ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 21, 2017

பைத்தியம் போன்று இருப்பவர்களிடம் இருக்கும் சூட்சம சக்திகள்...!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பைத்தியக்காரராகத்தான் இருந்தார்.

அவரை மாதிரி நான் இருந்தால் உங்களுக்கு வித்தியாசமாகப் போய்விடும் என்பதற்காகத்தான் நான் வெள்ளைச் சட்டை போட்டுக் கொள்வது.

வெள்ளை என்பது தூய்மை. ஒரு நல்ல துணியைப் போட்டுப் பார்த்தோம் என்றால் மனது கொஞ்சம் தூய்மையாக இருக்கும்.

கலர் சட்டையைப் போட்டவர்களை நீங்கள் பாருங்கள். அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் முதலில் போரடிக்கும்.

ஒரு தூய்மையான துணியைப் போட்டிருப்பவர்களைப் பாருங்கள் கொஞ்சம் ஒரு தெளிவாக வரும். ஆகையினால் கலர் சட்டை என்றால் அது அந்த நிலை வராது.

இரண்டு நாளைக்கு அழுக்கு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு போனால் “இந்தச் சாமியார் எப்படி…? என்பார்கள். சில நேரங்களில் நான் பனியனும் வேஷ்டியும் போட்டுக் கொண்டு இருப்பேன்.

வேலை செய்யும்போது அழுக்குத் துணியாகத் தெரியும்போது என என்னிடம் வந்து சாமி இருக்கிறார்களா...? அவரைப் பார்க்க வேண்டும்…! என்று சிலர் வந்து என்னிடமே கேட்கிறார்கள்.

போய் உட்காருங்கள். வருவார் பார்க்கலாம் என்று சொல்வேன்.

அப்புறம் யாம் இங்கிருந்து வந்தவுடனே “இவர் தானா… சாமி….! என்று எண்ணுகிறார்கள். நான் வேஷம் போடவில்லையே.

இவர் தானா சாமி…! என்று சொல்லிவிட்டு அந்த நேரத்தில் நல்ல கேள்வியைக் கேட்காமல் விட்டு விட்டு போய்விடுவார்கள்.

ஆசிர்வாதம் மட்டும் கொடுங்கள். நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய் விடுவார். அவர்கள் எண்ணம் அப்படிப்பட்டதாக இருக்கின்றது.

இந்த மாதிரிச் சமுதாயத்தில் ஒவ்வொன்றும் நன்மை பெறும் சந்தர்ப்பங்கள் இருந்தாலும் அதைப் பெற முடியாத நிலையாக இருக்கின்றது.

(அதனால் தான்) குருநாதர் சொல்கிறார். என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள், உனக்குச் சக்தி கொடுக்கிறேன் என்றார் குருநாதர்.

நல்ல கடைக்குக் கூட்டிக் கொண்டுபோய் உயர் தரமான பேண்ட் (PANT) எடுத்து நீ தைத்துக் கொள்ளடா…! என்று சொல்கிறார். துணி எடுத்து நீ நல்ல சூட்டும் கோட்டும் போட்டுப் போடா என்று சொல்கிறார்.

அப்பொழுது தான் உன்னை மதிப்பார்கள் என்று சொன்னார். உனக்கு நிறையச் சக்தி கொடுக்கிறேன்டா…! என்று சொன்னார்.

இது எதிலே கொண்டு போய்த் தள்ளப் பார்க்கிறார் என்று எண்ணினேன். அவர் சொல்லில் ஒவ்வொன்றிலும் பயம் இருக்கும்.

அப்பொழுது நான் சொன்னேன். நீங்கள் கட்டுகின்ற வேஷ்டி இருந்தால எனக்குப் போதும் சாமி. நான் இந்தச் சூட்டும் கோட்டும் போடுவதற்குண்டான தகுதி என் படிப்பில் இல்லை.

படித்திருந்தால் இங்லீஷில் நீங்கள் சொல்கின்ற மாதிரி வரலாம். நீங்கள் அத்தனையோ பாஷைகள் பேசுகின்றீர்கள். எனக்கு ஏது இத்தனை பாஷை? அதனால் நான் “வேண்டாம் சாமி…” என்றேன்.

அவர் சிரித்துக் கொண்டார்.

ஏனென்றால் சில பவர்களைச் (சக்திவாய்ந்த) செய்யப்படும்போது “ஷோக்...” (பந்தா) பண்ண வேண்டும் என்ற இந்த ஆசை வரும் என்று சொல்கிறார்.

நீ ஒரு வேளை அந்த ஷோக் பண்ணுவதற்கு “ஆசைப்படுகின்றாயோ... என்னமோ...” என்று அதுதான்டா கேட்டேன்…! என்று இவ்வாறு சொல்கிறார். அப்படியும் கேட்கிறார் குருநாதர்.

இந்த மாதிரி நம் குருநாதருடைய இயல்புகள் ஒவ்வொரு மனிதனுடைய இயக்கங்கள் எப்படி இயக்குகின்றது என்று தெளிவாக எனக்கு உணர்த்தினார். அதனால் தான் யாம் உங்களை அணுகி வர முடிகின்றது.

1.நீங்கள் தவறு செய்யவில்லை.
2.சந்தர்ப்பங்கள் உங்களை எப்படி இயக்குகின்றது?
3.அதிலே நீங்கள் நல்ல சந்தர்ப்பத்தை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும்? என்ற நிலைக்குத்தான் சொல்கிறோம்.

எனக்குக் குருநாதர் கொடுத்த அந்த உணர்வை அந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் சிந்தித்து எடுக்கக்கூடிய ஆற்றல்களைத்தான் உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன்.

அந்தச் சிந்தித்துச் செயல்படும் தன்மை உங்களுக்குள் வர வேண்டும். அதனால் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறும்படிச் செய்கிறோம்.

நொடிக்கு நொடி நொடிக்கு நொடி ஒவ்வொரு வித்தியாசமான நிலைகள் வருகின்றது, அதையெல்லாம் நீங்கள் மாற்றியமைத்து இந்த வாழ்க்கைப் பயணத்தை இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி அன்று குரு எந்த வழியில் பெற்றார்களோ அந்த உணர்வின் ஈர்ப்பு மணங்களை உங்களுக்குள் கொண்டு வருகின்றோம். அவர் பெற்ற நிலையை எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆசை உணர்வைத் தூண்டச் செய்வதற்குத்தான் வருடம் வருடம் “குரு பூஜையே” வைப்பது.

குரு இப்படி எல்லாம் செய்தார் என்று அவரைப் பெருமைப்படுத்துவதற்கு அல்ல. குரு காட்டிய அருள் வழியில் நாம் சென்றால் நாமும் மகிழலாம்,

இந்த உலகம் இயக்கப்படும் போது நமக்குச் சொந்தமாக்க வேண்டியது ஒன்றே ஒன்று. நாம் இந்த மனித உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையலாம்.

நமது மூச்சலைகள் மற்றவர்களைச் சிந்திக்கச் செய்யும் தன்மையும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வர வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன்.

நமது குருநாதர் அவர் பைத்தியக்காரராக இருந்தார். அவர் இந்த உடலுக்கு இச்சைப்படவில்லை.

அது தான்
1.ஒவ்வொரு உயிருக்கும் டெலிஃபோன் கம்பியை அடித்து
2.அவர்களுக்கு ஞானத்தை கொடு.
3.நல் வழியைக் கொடு என்று சொன்னேன்,

அதற்காக வேண்டித்தான் டெலிஃபோன் அடித்தேன்.

ஒவ்வொரு உயிரும் அவன் கடவுள் அவனுக்கு இதைச் செய்து
1.ஏன்டா…! இந்த உடலில் வீற்றிருக்கும் “நீ…”
2.அந்தக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்ற உணர்வை
3.”ஏன் நீ கொடுக்கவில்லை…?” என்று அவனிடம் முறையிடுகிறேன்.
4.அவனிடம் (ஒவ்வொரு உயிரிடமும்) முறையிடுகின்றேன்.
5.அதே சமயத்தில் என்னை இயக்கிக் கொண்டிக்கின்ற இவனிடமும் (என் உயிரிடமும்) முறையிடுகின்றேன்.

அப்படி என்றால் என்ன அர்த்தம் ஆகின்றது?

1.நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னால் எனக்கு நல்லதாகின்றது. 
2.நீங்கள் உயர வேண்டும் என்று சொன்னால் (என் உயிர்) எனக்கு நல்லதைச் செய்வான்.

அதற்குத் தான் இப்படிச் சொன்னேன் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொல்கிறார்.

இப்படி சூட்சம நிலையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டு வந்தார். அதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.