ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2017

பழனியில் செய்வினையால் நடக்க முடியாது இருந்த ஒருவனை மறுபடி நடக்க வைத்தார் குருநாதர்

பழனி முருகன் கோவிலிலிருந்து ஒருவன் ஒரு தடியை வைத்துக் கொண்டு வருவான். அவனால் நடக்க முடியாது. சிறிது தூரம் நடக்கவே ரொம்பக் கஷ்டப்படுவான். இப்படி இப்படி என்று பின்னல் போட்ட மாதிரித் தடுமாறி நடந்து வருவான்.

கையில் ஒரு டப்பாவை வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டு வருவான்.

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் இருக்கின்றது. அதற்குப் பக்கத்தில் ஒரு திண்ணை இருக்கின்றது. அங்கே தான் குருநாதர் அடிக்கடி உட்கார்வார்.

நான் அங்கே போனதும் “இங்கே வாடா…” என்றார். ஒரு திருடன் வருகிறான் “பாருடா…” என்றார்.

அவர் சொல்லி நான் பார்க்கிறேன். அவன் அங்கிருந்து வருவதற்கு அரை மணி நேரம் ஆகிவிட்டது.

ஒரு பத்து அடி தள்ளி வந்து கொண்டிருந்தான். அவன் பக்காத் திருடன், ஊரை ஏமாற்றிப் பிழைக்கின்றான் என்று சொல்கிறார் குருநாதர்.

யாரை…? அந்த நடக்க முடியாதவனை அப்ப்டிச் சொல்கிறார் குருநாதர்.

அவனைப் பல நாள் பார்த்திருக்கின்றேன். கையில் ஒரு கம்பை வைத்துக் கொண்டு அவன் நடக்கிறதே மிகுந்த கஷ்டம். காசு வாங்குவதற்கும் அதைப் பேசிக் கேட்பதற்குமே மிகவும் கஷ்டம்.

இப்படிப் பின்னிப் பின்னி வரப்படும் போது பக்கத்திலே வந்தான்.

அவனுக்கு வடையும் காபியும் வாங்கி வா என்று சொல்கிறார் குருநாதர். அவன் பக்கத்தில் வருகிற வரையிலும் “திருடன்... திருடன்...” என்று சொல்லிவிட்டு அப்புறம் வடையும் காபியும் வாங்கச் சொல்கிறார்.

காபி வாங்கி வந்ததும் அவனிடமிருந்த “தடியை வாங்கிக் கொள்…” என்று சொல்கிறார். அவனை உட்காரச் சொல்கிறார்.

அவனால் காலை மடக்கி உட்கார முடியவில்லை. எப்படியோ மடக்கி உட்கார வைத்தாகிவிட்டது.

காலை நீட்டித்தான் உட்கார முடியும். மடக்கி உட்கார வைக்க முடியாது. உட்கார்ந்து அந்தக் காபியைக் கூடப் பிடித்து அவனால் குடிக்க முடியாது. இந்தப் பக்கம் உள்ள பலகையின் பக்கமாக அவனைச் சாத்தி உட்கார வைத்துக் “காபியைக் கொடுடா…” என்றார் குருநாதர்.

ஆனால் குருநாதர் அவன் நன்றாக நம்மை ஏமாற்றுகிறான். “பெரிய திருடன்டா…” என்று சொல்கிறார்.

ஆனால் அவனால் பதிலும் சொல்ல முடியவில்லை.

காபியை எடுத்துக் குடி என்று சொல்கிறார். அவனால் குடிக்கவே முடியவில்லை. எப்படியோ ரொம்ப நேரம் முகவும் சிரமப்பட்டே குடித்தான். பகுதி கீழே தான் போகின்றது. எப்படியோ அவனைக் குடிக்க வைத்தேன்.

இத்தனையும் திருட்டுத்தனம் பண்ணுகிறான் “பாருடா…” என்கிறார் குருநாதர். அப்பறம் அந்தக் குச்சியை (கம்பை) எடுத்துக் கொண்டு இவனை என்ன செய்ய வேண்டும் தெரியுமாடா...? என்று கேட்டார்.

என்ன செய்ய வேண்டும் சாமி என்று கேட்டேன்?

இவன் திருடன்டா...! அதனால் இவனை இந்தக் குச்சியைக் கொண்டு ஓங்கி அடிக்க வேண்டும் என்று சொல்கிறார். அவன் முதுகிலே அடித்துவிடு. அப்பொழுது தான் “அவனுக்கு அறிவு வரும்டா...!” என்று சொல்கிறார் குருநாதர்.

நான் என்ன நினைத்தேன்? இந்த மாதிரி காபியையும் வாங்கிக் கொடுத்து விட்டு இப்படி உதைக்கச் சொல்கிறாரே என்று யோசனை செய்துவிட்டு சும்மா ஜாடை காண்பித்து அவனை லேசாக அடித்தேன்.

“அடித்துவிட்டேன் சாமி…!” என்று குருநாதரிடம் சொன்னேன்.

உனக்கு அடிக்கவே தெரியவில்லை. “குச்சியைக் கொண்டா…” என்று சொல்லிவிட்டு என்னை ஓங்கி அடித்தார். “டொம்..” என்று அடி விழுந்தது. கை ரெண்டும் வீங்கிவிட்டது. இப்படி “வீரமாக” அடிக்கணும்டா...! என்கிறார்.

ரெண்டாவது தடவையும் ஓங்கிக் கொண்டு போனேன். ஆனால் நான் அடிக்கவில்லை.

இன்னமும் உனக்கு அடிக்கவே தெரியவில்லைடா… என்று சொல்லிவிட்டு  மறுபடி என்னை இந்தப் பக்கம் அடிக்கின்றார். இப்படி அடிக்க வேண்டும் என்று மறுபடியும் சொல்கிறார் குருநாதர்.

இதையெல்லாம் அவன் பார்க்கின்றான். ஆனால் அவனால் எழுந்திரிக்கவும் முடியவில்லை. எழுந்திருக்க வேண்டும் என்றாலும் அரை மணி நேரமாவது ஆகும்.

மறுபடியும் “திருடன்…. சரியான திருடன்… ஏமாற்றுகின்றான்…!” என்று மறுபடியும் சொல்கிறார் குருநாதர்.

அப்புறம் என்ன செய்தார் குருநாதர்.

அவன் முதுகு அந்தப் பக்கமாக (பலகைப் பக்கமாக) இருக்கின்றது. அதனால் அவனை நீ அடிக்க முடியாது.

அவன் சிரசு மேலே இருக்கிறது. நல்ல கச்சிதமாக இருக்கின்றது. தலையில் அணை கொடுத்திருக்கின்றது. ஓங்கி அந்த நடு மண்டையில் அடிக்க வேண்டும். அடித்தால் மண்டை இப்படி ரெண்டாகப் பிளக்க வேண்டும் என்று சொல்கிறார்.

எப்படி இருக்கும் அவனுக்கு...? இதைக் கேட்டது, அவனால் பேசவும் முடியவில்லை. ஆ... ஊ... என்று சொல்கிறான்.

காபி வாங்கிக் கொடுத்துவிட்டு அவனை அடித்து அவன் செத்துவிட்டால் நான் பிள்ளை குட்டிக்காரன் என்னை உள்ளே தள்ளிவிடுவார்கள். “என்ன செய்வது…?” என்று நான் இங்கே பயப்படுகிறேன்.

ஆக ரெண்டு பேருக்குமே (எனக்கும் நடக்க முடியாவனுக்கும்) பயம்தான்.

அடுத்து என்னை என்ன செய்தார் குருநாதர்? ஓங்கி என் மண்டையிலே அடித்தார். எப்படி அடித்தார் என்றால் அவர் அடித்தது எனக்கு வலி தெரியவில்லை.

இப்படி அடிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

ஆனால் நேரடியாகப் பார்க்கும் போது என் மண்டையில் அடித்த சப்தம் “பயங்கரமாக…” வருகிறது. ஆனால் சாதாரணமாகத் தொட்டால் எப்படியோ அப்படித்தான் எனக்கு வலி இருந்தது. என் மண்டை பிளக்கவில்லை.

நீ அவனை இப்படி அடிக்க வேண்டும் என்று சொல்கிறார். நீ அடித்தால் அவன் மண்டையைப் பிளக்க வேண்டும் என்று சொல்கிறார்.

உன்னை அடித்துக் காட்டட்டுமாடா? உன் மண்டையைப் பிளந்து காட்டட்டுமா…? என்று திரும்பவும் என்னிடம் கேட்கிறார்.

சாமி...! என்னை நீங்கள் அடிக்க வேண்டாம். நான் அவனை அடிக்கிறேன். மண்டையைப் பிளக்கிறேன். நான் உள்ளே (ஜெயிலுக்குப்) போகிறேன். நீங்கள் என் பிள்ளை குட்டிகளைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லிவிட்டு  ஓங்கி அடித்தேன்.

நான் அவனை அடித்தவுடனே... “ஆ...ஆஅ...” என்று அலறிக் கொண்டு எழுந்து ஓடுகிறான். தன்னை அறியாமலே எழுந்து ஓடுகிறான்.

நான் சொன்னேன் அல்லவா. “பார்த்தாயா...! அவன் திருடன்டா...! விடாதே பிடி…” என்கிறார். நானும் என் வேஷ்டியைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறேன்.

அவன் என்னிடம் “ஐயா...! என்னை விட்டுவிடுங்கள்…” என்று சொல்லிக் கொண்டு ஓடுகிறான்.

“அட..., நேற்று வரை நடக்க முடியாமல் காலைப் பின்னிக் கொண்டிருந்தவன் இப்பொழுது இப்படி ஓடுகின்றானே…” என்று அங்கே இருக்கும் கடையில் உள்ளவர் கேட்கிறார்.

“எப்படி நடக்க முடிந்தது?” என்று அவனுக்கும் தெரியவில்லை. இவ்வளவு அதிசயம் நடந்திருக்கின்றது.

அப்பறம் அவனை பிடித்துக் கொண்டேன். அவன் நான் எப்படி ஓடி வந்தேன் என்கிறான். இங்கே வா குருநாதர் கூப்பிடுறார் என்று சொல்லிக் கூட்டிக்கொண்டு வந்தேன்.

கூட்டிக் கொண்டு வந்ததும் குருநாதர் சொல்கிறார். "இவன் நல்லவன்டா...!” இவனுக்குப் பிள்ளை இல்லை. செய்வினை செய்து இவனை அறியாமல் இவனிடம் கையெழுத்து வாங்கி இவன் சொத்தையெல்லாம் வாங்கிக் கொண்டார்கள்.

இவன் முருகா பக்தன். இப்பொழுது ரோட்டில் சுற்றிக் கொண்டிருக்கின்றான். பிச்சை எடுத்து இவ்வளவு அவஸ்தையும் படுகிறான். இந்த முருகன் இவனைப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றான் என்று இப்படிச் சொல்கிறார் குருநாதர்.

முருகனின் பக்தனாக இருந்தான். கையெழுத்து வாங்கி கொண்டு போய்விட்டார்கள். சொத்தை இழந்துவிட்டான். செய்வினை செய்த ஆவி இவனுக்குள் இருக்கின்றது. அந்தத் திருடன் உள்ளுக்குள் இருந்து கொண்டு செயல்படாமல் இருக்கின்றான் என்று சொல்கிறார் குருநாதர்,

அனுபவரீதியில் நான் கண்டது.

இவனுக்குப் பிள்ளை இல்லை என்று சொத்தை எழுதி வாங்கியவர்கள் சுகமாக இருக்கிறார்கள். ஆனால் பின்னாடி தான் தெரியும். இப்பொழுது அவனுக்குத் தெரியாது.

இவன் வேதனைப் படுவதைப் பார்த்து அவன் எவ்வளவு ரசிக்கிறானோ அதற்குத்தக்க பின்னாடி அவன் பாம்பாகப் பிறப்பான்.

ஒவ்வொரு ஆகாரம்  விழுங்கும் போதும் எப்படிப் பாம்பு (வாய் சிறிதாக இருப்பதால்) நரக வேதனைப் படுகின்றது. நரக வேதனைப்பட்டுத்தான் ஆகாரத்தை விழுங்குகின்றது.

அந்த நிலைக்குப் போவான் என்று இந்த நிலையை குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார். இவனுடைய சொத்தை அபகரித்து அவன் ரசிக்கின்றான். வேதனையை ரசிக்கப்படும் பொழுது இது தான் வரும்.

இதே போல தன் குழந்தையைப் பாசமாக வளர்த்து அவன் இப்படிச் செய்கின்றானே இப்படிச் செய்கின்றானே என்று வேதனைப்பட்டால் இப்படித்தான் ஆகும் என்று உணர்த்துகின்றார்.

பாசத்தாலும் சரி. பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து ரசித்தாலும் சரி ரெண்டும் ஒன்றாகின்றது. அந்த இடத்தில் இதை உணர்த்திக் காட்டுகின்றார்.

நாம் எடுக்கும் உணர்வின் தன்மை எதுவோ அதை நமது உயிர் இவ்வாறு தான் பிரம்மமாக்கி உடலாகச் சிருஷ்டித்து விடுகின்றது. இதிலிருந்து நாம் எவ்வாறு மீளவேண்டும் என்று அவர் வழிவகுத்து காட்டுகின்றார்.

அப்போது தான் அவனிடம் சொல்கின்றார்.  நீ நல்லவன் என்று சொல்லிவிட்டு அவன் கையில் நூறு ரூபாயைக் கொடுத்தார். நீ உன் ஊருக்குப் போ என்று சொல்லிவிட்டு இதைத் தருகிறேன். (என்னமோ கையில் கொடுத்தார்)

1.உன்னைக் கண்டால் அவனெல்லாம் ஒரு வழி ஆகிவிடுவான்.
2.உன்னிடம் எவன் ஏவினானோ
3.அந்த ஏவலின் உணர்வு அவனுக்கே போகும்.
4.நீ போ உன் சொத்து நிலம் எல்லாமே கிடைக்கும் போ என்று சொல்லி அனுப்பினார்.

நடந்த நிகழ்ச்சி இது.