாவது காண்டம். அது என்றும் நிலையானது. காலவரம்பற்றது. 

ஆக, இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று, முக்காலங்களையும் ஞானிகள் நமக்குக் காண்பித்து, ஐந்து புலனறிவு, ஆறாக இயங்கும், இந்த மனித சரீரத்தைப் பெற்றிருக்கின்றோம், என உணர்த்தியுள்ளார்கள்.

நன்மை தீமைகளை அறிந்துணர்ந்து, தீமைகளை அகற்றி, நன்மைகளைப் பெருக்கிடும் நிலைகள் கொண்டது, நமது நிகழ்காலம் எனக் காண்பித்து, ஆறு புலனறிவு கொண்ட நிகழ்காலத்திலிருந்து, மீண்டும் ஐந்து புலனறிவு கொண்ட உயிரினப் பிறவிக்குச் சென்றிடாமல், ஏழாவது நிலையான உயிருடன் ஒன்றும் உணர்வினை, ஒளி பெறும் உணர்வாகச் சேர்த்து, சப்தரிஷி என்ற நிலை பெறுவதே, மூன்றாவது காண்டம் என உரைத்தனர் ஞானிகள்.

ஞானிகள், இப்புவுலகில் வாழ்ந்த காலத்தில்,
விண்ணின் ஆற்றலை தனக்குள் சேர்த்து,
உணர்வினை ஒளியாக மாற்றி,
இரண்டாவது காண்டத்தை நிறைவு செய்து,
மூன்றாவது காண்டமாக, சப்தரிஷி மண்டலங்களாக,
வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.


அவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள், இன்றும் நமது பூமியில், படர்ந்து, பரவிக் கொண்டுள்ளன. அதனை நாம் கவர்தல் வேண்டும். ஆகவே, முந்தைய செயல் இன்றைய சரீரம், இன்றைய செயல் நாளைய சரீரம் என்பது ஞானிகள் உணர்த்தியது.


இரண்டாவது காண்டமான இந்த மனித வாழ்க்கைக் காலத்தில்,
அறுபது வயதிற்குள், குடும்பப் பாரம் என்று ஏராளமான சோதனைகள்,
கொடுக்கல், வாங்கல் போன்ற நிலையில் ஏராள நஷ்டம்,
உடலில், நோயின் வேதனை போன்றவைகளால்,
மனிதரிடத்தில் வேதனைகள் சூழ்ந்து விடுகின்றது. 

அறுபது வயதில், குடும்பப் பொறுப்புகள் முழுமையானபின், வேதனை, வெறுப்பு, குரோதம் போன்றவைகளை மறந்து, எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வுக்கு நாம் வரவேண்டும்.


ஆனால், நாம் அறுபதைத் தொட்டு, மணி விழாவைக் கொண்டாடி அமரும் பொழுது, நமது உயிரை மறந்துவிடுகின்றோம். ஆரம்பத்திலிருந்து பாசத்துடன் வளர்ந்த, வளர்த்த உணர்வுகளை எண்ணி, நான் அந்தக் காலத்தில் உழைத்துச் சம்பாதித்தேன், இப்படிச் சம்பாதித்தேன், அப்படிச் சம்பாதித்தேன் என்று பழங்கதைகளைப் பேசி, அதனின் உணர்வை வளர்க்கும் பொழுது, அசுரச் சக்திகளே நமக்குள் வளர்கின்றன.


இது போன்ற நிலைகளிலிருந்து, மனிதர்கள் மீள வேண்டும். ஆக, மனிதன் மூன்றாவது காண்டமாக, மகரிஷிகளின் அருளுணர்வைத் தனக்குள் சேர்த்து, உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால், அடுத்து, பிறவியில்லா நிலையை அடைய வேண்டும், என்று ஞானிகள் தெளிவாக, மூன்று காண்டங்களையும் காண்பித்துள்ளார்கள்.


வெப்பம், காந்தம், விஷம் என்பதும் மூன்று காண்டம் தான். மூன்றும் ஒன்றாகச் சேர்த்து, இயக்கச் சக்தியின் அணுவாக மாறுகின்றது. நமது உயிர், புழு முதல் கொண்டு பல்வேறு சரீரங்களைப் பெற்று, இன்று மனித சரீரத்தைப் பெற்றாலும், இந்த மனித சரீரத்தில், இருள் நீக்கிப் பொருள் காணும் நிலையாக, நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால்தான், நமது உயிரான்மா ஒளியின் தன்மை பெறும்.


மகரிஷிகளின் அருள் உணர்வை, நாம் கவர்ந்து,

நமக்குள் ஒளிச் சுடராக மாற்றும் நிலையைத்தான்,

நமது இன்றைய செயல்களாக அமைத்து,

நாளைய சரீரமாக, நமது உயிரான்மாவை,

ஒளிச் சரீரம் பெறச் செய்யவேண்டும்.

DSC00112.JPG

(பக்கம் 10-13)

தீபத்தின் ஒளியால் இருள் அகன்று,
இருளில் இருந்த பொருள் தெரிவதைப் போன்று,
சப்தரிஷிகளின் அருள் உணர்வால்,
உயிரில் கலந்த, நஞ்சான இருள் அகன்று,
மெய்ப்பொருளைக் காணும் சக்தி பெறுகின்றோம்.

நாம் ஒரு தீபத்தை ஏற்றினோம் என்றால்,  அதிலிருந்து வரும் ஒளி அங்கு சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி,  அங்கிருக்கும் பொருள்களைத் தெரியச் செய்து,  அதிலுள்ள நன்மைகளையும்,  தீமைகளையும் அறியச் செய்கின்றது.

இது போன்றுதான், நமது ஆறாவது அறிவின் தன்மை, கார்த்தி  என்றால், வெளிச்சம்.  நமது ஆறாவது அறிவிற்கு,  கார்த்திகேயா,  என்று பெயர்.  ஒளியின் சொரூபமான,  நமது உயிர்,  நமக்குள்ளிருந்து,  நன்மை தீமைகளை அறியச் செய்து, நன்மைகளை நாடச் செய்கின்றது.

நமது வாழ்க்கையில் நன்மைகளையே செய்து வந்தாலும், பிறிதொருவர் வாழ்க்கையில் வேதனைப்படுவதை,  நாம் கண் கொண்டு உற்றுப் பார்க்கும் பொழுதோ,  அல்லது காதால் கேட்டறியும் பொழுதோ,  அவருடைய வேதனையின் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றன. நம்முள் உள்ள,  நல்ல குணங்களை வீழ்த்திவிடுகின்றன.

பல கோடி சரீரங்களைப் பெற்று,  அதில்,  தன்னைக் காத்திடும் உணர்வினை வளர்த்து, இன்று மனிதனாகப் பிறந்திருக்கின்றோம். இப்படிப் பெற்ற இந்த மனித சரீரத்தில், வேதனையின் உணர்வுகளையும், கோப உணர்வுகளையும்,  வளர்க்கும் பொழுது,  அது, மனிதனுக்குண்டான நல்ல குணங்களை அடிமைப்படுத்தி விடுகின்றது. 

ஏனெனில்,  வேதனை என்பது விஷம்,  வலிமை மிக்கது.  அது நமது தெளிந்த மனதில்,  இருள் சூழச் செய்துவிடுகின்றது. இதைத்தான் அசுரன் என்பது.

சண்டையிடுபவர்களை சாந்தப்படுத்துவதற்காக,  நாம் நியாயங்களை எடுத்துச் சொல்வோம்.  ஆனால்,  அங்கே நல்லதை எடுத்துச் சொல்வதற்காக,  சண்டையிட்டவர்களுடைய உணர்வுகளை, நாம் கேட்டறிய வேண்டியிருக்கின்றது. 

அவ்வாறு,  பலருடைய கார உணர்வுகளைக் கேட்டறிய நேர்வதனால்,  அவர்களுடைய உணர்வுகள் அனைத்தும்,  நம் உடலில் வந்து சேர்கின்றன.

இது போன்ற சந்தர்ப்பங்களால், நம்மிடத்தில் உண்டாகும் வெறுப்பு,  வேதனை, கோபம் போன்ற உணர்வுகள், நமது உடலில் உள்ள அணுக்களில் கலந்து,  இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களை உருவாக்கி விடுகின்றன. 

மேலும்,  இந்த நஞ்சான அசுரன் வளர்ந்து,  நமது கை, கால்களை முடக்கிவிடுகின்றன.  மென்மேலும் நஞ்சான நிலைகள் நம்மிடத்தில் குவியும்பொழுது,  அது நமது உயிரில்,  இருள் சூழச் செய்யும் நிலைகளாக வளர்ச்சி அடைந்துவிடுகின்றன.  எனவே,
நமது ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால்,
ஒளியின் சொரூபமான உயிரை,
நஞ்சான இருள் சூழ்ந்து கொள்ளும் என்பதை அறிந்து,
ஆறாவது அறிவின் துணை கொண்டு,
மகரிஷிகளின் அருள் உணர்வை நம்முள் இணைத்து,
நம்மிடத்தில் சேரும், 
நஞ்சான நிலைகளை நீக்குவதற்கு,
நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

நஞ்சினை நீக்கி, உணர்வினை ஒளியாக்கி, இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார், துருவ மகரிஷி. அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள், இன்றும் பூமியில் படர்ந்து, பரவிக் கொண்டுள்ளன.

அவரிடமிருந்து வெளிப்படும், உணர்வின் அலைகளைத் தனக்குள் கவர்ந்து வளர்த்துக் கொண்டவர்கள் இன்று, ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக்கி,  உயிரில் உணர்வினை ஒளியாக்கி,  சப்தரிஷி மண்டலங்களாக, வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து, அவர்களுள் விளையவைத்த உணர்வின் அலைகள் வெளிப்பட்டு,  இந்த பூமியில் படர்ந்து பரவிக் கொண்டுள்ளது.

அவரகளின் ஆற்றல் மிக்க சக்தியை, நாம் எண்ணத்தால் கவர்ந்து,  நம் உயிரில் இணைக்கும் பொழுது,
மகரிஷிகளின் ஆற்றல் மிக்க உணர்வுகள்
நம்முள் அறியாது சேர்ந்த, நஞ்சான உணர்வை,
அசுரனை, உயிரில் இருள்சூழும் நிலையினைப் பிளக்கின்றன.
உயிர் சுடரின் ஒளியினை, வளர்க்கின்றன.
இதனை நினைவுபடுத்தும் விதமாக,
ஞானிகளால் உருவாக்கப்பட்டது தான், 
தீபாவளி திருநாள்.

Inline image 3


(பக்கம் 18-20)

அன்றைய மெய்ஞானிகள் தமது உணர்வின் ஆற்றலால், தீமையைப் பிளந்தார்கள். ஒவ்வொரு பொருளிலும்,  விஷத்தின் தன்மைதான் இயக்குகின்றது என்று அறிந்தார்கள்.

உயிரும், விஷத்தின் தன்மையால்தான் இயங்குகின்றது, என்பதையும் அறிந்தார்கள்.  இந்த உயிர் நம்முடைய உணர்வுக்குள், நல்ல ஒளிச்சுடரை உருவாக்குகின்றது என்றும் அறிந்தார்கள்.  அந்த உணர்வின் ஒளியினை வளர்த்தார்கள்.

ஆனால், விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து, அதிலுள்ள விஷத்தின் தன்மையைக் கவர்ந்து, உலகை அழிக்கும் அணு விசையாக உருவாக்கினார்கள்.

அவர்கள் உலகை அழிக்கும் அணுகுண்டைச் செய்தாலும் சரி, அணுக்கதிராக மாற்றி இயந்திரங்களை இயக்கினாலும் சரி, அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கப் பொறிகள் ஆவியாகச் செல்லும் பொழுது, அதனை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, அதை அலைகளாக மாற்றுகின்றது.

அது அலைகளாக மாறும் பொழுது, அது எந்தெந்தப் பொருள்களை உருவாக்குவதற்கு மூலமாக இருந்ததோ, அந்த விஷத்தின் தன்மை நமக்குள் ஊடுருவப்படும் பொழுது, மனிதனின் சிந்தனையை அழிக்கும் மூலப்பொருளாக அமைந்து,  மனிதனின் நிலையைச் சீர்குலையச் செய்கின்றது. தாயின் கருவிலேயே, மனித உருவைக் குலைக்கும் சக்தியாக விளைந்திருக்கின்றது.

விஞ்ஞான அறிவால், விளைந்த இந்த அசுரச் சக்திகள் மனித சமுதாயத்தைச் சீர்குலையச் செய்கின்றன. இவ்வாறு, உலகில் பரவிவரும் நஞ்சினைத் தடுக்க வேண்டுமென்றால், ஞானிகள் காண்பித்த அருள் வழியினை, நாம் அனைவரும் பின்பற்றுதல் வேண்டும்.

மனிதரிடத்தில், இருள் சூழ்ந்திடும் நிலை உருவாவதைத் தடுத்து, உயிரினிடத்தில் ஒளியின் உணர்வை வளர்த்திடும் நாளாகத்தான், இந்த தீபாவளித் திருநாளை,  ஞானிகள் நமக்குக் கொடுத்தனர்.

ஏனெனில், நிலத்தைப் பண்படுத்தி, விதையிட்டு, உரமிட்டு, பயன் தரும் செடிகளை வளர்த்து வந்தோமானாலும்,  அதில் ஒரு விஷ வித்து விழுந்துவிட்டால்,  அது மிக வேகமாக வளர்ந்து, நல்ல செடியின் பலனைக் குறைத்து விடுகின்றது. 

இது போன்றுதான், நாம் எவ்வளவு  நல்லவராக இருந்தாலும், வேதனைப்படுவோரின் நிலைகளைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது, நமக்குள் வித்தாகப் பதிந்து விடுகின்றது.

உடலில் பதிந்த வேதனையின் வித்து, நமது உடலில் இருந்து கொண்டு, அதனின் உணர்வின் கிளர்ச்சியைத் தூண்டி, வித்துக்குச் சத்தாகத் தன் உணர்வை ஈர்க்கின்றது. ஆக இது போன்று,
எதனின் உணர்வின் குணத்தை,
அதிகமாக நமக்குள் பதிவு செய்கின்றோமோ,
அது  நமக்குள்  விதியாக  மாறுகின்றது.

நமக்குள் எத்தகைய தீமையைப் பதிவு செய்தாலும், அந்த உணர்வின் தன்மை நம்முள் ஊழ்வினையாக, விதியாக உருவாகின்றது, மீண்டும், மீண்டும் அதே எண்ணங்களை எண்ணும் பொழுதுதான், அதன் வழிகளில் நாம் செயல்பட ஆரம்பித்து விடுகின்றோம்.

இதைத் தான், சிவனுக்கு கணக்குப் பிள்ளை நந்தீஸ்வரன், என்று பக்தி மார்க்கங்களில், சாதாரண மனிதரும் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வண்ணம், காவியங்களைத் தொகுத்தனர்.

வித்தாகப் பதிந்து வளரும் உணர்வுகளை, நாம்  மதி கொண்டு மாற்றிடல் வேண்டும். அவ்வாறில்லாமல், வேதனையின் உணர்வுகள் வளர்ந்து, விதியாகச் செயல்படுமானால், அது நம் உடலைக் கரைத்து, இறுதியில் நம்மை மடியச் செய்துவிடும்.

ஆகவே, விதியை மதி கொண்டு மாற்றிடல் வேண்டும்.
மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியை,
நம்முள் வலுப் பெறச் செய்வதே, மதியாகும்.
ஆகவே, இந்த மதி கொண்டு,
நம்முள் சேரும் நஞ்சான இருளை அகற்றுவோம்.
மகரிஷிகளின் அருள் சக்தியின் உணர்வாக வளர்ப்போம்.
எமது அருளாசிகள்.

Inline image 4

(பக்கம் 21-25)

விஞ்ஞானி, ஒரு இராக்கெட் மூலம், செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்புகின்றார். பின், அந்த செயற்கைக் கோளின் துணைக் கொண்டு, விண்ணின் நிலையை, பூமியில் பெறுகிறார்.

அது போன்று, நாம் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து, உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை, 
நமது எண்ணத்தின் வலுக் கொண்டு,
விண்ணிற்கு அனுப்பும் பொழுது,
அந்த ஆன்மாக்கள் பெறும் ஆற்றலை,
நாம் பெறமுடியும்.

நாம் சிறு வயதினராக இருக்கும் பொழுது, நமது முன்னோர்கள், நாம் அனைத்துத் துறையிலும் சிறந்து இருக்க வேண்டும் என எண்ணி, நமக்கு பல வகைகளிலும் பாசத்தைக் காட்டி, நல் அறிவினை ஊட்டி வளர்க்கின்றனர்.

ஆனால் நமது முன்னோர்கள், நமக்கு எடுத்துச் சொல்லும் உயர்ந்த, சிறந்த, அறிவுரைகளை ஒதுக்கிவிட்டு, மாற்றுக் கருத்துக்களில் நாட்டம் செலுத்தி, அதன் வழி செல்லும் பொழுது, நமது முன்னோர்கள் வேதனை அடைகின்றனர்.

நாம் சொன்னபடி செய்யவில்லை, தவறான பாதையில் செல்லுகின்றானே, உருப்படுவானா? என்று கோபமும், வேதனையும் கலந்த சொற்கள், அவர்களிடமிருந்து வெளிப்படுகின்றன.

நாம் எல்லா நிலைகளிலும் உயர்ந்து சிறப்புற வேண்டும் என்ற, அவர்களுடைய பாச உணர்வுகளும் நம்மிடத்தில் பதிவாகின்றன.

அதே சமயத்தில், அவர்கள் சொல்லை மதிக்காது செயல்பட்ட நிலைகளில், அவர்கள் வெளிப்படுத்திய கோப உணர்வுகளும், நம்மிடத்தில் பதிவாகின்றன.

ஒரு செடி, எதிர்மறையான சூழ்நிலையைச் சந்திக்கின்ற பொழுது, தன்னுடைய வளர்ச்சியை இழக்கின்றது. அது போன்றே, நமது முன்னோர்கள் நம் மீது பற்று, பாசத்துடன் இருந்தாலும், அவர்களுடைய அறிவுரைகளை மறுத்து இயங்குகின்ற பொழுது, அவர்கள் கோப உணர்வு கொண்டு,  நம்மைப் பார்க்கும் பொழுதெல்லாம்,  சலிப்பு,  வேதனை,  வெறுப்பு, கோபம்,  ஆத்திரம் போன்ற உணர்வுகள்,  அவர்களிடம் உருவாகின்றன.

இவ்வாறு நம் மீது, பாசமாக இருக்கும், அவர்களின் உணர்வின் எண்ண உணர்ச்சியின் அணுத்தன்மையில், இப்படி பாசம், கோபம், ஆத்திரம் என உணர்வுகள் மாறி, மாறி அமைவது என்பது, அவர்களின் உடலில் சீரற்ற நிலைகளை உருவாக்கி, நோய்களை அவர்களிடத்தில் உண்டாக்கிவிடுகின்றது.

மேலும்,  அவர்களுடைய ஆன்மா சீரற்ற நிலையில், நம்மைப் பார்க்கும் பொழுதெல்லாம் கலக்கம், வேதனை, சஞ்சலம் என்ற உணர்வுகளை, அவர்கள் சுவாசிக்க நேர்ந்து, அவர்களுடைய சரீரத்தில் இத்தகைய எண்ண அலைகளே, அதிகமாக விளைகின்றது. நல்ல உணர்வுகள் விளைவதே இல்லை.

உதாரணமாக, நல்ல வயலைப் பண்படுத்தி, நல்ல விதைகளை ஊன்றினாலும், அதனிடையே, களைகள் உருவாகி ஓங்கி வளர்வது போன்றுதான்,
பாச உணர்வுகள் உள்ள இடத்தில், சிறிதளவு,
வெறுப்பிற்கு இடமளிக்கும் பொழுது,
அங்கே வெறுப்பான உணர்வுகளே அதிகமாகி,
பாச உணர்வுகளை, மங்கச் செய்துவிடுகின்றன.
இவ்வாறு, நம் குடும்ப வாழ்க்கையில் வேதனையுறச் செய்யும் சந்தர்ப்பங்களை அறிந்து,  அவற்றை விலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

      நம் முன்னோர்களின் உயிரான்மா, நம் குலத்தெய்வமான, அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து, என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று எண்ணிய பிறகு,
அருள் ஞானிகளின் சக்தி,  நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா
எங்களை அறியாது சேர்ந்த,  இருள் நீங்க வேண்டும் ஈஸ்வரா
நாங்கள் பார்ப்பவரெல்லாம்,  நலம் பெறவேண்டும் ஈஸ்வரா…”
என்று நாம் எண்ணி, இந்த உணர்வின் சக்தியை, நம்மிடத்தில் வளர்க்க வேண்டும். 

எங்கள் குலத்தெய்வமான மூதாதையர்களின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து, என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்றும், சப்தரிஷிகளின் அருள் சக்தி, சப்தரிஷி மண்டலங்களின் ஒளிகாந்த சக்தி,  எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று நமது சரீரத்தில், உயிரில் இந்த உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால், எங்கள் அன்னை தந்தை காட்டிய,
நல்வழி அனைத்தையும் செயலாக்கி,
அவர்கள் எண்ணிய நல் உணர்வுகள், எங்களுக்குள் விளைந்து,
நாங்கள் பார்ப்பதெல்லாம் நலமும்,
ஆக்கமான எண்ணங்கள் எங்களுக்குள் விளைந்து,
எங்கள் சொல்லிலும், செயலிலும் புனிதம் பெறும் தன்மையாகவும்,
அவர்கள் காண்பித்த நல்வழியின் நிலைகள்
எங்களுக்குள் ஆளவும், வளரவும் வேண்டுமென
நாம் தியானிக்க வேண்டும்.

நம்முடைய முன்னோர்களின் நினைவு நாட்களைக் கொண்டாடி விட்டோம். அவர்களுடைய உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும், என்று தியானித்து விட்டோம். அதன் மூலம்,  அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை, நிறைவேற்றி விட்டோம், என்று கருதுவோமேயானால், அதன் பிறகு, நாம் வளர்வதே இல்லை.

பதிலாக, நம்மிடத்தில், முன்னோர்களின் உயிராத்மாக்களை, 
விண் செலுத்திய நினைவுகளும்,
அவர்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும்
என்ற ஏக்கமும்  நம்மிடம்,
என்றும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

Inline image 4

 (பக்கம் 26,27)

நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்ற கீதையின் தத்துவப்படி,   நம் முன்னோர்கள்,  எதைப் பெறவேண்டும் என்று ஏங்குகின்றோமோ, அதனை நாமும் பெறுகின்றோம். 

நம்முடைய முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தின் ஒளிவட்டத்தில் கலந்து, நிலையான ஒளிச்சரீரம் பெற வேண்டும் என்று நாம் எண்ணி ஏங்குகிற பொழுது, நமது முன்னோர்களும் ஒளிச்சரீரம் பெறுகின்றனர். அதனின் பயனாக,  
நாம், நம் உணர்வின் சக்தியை, 
விண்ணை நோக்கிச் செலுத்தினோமானால்,
நமது முன்னோர்களின் உயிரான்மாக்களை
விண் செலுத்த உதவிய  நம்முடைய நினைவுகள்,
துரித நிலையில் இயங்கி, அங்கே செல்லவும்,
மகா ஞானிகளின் உணர்வை, துரித நிலையில் நாம் ஈர்க்கவும்,
நம்மிடத்தில் வருகின்ற தீமைகளை, அந்த விநாடியே அகற்றவும்,
நமக்குள் உணர்வின் சக்தியைப் பழக்கவும்,
மெய்ஞானிகளின் உணர்வை நம்மிடத்தில் வளர்க்கவும்,
அந்த உணர்வுகள், ஒளியின் சரீரமாக வளரவும் உதவி செய்கின்றன.

மேலும், ஒளி கண்டு இருள் விலகுவது போன்று,  அங்கே இருளுக்குள் இருக்கக்கூடிய பொருள் தெரிவது போன்று,  நமது வாழ்வில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுகின்றோம்.

சப்தரிஷி என்பவர் யார்? ஆறாவது அறிவின் துணை கொண்டு, தீயவுணர்வுகளை மாய்த்து, நல் உணர்வுகளை வளர்க்கச் செய்யும் தன்மை வாய்ந்த,  ஏழாவது அறிவினை தன்னிடத்தில் பெற்றவர்களை, சப்தரிஷி என்று நாம் அறிந்துணர முடியும்.

அத்தகைய தன்மை வாய்ந்த சப்தரிஷிகளின் சிறப்பை, நம் முன்னோர்கள் பெற வேண்டும் என்று,  நாம் தியானிக்கும் பொழுது,  நாமும் அத்தகைய ரிஷியின் தன்மையைப் பெறுகின்றோம். சிறிது காலத்திற்காவது, நமது முன்னோர்களை எண்ணி தியானித்திடும் பொழுது, அவர்கள் சப்தரிஷி தன்மை பெற்று விடுகின்றனர். அதைத் தொடர்ந்து
நீங்களும் ரிஷித்தன்மையை பெறுகின்றீர்கள். 
நீங்கள் ரிஷியாக வேண்டும் என்றால்,
முதலில், 
உங்கள் முன்னோரை ரிஷியாக்க வேண்டும்
என்பதை உணரவேண்டும்.

நிலக்கடலையின் மேல் ஓடை உடைத்து நீக்கிவிட்டு,
அதனுள் இருக்கும் பருப்பை, நாம் சுவைப்பது போன்று,   

தீமையின் தன்மை நமக்குள் இதுவரை சேர்ந்திருந்து,
நமக்குள் உணர்வின் சக்தியாக வலுப்பெற்றிருந்தாலும்,
நாம் அதை உடைத்தெறிந்தால், 
நன்மையைப் பெறச் செய்யும் உணர்ச்சியை,
உந்திப் பெறுகின்றது. 

உணர்வின் எண்ணங்களுக்கு, இடையிலுள்ள
போட்டியை, சஞ்சலத்தை நீக்கி விட்டால்,
அதனில் ஒளியின் சிகரமாக இருக்கும் உணர்வுகள்,
அதனுடைய வீரிய சக்தியை, நமக்குள் கவர்கின்றது. 

அவை,  நன்மை பயக்கும் சக்தியாக நமக்குள் இரண்டறக் கலந்து, நல்ல உணர்வின் எண்ணங்களை,  ஓங்கச் செய்கின்றது.

Inline image 3

(பக்கம் 48-52)

பேரண்டத்தில் உள்ள சக்தியை, நட்சத்திரங்களும் கோள்களும் தமக்கு உணவாக எடுத்துக் கொள்கின்றன. கோள்களிலிருந்தும், நட்சத்திரங்களிலிருந்தும் வெளிப்படுவதை, சூரியன் தனக்குள் கவர்ந்து, கவர்ந்தவைகளுக்குள் உள்ள நஞ்சினைப் பிரித்து,  உணர்வின் ஒலி, ஒளியாக மாற்றி,  இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றது.

சூரியக் குடும்பத்தைத்தான், நாம் பிரபஞ்சம் என்று சொல்கின்றோம். சிலந்தி, தன் வலையை விரித்து, அதில் சிக்கும் உயிரினங்களை, தனது உணவாக எடுத்து, தனது வாழ்க்கையை நடத்தி,  தனது இனத்தை விருத்தி செய்து வாழ்வதைப் போன்று, நட்சத்திரங்கள், பிற மண்டலங்களிலிருந்து வெளிப்படும் சக்தியைத் தமக்குள் கவர்ந்து, பால்வெளி மண்டலங்களாக மாற்றிக் கொள்கின்றது.

27 நட்சத்திரங்களும், அதனதன் உணர்வுக்குத் தக்கவாறு, பிற மண்டலங்களிலிருந்து வெளிப்படும் சக்தியினைக் கவர்ந்து கொள்கின்றன.
பின், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான
உணர்வின் சத்துக்களைத் தமக்குள் உருவாக்கி,
அதனனைத் தனது சுழற்சி வேகத்தால்,
துகள்களாக, தூசிகளாக, 
இந்த பிரபஞ்சத்தில் வீசிப் பரவச் செய்கின்றன.

பிற மண்டலங்களிலிருந்து வெளிப்படும் சத்தை, இந்த 27 நட்சத்திரங்களும், தமது உணவாக எடுத்து வெளிப்படும் சக்தியைக் கோள்கள்,  தமக்கு உணவாக எடுத்துக் கொள்கின்றன. கோள்கள்,  தமக்குள் விளைய வைத்து வெளிப்படுத்தும் சக்தியை, சூரியன் தமக்குள் கவர்ந்து, உணவாக எடுத்து,  தம்முள் விளைய வைத்த உணர்வின் சத்தைப் பரப்பி,
இந்த 27 நட்சத்திரங்களையும், நவக் கோள்களையும்,
இதிலிருந்து உருப் பெற்ற மற்ற அனைத்தையும்,
தன் அணைப்பில் வளர்த்து,  தானும் வளர்ந்து கொண்டுள்ளது.

சூரியன் தமது சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு, வெப்பக் காந்தங்களை வெளிப்படுத்தி, மற்றவைகளை உருவாக்குகின்றது. ஆக,  சூரியன் உமிழ்த்தும் சக்தியின் துணைக் கொண்டு, கோள்களும், நட்சத்திரங்களும் சூரியன் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து கொண்டு, தம்மை வளர்த்துக் கொள்கின்றன.

இதில், நமது பூமியும் சூரியன் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து கொண்டு, சூரியன் படைத்தனுப்பும் சக்தியின் துணைக் கொண்டு, தம்மிடத்தில் தாவர இனங்களையும், உயிரினங்களையும் உண்டாக்குகின்றது.

ஒரு மரத்தின் வித்தை எடுத்து,
வேறு ஒரு பக்கம் தள்ளி,  தனியே ஊன்றினால்,
தாய் மரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வின் சத்தை,
சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, அலைகளாகப் படர்ந்து,
அந்த வித்திற்கு, ஆகாரத்தை எடுத்துச் செல்கின்றன.
ஊன்றப்பட்ட வித்து, தனது உணர்வின் தன்மை கொண்டு, 
சூரியன் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள, 
தன் தாய் மரத்தின் சத்தை, உணவாகக் கவர்ந்து, எடுத்து வளர்கின்றது.

நட்சத்திரங்களாக இருந்தவைகள், விண்ணின் ஆற்றலைக் கவர்ந்து, வளர்ந்து சூரியனாக மாறுகின்றன. நமது பிரபஞ்சத்திலிருந்து, ஒரு நட்சத்திரம், சூரியனாக மாறிவிட்டால், அது, சூரியக் குடும்பத்திலிருந்து பிரிந்து, தனிக் குடும்பமாக இயங்கத் தொடங்கிவிடும்.

நமது குடும்பத்தில், பையன் ஒருவன் வளர்ந்து ஒரு பருவம் வந்ததும், அவனுக்குத் திருமணம் செய்து வைத்து, அவனைத் தனிக் குடும்பமாக வைக்கின்றோமோ, அதைப் போன்று, ஒரு நட்சத்திரம் குறிப்பிட்ட பருவம் வந்ததும், தனது பிரபஞ்சத்திலிருந்து பிரிந்து, தனிக் குடும்பமாக இயங்கத் தொடங்கிவிடும்.

ஒரு நட்சத்திரம் சூரியக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனியே போய்விட்டால்,  அந்த சூரியக் குடும்பத்தின் இயக்கத்தில், மாறுதல் ஏற்படும். 

சூரியனைப் போலவே, பருவம் அடைந்த நட்சத்திரங்களும், தமக்கென்று கோள்களையும், நட்சத்திரங்களையும் உருவாக்கிக் கொள்கின்றன.

நமது சூரியக் குடும்பத்தில், ஓர் அங்கமான நமது பூமி, சூரியனிலிருந்து வெளிப்படும், வெப்பக் காந்த சக்தியைக் கவர்ந்து, தமக்குள் தாவர இனங்களையும், உயிரினங்களையும் உண்டாக்கி, அவைகளில் வளர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.

சூரியனிலிருந்து வெளிப்படும் ஒரு வெப்ப காந்தம், சந்தர்ப்பத்தால் கோள்களிலிருந்து வெளிப்படும் அலைகள், மற்றும் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்க அலைகள், போன்ற இவைகளின் தாக்குதலினால், துடிப்பின் நிலை பெற்று, உயிரணுவாக மாறி, நமது பூமியின் ஈர்ப்பிற்குள் வருகின்றது.

பூமியின் ஈர்ப்பிற்குள் வந்த ஒரு உயிரணு, தாவர இனத்தின் சத்துக்களைக் கவர்ந்து, தன்னுள் இணைப்பதால், உயிரணுவில்,
தாவர இனத்தின் உணர்வின் மணம் குணங்களாகி,
அதனின் எண்ணத்தால்,
உயிரணு தன்னில் உடலை வளர்த்து,
அதனில், காத்துக் கொள்ளும் உணர்வை வளர்த்து,
இன்று மனிதனாக, இந்த சரீரத்தைப் பெற்றுள்ளது.

மனித சரீரத்தைப் பெற்ற ஒருவர் நல்லவர், கெட்டவர் என்று வேறு யாருடன் பழகினாலும், அவர்களுடைய உணர்வுகளை, ஈர்த்துத் தன்னில் பதிய வைக்கின்றார். மனிதர், தாம் எண்ணத்தால் ஈர்த்து, ஒன்றைச் சொல்லும் பொழுது, அது அவரது ஆன்மாவாக, பால்வெளி மண்டலமாக அமைந்துவிடுகின்றது. ஆகவே, மனிதரின் எண்ணம் ஒரு நட்சத்திரம்.

எத்தனை வகையான குணங்களை மனிதர் எடுக்கின்றாரோ, அத்தனை வகையான நட்சத்திரங்களாக மனிதரிடத்தில் மாறுகின்றன. அதனதன் தன்மைக்கேற்ப,  அது அது இயங்கும் நிலை வருகின்றது.

இவ்வாறு, நாம் கவர்ந்து கொண்ட உணர்வின் நிலைகள், நமது ஆன்மாவாக இயங்கத் தொடங்கிவிடுகின்றது. அதிலிருந்து உருவாகும் உணர்வின் சத்துக்கள்,  நம் உடலில் கோள்களைப் போன்று இயங்குகின்றது.

ஆனால்,  தீமைகள் பலவற்றைப் பார்க்கப்படும் பொழுது, தீமையின் உணர்வுகள், நம் சுவாசத்தில் கலந்து, எண்ண அலைகளாக மாறி, நம்மிடத்தில் பால்வெளி மண்டலங்களாக மாறும் பொழுது, நமக்குள், அது எண்ணங்களின் இயக்கச் சக்தியாக, மாறுகின்றது.

இதைப் போன்று, எத்தனை விதமான நிலைகள் நம்முள் உருவாகின்றதோ, அவையனைத்தும் நம்மிடத்தில் பால்வெளி மண்டலங்களாக அமைந்து,  நாம் சுவாசிக்கும் போதெல்லாம், இந்த உயிர், சூரியனைப் போன்று  இருந்து, உணர்வினை இயக்கி,  உணர்வின் சத்தினை நமது உடலாக, கோளாக, உறையச் செய்துவிடுகின்றது. 

அதில் எத்தகைய தன்மையை வளர்த்துக் கொண்டோமோ, அந்த சுவையின் உணர்வின் குணத்தால், நம் உடல் அமைப்பிலும் மாறுதல் ஏற்படுகின்றன.

Inline image 3

(பக்கம் 54-59)

இந்த பிரபஞ்சத்தைப் போன்றுதான், நமது உயிரின் உடலின் இயக்கமும். நாம் மற்றவர்களுடைய எண்ணங்களைக் கவரும் பொழுது, நமது உயிர் குருவாக நின்று,  அந்த உணர்வின் சத்தை நம்முள் பெருக்கி, நமது உடலாக மாற்றுகின்றது.
சூரியன், இந்தப் பிரபஞ்சத்திற்கே குருவாக இருப்பதைப் போன்று,
நமது உடலுக்கு,  உயிர் குருவாக இருக்கின்றது.
மேலும், நம்முள் உள்ள உயிர், சூரியனைப் போன்று, மிளிரும் தன்மையும் பெற்றிருக்கின்றது.

இதனின் உண்மையை, நாம் உணர்ந்து கொண்டபின், நமது வாழ்க்கையில் வெறுப்பு, சலிப்பு, சஞ்சலம் போன்ற நஞ்சான நிலைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், சூரியன், தான் கவரும் அணுக்களில் உள்ள நஞ்சினைப் பிளந்துவிட்டு, நல் உணர்வினை ஒளிச்சுடராக மாற்றுவதைப் போன்று,  நம்மிடத்தில் மோதும் நஞ்சான உணர்வைப் பிளந்து, மகரிஷிகளின் அருள் உணர்வான நல் உணர்வை இணைத்து, அதனை ஒளிச்சுடராக மாற்ற வேண்டும்.

மனிதராகப் பிறந்துள்ள நாம், மகிழ்ச்சி பெறும் உணர்வினை நம்மிடத்தில் வளர்க்க வேண்டும். பிறரை மகிழச் செய்திடும் செயல்களைச் செய்திடல் வேண்டும். மற்றவர்களிடத்தில் பகைமை என்ற நிலைக்கு, சிறிதும் இடம் அளித்தல் கூடாது.

மனிதர்களான நாம், நற்குணங்கள் கொண்டு செயல்பட்டாலும், சந்தர்ப்பத்தால், தீய குணம் கொண்ட உணர்வலைகளை சுவாசிக்க நேர்ந்தால், அது நமது உணர்வில் கலந்து,  நல்ல உணர்வுகள் தணிந்து,  தீய உணர்வின் தன்மை விளைந்து விடுகின்றது.

பகைமை உணர்வுகளை நம்முள் வளர்த்துவிட்டால், நம்மிடத்தில் உள்ள நல்ல குணங்களுக்கும்,  பகைமையான குணங்களுக்கும், போர் முறை வந்து,  அது நமது ஆன்மாவாக, பால்வெளி மண்டலமாக அமைந்து விடுகின்றது. இத்தகைய தன்மை நம்மிடத்தில் உண்டாகி விட்டால், தொடர்ந்து மனக் கலக்கம், மன வேதனை என்ற நிலைகள், நம்மிடத்தில் உண்டாகிக் கொண்டிருக்கும்.

நாம் மிளகாயை மட்டும் தனியே சாப்பிட்டால்,
நாக்கும் குடலும் எரிந்து, கண்ணில் நீர் வழிந்து உமட்டல் ஆகிவிடும்.
ஆனால், அதே மிளகாயை
மற்ற பொருள்களுடன்,  அளவாக இணைத்து,  சமைத்து, சுவையான பண்டமாகச் சாப்பிடுகிறோம்.

அதைப் போன்று, பகைமை உணர்வுகள் மனதில் எழும் சமயத்தில், 
மகரிஷிகளின் அருள் உணர்வை எண்ணி,
நாங்கள் நல்ல எண்ணம் பெறவேண்டும்,

எங்களைப் பார்ப்பவர்கள் அனைவரும், நல்ல எண்ணங்கள் பெறவேண்டும்,

அவர்கள் வாழ்வில், நலமும் வளமும் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வை எண்ணி தியானிப்பதால், இந்த உடலான குகைக்குள் பகைமையுணர்வு என்ற தீமை விளையாதபடி,  நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.

மேலும், நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதில் எண்ணி, அவர்களுடைய வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்தியினைப் பெறவேண்டும், பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும், சகோதர உணர்வுடன் வாழ்ந்திடல் வேண்டும், என்று எண்ணி தியானிக்க வேண்டும்.

ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் தன்மை, பேரண்டத்தில் இல்லையென்றால், இந்த பிரபஞ்சம் இல்லை.

அதே போல், மனிதனின்  வாழ்க்கையில், ஒருவருக்கொருவர் சகோதரத் தத்துவத்துடன் வாழவில்லை என்றால்,  மகிழ்ச்சியும் இல்லை,  என்பதை அனைவரும் உணரவேண்டும்.

ஒன்றை நாம், நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மிகவும் நெருக்கமாக இருப்பினும், அதில் சிறு பகைமை ஏற்பட்டுவிட்டால், அது கடும் விஷவித்தாக நம்முள் பதிந்து, நம்மையறியாமலே அவர்களைப் பகைத்து,  தீமையின் உணர்வாக நம்முள் வளர்ந்து கொண்டிருக்கும்.

இவ்வாறு, பகைமையுணர்வுகள் நம்முள் வளரும் பொழுது, அது நம்முள் உள்ள நல்ல குணங்களையும் பகைமையாக்கிக் கொண்டேயிருக்கும். 
நமது உடலுக்குள், உணர்வுகள் ஒன்றுக்கொன்று
பகைமையாகும் பொழுது, 
நமது உடலின் தன்மை குன்றுகின்றது.
நம்முடைய எண்ணங்களும் மாறுகின்றது.

எனவே, சூரியக் குடும்பம் ஓர் ஒழுங்குடன் அமைதியாக இயங்குவதைப் போன்று, நாமும் பகைமை உணர்வுகள் இல்லாமல், ஒற்றுமை உணர்வுடன் மகரிஷிகளின் அருள் சக்தியின் துணைக் கொண்டு, வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் வாழும் தெருவில் உள்ள அனைவரையும், நமது குடும்பத்தினரைப் போலக் கருதி, அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், இருள் நீங்கிப் பொருள் காணும் திறன் பெறவேண்டும், வாழ்வில் என்றும் மகிழ்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணி, நமது தெருவில் வாழும், மற்ற குடும்பத்தினற்காகத் தியானிக்கும் பொழுது, அவர்களும் நம்முடன் ஒன்றுபட்டு வளரும் நிலை உருவாகிறது.

நாம் அனைவரும் ஒன்று கூடி, கூட்டுத் தியானமிருந்து, இதனின் எண்ண அலைகளை ஒருமித்த நிலையாக வெளியிடும் பொழுது,  இதனைச்  சூரியனின் காந்தச்சக்தி கவர்ந்து,   இந்த பூமியில் படரச் செய்கின்றது.

மேலும், இந்த உணர்வின் அலைகள் இவ்வுலக மக்களின் உணர்வில் கலந்து, அவர்களிடத்தில், மகிழ்ச்சியின் தன்மையை வளர்க்கின்றது. பகைமையற்ற மனிதர்களாக, அவர்களை மாற்றுகின்றது.

பேரண்டத்திலும், பூமியிலும், மனிதரிடத்திலும் நடைபெறும் இயற்கையின் இயக்கங்களை, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில்,  உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம்.  இதில் உங்களின் கருத்தினைச் செலுத்தி, உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நாடும், உலகமும், ஊரும் என்றும் மகிழ்ந்த நிலையாக இருக்க வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள். நாடும், உலகமும், ஊரும் மகிழ்ந்த நிலை பெறவேண்டும் எனும் பொழுது, மகிழ்ச்சியின் உணர்வுகள் உங்களிடத்தில் பெருகுகின்றது.

மகிழ்ந்த உணர்வின் துணைக் கொண்டு,
மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியின் துணைக் கொண்டு,
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்,
சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்துடன்
நாம் அனைவரும் இணைய வேண்டும்.

இவ்வாறு, இந்த உணர்வின் எண்ணங்களை நாளும் வளர்த்துக் கொள்ளுங்கள்.  நாளும் நல்ல உணர்வுகளை வளர்ப்போர் அனைவருக்கும், எமது ஆசீர்வாதங்கள்.

Inline image 3