ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 6, 2016

மாமிச உணவை உட்கொள்ளும்போது நம் உடலில் வெளிப்படும் மணத்தின் நிலைகள்

பாம்பின் வாயில் ஒரு தவளை சிக்கும் பொழுது எத்தனை அவஸ்தைப்படுகின்றது என்று பார்க்கலாம்.

இன்று நம் உடலை வளர்க்க ஆட்டினை எத்தனை இம்சை செய்து சாப்பிடுகின்றோம்?

கடலிலே மீன்களைப் பிடித்தாலும் அதை உயிருடன் போட்டு உராய்ந்து நம் சுவைக்காக வேண்டி அதை எத்தனை அவஸ்தைப்படுத்துகின்றோம் என்று தெரிந்தாலே போதும்.

நாம் மீனினமாகப் பிறக்கும் பொழுது நம்மையும் அப்படித்தான் உராய்வார்கள்.

நீங்கள் நான்கு நாளைக்கு மீனைச் சாப்பிட்டுப் பாருங்கள். அந்த மீனின் வாசனைதான் உங்கள் உடலிலிருந்து வரும்.

அடுத்தாற்போல் இறந்தால் என்ன ஆகும்? மீனின் ஈர்ப்புக்குள் சென்று நாம் மீனாகத்தான் பிறப்போம்.

அதே மாதிரி ஆட்டுக் கறியின் ருசியைக் கண்டபின் இந்த ஈரல் ருசியாக இருக்கிறது, அந்த ஈரல் நன்றாக இருக்கிறது என்று உட்கொள்வார்கள். அந்த உணர்வின் மணம் உடலில் வரும்.

எந்த ஆட்டின் ஈரலை நாம் ருசித்தோமோ அந்த உணர்வின் நிலைகளின் ஈர்ப்புக்குள் சென்று ஆட்டின் உடலுக்குள் சென்று ஆடாகத்தான் பிறப்போம்.

அதே மாதிரி கோழிக் கறியை ருசித்து உட்கொண்டால் அந்த மணத்தால் கோழியின் ஈர்ப்புக்குள் சென்று கோழியாகத்தான் பிறப்போம்.

நாம் எண்ணுவது நாம் எதை ரசிக்கின்றோமோ நம் உயிர் அதைப் படைத்துவிடும். எதை நாம் இந்த உடலில் ரசிக்கின்றோமோ அதன் உணர்வாக அது நம்மை மாற்றிவிடும்.

மீனோ, ஆட்டையோ, கோழியையோ சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை. சாப்பிட்டால் நாம் அதனின் ஈர்ப்புக்குள் போய் அதுவாகத் தான் பிறப்போம்.

ஏனென்றால், யாரையும் தவறாகச் சொல்லுகிறேன் என்று எண்ண வேண்டாம்.

அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்து நமக்குள் தீமை செய்யும் இத்தகையை உணர்வுகளை அதைக் கொன்றிட வேண்டும். அதை அழித்திட வேண்டும். அதை மறைத்திட வேண்டும்.

ஆகவே அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்காவண்ணம் தடுத்திடல் வேண்டும்.

நம் ஆன்மாவில் மகரிஷிகளின் அருள் மணங்கள் பரவும் பொழுது இந்த உடலை விட்டுப் பிரிந்தால் நாம் உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகள் வாழும் இடத்திற்குச் செல்வோம். என்றுமே அழியா ஒளி உடல் பெறுவோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய நிலைகளையும் அவர் அனுபவபூர்வமாக உணர்த்திய உண்மைகளைத்தான் இங்கே சொல்லி வருகின்றோம்.