ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 9, 2012

காளிங்கநாதரும் போகமாமகரிஷியும்


சாமி புத்தகம் காளிங்கநாதரும் போக மாமகரிஷியும்
(பக்கம் 6-8)
காளிங்கன் என்பது, எப்பொருளின் தன்மையும் ஒரு விஷத்தின் அமைப்பிற்குள் சென்றுவிட்டால், அது விஷத்திற்குள் அடங்கி இயக்கும் என்று பொருள்.

காளிங்கநாதர், விஷத்தின் தன்மை கொண்ட ஒவ்வொரு அணுவின் தன்மையையும் பரிட்சித்துக் கொண்டு வருகின்றார். அப்படிப் பரிட்சித்துக் கொண்டு வரும் பொழுது, இளம் பருவத்தில் வந்த போகனுக்கு விஷத்தின் ஆற்றலை உணர்த்துகின்றார்.

காளிங்கநாதர், விஷத்தின் தன்மையை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக்கூடிய ஒரு வைத்தியர். ஆராய்ச்சி செய்து, தனக்குள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வரும் பொழுது, அங்கு வந்து சேருகின்றார், இந்த போகர். அந்த உண்மையின் தன்மையை அவர் விளக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான், போகன் விண்ணுலகத்தின் தன்மையைப் பின் தொடர்கின்றார்.

காளிங்கநாதர் விஷத்தின் நிலையைக் காட்டி, நுகரும் சக்தியை போகருக்குக் கொடுத்தார். விஷத்தின் தன்மைகளைப்பற்றி பாட போதனைகளைக் கொடுக்கின்றார். இவரிடம் கற்றுக் கொண்டபின் தான், போகர் தாவர இனத்திற்குள் மறைந்திருக்கக்கூடிய, விஷத்தின் தன்மையை அறிகின்றார்.

போகர் நுகரும் தன்மையை அறிகின்றார். போகர் நுகரும் தன்மை கொண்டு, பல நிலைகளை அறிகின்றார். காளிங்கநாதர் வைத்தியத் தொழிலில் இருக்கப்படும் பொழுது, அந்தச் சிறுவனை அழைத்துச் சில நிலைகளைக் கற்றுக் கொடுக்கின்றார்.

அந்த காளிங்கநாதர் காட்டிய குரு வழியில், இந்த உணர்வின் ஆற்றல் கொண்டு, தனக்குள் போகர் இத்தன்மையைக் கொண்டு வரும் பொழுது,
இந்த விஷத்தின் தன்மை
எல்லாவற்றிற்கும் எவ்வாறு பாதுகாப்பாகின்றது என்பதையும்,
விஷம் ஒன்றை எப்படி மாற்றுகின்றது? என்பதையும்,
தன் உடலுக்குள் பல விஷத்தின் ஆற்றல்மிக்க நிலைகளைச் சேர்த்து அறிகின்றார்.

காளிங்கநாதர், அன்றைய மக்களுடைய துயர் துடைக்க, பச்சிலைகள் மற்ற மூலிகைகள் இலைகளில் இருந்து, வரக்கூடிய சாறினை எடுத்துப் பக்குவப்படுத்தி, மனித உடல்களில் பிணிகளை நீக்க, தமது ஆற்றல்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

அதே சமயம், போக மாமகரிஷி இளம்பிராயத்தில் இவரை அணுகியவுடன், போகமாமகரிஷிக்கு எதிர்பாராத ஆற்றல்மிக்க சக்திகள் இருப்பதைக் கண்டவுடன், காளிங்கநாதர் வைத்திய முறைகளையும் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

வைத்தியரீதியில் போக மாமகரிஷி கற்றுக் கொண்டாலும், தாவர இனத்திற்குள் அடங்கியிருக்கும் உணர்வின் ஆற்றலைத் தன் நிலையில் நுகர்ந்து அறிந்தார். அதனின் ஆற்றல் மிக்க சக்திகள் எவ்வாறு செயல்படுகின்றது? என்ற நிலையையும், அந்த உணர்வின் ஆற்றல் எங்கிருந்து தோன்றி, எதன் வழிகளில் வழிப்படுத்தி, ஆற்றல்மிக்க நிலைகளாக வருகின்றது என்ற உண்மைகளையும் அறிவதற்கு மிக முயற்சி எடுத்தார்.

அவருடைய சுவாசத்தைத் தன் உடலுக்குள்ளும், விண்ணுக்கும், மண்ணுக்கும் செலுத்தித் தனக்கு ஏற்பட்ட உணர்வினை அறிந்துணர்ந்து உலகிற்கு உணர்த்தினார். அவர் உணர்த்திய ஆற்றலின் தன்மை கொண்டுதான், நமது ஆறாவது அறிவை முருகனாகக் காட்டி, இந்த ஆறாவது அறிவைக் கொண்டு வாழ்க்கையில் வரக் கூடிய தீமைகளை நீக்கிக் கொள்ள முடியும், என்று போகமாமகரிஷி உணர்த்தினார்.

காளிங்கநாதரோ, தாவர இனச் சத்தின் தன்மையை எடுத்து, உடல்பிணிகளைப் போக்க முடியும் என்று சொன்னார். ஆனால், உடல் பிணிகளைப் போக்க முடியும் என்று காளிங்கநாதர் சொன்னாலும், அந்தப் பிணியை நீக்கும் உணர்வின் ஆற்றல், எந்தெந்தத் தாவர இனச் சத்திற்குள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நுகர்ந்தறிந்தார் போகர்.

காற்றில் மிதந்து கொண்டிருக்கும், தாவர இனச் சத்தின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்து, அந்தச் சத்தின் உணர்வின் தன்மையை தனக்குள் உணர்ந்தறிந்தார். அதன் நிலைகொண்டு, பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? பிரபஞ்சத்தின் நிலைகள் எவ்வாறு இருந்தது? என்பதை அறிந்துணர்ந்தார்.

பிரபஞ்சம் என்பது சூரியன். உயிராக நின்று கோள்களுக்கு ஜீவன் ஊட்டி, அதன் மத்தியில் இருக்கக் கூடிய நட்சத்திரங்களுக்கும் ஜீவன் ஊட்டுகின்றது. அதை போன்றுதான், நமது உடலுக்குள் சூரியனாக இருந்து இயக்குகின்றது. நாம் சுவாசிக்கும் உணர்வின் சத்துக்களை நம் உடலாக மாற்றுகின்றது.

சுவாசித்த உணர்வின் சத்துக்களை இழுத்து,
வெப்ப காந்தம்
அதற்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்து
சுவாசிக்கும் பொழுது, உடலுக்குள் உறைகின்றது.
உறையும் பொழுது, அந்த வெப்ப காந்தத்தின் நிலைகள்
ஜீவனுள்ள துடிப்பாக, உயிரின் ஓட்டம் கொண்டு,
காந்தத்தின் நிலைகள் கொண்டு, ஜீவ அணுக்களாகத் துடித்து,
பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் எப்படி, ஒளி வீசுகின்றதோ,
அதைப் போன்று, உணர்வின் ஒளிகள் உடலுக்குள் நின்று
எண்ணங்களைப் பிரதிபலிக்கச் செய்து, உடலினை இயக்கக்கூடிய தன்மையை உருவாக்குகின்றது, என்ற இந்தப் பேருண்மையின் நிலைகளை போக மாமகரிஷி உணர்த்தியருளினார்.

(பக்கம் 9-12)
தாவர இனச் சத்தினை நமக்குள் எடுத்தாலும், காயகல்ப சித்தி இந்த உடலுக்கு உதவாது, என்பதை அறிந்தார் போகமாமகரிஷி. தாவர இனச் சத்தின் நிலைகள் கொண்டு, உடல் பிணிகளை நீக்கினாலும், அதற்குள் இருக்கும் விஷத்தின் ஆற்றல், உடலின் திசுக்களில் எதிர் நிலையை உருவாக்கிவிடும் என்பதை போகர் அறிந்து உணர்ந்தார்.

நம் உடலுக்குள் இருக்கும் எண்ணத்திற்குள், எத்தனையோ கோடி உணர்வுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஒரு உணர்வின் தன்மை கொண்டு, உடலில் பிணியாக வந்தாலும், அதற்கு வேறொரு சத்தின் தன்மையை நமக்குள் செலுத்தப்படும் பொழுது, இது நிவர்த்தியாகும்.

ஆனால், இதற்கு எதிரான வேறொரு அணுக்களை இது புசிக்கும் பொழுது, எதிர்நிலைகள் கொண்டு அணுவின் தன்மை வளர்ந்து விடுகின்றது. ஆனால் கடினமான நிலைகள் கொண்டு, விஷத்தின் தன்மைக்கு, விஷத்தின் ஆற்றல் கொண்ட தாவர இன சத்தை ஊட்டினாலும், இந்த உணர்வின் நிலைகள் கொண்டு, மாய்த்துவிடலாம்.

ஆனால், அதைவிட எளிமையான நிலையில் இருப்பது,
இந்த விஷத்தை அழிக்கும் இந்த உணர்வின் ஆற்றல்
நம் உடலுக்குள் நின்று இந்த ஆவியின் தன்மையில்
தான் ஏற்றுக்கொள்ளும் நிலைகள் தடுமாறி,
அதனுடைய நிலைகள் நிலைகுலையச் செய்யும் ஆற்றல்
பெற்று விடுகின்றது.

ஆனால், அவ்வாறு அதற்கு மேல் சேர்ந்தாலும், அதனுடைய நிலைகள் தவறிழைக்கப்படும் பொழுது, அந்த அணுவின் தன்மை மாறுகின்றது. இந்த உடலில் இருக்கக்கூடிய உபத்திரவத்தை நீக்கினாலும், நல்ல உணர்வின் தன்மைகள், சாந்த உணர்வை ஊட்டும் உணர்வின் தன்மையை, விஷத்தின் ஆற்றல் இதைத் தாக்கப்படும் பொழுது, அதனுடைய நிலைகளை நிலைகுலையச் செய்கின்றது.

அதே சமயம், நமக்குள் சாந்தத்தை ஊட்டி, அதைக் கொண்டு சிந்திக்கச் செய்யும் உணர்விற்குள் விஷத்தின் தன்மை ஆனவுடன், துரித எண்ணங்கள் கொண்டு, சிந்தனையுடைய நிலைகள் இதைச் செய்யும். அதே சமயம்
துரித வேகத்திற்கு ஈடு செய்யும் முறையில்
எதிர் நிலையில் இருக்கும் செயலாற்றல் குறைவாக இருந்தால்
உடனே, அதிக வேகமும் ஆத்திரமும், உண்டாகும்.

இதைப் போன்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கும் உணர்வின் நிலைகளை, போகமாமகரிஷி தெள்ளத் தெளிவாக தேர்ந்தெடுத்து, தனக்குள் இருக்கக்கூடிய விஷத்தின் ஆற்றலை, ஜீரணிக்கக் கூடிய சக்தியை உருவாக்கினார்.

நட்சத்திரங்கள் தனக்குள் ஆற்றலைச் சிறுகச் சிறுகச் சேமித்து,
அந்த சேமிப்பின் தன்மை கொண்டு,
உலோகத் தன்மையை உருகச் செய்து,
விஷத்தின் ஆற்றலை அடங்கச் செய்து,
தன் ஆவியின் தன்மையை வெளிப்படுத்தும் பொழுது,
அது விஷத்தின் தன்மையைப் பிரபஞ்சத்தில் வெளிப்படுத்துகிறது.

அதைப் போன்று, மனித உடலுக்குள் எடுத்துக் கொண்டாலும், இந்த விஷத்தின் தன்மை சிறுகச் சிறுகக் கூடி, இந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருத்து விட்டால், அதை அடக்கும் தன்மையான வெப்ப நிலைகள் தேவை.

அந்த நிலைகளுக்குத் தேவையான நிலைகள் கொண்டு, சூரியனுக்குள் உதிக்கும் ஒவ்வொரு பாதரசத்திலும், அது உமிழ்த்தி வெளிப்படுத்தும் நிலைகளிலும், விஷங்கள் உண்டு. அதற்குண்டான காந்தமும் உண்டு.

இதைப் போன்று, நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மையில்,
விருப்பு, வெறுப்பு, என்ற உணர்வுகள்
நம்மை அறியாமல் உட்செல்லும். இந்த உணர்வுகளிலிருந்து,
அதற்குச் சமமான வெப்பத்தைக் கூட்டவில்லை என்றால்,
அதனுடைய ஆற்றல்மிக்க நிலைகள்,
நம் உடலிலிருந்து செயல்படுத்திவிடும்.

தாவர இனச் சத்தினுடைய நிலைகளை நாம் கொடுத்து, நம் உடலிலுள்ள பிணிகளை நீக்கினாலும், அந்தத் தாவர இன சத்தின் நிலைகள், மற்ற நிலைகளில் பாதிப்பதைத் தடுக்க முடியாது.

இதை, போகமா மகரிஷி தனக்குள் கற்றுணர்ந்து, எத்தகைய நிலைகள் வந்தாலும், சாந்தத்தை உருவாக்கும், காந்தத்தைத் தனக்குள் சேர்க்கும் பொழுது, அந்த ஆற்றல்மிக்க நிலைகள் அது எடுத்துக்கொண்ட வெப்ப காந்தத்தின் நிலைகள் பிறிதொன்று, தன்னை அணுகாத நிலைகளில் தற்காத்துக் கொண்டு, நமக்குள் அந்த ஆற்றல் மிக்க நிலைகளாகச் செயல்படுகின்றது, என்ற பேருண்மையை போக மாமகரிஷி கண்டுணர்ந்தார்.

(பக்கம்  15-20)
5300 ஆண்டுகளுக்கு முன், ஏழ்மையின் நிலையில் வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில், வறுமை வாட்டிக் கொண்டிருந்தது. அந்தக் குடும்பத்தார் விஷத்தால் தீண்டப்பட்டு, குடும்பம் மாய்ந்திட, அந்தக் குடும்பத்திலிருந்த சிசுதான் போகர். தன் குடும்பத்தில் வறுமை எல்லை கடந்த நிலைகள் வரும்பொழுது, தன் தாய் தந்தையரை எண்ணித் தனித்து அனாதையாகின்றார்.

போகரின் தந்தை, முதலில் இறக்கின்றார். இறந்தபின், தாயின் அணைப்பில் அது வளருகின்றது. தாயைக் கருநாகம் தீண்டி, தாய் மடிந்து விடுகின்றது. தாய் தந்தையர்கள் இல்லாது, தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுடன், அவர் இளம் பருவத்தில் ஏங்கித் திரிந்து கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில், அவர் தனது எண்ணத்தை வலுக்கூட்டி வானத்தை நோக்கி ஏகினார். அந்தக் குழந்தை ஏக்கத்தின் நிலைகள் கொண்டு, சுழன்று வரும்பொழுது, சூரியனையே வானை நோக்கி எண்ணி ஏங்குகின்றது.

அக்காலங்களில், சூரியன்தான் உலகிற்கு வழிகாட்டி. அதன்பின்தான், எதையும் அறியும் தன்மை வருகின்றது. தன் தாய் தந்தையரின் ஏக்கத்துடன் கதிரவனை வணங்குகின்றார். அப்பொழுது அவரை அறியாது, அவரின் ஏக்கத்தின் உணர்வுக்குள், சூரியனின் காந்த சக்திகள் சிக்குகின்றது.
சூரியனையே இறைவனாகக் கருதி,
தன் தாய் தந்தையரின் ஏக்கத்துடன் ஏங்கி திரிந்த உணர்வுக்குள்
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும்
உணர்வின் ஆற்றல் சிக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் ஒளி காந்த சக்தி, இவருக்குள் ஈர்க்கப்பட்டு, அவருக்குள் மகரிஷிகள் வான இயலின் தத்துவத்தை எப்படி உணர்ந்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல் இவருக்குள் பிரம்மமாகின்றது.

இவர் ஏங்கித் தவித்த, உணர்விற்குள் சிக்கியதுதான்,
துருவ நட்சத்திரத்தின் உணர்வின் அணுக்கள்.
அது, இவர் உடலில் சிக்கித்தான்
விண் உலகத்தின் நிலையையும்,
இந்தப் புவியின் நிலைகள் கொண்டு, தாவர
இனத்தையும் அறிந்திடும்நிலை அவருக்குள் வந்தது.

போகர், இந்தப் பூமி விண்ணில் இருந்து எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல், ஒன்றுடன் ஒன்று கலந்து, உணர்வின் சத்தான தாவர இனத்தின் சத்துக்கள் எவ்வாறு வெளிப்படுகின்றது? அந்த உணர்வின் சத்தின் ஆற்றல்கள் என்ன? என்று அதை நுகர்ந்து அறிந்தார்.

தான் நுகர்ந்ததைத் தனக்குள் சுவாசித்து, அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஆற்றலாக மாற்றினார். 

மாற்றிய ஆற்றல் கொண்டு, அந்த உணர்வின் செயல் எவ்வாறு இருக்கின்றது என்பதைக் கண்டறிந்தார். இதைப் போன்றுதான்,
இந்தப் புவனத்திற்குள் விளையும் அனைத்து நிலையும்,
இந்த உடலுக்குள் உண்டு, என்ற நிலையைத் தனக்குள் கண்டறிந்தார்.
இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் தட்டியெழுப்பி,
இந்த உணர்வின் ஆற்றல் கொண்டு, ஒவ்வொன்றையும் கண்டறிந்தார். வெள்ளி எவ்வாறு விளைந்தது? மற்ற உலோகங்கள் எவ்வாறு விளைந்தன? என்று தன் உணர்வின் ஆற்றல் கொண்டு, புவிக்குள் இருந்த நிலைகளைக் கண்டறிந்தார்.

உலோகங்கள், இந்த புவிக்குள் விளைந்து ஆவியாக மாறி,
அணுக்களாக மாறித் தாவர இனங்களாக மாறுகின்றது
என்பதை அறிந்துணர்ந்தார்.
அந்தத் தாவர இனச் சத்தின் தன்மைகள், ஆவியாக மாறும் பொழுது,
சூரியனின் காந்த சக்தியின் துணைகொண்டு,
ஆவியின் உணர்வலைகளாக மாறினாலும்,
அந்த உணர்வின் சத்து, உடலுக்குள் ஆனவுடன்
எண்ண ஒளிகளாக மாறுகின்றது,
என்பதை அறிந்துணர்கின்றார்.

அந்த எண்ண உணர்வின் தன்மையின் பொறிகள், நாம் உருவானபின்
உயிரின் தன்மை துடிக்கும் பொழுது
இந்த உணர்வின் தன்மை, அங்கங்களை அசைத்து
அது சொல்லாகவும், செயலாகவும்,
அங்கங்களை எவ்வாறு இயக்குகின்றது?
என்ற இந்த பேருண்மையைத் தனக்குள் கண்டுணர்கின்றார் போகர்.

அவர் நாளொரு மேனியாக, ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன், சூரிய உதயத்தின் தன்மை கொண்டு, சூரியனின் காந்த இயக்கத்தின் சக்தியைத்தான் நுகர்ந்து எடுத்தார். நுகர்ந்தபின், ஒரு குணத்தின் சிறப்பையும், அந்த உணர்வின் தன்மையின் ஆற்றலையும், தனக்குள் சக்தியின் தன்மையைச் சேர்த்து, அந்தச் சக்திகள் எவ்வாறு செயல்படுகின்றது? என்ற பேருண்மையின் தன்மையை அறிந்தார்.

இதைத் தான், ஒவ்வொரு நாளும் ஒரு பெண்ணைக் காதலித்தான் என்று எழுதிவிட்டார்கள். அவர் காலையில் எழுந்தவுடன், சூரியனுடைய துடிப்பையும், உலகத்தின் நிலைகளையும், காந்த அலைகள் கொண்டு, தனக்குள் சமைத்தார்.

அவ்வாறு, சமைத்த ஆற்றலின் சக்தியைத் தனக்குள் கூட்டினார். அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் பிராணனாக்கிப் பெருக்கினார். பெருக்கிய தன்மை கொண்டு, ஒவ்வொரு தாவர இனத்தின் தன்மையைத் தனக்குள் சுவாசித்தார். அந்தச் சுவாசத்தின் தன்மை கொண்டு, மற்ற பொருட்களுடன் இயக்கப்படும் பொழுது, உணர்வின் சக்தி எவ்வாறு இருக்கின்றது? என்ற இந்த உணர்வை எடுத்தார்.

அடுத்து, தன்னைச் சார்ந்துள்ள மக்களையும், தன்னைச் சார்ந்து வருவோரையும், அவர்கள் எடுத்துக்கொண்ட நோய்கள், இன்னல்கள், மனோ வேதனை போன்ற நிலைகளால், சிந்தனையற்றிருக்கும் மக்களுக்குத் தன் எண்ணத்தின் ஒளியைப் பாய்ச்சினார். பாய்ச்சி, அவர்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய தீயவைகளை மாய்த்து, மனிதனை மகிழச் செய்தார்.

தன் ஆற்றல்மிக்க நிலைகளில், தான் எந்த சக்தியை எடுத்தாரோ, அந்த சக்தியைத் தன்னைச் சார்ந்த மனித உடலில் பாய்ச்சப்பட்டு, அவர்கள் உடல்களில் உள்ள தீயவினைகளை நீக்கி, அவர் சார்புள்ள மக்களாகத் தனக்குள் எடுத்தார். தன்னைச் சார்ந்த மக்களின் துயரங்களை நீக்கி, அவர்களை மகிழச் செய்து அந்த மகிழ்ந்த உணர்வுகளை தனக்குள் சுவாசித்து, தனக்குள் உணர்வுகளை மகிழச் செய்திடும் உணர்வுகளாக்கினார்.

சூரியன், எவ்வாறு தனது ஈர்ப்பில் கோள்களையும், நட்சத்திரங்களையும் வளர்த்து, பிரபஞ்சத்தை உருவாக்கி, அதில் பூமியைத் தோற்றுவித்து, உயிரான அணுக்கள் கொண்டு, உணர்வின் எண்ணங்கள் கொண்டு, உயிரரினங்களைத் தோற்றுவித்து, உலகை அறிந்துணர்ந்து செயல்படும், மனிதனின் உருவை உருவாக்கிய உணர்வின் தன்மை எவ்வாறு? என்று அன்று போகர் கண்டுணர்ந்தார்.

சூரியன், எப்படித் தன் கதிர்களை, மற்ற உணர்வுடன் கலக்கச் செய்து,
அந்த உணர்வின் நிலைகளை விளையச் செய்து,
எவ்வாறு செயல்பட்டதோ, அதைப் போன்றுதான்,
போகர் தாவர இனச் சத்துகளைத்
தன் சரீரத்திற்குள் உருவாக்கும் ஆற்றலின் தன்மை பெற்று,
தன் உணர்வின் எண்ண வலிமை கொண்டு,
உலகம் முழுமைக்கும் சுழன்று வந்தார்.

இஸ்ரேல் பகுதியில் சிவலிங்கத்தை வைத்து, அந்தப் பொக்கிஷத்தின் தன்மையைப் போகர் இங்கிருந்து அங்கு சென்று, சில உணர்வுகளை இயக்கிய பேருண்மைகளின் நிலைகள்தான், யூத வம்சத்தாரின் நிலைகள். சீனாவின் நிலைகளும், இதைப் போன்றுதான். இதைப் போன்று போகர் 5300 ஆண்டுகளுக்குமுன், உலகம் முழுவதற்கும் சுழன்று வந்தார்.

ஆரம்பத்தில், அகஸ்திய மாமகரிஷி எவ்வாறு அணுவின் தன்மையை அறிந்து, துருவத்தின் நிலைகளை அறிந்து, பின் துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமாக நின்று, உலகத்தின் நிலைகளைச் சிருஷ்டித்து, எண்ண ஒளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றாரோ, அதைப் போன்றுதான், போகர் தன்னிச்சையான நிலைகளில், தான் எடுத்துக் கொண்ட, சுவாசத்தின் நிலைகளில் செயல்பட்டார்.
அந்தச் சுவாசத்தின் நிலைகளை கொண்டு,
உலகம் முழுவதற்கும், மக்களைத் தெய்வமாக எண்ணி,
உடலுக்குள் இருக்கக்கூடிய, உணர்வின் ஆற்றல்
ஒவ்வொன்றையும் புவனமாக எண்ணி,
அந்தச் சக்திக்குள் இருக்கக்கூடிய நிலையை,
மனிதன் மகிழ்ந்து எடுக்கக்கூடிய எண்ணம் வேண்டுமென்று எண்ணினார்.

அந்த எண்ணத்தைத் தோற்றுவிக்க, ஒவ்வொருவரும் துன்புற்று இருக்ககூடிய நிலைகளில், அவர்களின் துன்பத்தை நீக்கி, இன்பமான நிலைகளை தோற்றுவித்தார்.

அவ்வாறு இன்பமான நிலைகளைத் தோற்றுவித்து, மகிழ்ச்சியான நிலைகளைப் பரப்பச் செய்து, அவர் எந்த ரூபத்தில், எந்த உடலுக்குள் நின்றிருந்தாலும், அதன் வழிகளில் அவருக்குள் சேர்க்கச் செய்து அந்த உணர்வின் ஆற்றலைத் தான் இருந்த இடத்தில், தனக்குள் சேர்த்து, விண் சென்றார் போக மாமகரிஷி. அவர் எடுத்துப் பரப்பிய அலைகள்தான், இன்று கலியுகத்தில் உள்ள அனைத்து உணர்வின் ஆற்றல்களும்.

(பக்கம்  21-24)
போகர் அருள்சக்தி பெற்று, மக்களுக்காக எத்தனையோ சிரமங்கள் பட்டு, எல்லோரும் நலமாக இருப்பதற்காக அவர் செய்து கொண்ட ஆற்றல்களை நாம் தெரிந்து கொள்வோம்.

போக மாமாரிஷி, புவனேஸ்வரி என்ற தெய்வத்தை வணங்கி வந்ததாக, அவருடைய சரித்திரத்தில் எழுதி இருக்கின்றார்கள். புவனேஸ்வரியை வணங்கி, அந்த சக்தி அருள்பாலித்து, அந்த சக்தியிலிருந்துதான் பல சக்திகளைப் போகர் பெற்றதாக, நாம் நம்புகிறோம்.

ஆனால், புவனேஸ்வரியின் உட்பொருளே இந்தப் பூமி ஒரு புவனம். இதற்குள் ஏற்படுத்தப்பட்ட அனைத்துச் சக்திகளும்,
தாவர இனத்திலிருந்து உயிரணுக்கள் வரை,
அது ஒவ்வொன்றும் இந்தப் புவனத்திற்குள் உருபெற்றது.
இந்தச் சக்திகளை வணங்கினார்.

ஒவ்வொரு தாவர இனங்களும் எவ்வாறு வளர்ந்தது? ஒவ்வொரு உயிரனங்களும் எவ்வாறு வளர்ந்தது? ஒரு கல் எவ்வாறு வளர்ந்தது? ஒரு உலோகம் எவ்வாறு வளர்ந்தது? இது வளர்வதற்கு காரணம் என்ன? என்ற இந்த உண்மையைத்தான், கடும் தவமிருந்து அந்தத் தவத்தால் அதைப் பெற்றார்.

அந்தக் கடும் தவம் என்ற நிலைகளுக்கு, அகஸ்திய மாமகரிஷிகள் உணர்த்திய அருள் வழிப்படி, அவர் வெளிப்படுத்திய ஆற்றல் மிக்க சக்திகள் கிடைத்தது. காளிங்கநாதர்தான் போகருடைய குரு, என்று எல்லோரும் சொல்லுவார்கள்.

இவர்கள் இரண்டு பேரும் சீனாவில் பிறந்து, இந்தியாவிற்கு வந்தவர்கள் என்று சொல்லுவார்கள். அதுவல்ல உண்மை, இந்தியாவில், தென்னாட்டில் தோன்றி, கண்டுணர்ந்த பேருண்மையைத்தான் தனக்குள் எடுத்து, வளர்த்து, இந்த உலகம் முழுவதற்கும் பரப்பினர். அன்று, அகஸ்திய மாமகரிஷிகள் தென்னாட்டில் தோன்றினாலும், வட துருவம் மற்ற துருவங்களெல்லாம், சென்று வந்தார்.

அகம் என்பது, ஒரு அணுவிற்குள் இருக்கும் இயக்கத்தின், ஆற்றல்மிக்க சக்தியைத் தன்னுள் உணர்ந்து, ஒவ்வொரு உணர்வின் இயக்கமும் எவ்வாறு இருக்கின்றது? என்று அறிந்துணர்ந்தவர் அகஸ்திய மாமகரிஷி. தெற்கில்தான், சூரியனுடைய வெப்பமும், அதற்குத்தக்க நிலைகளும் வளர்ச்சி பெற்றது.

ஆகவே, விண்ணுலகின் ஆற்றலை இந்த ஞானி கண்டுணர்ந்து, வடக்கே சென்று, இந்த பூமி முழுவதற்கும் சுழன்று வந்தவர். அகஸ்திய மாமகரிஷி வடக்கில், துருவத்தின் நிலையை அவர் கண்டுணர்ந்து, வெளிப்படுத்தியதால் துருவ மகரிஷி என்று அழைத்தார்கள்.

மனிதராகி, உயிராத்மாவை ஒளியாக்கி, இந்த பூமியில் இருந்து
முதன் முதலில் விண் சென்றவர் துருவ மகரிஷி.
பேரண்டத்தில் இருக்கும்
விஷத்தின் அலையின் சுழற்சி கொண்டுதான்,
சூரியனே உருப்பெற்றது, என்று கண்டுணர்ந்தவர்.

நமது பூமி சிறுகச் சிறுக வளர்ந்து,
அதன் சுழற்சியில், தனக்குள் ஈர்த்துக்கொண்ட
பேரண்டத்தின் விஷத்தின் தன்மை கொண்டு சுழன்று,
பிரபஞ்சத்தில், தான் எடுத்து கொண்ட சக்தியின் தன்மையைத்
தனக்குள் விளைய வைத்து,
வெளிப்படுத்தும் மூச்சலைகள்தான்
காற்றில் மிதந்து வருகின்றது, என்று கண்டுணர்ந்தவர்.
அதை எடுத்துத்தான் செடி கொடிகள் வளர்ந்தது
என்று கண்டுணர்ந்தவர், அகஸ்திய மாமகரிஷி.

அந்தச் செடி கொடிகள் வெளிப்படுத்தும் நிலைகளைத்தான்,
உயிரணுக்கள் சுவாசித்து வாழ்ந்தது,
என்று தனக்குள் கண்டுணர்ந்தவர் அகஸ்தியர்.
எந்தச் சத்தினை சுவாசித்ததோ
அந்தச் சத்தின் உணர்வின் எண்ணங்கள் கொண்டு
இயங்கச் செய்தது, உயிரணுக்களின் தோற்றம்
என்பதை அறிந்துணர்ந்தவர் துருவ மகரிஷி.
அவர் கண்ட பேருண்மையின் நிலைகளை, போகர் தனக்குள் அறியும் சந்தர்ப்பத்தை பெறுகின்றார்.

காளிங்கராயன் என்பது, விஷத்தின் தன்மை கொண்ட பாம்பு. அந்தப் பாம்பு, தன் சுவாசத்தின் தன்மையால் விண்ணுலகிலிருந்து, விஷத்தினை எவ்வாறு எடுக்கின்றது? அந்த விஷத்தின் தன்மை கொண்டு, ரத்தினக் கல்லாக எப்படி மாற்றுகின்றது? என்பதை போகர் தன் யுக்தியின் நிலைகள் கொண்டு, தனக்குள், சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட இந்த சுவாசத்தைத்தான், குருவாக ஏற்றுக்கொண்டார்.

மாணிக்கக் கற்கள் ஒளி வீசும் பொழுது, எதனெதன் அடிப்படையில் அது சுவாசித்தது? சுவாசித்த தன்மைகள், எப்படி அதற்குள் விஷமாக வருகின்றது? என்ற இந்தப் பேருண்மையை அறிந்தவர்தான் போகர். ஒவ்வொரு அணுவின் தன்மையின் சக்தியை, அறிந்துணர்ந்தவர் போகர்.

பாம்பு, மேல் நோக்கியே சுவாசிக்கும்.
அப்படிச் சுவாசிக்கும் பொழுது,
நட்சத்திரங்களில் இருந்து வரும்
கதிரியக்கத்தைச் சுவாசிக்கும் ஆற்றல் பெறுகின்றது.
அத்தகைய கதிரியக்கங்களில் வெளிப்பட்ட விஷத்தன்மையைச் சேர்த்துத் தனக்குப் பாதுகாப்பாக அமைத்துக்கொண்டது. சேமித்த விஷம், வைரக்கல்லாக விளைகின்றது.

இதை போன்ற ஆற்றல் உள்ள நிலைகளில், அது ஜீவன் பெற்றதைக் கொண்டு, நமது பூமியில், நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சக்திகள், விண்ணிலே படர்ந்திருப்பது எப்பொருள்களில் ஊடுருவிச் செயல்படுத்துகின்றது, என்பதைக் கண்டுணர்ந்தார் போகர். அப்படிக் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டுதான், அந்த ஒவ்வொரு சக்தியையும், தனக்குள் சக்தியாக மாற்றினார்.

சேர்த்த சக்தியின் நிலைகள் கொண்டு, கோள்களின் நிலைகளையும், நட்சத்திரங்களின் நிலைகளையும், தனக்குள் கண்டுணர்ந்தார். வானில் வெளிப்படும் சக்திகள் பூமிக்குள் ஈர்க்கப்பட்டு, புழுவில் இருந்து மனிதனாக எவ்வாறு தோன்றியது? மனிதனான பின், அதில் விளைந்த உணர்வலைகள் எவ்வாறு வளர்ச்சி பெற்றது? என்ற நிலைகளைத்தான் போகர் வெளிப்படுத்தினார்.

அதைக் கண்டுணர்வதற்காக, காடுமேடு மலைகளில் அலைந்து திரிந்தார். ஒரு இலையை எடுத்துக் கொண்டால், அதன் சக்தியை நுகர்வது. அதுதான் போகிப்பது என்பது. தனக்குள் சுவாசித்த, உணர்வின் நுண் அணுக்களின் நிலைகளை அறிந்துணர்ந்து, அது எவ்வாறு இருக்கின்றது? என்பதை அறிந்தார்.

இதைப் போன்று, பூமிக்குள் இருக்கும்
ஒவ்வொரு தாவர இனத்தின் சக்தியைத் தனக்குள் எடுத்து,
அதை ஜெபித்தார். அதனால்தான், புவனேஸ்வரியை ஜெபித்தார் என்று சொல்வது.

(பக்கம்  24-27)
இந்த கலியின் ஆரம்ப நிலைகளில்தான், அவர் கண்டுணர்ந்த உண்மையின் தன்மையை, வான இயல், புவி இயல், உயிர் இயல் என்ற நிலைகளையும், மனிதனானபின், மனிதனுக்குள் ஏற்படுத்தப்பட்ட உணர்வின் தன்மையை, முழுமையாக்கிக் காட்டினார்.

அதைத்தான், நவபாஷாணத்தில் முருகன் சிலையை செய்து வைத்தது. நவபாஷாணம் என்பது, எட்டு கோள்களின் விஷத்தன்மையும், சூரியனும் சேர்ந்துத்தான் இந்தப் பிரபஞ்சமே இயங்குகின்றது, என்ற நிலையை அறிந்து, ஒவ்வோரு கோளின் ஆற்றல் எவ்வாறு இருக்கின்றது? என்ற உண்மையை அறிந்தார்.

அந்தக் கோள்களில் இருந்து எடுத்த விஷம்தான், பாஷாணம் என்பது. அதைச் சமப்படுத்தினார். சூரியனில் இருந்த வரக்கூடியது பாதரசம். இன்று வெயிலாகப் பார்க்கின்றோமே, இதெல்லாம் பாதரசம்தான். சூரியன் சுழலும் பொழுது, வெளியாகும் பாதரசம், சுக்கு நூறாகத் தெறித்து வருகின்றது.

அந்தத் துகள்கள் ஒவ்வொன்றுக்குள்ளும், காந்தங்கள் உண்டு. எந்தந்தப் பொருளின் தன்மை அதற்குள் இணைந்து விடுகின்றதோ,
அவற்றுள், ஊடுருவிச் செல்லும் நிலைகள் கொண்டது.
ஆனால், ஒரு பொருளுக்குள் எதிர் நிலையானால்
ஒன்றுக்குள் ஒன்று மாய்த்து,
இது இணைந்து ஆவியாக மாறி
ஊடுருவிச் செல்லக் கூடிய நிலைகள், பாதரசத்திற்கு உண்டு.

போகர், அந்தப் பாதரசத்தையும், நவபாஷாணத்தையும் வைத்து, முருகனுடைய சிலையை உருவாக்கினார். ஒவ்வொரு தாவர இனத்தின் விஷத்தின் தன்மை, தனக்குள் பாதுகாப்பாக ஏற்றுக்கொண்டார்.

அந்த விஷத்திற்குள், நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் மாற்றி, அதைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார்.

அவ்வாறு வளர்த்துக் கொண்ட, பேருண்மையின் நிலைகளில்தான், நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய கதிரியக்கத்தையும், சூரியனிலிருந்து வரக்கூடிய பாதரசத்தையும், தனித்து எடுத்து, நவகோள்களில் இருந்து வரக்கூடிய பாஷாணத்தையும் இணைத்து, மனித ரூபமாக உருவாக்கினார்.

பிரபஞ்சத்திற்குள், கோளின் ஆற்றல் உள்ள நிலைகள், கடைசி நிலைகள் எவ்வாறு பெற்றது? என்ற நிலைகளும், இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றிய மனிதன், எப்படி விஷத்தை மாற்றித் தனக்குள் ஒளியாக மாற்றி, எதையுமே சிருஷ்டிக்கும் தன்மை பெற்றானோ, அதைத்தான், அன்று போகர் முருகனுடைய சிலையை, வடித்து வைத்தார்.

அந்தச் சிலையின் மேல் நீரை ஊற்றி, அதிலிருந்து வரக்கூடிய ஆவியை, மூச்சை நாம் சுவாசித்தால், நமக்குள் அறியாது விளையும் நோய்கள் நீங்கி, இன்புற்று இருக்க அதைச் செய்தார்.
ஒவ்வொரு மக்களுடைய உயிரையும் கடவுளாக மதித்து,
உடலை, அவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று எண்ணி,
பிரபஞ்சத்திற்குள் உள்ள, ஆற்றல் மிக்க சக்திகள்,
மனித உடலுக்குள்ளும் உண்டு என்று உணர்ந்தார்.

உணர்ந்து, ஒவ்வொரு மக்களுடைய நிலைகளையும், தெளிவுபடுத்த வேண்டுமென்று எண்ணினார். தான் எடுத்துக்கொண்ட நிலைகளில், யார் துன்புற்று இருக்கின்றனரோ, அவர்கள் இன்பமுடன் இருப்பதற்காக, அவர் எடுத்துக்கொண்ட ஆற்றல்தான், இந்த முருகன் சிலை.

கந்தபுராணம் எழுதிய நிலைகள் வேறு. கந்தபுராணம் என்பது காவியப் படைப்பாக, அரசு நடத்தும் நிலைகளுக்காக, மெய்ஞானிகள் சொன்ன நிலைகளை, இவர்கள் சிருஷ்டித்துக் கொண்டார்கள். மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு அதன் கீழ் அரசனுடைய நிலைகளை நிலை நாட்டுவதற்கும்தான், இந்தப் புராண காவியங்கள்.

அன்று போகமாமகரிஷி, வான இயலின் தத்துவத்தைத் தனக்குள் எடுத்து, இது மனித உடலுக்குள் உண்டு என்று உணர்த்தி, உணர்த்திய நிலைகள் கொண்டு, மக்களைப் பூஜிக்கச் செய்து, அவர்களை மகிழச் செய்தார். அவர் மனிதராக வாழ்ந்த காலத்தில், இந்தப் புவனத்திற்குள் இருக்கும் அனைத்து சக்திகளும், மனித உடலுக்குள் உண்டு, என்று உணர்ந்தவர்.

இந்த புவனத்திற்குள் உள்ள, ஒவ்வொரு உணர்வலைகளையும், தான் நுகர்ந்து, அந்த உணர்வின் ஆற்றலை அறிந்துணர்ந்து, அதைத் தன் உடலில் சேர்த்து, அந்த உணர்வின் ஆற்றல் எவ்வாறு இருக்கின்றது? என்று தனக்குள் அறிந்துணர்ந்து செயல்பட்டவர்தான் போகர்.

பல தாவர இனச் சத்துக்களை ஒன்று சேர்த்து, செம்பையும், தாவர இன சத்திற்குள் பல சத்துகளை ஒன்று சேர்த்து இணைக்கப்படும் பொழுது, வெள்ளியையும் உலோக நிலையாக மாற்றினார்.

ஒவ்வொரு அணுக்களின் தன்மைகள்
ஒன்றுக்கொன்று எதிர்நிலை ஆகும் பொழுது
ஒன்றுடன் ஒன்று பிரிந்து, மற்றதைச் சமப்படுத்தி
ஒன்றுக்கு எதிர் நிலை ஆகும் பொழுது,
உணர்வின் சத்துக்கள் பிரிந்து
அணுக்களில், பல மாற்றங்கள் ஆகின்றது.

இவ்வாறு, அணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டதை, போக மாமகரிஷி அதை ஒவ்வொன்றையும், அந்தச் சக்தியைத் தனக்குள் சுவாசித்து, அதை ஜெபமாக வைத்து, அந்த உணர்வின் ஆற்றல்களைக் கண்டறிந்தார்.

 (பக்கம் 29-34)
4000 ஆண்டுகளுக்குமுன் விண் சென்றவர்கள் பலர் உண்டே தவிர, இந்த 4000 ஆண்டுகளுக்குள், எந்த மனிதனும் விண் செல்வது சாத்தியமில்லாது போய்விட்டது. ஆனால், போகர் 5300 ஆண்டுகளுக்குமுன், இயற்கையின் தன்மையை, புவிக்குள் தோன்றிய இயற்கையின் சக்தியைத் தனக்குள் சுவாசித்தார்.

அந்தச் சுவாசத்தின் தன்மை கொண்டு, ஒவ்வொரு மனித உடலிலும் எத்தகைய குணங்கள் உள்ளது. அந்தக் குணங்களுக்குள் உலோகத்தின் உணர்வுகள் வலுக் கொண்ட உணர்வாக இயங்கி, அதன் கலவையின் தன்மை கொண்டு, எண்ணங்கள் செயல்படுகின்றது என்பதனை அறிந்துணர்ந்தார்.

பிரபஞ்சத்தில், சூரியனுக்கு அருகில் உள்ள புதன் கோள், உலோகங்களை உருப்பெறச் செய்கின்றது என்பதையும் அறிந்துணர்ந்தார். அதே சமயத்தில், செவ்வாய்க் கோளுக்குள் மனிதனை ஒத்த உணர்வலைகள் இருப்பதை அறிந்துணர்ந்தார்

அதில் உள்ள காந்த அலைகள் எதனையும் கிரகித்து, உணர்வலைகளை மோதச் செய்து, ஒலிஒளி என்ற நிலைகளை உருப்பெறச் செய்யும் ஆற்றல் பெற்றது செவ்வாய்க் கோள், என்பதைக் கண்டுணர்ந்தார்.

மனிதனின் ஆறாவது அறிவின் தன்மை
எதையுமே வடிகட்டும் ஆற்றல் பெற்றது.
செவ்வாய்க் கோளுக்குள், அது சேர்த்துக் கொண்டு
வெளிப்படும் ஒவ்வொரு உணர்வலைகளும்,
எதனுடன் அதிகமாகக் கலந்து வளர்ச்சி பெறுகின்றதோ,
அதற்கொப்பத்தான்,
புழுவிலிருந்து எல்லா உயிரனங்களும்,
அதனுடைய ஞானத்தின் தொடர் வரிசையாக, ஒலியின் தன்மையும், உணர்வின் இயக்கங்களும் சேர்த்து வருகின்றது. அதனால்தான், செவ்வாய்க்கு “ஞானகாரகன்” என்று பெயர் வைத்தார்கள்.

இதைத்தான், அன்று போகர், செவ்வாயின் தன்மையைத் தனக்குள் கூட்டி, அதன் உணர்வின் நிலைகளைத் தன் எண்ணத்தின் நிலைகளில் காவியமாக வெளிப்படுத்தினார். தாவர இனங்கள், எந்த விகிதாச்சாரத்தில் செவ்வாய்க் கோளின் சக்தியை எடுத்திருக்கின்றது? என்ற நிலையை அதன் உணர்வின் நாத ஒலிகளைக் கொண்டு, நாதத்தைத் தனக்குள் சுருதியாக வைத்துத் தனக்குள் பிரித்து எடுத்துக் கொண்டார்.

போகர் இயற்கையின் தன்மையில், ஒரு அணுவிற்குள் இருக்கும் விஷத்தின் தன்மையை, ஒவ்வொன்றோடு மாற்றித் தனக்குள் எப்படி எடுக்கின்றது? என்ற நிலையை உணர்ந்தறிந்தார்.

சூரியன், எப்படி விஷத்தின் தன்மையைத் தனக்குள் சேர்த்து,
தன் உணர்வின் ஆற்றல் கொண்டு சுழற்சியாகி,
எடுத்துக் கொண்ட வெப்ப அலைகள் கொண்ட
உணர்வின் அலையை அணுக்களாக மாற்றியதோ,
அதைப் போன்று, போகர்
தனக்குள் உணர்வின் அணுக்களின் தன்மையை
விஷத்தின் தன்மை கொண்டு
தனக்குள் கவர்ந்து, அதை அடக்கினார்.                     
எந்த விஷமான நிலைகளும், அவரைப் பாதிக்காத வண்ணம் செயல்படுத்தினார்.

தனக்குள் ஒவ்வொரு விஷத்தின் தன்மையையும் அடக்கி, அதன் உணர்வின் நிலைகள் கொண்டுதான், ஒவ்வொரு மனிதனும் துன்பப்படும் பொழுது, தன் எண்ணத்தால், வாக்கால், அவர்கள் உடலில் இருக்கக்கூடிய பிணிகளை நீக்கினார். பிணிகளை நீக்கி, அவர்களை மகிழ்ச்சியுறச் செய்து, அவர்களிடமிருந்து புனிதமான எண்ணங்களை வரவழைத்து, அதைக் கண்டு சுவாசித்து, அவர் உடலுக்குள் மகிழ்ச்சியானார்.

மனித உடலைத் துன்புறுத்தும் கடும் விஷமானாலும்,
அதைத் தனக்குள் எடுத்துத் தன் வாக்கால்
உணர்வின் நிலைகளைப் பாய்ச்சி,
அந்த உணர்வின் ஆற்றலை இயங்கச் செய்தார்.

தாவர இனச் சத்தின் தன்மையை, அவர்களுக்குள் ஊடுருவச் செய்து, விஷத்தின் தன்மையை நீக்கி, அவர்களுக்குள் மகிழ்ச்சியின் தோற்றத்தை உருவாக்கி, மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து அதைப் போகர் சுவாசித்தார்.

ஏனென்றால், புவனேஸ்வரி என்ற நிலை ஒரு மனிதனுக்குள் அடக்கமாகி, உணர்வின் இயயக்கமாக இயங்கும் நிலைகள் கொண்டு, புவனத்திற்குள் விளையும் ஆற்றல் மனித நிலைகளில் வளர்ந்தபின், அவனுக்குள் ஆற்றல்மிக்க நிலைகள் விளைகின்றது, என்ற உண்மையை அறிந்துணர்ந்தார்.

போகர் விஷத்தைத் தனக்குள் எடுத்து, தாவர இனத்தின் தன்மையையும், மற்ற நிலைகளையும் தனக்குள் எடுத்து, விஷத்தைத் தனக்குள் அடக்கி, பிறிதொரு மனித உடலில் விஷத்தின் தன்மை செயல்படும் பொழுது, தன் மூச்சின் எண்ணத்தால், விஷத்தை நீக்கி, மகிழ்ச்சியுறச் செய்யக்கூடிய எண்ணத்தை உருவாக்கினார்.

உருவாக்கிய உணர்வைச் சுவாசித்து, உயிராத்மாவை ஒளியாக்கிச் சென்றார். இதுதான், போகருடைய சரித்திரம். போகருடைய சாஸ்திரங்களை எடுக்கப்படும் பொழுது, காளிங்கநாதரை குருவாக ஏற்று, பிரம்மாவினுடைய ஆசீர்வாதம் பெற்றதாகக் கதைகள் எழுதியிருப்பார்கள்.

காளிங்கநாதர் என்பது, தன் உடலில் இருக்கக்கூடிய
விஷமான ஆற்றல், அது,
தன் உடலில் சுவாசிக்கும்
ஒவ்வொரு விஷத்தின் தன்மையைத்
தான் அறிந்து, அதைக் குருவாக ஏற்று,
அந்த உணர்வின் தன்மை எவ்வாறோ, அதன் வழி செயல்படுத்தப்பட்டு, தனக்குள் இருக்கும் நிலையை, தன் சுழற்சியின் தன்மையைத் தான் அறிந்து செயல்பட்டதுதான்.

பிரம்மாவுடைய ஆசீர்வாதம் என்பது, இவர் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு நிலையையும், தன் உயிரான நிலைகள் கொண்டு, தனக்குள் பிரம்மமாக்கி, சிருஷ்டித்து, உச்ச நிலைகள் அடைந்ததைத்தான் அன்று எழுதினார்கள்.

(பக்கம் 35-37)
போகமாமகரிஷி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தாவர இனச்சத்தை நுகர்ந்தறிந்து, அந்த உணர்வின் ஆற்றலைத் தன் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாகச் சேர்த்து, அதற்கொத்த நிலைகள் கொண்டு, தன் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி வளர்த்து வந்தார். அப்படி வந்ததுதான், நம் பூமிக்குள் பலப்பல உலோகங்கள் தோற்றுவிக்கப்பட்டது.

பல உணர்வின் சத்துகள் பாறையாகக் குவிந்தாலும்,
பாறைகளுடைய கழிவின் நிலைகள்,
ஆவிகளை வெளிப்படுத்தும்பொழுது
அவை ஒன்றுடன் ஒன்று கலந்து, அந்த கலந்த நிலைகள் கொண்டு,
உறைந்து உராயும் பொழுது, மற்ற பாறைகளுக்குள் அது அடங்கி,
உலோகத் தன்மையினுடடைய நிலைகள்
கருத்தன்மையாக விளைந்து,
அது, உலோகங்களாக மாறுகின்றது.

இதைப் போன்று, மனித உடலுக்குள் சுவாசித்த உணர்வின் தன்மையை, புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், தாவர இனச்சத்தை சுவாசித்து, உட்கொண்டு உணர்வின் தன்மை பெற்றதோ, அந்த உணர்வின் தன்மை தனக்குள் உணர்ந்தறிந்து,
புறப்பொருளில் தாவர இன சத்தின் தன்மை கலந்ததை உணர்ந்து,
அதற்குள் உலோகச் சத்தின் தன்மை எவ்வாறு இருக்கின்றது?
என்ற நிலையை அறிந்துணர்ந்தார் போகர்.

தான் நுகர்ந்தறிந்து, உணர்வின் இயக்கத்தை அறிந்துதான், ஒவ்வொரு குணத்தின் சிறப்பின் தன்மையும், ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு வியாதியின் தன்மை, எதன் வழிகொண்டு அதிகமான சேர்க்கையில் இது வருகிறது? என்ற நிலையைத்தான், போகர் தாவர இனச் சத்தை போகித்து, இந்த உணர்வின் ஆற்றல், தன் உடலுக்குள் எந்த நிலையை உருப்பெறச் செய்கிறது? என்ற இந்த உணர்வைத் தனக்குள் உணர்ந்தறிந்தார்.

உணர்ந்தறிந்த அந்தச் சக்தியின் துணை கொண்டு,
புறப் பொருள்களின் நிலைகளை எடுத்து,
அந்தச் சத்தை, தான் உருவாக்கி,
அந்த உருவிற்குள் அது வடிக்கும் இரசம்
விஷத்தின் ஆற்றலை முறியடிக்கும்
தன்மையாக உருவாக்கினார்.
அப்படி உருவாக்கியதுதான் பழனியில் இருக்கும் சிலை.

தன் உணர்வின் தன்மையை,
தன் உடலுக்குள் இருக்கக் கூடிய அனைத்தையும்
தன் கவர்ச்சியின் நிலைகள் கொண்டு,
உயிருடன் தொடர்பு கொண்டு, சுவாசித்து,
உணர்வின் தன்மையைத்
தன் சுழற்சிக்குள் இருக்கச் செய்தார்.
இதுதான் காயகல்ப சித்து என்பது.

இவ்வாறு தனக்குள் செய்து, இந்தப் புவிக்குள் தோன்றும் உணர்வின் சத்தை எங்கிருந்தாலும், பழனி மலையில், ஒரு குகைக்குள் இருந்து கவர்ந்து, சுவாசித்தார்.

தான் சுவாசித்த நிலைகள் கொண்டு, தனது இருப்பிடமான இந்தச் சரீரத்தில் இருந்தாலும், தன் எண்ணத்தை ஊடுருவச் செய்து, எங்கெங்கு இருந்து நுகர்ந்தாரோ, அங்கெல்லாம் தன் உணர்வின் அணுக்களைப் படரச் செய்து, தன் உயிராத்மாவைப் பிரபஞ்சம் முழுவதும் படரச் செய்தார், போகமாமகரிஷி.

 (பக்கம் 40-42)
போகர், மெய் ஒளியைப் பெறும் சந்தர்ப்பத்திற்குக் காரணமே,
ஒரு அனாதையான நிலைகள்.
அவர் தந்தையற்ற நிலைகள் இருக்கும் பொழுது,
தாய்தான் இருக்கின்றது.
தாயும் விஷம் தீண்டி மரணமடைகின்றது.
தாய் மரணம் அடையும் பொழுது,
அந்த விஷத்தின் நிலைகள் கொண்டு, அது
எண்ணத்தை ஓங்கி, வலுவாகச் செலுத்துகின்றது.

அவ்வாறு எண்ணிய ஏக்கத்தின் நிலைகள் கொண்டு, தான் சுவாசித்த நிலைகளில் இவரது எண்ணமும், தாயின் பாசமும் கூடி, அன்று ஞானிகள் காட்டிய அறவழிகொண்டு, அவர் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது, ஈர்க்கப்பட்டதுதான், மெய் ஒளியைப் பெறும் சந்தர்ப்பமாக அமைந்தது.

தாயின் உடலில் இருக்கக்கூடிய நஞ்சை நீக்க,
அவர் எடுத்துக் கொண்ட வேகமும், சுவாசமும்,
ஆற்றல் மிக்கதாகப் பெருகி,
அவருடைய சந்தர்ப்பம் அதை அறிவதற்குச் செல்கின்றார்.

ஒவ்வொன்றையும் தான் உணர்ந்து, அந்த உணர்வின் வேகத்திற்குள் எடுத்துக் கொண்ட நிலைகள், தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து, அதன் விஷத்தன்மையை நீக்குவதற்குண்டான முயற்சிகள் எடுத்தார். அவர் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைதான், விஷத்தின் தன்மையை அறிந்துணரும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

அன்று காட்டிய நிலைகள் கொண்டு, தன் ஏக்கத்தை விண்னை நோக்கிக் கதிரிவனின் எண்ணத்திற்குள் செலுத்தும் பொழுது, இவர் அறியாமலே, இவர் உடலில் சேர்த்துக் கொண்ட நிலைகள், கதிரவனின் காந்த அலைகள் கூடி, இவர் எண்ணத்திற்கு வலுக்கூட்டியது. இவர் எந்தெந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்டாரோ, அதன் வழிக்கொண்டே ஒவ்வொன்றையும் அவர் நுகர்ந்தறிந்தார்.

போகர், குயவர் குலத்தில் வந்தவர் என்று சொல்லுவார்கள். குயவர் என்றால், உருவாக்குபவர் என்று பொருள். அதாவது பிரம்மம். பிரம்மத்தின் தன்மையை அடைந்தவன், என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கு, அந்தப் பெயரை வைத்தார்கள். தனக்குள் நுகர்ந்து எடுத்துத் தன் உணர்வின் தன்மையைத் தான் சுவாசிக்கும் பொழுது,
தன் உயிரான நிலைகளில்
ஒவ்வொன்றையும் தனக்குள் பிரம்மம் ஆக்கினார்.

அந்தப் பிரம்மத்தின் தன்மையைத் தனக்குள் ஞானமாக்கி, அந்தச் சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொண்டார். எப்படி ஒரு அணுவின் தன்மை வளர்ந்ததோ, அதைப் போன்று, தன் எண்ணத்தை ஒவ்வொரு நிமிடமும், ஒரு குணத்தின் தன்மையை எடுத்துக் கொண்டாரேயானால், அதைப் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும், அதைப் பெறுகின்ற வரையிலும், அதையே தனக்குள் தியானித்தார்.
தன் தியானத்தின் நிலைகள் கொண்டு
ஒவ்வொன்றையும், சூரிய காந்தச் சக்தியுடன் தொடர்பு கொண்டு,
விண்ணை நோக்கி ஏகியே,
ஒவ்வொரு நிலைகளையும் தனக்குள் உணர்ந்தறிந்து,
உணர்வின் நுண்ணிய அலைகளைத் தனக்குள் கண்டறிந்து,
விண்ணின் ஆற்றலின் நிலைகளையும், அறிந்துணர்ந்தார்.

போகர், ஒவ்வொரு கோளிலும் இருக்கக் கூடிய சக்தியை நுகர்ந்து எடுத்தார். அதே சமயத்தில், கோள்களின் ஆற்றல் முழுவதையும் உணர்ந்தார். எட்டுக் கோளின் சத்துத்தான், நம் உடல் என்று எண்ணினார். இதை அனைத்தையும் சமப்படுத்தி, ஒரு சிலையை உருவாக்கினார். மனித உடலின் ஆறாவது அறிவின் நிலைகள் முழுமை பெற்று, ஒளிச் சரீரம் பெறுவதற்கு, பழனியில் முருகனை உருவாக்கினார்.

பிரபஞ்சத்தில் உள்ள சக்திகள், மனித உடலுக்குள்ளும் உண்டு என்ற நிலைகளில், பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளைச் சிலையாக்கி, அதைப் பழனி மலை மேல் வைத்தார்.

அதில் சொட்டு நீரை விழவைத்து,
அந்தச் சிலையின் சத்தை ஆவியாக்கி,
நம்மைச் சுவாசிக்க வைத்து,
நம்மை அறியாது நமக்குள் சேரும் விஷத்தினைப் போக்கினார்.

நமக்குள் சேரும் விஷத்தினைப் போக்க, பழனி மலை மீது சிலையை வைத்து, அதில் ஏறிச் செல்லும் பொழுது, மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஏங்கிச் சென்று, கருவறைக்குள் அந்தச் சிலையை வைத்து, அதன் சத்தை நீர் சொட்ட வைத்து, ஆவியாக்கி, அதை நமக்குள் சுவாசிக்கச் செய்தார்.

ஆகவே, பழனி மலைக்குச் சென்றால், அந்த போகமாமகரிஷி காட்டிய அறுகுணமான நிலைகள் பெறவேண்டும். எங்கள் பேச்சும், மூச்சும், பிறரின் துன்பத்தைப் போக்கும் நிலையாக அமைய வேண்டும் என்று எண்ணி ஏங்கி வணங்க வேண்டும்.

சக்திவேல் என்றால், கூர்மையான எண்ணம். ஞானவேல் என்பது ஆறாவது அறிவு, எதனையும் அறிந்திடும் அறிவு.

ஆகவே, அந்தச் சிலையின் மூலமாக, “நீ முருகனாகு” என்று நம் அனைவரையும் எண்ண வைத்தார், போகமா மகரிஷி.

 (பக்கம் 44-48)
நாம் ஆலயத்துக்குள் செல்லும் பொழுது, அங்கே தீப ஆராதனை காட்டும் பொழுதுதான், இருளுக்குள் மறைந்த பொருள் தெரிகின்றது. பொருளறிந்து செயல்படும், ஆற்றல் மிக்க நிலைகள் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.

பழனியில், போகர் உருவாக்கிய முருகன் சிலைக்கு மேல், சொட்டு நீர் உண்டு. எந்த போகமாமகரிஷி காட்டினாரோ, அந்த சக்தி அந்தச் சிலைக்குள் உண்டு. 27 நட்சத்திரங்களின் நிலையும், நவபாஷாணத்தின் நிலையும், சிலைக்குள் உண்டு. நமக்குள்ளும் அவை உண்டு.

நமக்குள், நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் உணர்வின் செயல், நட்சத்திரம். ஒரு அணுவிற்குள், நட்சத்திரத்தின் கதிரியக்கத்திற்குத் தக்கவாறுதான், அது இயக்கிக் காட்டும்.

அதைப் போன்று, நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை
நமது உடலுக்குள் சென்றபின், அணுவாக விளைந்து,
அணுவின் துடிப்பாக விளைந்தபின்,
அது நமது உயிராத்மாவாகச் சேருகின்றது.

நாம் கோவிலுக்குச் சென்றால், அதே உணர்வின் தன்மை கொண்டு, அதே எண்ணத்தால், இங்கு பூஜிக்க வரும் பொழுது, அறிந்துணர்ந்து செயல்படும் நிலைகள் பெறவேண்டும் என்று ஏங்கி வணங்க வேண்டும்.

நம் வாழ்க்கையில், நம்மையறியாது நாம் ஒன்றைப் பார்க்கின்றோம்.
அதில், தவறை அறிந்தபின் தான், விலகிச் செல்கின்றோம்.
ஆனால், அந்த உணர்வுகள் நமக்குள் பட்டு,
அசுத்தமாகச் சேர்ந்துவிடுகின்றது.

அப்படி உருவான, விஷத்தின் நிலைகளை நீக்குவதற்குத்தான், போகர், பழனி மலையில், அந்தச் சிலையில் நீரை ஊற்றி, நாம் எந்த ஏக்கத்துடன் வந்தோமோ, அதிலிருந்து வரக்கூடிய ஆவி, நமக்குள் அசுத்தமாகச் சேர்ந்திருக்கும் நிலையை மாற்றி, நமக்குள் நல்லதைச் செய்விக்கும் நிலையை ஏற்படுத்தினார்.

போகமா மகரிஷி, ஒவ்வொரு சக்தியையும் தனக்குள் மோகித்து, அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து, அதே நிலைகள் கொண்டு எல்லோரும் பெறவேண்டும் என்ற நிலையில், நமது சூரிய குடும்பம் எப்படி ஒரு பிரபஞ்ச நிலைகள் கொண்டு செயலாக்குகின்றதோ, அத்தகைய உணர்வின் ஆற்றலை, மனித உடலாக (முருகன் சிலையாக) அமைத்தார்.

அந்த உடலுக்குள் விஷத்தின் தன்மை கொண்ட நவபாஷாணத்தை வைத்தார். விஷத்தை நல்லதாக்கும் நிலையாக, சிலையாக உருவாக்கி,
அதிலிருந்து வெப்பத்தால் வெளிப்படும் அலைகள்,
வந்து பார்ப்போர் நிலையிலும்
ஏங்குவோர் உள்ளத்திலும் அது சென்று,
துன்பத்தை நீக்கி, கொடிய நோய்கள் வருவதையும் நீக்கி,
மனதை மகிழச் செய்து,
அந்த மகிழ்வான உணர்வுடன்,
உயிராத்மாவை ஒளியாக மாற்றிடும் ஆற்றலை,
அங்கே பதியச் செய்தார்.

மலைக் குன்றின் மீது முருகனை வைத்து, நாம் கீழிருந்து படிமீது ஏறிச் செல்லும் பொழுது, களைப்பு, சோர்வு, வேதனை இவைகளை எண்ணாது, மெய்ஞானிகளின் அருள் ஒளி பெறவேண்டுமென்று
விண்ணை நோக்கிப் பார்க்கப்படும் பொழுது,
நம் புலனறிவு,
உடலுக்குள் துன்பத்தை ஊட்டிய உணர்வின் தன்மையை,
வலுவான நிலைகள் கொண்டு படி மீது ஏற உதவுகின்றது.

உடலில் உள்ள நோய்களை எண்ணாது, நாம் விண்ணை நோக்கி எண்ணும் பொழுது, அந்த மெய்ஞானிகளின் அருள் ஒளிகள் நமக்குள் சேர்ந்து, நமக்குள் பலவீனமான நிலைகள் குறைந்து, எண்ணத்திற்கு வலுக் கூடி, உணர்வின் தன்மை கொண்டு மெய் ஒளி பெறுகின்றது. இது மெய்ஞானிகள் காட்டிய அருள் வழியில், சாதாரண மக்களும் தனக்குள் மெய் ஒளியைப் பெற வழிகாட்டிய தன்மைதான், பழனி மலை.

குன்று மீது, அனைத்துமே தெய்வ நிலையை உயர்த்தி, அந்த உயரவான எண்ணத்தில்,
நாம் மேல் நோக்கிப் பார்த்து,
மெய் உணர்வைச் சுவாசித்து,
நமக்குள் எடுக்கச் செய்வதற்குத்தான் பழனி மலை.

(பக்கம் 49-54)
நாடி சாஸ்திரங்கள், அரசர் வழி வந்தது. அரசர்கள் தன் சுகபோகங்களுக்காகப் பல முறைகளைச் செய்தார்கள். ஆனால், அவர்கள் தன் சுகபோகங்களுக்காக இதைச் செய்தாலும், இந்த உண்மையின் தன்மையை அறிந்து கொண்டபின், இதை மாற்ற முடியவில்லையே என்று கடைசி நிலைகளில் உணர்ந்து, பின் திருந்தி, விண் செல்லும் நிலைகளுக்கு வருகின்றார்கள்.

நாடி சாஸ்திரத்தில் பார்த்தால், காசைக் கொடுத்துவிட்டு கோடீஸ்வரன் ஆக வேண்டும், நல்ல நேரம் வந்தால், கல்யாணத்தைப் பண்ண வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.
எவரும், எதுவும் செய்ய முடியாது.
உங்களுக்குள் இருக்கும் உயிரான ஈசனிடத்தில்
சுவாசிக்கும் உணர்வின் தன்மை விளைய வைத்து,
அதனை உங்களுக்குள் சேர்த்து,
சேர்ந்த உணர்வின் தன்மை
உயிராத்மாவாகச் சேர்த்துச் சென்றபின்,
அவனே நம்மை உருவாக்குகின்றான்.

அவனுக்குள் (உயிருக்குள்), சேர்ந்த உணர்வின் தன்மைக்கொப்ப உடலை உருவாக்கிவிடுவான். அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

“இரு நான் உன்னைப் பார்க்கின்றேன்” என்று நான் உங்களைத் திட்டலாம், ஆனால், அது எனக்குள் பதிந்துவிடும். கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அரசனுடைய நிலைகளில், பழி தீர்க்கும் உணர்வுகளை மனிதனுக்குள் பதியச் செய்து, பழிதீர்க்கும் உணர்வினைக் கூட்டிக் கூட்டி, ஒருவனை அழிக்கும் உணர்வு கொண்டு செயல்பட்ட நிலையில், இன்று அதே அலைவரிசை கொண்டு, கம்ப்யூட்டர் வந்துவிட்டது.
ஏனென்றால், இது மனிதனுக்குள் விளைய வைத்த நிலைகள். புழுவிலிருந்து எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை, மனிதனானபின், எண்ணத்தைக் கூட்டிக் கூட்டி, மற்ற உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து, விஞ்ஞான அறிவு கொண்டு தனக்குள் பதிவு செய்த நிலைகள்.  மீண்டும் காந்த அலைகளில் பரவச் செய்து, சுலபமான நிலைகளில், அந்த அலைவரிசை கொண்டு, இன்று கம்ப்யூட்டரை உருவாக்குகின்றான்.

மனித எண்ணத்திற்குள், விஞ்ஞான அறிவின் நிலைகள்
நாம் புகழ்ந்து பேசி, அந்த உணர்வுக்குள்,
மற்ற ரேடியோவோ, T.V.யோ, தொலைபேசியோ,
இவைகளைப் புகழந்து பேசிய உணர்வின் தன்மை
தனக்குள் கலந்தபின், அலைவரிசையாக எடுத்து,
மனித எண்ணத்திற்குள் தோற்றுவித்த
இந்த உணர்வுகள் ”சிலிகனாக” வடிக்கப்பட்டது.

இந்த சிலிகன் நிலைகள் கொண்டு, ஒவ்வொரு நிலைகளும் மாறி மாறி, மனிதருடைய எண்ணத்திற்குள் வந்து, இன்று இருக்கக்கூடிய சூரிய வெப்ப காந்தம் எடுத்துக் கொண்ட, கெமிக்கலின் தன்மைகள் சுழற்சியாகி, கம்ப்யூட்டராகச் செயல்படுத்தினான். மனிதனின் எண்ணம் கொண்டு கம்ப்யூட்டர் செயல்படும் பொழுது, கம்ப்யூட்டர் நிலைகள் கொண்டு, திரைப்படங்களை வெளியிடுகின்றான்.

அப்படி, வெளியிடும் நிலைகளை நாம் கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுது, சிறுகச் சிறுக அலை வரிசைகளை மாற்றுகின்றான். மாற்றிய நிலைகள் கொண்டு, உயிர் அணுக்களில் பதிவு செய்தபின், உயர் அழுத்த நிலைகளில் அங்கிருந்து பாய்ச்சப்படும் பொழுது, மனிதன் புத்தி பேதம் ஆகக் கூடிய நிலைகளுக்கும், நாடே சூனியமாகக் கூடிய நிலைக்கும் ஆக்கிவிட்டார்கள். இதிலிருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும்.

பழனியில், நாடியினுடைய தத்துவத்தைப் பற்றிய உண்மைகளை, நமது குருநாதர் முதன் முதலில் கொடுக்கும் பொழுது, போகருடைய தத்துவத்தைத்தான் கொடுத்தார். நாடித் துடிப்புகள் பற்றிய உண்மைகளையும், நாடிகளுக்கு உண்டான வெப்பத்தைப் பற்றிய உண்மைகளையும், அன்று போகமா மகரிஷிகள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

நாடி என்பது, ஒவ்வொருவரும் தம்முள் வடித்துக் கொண்ட உணர்வின் தன்மைகள். ஒருவர் எடுத்துக் கொண்ட, உணர்வின் தன்மைகள், உடலில் நரம்பு மண்டலத்தில் அமிலமாக மாற்றப்பட்டு, நுகர்ந்த அந்த உணர்வின் தன்மைகள் உடல் முழுவதற்கும் செருகு செய்யப்பட்ட நிலை.

ஒருவர் எந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றாரோ, அந்த எண்ணத்தின் உணர்வலைகள், உடலின் நரம்பு மண்டலத்தில், அமிலமாக வடிக்கப்படுகின்றது. ஒருவர் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகள் அமிலமாகச் செருகப்பட்டு, நாடி நரம்புகளில் துடிக்கப்படும் பொழுது, அது உடல் முழுவதற்கும், ஆற்றல்மிக்க நிலைகளின் துடிப்பாக இயக்கப்படுகின்றது.

ஒருவர் எத்தனை விதமான குணங்களை எண்ணுகின்றாரோ, இவையனைத்தும் உடலின் நரம்பு மண்டலத்திலுள்ள அமிலச் சக்திக்குள் அணுக்களின் கருக்களாகச் சுழன்று வருகின்றது.
ஒருவர் எண்ணும் எண்ணத்தின் உணர்வினுடைய நிலைகள்,
உயிரில் மோதும் பொழுது,
நரம்பு மண்டலங்களில் கலந்துள்ள நிலைகள் எதுவோ,
அந்த உணர்வின் தன்மை கொண்டு ஆணையிட்டு,
உடல் முழுவதற்கும் இயக்கும் நிலையாகின்றது.

பொது நிலைகளில், எந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்குகின்றதோ, அந்த நாடித் துடிப்பிற்கொப்பத்தான், நமது எண்ணம் கொண்டு, நாம் ஒன்றை ஏற்றுக் கொள்வதும், ஒன்றை வெறுப்பதும், போன்ற நிலைகள் வருகின்றது.

மனித உடலில் எடுத்துக் கொண்ட உணர்வின் அமிலச் சக்திகள் வடிக்கப்பட்டு இறுகிவிட்டால், உடலின் இயக்கத்திற்குள் தொடர்ந்து செயல்படும். ஒருவர், தனக்குள் சேர்த்து வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையை மாற்றுவது என்பது மிக மிகக் கடினம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், ஒவ்வொரு நொடிப்பொழுதும், நாம் ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி, நம் உயிர் வழியாக, அந்த துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளை, நமக்குள் இணைத்துக் கொண்டே இருந்தால், எத்தகைய கடுமையான தீமைகளையும் நீக்க முடியும்,

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற நிலை அடைந்து, சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து, பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்திடலாம். எமது அருளாசிகள்.

 (பக்கம் 56-59)
மகரிஷிகள் காட்டிய அருள் வழியில், நமக்குள் நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் உயிரே. நம்மை ஆள்பவனும் அவனே. நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ, அவைகளை நமக்குள் சமைத்துக் கொடுப்பவனும் உயிரே.

உயிரின் துடிப்பிற்குள் ஏற்படும் வெப்பம்தான், நமது உடலை இயக்குகின்றது. அந்த வெப்பம் இல்லையென்றால், நமக்குள் இயக்கமில்லை. அந்த வெப்பத்தை விஷ்ணு என்றும், இயக்கத்தை ஈசன் என்றும் காரணப் பெயரிட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.

வெப்பமும், கதிரியக்கமும், ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது,
ஒன்று மற்றொன்றை வெல்லப் பார்க்கின்றது.
கதிரியக்கச்சக்தி ஒன்றினுள் ஊடுருவி,
ஒன்றை வெல்லும் சக்தி பெற்றது.
வெப்பமோ, ஒன்றைக் கருக்கும் சக்தி பெற்றது.

கதிரியக்கச் சக்தி வெப்பத்தைத் தாக்கியவுடன், வெப்பம் அதிகமாகின்றது. இதன் தொடர் கொண்டு, வெப்பத்தின் நிலைகள் கதிரியக்கத்தை அடக்கப் பார்க்கின்றது.
இதன் போர் முறைதான், நமது உயிரின் துடிப்பு.
இவைகளின் போர் முறையினால் தோன்றும் வெப்பம்தான்,
நமக்குள் இருக்கக்கூடிய, காந்த அலைகளை இயக்கி,
கரண்டை (மின் ஆற்றலை) உற்பத்தி செய்கின்றது.
நமது உடலில் உள்ள, ஒவ்வொரு அணுவையும் இயக்குவது,
நமது உயிரின் மின் ஆற்றல்தான்.
உயிரின் துடிப்பால், நாம் சுவாசிக்கும் உணர்வின் சத்து
நமக்குள், துடிப்புள்ள உணர்வின் அணுவாகச் சிருஷ்டிக்கப்படுகின்றது.
ஆகவே, உயிர் பிரம்மமாக இருந்து, நமக்குள் சிருஷ்டிக்கின்றது. நமக்குள் இருக்கும் உயிரான ஈசன், நாம் நினைத்ததை நமக்குள் சமைத்துவிடும். ஒருவனைக் கெடுக்க வேண்டுமென்று நினைத்தால், அதை நமது உயிர் நமக்குள் படைத்துவிடும். என்னுடைய சொல்லே எனக்கு எதிரியாகிவிடும். மற்றவர்களை எதிரியாக்கிவிடும்.

அதே சமயத்தில், எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலுக்குள் நோயாகிவிடும். யாரையும் ஏமாற்றலாம், ஆனால், உயிரான ஈசனை, யாரும் ஏமாற்ற முடியாது. கொடுப்பதை நமது உயிர், நமக்குள் பிரம்மமாக்கிவிடும். ஒரு முறை கெட்டதை நினைத்துவிட்டால், ஞானிகளின் உணர்வை எடுத்துத்தான் துடைக்க வேண்டும்.

பாலை நாம் குடித்தால், பாலுக்குள் உள்ள சத்து நம் உடல் ஆவதற்கு, 48 நாளாகும். ஆனால், ஒரு துளி விஷம் பட்டவுடன், நம்மை மயங்கச் செய்கின்றது.

ஆக நாம் நாள் முழுக்க நல்லது செய்தாலும், ஒரு சமயம், “இப்படிச் செய்தானே பாவி” என்று விஷத்தை எண்ணினால், அத்தனையும் போய்விடும். விஷம் கலந்த நிலைகளில் நல்லதையே செய்தாலும், இப்படிச் செய்தார்களே என்று, இதையேதான் பேச வேண்டி வரும். நமக்குள் நம்மை அறியாமலே, இப்படி ஆகின்றது.

இவ்வாறு, நம்மை அறியாது நமக்குள் சேரும் அசுத்தத்தைப் போக்க, ஒவ்வொரு நிமிடமும், மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம். அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெறுவோம். நம்மை ஆட்டிப் படைக்கும், தீய சக்திகளைப் போக்குவோம். ஆகையால், போகமா மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவோம்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியால், குடும்பத்தில் துன்பங்கள் மாறி, மெய் ஒளியின் தன்மையைப் பெற்று, நாம் விடக்கூடிய மூச்சலைகள் குடும்பத்தில் படர்ந்து, குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகிழட்டும். உங்கள் பேச்சும், மூச்சும், மற்றோர்களை மகிழச் செய்யட்டும். இதை நீங்கள் செய்யுங்கள்.

ஏனென்றால், மனிதனாகப் பிறப்பது மிகமிக அபூர்வம். கொடுக்கும் ஆற்றலை, குருநாதருடைய உணர்வுடன் இணைந்து, உங்களுக்குள் பதியச் செய்த, இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிடாதீர்கள். குருநாதர் காட்டிய அருள் வழிகொண்டு, மெய்ஞானிகளின் அருள் வித்தைப் பெறும் பாக்கியம் இது.

இந்த வித்திற்குச் சத்தாக, உங்கள் செவிப்புலனால் ஈர்க்கப்பட்டு, உடலான நிலத்திற்குள் பதிவு செய்து, அதற்கு நீர் ஊற்றவே தியானம். களைகளை நீக்குவதற்கு ஆத்ம சுத்தி. உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள் இருக்கக் கூடிய ஆற்றலைப் பேணுங்கள்.

குழந்தையாக இருந்தாலும், அவமதிக்க வேண்டாம். குழந்தைக்குள் இருக்கும் உயிரும், ஈசனே உடலின் தன்மை உங்களுக்குள் பிறந்தாலும், உணர்வின் தன்மையை மகிழச் செய்யும் பொழுது, மகிழ்வு வருகின்றது.

நம் குழந்தைதானே என்று ஏசினோமென்றால், அங்கிருந்து பதில் அதுதான் வரும். ஓம் நமச்சிவாய, சிவாயநம ஓம். நாம் எந்த உணர்வின் தன்மையை எடுத்து, நம் உடலுக்குள் சேர்க்கின்றோமோ, அந்தச் சக்தியின் தன்மை அது செய்கின்றது. இதுதான் மாறி, திட்டியவுடன் பதில் வருகின்றது. 

நமக்குள், ஈசன் இருக்கும் வரைதான் மரியாதை.
நமக்குள் இருக்கும் ஈசனுக்கு,
நாம் செய்ய வேண்டிய மரியாதை என்ன?
நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும்.
துன்பமான நிலைகளைக் கொடுப்பதல்ல மரியாதை.

அப்படித் துன்பங்கள் ஏற்பட்டாலும், அதை நீக்கிக்கொள்ள, ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். யாம் கொடுக்கும் வாக்கு சாதாரணமானதுதான். அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

(பக்கம் 60-64)

ஒருவருக்குள், ஆத்திரமும் கோபமும் அதிகமாகிவிட்டால்,

அவருக்குள் இருக்கும் மகிழ்ச்சி, கொதிக்க ஆரம்பித்துவிடும்.
அது சிறுகச் சிறுகச் சேர்ந்து, அந்த அமிலத்தின் தன்மை,
மற்றதுடன் இணையாதபடி, சர்க்கரைச் சத்து வந்துவிடும்.
சர்க்கரைச் சத்தின் இனிப்பின் தன்மை கொண்டு,
இருதயத்தின் துடிப்பின் நிலைகள் குறையும்.

இதை, டாக்டரினால் கண்டுபிடிக்க முடியாது. நமக்குள் இருக்கும் உணர்வுகள் மற்றதுடன் இணையாவிட்டால், இதுபோன்ற நிலை வந்துவிடும். பாலுக்குள் இருக்கும் வெண்ணையை, பாலுடன் புளிப்பைச் சேர்க்காமல், பிரித்து எடுக்க முடியாது.

இதைப் போன்றுதான், நமக்குள் இருக்கும் நிலைகள், சர்க்கரைச் சத்தின் இனிப்பு, நுண்ணிய நரம்புகளைப் பாதித்து, மாரடைப்பை (heart attack) உருவாக்கிவிடும். அதிகமான மகிழ்ச்சி அடையும் பொழுது, உடலைவிட்டு உயிர் பிரியும் நிலைகள் ஏற்படுகின்றது.

இவைகளை எல்லாம் உங்களிடம் சொல்லக் காரணம், உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன். உங்கள் உடலுக்குள், உங்களை மனிதராக உருவாக்கிய, 1008 நற்சக்திகள் உண்டு.
குருநாதர் காட்டிய அருள் வழியில்,
நீங்கள் துன்புறும் நிலையிலிருந்து,
“சாமி, நீங்கள் சொன்னதைச் செய்தேன், நன்றாக இருந்தது,
சந்தோஷமாக இருக்கின்றேன்” என்று,
இந்த வாக்கைச் சொல்லுவதற்குப் பதில், எம்மைப் புகழ்ந்து பேசுவதில் ஒன்றும் இல்லை.

உண்மையின் நிலைகளில், ஒருவரைப் புகழ்ந்து கொண்டே இருந்தால், அந்தப் புகழ்ச்சியின் நிலைகளில் முன்னேறுவது கடினம். நமக்குள் இருக்கும், ஆற்றல் மிக்க நிலைகள் கொண்ட, மெய் ஒளியைக் காண்பதிலிருந்து நாம் தவறக்கூடாது. ஒவ்வொரு நிமிடமும், தவறென்ற நிலைகள் நம்மையறியாமலே தோன்றிவிடும்.

அதனால், குரு என்ற நிலைகளில், நாம் சுட்டிக் காட்டத் தவறக்கூடாது. அதற்காக வேண்டி, நேரடியாகச் சொல்ல முடியாத நிலைகளில், மறைமுகமாகப் பிரார்த்தனை செய்கின்றேன். ஆனால், “சாமி நம்மைக் கவனிக்க மாட்டேன் என்கிறார்” என்று எண்ணினால், இதை எடுப்பது கடினம்.

ஆகவே, போற்றுதலுக்கு ஏங்க வேண்டாம்.
ஒவ்வோரு நிமிடமும் நமக்குள், “மனிதன் மகிழ்ந்திருக்க வேண்டும்”
என்ற எண்ணத்தைச் செலுத்துங்கள்.
உங்களுக்குள் அந்த மகிழ்ச்சியைக் காணமுடியும்.

யார் கடும் சொல்லைச் சொன்னாலும், “உன்னையறியாத நிலைகளிலிருந்து நீ தப்புவாய்”, என்று இதைச் சொல்லுங்கள்.

“நீ அனுபவித்தே தீருவாய்” என்கின்ற பொழுது, இரண்டு பேரும் கெடும் நிலை வரும். மனிதருடைய உணர்வுக்குள், அத்தனை நிலைகள் உண்டு.

விஞ்ஞான உலகில், இன்று ஒரு சுவிட்சைத் தட்டிவிட்டால், நம்முடைய நினைவை இழக்கும் தன்மை வந்துவிட்டது. இன்று இருக்கக்கூடிய விஷத்தின் நிலைகளில், ஒருவருக்கொருவர் நம்மை அறியாமலேயே, நம்மையே பழித்துக் கொள்கின்றோம்.

இன்றிருக்கும் உலக நிலையில், எந்தப் பொருளையும் அழுத்தத்தின் நிலைகள் கொண்டு, ஆவியாக மாற்றிவிடலாம் என்று விஞ்ஞானிகள்  கண்டுபிடித்திருக்கின்றார்கள். பூமிக்குள் இருக்கும் கதிரியக்கச் சக்தியைப் பிரித்தெடுக்கின்றார்கள். இதை ஒன்று சேர்த்து, நீருக்குள் அடக்கி வைக்கின்றார்கள்.

அவ்வாறு அடக்கி வைத்ததை, மீண்டும் பூமிக்குள் இருக்கும் வெப்ப காந்த அணுக்களுக்குள் வெடிக்கச் செய்யும் பொழுது, அதை ஆவியாக மாற்றுகின்றது. எவ்வளவு பெரிய பொருளானாலும், அழுத்தத்தின் நிலைகள் கொண்டு, ஆவியாக மாற்றுகின்றார்கள், இன்றைய விஞ்ஞானிகள்.

இதைப் போன்றுதான், அன்று மெய் ஞானிகள் இதே அழுத்தத்தின் தன்மை கொண்டுதான், தன் மூச்சலைகளைப் பாய்ச்சித் தவமிருந்தார்கள். தன்னைத் தற்காத்துக் கொள்ள, தனித்துத் தவமிருக்கச் சில குகைகளை ஏற்படுத்தினார்கள். இதுவும் உண்மைதான்.

இந்தியத் தத்துவத்தின் நிலைகள், அன்று வாழ்ந்த மெய்ஞானிகள் கண்டுணர்ந்த நிலைகளை, இன்று விஞ்ஞானிகள் “எலக்ட்ரானிக்” என்ற நிலையில் கம்ப்யூட்டரை வைத்து அளந்து, அளந்து, இந்த உண்மையின் நிலைகளை அறிந்து கொண்டார்கள்.

இன்று மனிதன், நமது பிரபஞ்சத்திற்குள்ளும் அணு உலைகளை அனுப்பி வைத்தான். நமது பூமிக்குள்ளும் அதை வெடிக்கச் செய்து, அணுக் கதிரியக்கங்களை அதிகமாகப் பரப்பிவிட்டான்.

இன்று, காற்று மண்டலத்தில் நச்சுத்தன்மையான நிலைகள், அதிகமாகப் பரவிவிட்டது. எதிலும் தப்ப முடியாத நிலைகள், வந்துவிட்டது. நம்மை உருவாக்கிய, நல்ல உணர்வுகள் அழியும் தன்மை வந்துவிட்டது. மனிதராக இருக்கும் நாம் அனைவரும், இனி இறந்தபின், மிருக உடல் பெற்றுத்தான் தீரவேண்டும்.

ஆகவே, இந்த மனித உடலில் இருக்கும் பொழுதே, நம் குருநாதர் காட்டிய அருள் வழியில், மெய்ஞானிகளின் அருளைப் பெற்று,
நமது உயிர் ஒளியாக இருப்பதைப் போன்றே,
உயிரில் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி,
“நாம் அனைவரும் விண் செல்வோம்” என்று,
நமக்குள் உறுதிப்படுத்தி வாழ்வோம்.
நாம் அனைவரும், போக மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம். அந்த மகரிஷியின் அருள் ஒளியால், மெய் ஒளியின் தன்மையை நாம் பெறுவோம். உலக மக்கள் அனைவரும், பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெற, நாம் தவமிருப்போம், எமது அருளாசிகள்.