ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 23, 2017

நான் எத்தனையோ மோசமான ஆள் தான் - என்னைக் குருநாதர் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைத்துக் கொண்டார்

ஒருவர் தீங்கு செய்கிறார் தீங்கு செய்கிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த உணர்வை அதிகமாகச் சேர்த்தால் நமக்குள் தீங்கு செய்யும் உணர்வுகள் வந்து  நம்மையும் தீமை செய்ய வைத்துவிடும். ஆகவே
1.தீமைகளை நுகர்ந்தால் தீமை செய்யத்தான் முடியுமே தவிர
2.நன்மை பயக்க முடியுமா என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

குருநாதர் எம்மிடம் சொன்னது:-
ஒவ்வொரு நொடியிலேயும் ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று நாம் பார்த்து அதனை நுகர்ந்து விட்டால்  வேதனையிலிருந்து அவர் மீள வேண்டும் என்று தான் நீ எண்ணுதல் வேண்டும்.

அதே போல ஒருவன் தீங்கு செய்ய நினைத்தால் அதிலிருந்து அவன் மீள வேண்டும் என்று தான் நீ எண்ண வேண்டும்.

1.நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு
2.அவர்களைத் தீமையிலிருந்து மீட்க வேண்டும்
3.வேதனைகளிலிருந்து மீட்க வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

உங்களுக்கும் இதைத்தான் யாம் தெளிவுபடுத்துவது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறுங்கள். அந்த உணர்வின் தன்மை கொண்டு தீமையான உணர்வு நுகர்ந்ததைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.

1.ஒருவன் தீமை செய்தான் என்று தெரிந்து கொண்டாலும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று
3.அந்தத் தீமையில் இருந்து அவர்கள் விடுபடவேண்டும் ஈஸ்வரா… என்று
4.உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். 
5.மற்றவர்களைப் பாதுகாக்கும் உணர்வுடன் செயல்படுத்துங்கள்.
6.அப்போது அது நமக்கும் பாதுகாப்பாகின்றது.

இப்படிச் செய்தால் நீங்கள் ஆலயங்களிலே போய் அங்கிருக்கும் தெய்வத்திற்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்வது போன்று உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகளை அபிஷேகிக்கின்றீர்கள்.

அப்பொழுது உடலை உருவாக்கிய அணுக்களுக்கு நல்ல அமுது கிடைக்கின்றது என்பதனை ஒவ்வொரு நொடியிலும் தெளிவாக்குகின்றார் நமது குருநாதர்.

குருநாதர் யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியான சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றி ஏகாதசி ஏகாந்தமாக வாழுகின்றார்.

வைகுண்ட ஏகாதசி அன்றுதான் நமது குருநாதர் ஒளியின் சரீரம் ஆனார். நமது குரு காட்டிய அருள் வழிகளைத்தான் உங்களுக்கு உணர்த்துகின்றோம்.

தீமைகளிலிருந்து விடுபடும் நிலையாக அருள் ஒளியை எப்படிப் பெறவேண்டும் பெற முடியும் என்று உணர்த்திய உணர்வு கொண்டு
1.அந்தத் துருவ நட்சத்திரத்தைத் தான் எனக்குக் காட்டினார்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினை எடுத்து நீ பெற்றுக் கொள்.
3.இருளை அகற்ற அது உதவும்.
4.மெய்ப் பொருளைக் காணவும் உதவும்.
5.உன்னை அறியாது சேர்ந்த தீங்கை அகற்றிடவும் உதவும் என்று கூறினார்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார்.

அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் நான் எத்தனையோ மோசமானவன்தான்...! சிகரெட் நிறையக் குடிப்பேன்… என்னென்னவோ எல்லாம் குடிப்பேன். உதவி செய்யும் தன்மை வந்தாலும் சொன்னபடி கேட்கவில்லை என்றால் உதைக்கும் பண்புள்ளவன்.

ஆனால் குருநாதர் என்னைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்தார்.

ஏனென்றால் ஆரம்பத்தில் உடற் பயிற்சி எல்லாம் செய்து அப்பொழுது “கொஞ்சம் பயில்வான்…!” என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். உதவி செய்ய முடியவில்லை… சொல்வதைக் கேட்கவில்லை… என்றால் இரண்டு தட்டுத் தட்டுவது. இப்படிப்பட்ட உணர்வுகள் எனக்குள் உண்டு.

அப்போது அந்த உதைக்கின்ற உணர்வு வந்தால் கெட்ட உணர்வு தான் உனக்குள் வரும் என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.

ஏனென்றால் எனது வாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலேயும் கஷ்டங்களையும் சிரமங்களையும் பட்டு அதன் மூலமாகக் குருநாதர் காட்டிய அருள் வழியில் பல அனுபவங்களைப் பெற்ற பின்தான் உங்களுக்கு இதைச் சொல்கின்றோம்

சில நேரங்களில் ரோடுகளில் நான் நடந்து போனேன் என்றால் நாய்கள் என்னைத் துரத்தி வரும்.

நாய்கள் துரத்தி வந்தால் குருநாதர் என்ன செய்வார்..? விரலை இப்படிக் காட்டுவார். விரலைக் காட்டியவுடனே குரைக்காமல் நின்று போய்விடும்.

ஆனால் அவரை மாதிரியே நான் செய்யப் போனேன்.

நீ இந்த மாதிரி உணர்வு வரப்போகும் போது அது புத்தியை மாற்ற வேண்டுமே தவிர அதனுடைய வலிமையைக் குறைக்கக் கூடாது என்று அதிலேயும் அனுபவங்களைக் கொடுக்கின்றார்.

1.மற்றவர்களை வீழ்த்திடும் சக்திகளை எடுப்பதற்குப் பதில்
2.அவர்களைத் தெளிவாக்கும் நிலையாக அருள் உணர்வுகளை அவர்களுக்குள் பாய்ச்சி
3.அவர்கள் தீமை செய்யும் நிலைகள மாற்றியமைத்து
4.அவர்களை நல் வழியில் உயர்த்த வேண்டும் என்று உணர்த்துகின்றார்.

இருளைப் போக்கி எல்லோரையும் காத்திடும் செயலாக “நம்முடைய செயல்… என்றுமே இருந்திடல் வேண்டும்…” என்று காட்டுகின்றார் குருநாதர்.