ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 17, 2012

கோவிலுக்குச் சென்று தெய்வத்தை வணங்கும் முறைகள்

1. கோவிலில் வணங்கும் முறை
எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், முதலில் விநாயகர் கோவிலுக்குச் சென்று, விநாயகரைப் பார்த்து,
“ஓம் ஈஸ்வரா’ என்று உயிரை நினைத்து, வானை நோக்கிப் பார்த்து, இவற்றையெல்லாம் அருளிய, மகரிஷிகளின் அருளாசியை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று ஏங்கவேண்டும்.

   பின், கண்களை மூடி, துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை, எங்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும், என்ற உணர்வுடன், உடலை நினைக்க வேண்டும்.

பின், கண்களைத் திறந்து, தீப ஆராதனை காட்டும் பொழுது, வழியறிந்து செயல்படும் ஞான நிலை பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கவேண்டும். அங்கிருக்கும் மலரைப் பார்த்து, மலரின் நறுமணம் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கிவிட்டு, கனிகளைப் பார்த்து, இக்கனிகளின் சுவை போன்று, எங்கள் சொல்லும் செயலும், சுவை பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று எண்ணி ஏங்கவேண்டும்.

பின், இங்கு வருபவர் அனைவரும், மகரிஷிகளின் அருளாசி பெறவேண்டும் ஈஸ்வரா, அவர்கள் வாழ்வில், நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று எண்ணி ஏங்கவேண்டும்.

தியானம் இருந்துவரும் அனைவரும், கோவிலுக்குச் செல்லும் பொழுது, முதலில் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று, மேலே குறிப்பிட்டவாறு தியானித்துவிட்டு, அடுத்து உள்ளே செல்லும் பொழுது,
கோபுர வாயில் முன் வந்தவுடன், கோபுரத்தைப் பார்த்து,
என்னில் உயர்வான எண்ணம் பெறவேண்டும்
என்று எண்ணி ஏங்கவேண்டும்.

பின், இதே உணர்வுடன் யாருடனும் பேசாமல், பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்து, சன்னதிக்கு முன் அமைந்திருக்கும் கொடிக்கம்பம் அல்லது, தூபஸ்தூபி இருக்கும் இடத்தில், ஒரு நிமிடம் நின்று, சன்னதியை நேராகப் பார்க்க வேண்டும்.

அப்பொழுது, இந்த தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா, என்ற ஏக்க உணர்வுடன் உங்கள் உயிரை நினைத்து, வானை நோக்கிப் பார்க்கவேண்டும். வானை நோக்கிப் பார்க்கும் பொழுது, இந்த தெய்வ குணத்தை அருளிய, துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்ற உணர்வுடன் ஏங்கியவாறே கண்களை மூடி, துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை, நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்ற உணர்வுடன், உடல் முழுவதும் ஒரு நிமிடம் தியானித்துவிட்டு, கண்களைத் திறந்து, ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்.

பிரகாரம் வலம் வரும் பொழுது, இந்தத் தெய்வ குணமாக, எங்கள் சொல்லும் செயலும் இருக்க வேண்டும், என்ற உணர்வுடன் வலம் வந்து, மூலஸ்தானம் வந்தவுடன், இதே உணர்வுடன், மூலவரைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

கற்பூர, தீப ஆராதனை காண்பிக்கும் பொழுது,
வழியறிந்து செயல்படும்
இந்த ஜோதி நிலை பெறவேண்டும் ஈஸ்வரா
என்ற உணர்வுடன் பாருங்கள்.
அப்போது மூலவருக்கு, சாத்தப்பட்டுள்ள மலர் அலங்காரம், தெரியும் அச்சமயம், இந்த மலரின் நறுமணம் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்ற உணர்வுடன் ஏங்குங்கள்.

அங்கே படைத்துள்ள கனிகள் நமக்குத் தெரியும். அப்பொழுது அந்தக் கனிகளைப் பார்க்கும் பொழுது, கனிகளின் சுவையைப் போன்று, எங்கள் சொல்லும் செயலும், சுவை பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வுடன் எண்ணி ஏங்கி, ஒரு நிமிடம் கண்களை மூடி, எங்கள் ஜீவான்மாக்கள் இந்தத் தெய்வ நிலை பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் செலுத்த வேண்டும்.

பின் கண்களைத் திறந்து, இங்கு வருபவர்கள் அனைவரும் இந்தத் தெய்வ நிலை பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வுடன் சொல்லிவிட்டு, சன்னதியில் இருந்து வெளியில் வந்தபின், ஆலயத்தில் அமைதியான இடத்தைப் பார்த்து, ஓரமாக அமர்ந்து கொண்டு, மேற்குறிப்பிட்டவாறு, ஐந்து நிமிடம் கண்களை மூடி, தியானிக்க வேண்டும்.

பின் கண்களைத் திறந்து, இந்த ஆலயத்திற்கு வரும் மனிதர்களின் உடல்களை, ஆலயமாக எண்ணி, அந்த உடல்களை இயக்கி ஆண்டு கொண்டிருக்கும் உயிரைக் கடவுளாக எண்ணி, இங்கு அருள் பெற வரும் உயிராத்மாக்கள் அனைவரும், துருவ மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று, நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை, ஆலயங்களில் படரச் செய்யுங்கள்.

இந்த முறைப்படி ஆலயங்களுக்குச் சென்று, வழிபட்டு தியானிப்பதால் ஞானிகள், மகரிஷிகள் உபதேசித்த அருள் சக்திகள் உங்கள் ஆத்மாவில் சேருகின்றன. அதனால், உங்கள் ஆத்மா தெய்வ நிலை பெறுகின்றது.

நீங்கள் ஆலயத்தில் பத்து நிமிடம் தியானத்தில் அமர்ந்து, ஆலயத்திற்கு வரும் அனைவரும் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா, என்ற உணர்வுடன் படரச் செய்த மூச்சலைகளால், ஆலயத்திற்கு வரும் அனைவரும், அவர்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற, உதவி செய்தவர்களாவீர்கள்.

வாழ்க்கையில் நல்லதையே செய்து கொண்டு எவருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலும், சந்தர்ப்பவசத்தால் எதிர்பாராது பயந்துவிடுகிறோம். அச்சமயம், பய உணர்வலைகள் நம் உடலில் சேர்ந்து விடுகின்றது.

நண்பர் ஒருவர் நம்மைப் பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களை, வேதனையுடன் சொல்லுகிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் வேதனையுடன் சொன்ன உணர்வலைகள், நம் உடலில் சேர்ந்து, நம்மையும் வேதனைப்படச் செய்துவிடுகின்றது.

இவ்வாறு, நாம் தவறு செய்யாமலேயே,
நம் வாழ்க்கையில் பல துன்பங்கள், பலவித வேதனை உணர்வுகள்
நம்மையறியாது சூழ்ந்து கொண்டு, மன அமைதியைக் குலைக்கின்றது.
ஆகவே, துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் துன்ப உணர்வுகளைப் போக்கவே,
ஞானிகள், அன்று ஆலயங்களை அமைக்க உதவினார்கள்.

ஆகவே, ஆலயங்களுக்குச் சென்று, துன்பங்களையும், வேதனைகளையும் சொல்லி, முறையிடாதீர்கள். உங்களை அறியாது முறையிடுவதால், இந்தத் துன்ப உணர்வலைகள், அங்கு வரும் அனைவருக்கும் துன்பத்தைக் கொடுத்துவிடும்.

ஆலயங்களுக்கு வரும் அனைவரின் உடலையும் கோவிலாக மதித்து, அவர்களின் உயிரைக் கடவுளாக எண்ணி, இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இங்குள்ள தெய்வ குணங்களைப் பெற்று, நலமுடனும், வளமுடனும், வாழ அருள்வாய் ஈஸ்வரா, என்று எண்ணி வேண்டிக் கொள்ளுங்கள்.

கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்து, வீட்டு முற்றத்தில் அமர்ந்து, ஐந்து நிமிடம் தியானித்துவிட்டு, நம் குடும்பத்தில் அனைவரும் தெய்வ குணம் பெறவேண்டும். நம்மிடம் வியாபார நிமித்தம் வருபவர்கள் நலமும் வளமும் பெறவேண்டும். நாம் தொழில் செய்யும் இடங்கள், செழித்தோங்க வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணிவிட்டு, கோவிலிலிருந்து கொண்டு வந்த திருநீறு, மலர்களை, நீருள்ள சொம்பில் போட்டு, மேற்கூறிய உணர்வுடன், அந்த நீரை வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தெளித்துவிடுங்கள்.

இவ்வாறு செய்வதால், வீட்டில் உள்ள தீய உணர்வலைகள் மறைந்து, நல்ல உணர்வலைகள் படரும்.
வீடு கோவிலாகிறது.
உங்கள் எண்ணம் தெய்வமாகின்றது.
உங்கள் உயிர் கடவுளாகிறது.

இவ்வாறு தியானமிருந்து வரும் அனைவரும், குடும்ப சகிதம் தியானமிருந்து, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று, ஆத்ம சுத்தி செய்து கொண்டு, மனம் அமைதி பெற்று, எண்ணம், சொல் செயல் வலுப்பெற்று, சொல்வாக்கு, செல்வாக்குப் பெற்று, உங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற்று, நீங்கள் செய்யும் தொழில், நலமும் வளமும் பெற்று, உங்களிடம் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரும், நலமும் வளமும் பெற்று, உங்கள் பேச்சும் மூச்சும், உலக மக்கள் நலம் பெற உதவட்டும்.

நீங்கள் தொழில் செய்யும் இடங்களில், உங்கள் சொல்லால், செயலால், அன்பும் பண்பும் மலரட்டும். உங்கள் பேச்சும் மூச்சும், தெய்வ நிலை பெறட்டும். கணவன் மனைவி, இணைந்து  துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியைப் பெற்று,  உயிருடன் ஒன்றி ஒளியாகி, பிறவா நிலை என்னும் பெரு நிலை அடைய, எல்லாவற்றிலும் எல்லாமாய்க் கலந்துள்ள, நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரைப் பிரார்த்திக்கின்றேன்.

2. உயிரான ஈசனுக்கு அபிஷேகம்
நம் சாஸ்திர விதிகள் ஆலயங்களை அமைத்து, விளக்கைக் காட்டும் பொழுது, பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டுமென்றும், நம் குடும்பத்தில் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டுமென்றும், இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்றும், தெய்வீக அன்பையும், தெய்வீகப் பண்பையும் பெற வெண்டும் என்று எண்ண வைத்தது. ஞானத்தால் வெறுப்பை மறந்து, அரவணைத்து, நமக்குள் உணர்வுகளை ஒன்று சேர்க்கும் சக்தி, பெற முடிகின்றது.

அன்று பாட நூல்கள் இல்லை, கல்வி அறிவு இல்லை. ஒருவர் தனக்குள் பாடிக் கொண்ட உணர்வை, மற்றொருவர் செவி வழி தட்டி எழுப்பி, அந்தப் பதிவின் தன்மை கொண்டுதான் பண்டைய காலங்களில் வந்தது. ஆகவே,  சாதாரண பாமர மக்களும் இந்த நிலைகளைப் பெறச் செய்வதற்குத்தான், ஞானிகளும், மகரிஷிகளும் ஆலயங்களை அமைத்தனர்.

தங்கம் எப்படி மங்குவதில்லையோ, அந்தத் தங்கத்தைப் போல, மனம் மங்காத நிலை,  நாம் பெற வேண்டும்.  ஒருவர் குறை கூறி விட்டால், அதனால் நம் மனம் மங்கி விட்டால், அந்தக் குறைதான் நமக்குள் வளரும், தங்கத்தைப் போன்ற தரம் வராது. தங்கத்தில், செம்பும் பித்தளையும் சேர்ந்தாலும், தங்கம் மங்கி விடும். 

நமது மனம் மங்கும்படியாக, குறையான உணர்வுகளை நமக்குள் சேர்த்து விட்டால், பல கோடி உடல்களில் தீமைகளை நீக்கி வந்த, இந்த உணர்வுகளும், தெளிவான   நிலைகளில் இயங்காதபடி, மனம் சோர்ந்து, சிந்திக்கும் தன்மை இழந்து, வெறுப்படையச் செய்யும் உணர்வுகளே நமக்குள் வரும்.  இதைப்போன்ற நிலைகளில் இருந்து மனிதன் மீள, ஆலயப் பண்புகளை அமைத்து, தெளிவான வாழ்க்கை வாழும்படி செய்தனர், ஞானியர்கள்.

வைரம் எப்படி ஜொலிக்கின்றதோ, அதைப் போன்று
தியானமிருப்பவர்கள் இந்த உணர்வினை எடுக்கும் பொழுது, 
இப்பொழுது நான் சொல்கிறேன் என்றால், உங்கள் செவிகளில் பட்டு,  பளிச்சென்று, தெளிவான மனமும், சிந்திக்கும் ஆற்றலும் கிடைப்பதைப் போன்று உங்களுடைய சொல்லும், செயலும் வைரத்தைப் போன்று ஜொலித்து, மற்றவர்களுக்கு அது கிடைக்க வேண்டும்.

அது தெரிந்ததென்று, நமக்குள், தெளிவான வாழ்க்கை வாழும் அருள் உணர்வுகள் பெருக வேண்டும். வைரத்தைப் போன்று என் செயல் ஜொலிக்க வேண்டும். நான் ஏதாவது செயல் செய்து கொண்டிருக்கிறேன் என்றால், பிறர் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, பிறருக்கும் நல்லதைச் செய்யும் உணர்வுகளை ஊட்டி, அதன் உணர்வின் வளர்ச்சியை, அங்கே பெறச் செய்ய வேண்டும்.

வைரத்தைப் போல் என் சொல் ஜொலிக்க வேண்டும், என் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்பதற்குத்தான், வைரத்தை ஆலயத்தில் வைத்தது. வைரம் எப்படித் தன் அருகிலே, இருள் சூழா நிலைகளில் சுடர் விட்டு ஒளியின் உடலாக இருக்கின்றதோ, அதைப் போன்று,
நம் உடலில் உள்ள உணர்வின் அணுக்கள்
ஒளியாக இருக்கப்படும் பொழுது,
நமக்குள் இருள் சூழ்ந்த நிலைகள் வராது.
இருள் சூழும் நிலைகள் நமக்குள் வராத பொழுது, நமக்குள் தெளிந்த நிலை பெற்று, தெளிந்த மனம் பெற்று, வலிமை பெற்று, பொருளறிந்து செயல்படும் அந்த உணர்வுகள், நமக்குள் வரும்.

வெளிச்சத்தில், இந்தப் பொருள்தான் என்று தெரிகின்றது. இதைப் போன்று, இந்த ஒளியின் உணர்வுகள் ஊடுருவி, இருளை அகற்றி, அந்தப் பொருளை அறியும் ஆற்றல் வருகின்றது.இதனால்தான்  ஆலயங்களில், வைரத்தை சிலைகள் மேல் கிரீடங்களாக வைத்தது.

அந்த உணர்வினை, நமக்குள் முன்னிலையில் கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான்,  உடல் உறுப்புகளின் சிகரத்தில் அது வைக்கப்பட்டது.

இதைப் போன்று, உடல் முழுவதும் நறுமணங்கள் வரப்படும் பொழுது, அந்த மணத்தை நாம் நுகரும் பொழுது, மகிழ்ந்து வாழ்கின்றோம். துருவ மகரிஷி இதைப் போன்று, மனம் மகிழ்ந்து வாழ்ந்த காலங்களில், அவர் உடலில் விளைந்த உணர்வுகள், நம் பூமியில் பரவியுள்ளது. மலருக்குப் பின் தான், அதனின் வித்தின் தொடர் வருகின்றது.  மலர் நறுமணமாக இருக்கும் பொழுது, அதன் வித்தும் நறுமணமாகவே இருக்கும்.

அதைப் போல், நமது மனங்கள் சரியாக இருப்பினும்,
நறுமணங்கள் கொண்ட இந்த உணர்வுகள் பெற வேண்டும் என்றும்,
ஞானியின் உணர்வுகள் பெற வேண்டும் என்றும் ஏங்கிச் சுவாசித்து, நம் உடலில் உள்ள இரத்தத்தில் கலந்து,  எல்லா அணுக்களுக்கும் அந்த உரமான சத்தை, நற்பண்புகளை”,  ஞானமாக ஊட்டச் செய்யவே, ஆலயங்களை அமைத்தது.